நாளை மறுநாள் – திரைப்படமும் அப்பாலும்

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

அரவிந்தன் நீலகண்டன்


மிகைப்படுத்தப்பட்ட சூழலியல் அறிவியல் ஹாலிவுட்டின் கிராபிக்ஸ் பிரம்மாண்டங்களுடன் நம் ஊர் திரையரங்குகளில் பனிகாலம் திரையிறங்கியுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில், நம்பகத்தன்மையுடனான அறிவியல் புனைவுகள் மிகச்சிறிய அளவில் என்றாலும் நிச்சயமாக அதிகரித்து வருகின்றன. நாளை மறுநாளின் தமிழ் மொழிபெயர்ப்பை கட்டாயமாக பாராட்ட வேண்டும். எளிமையாக அதேசமயம் நீர்த்துபோகாமல் செய்திருக்கிறார்கள். வறண்டத்தன்மை இல்லை. மொழிபெயர்ப்பு என்றே தோன்றாமல் செல்கிறது. உதட்டசைவும் வார்த்தைகளும் ஒட்டாத இடங்களில் கூட பிசிறடிக்கவில்லை. சப்-டைட்டில்களை கூட அழகாக மொழிபெயர்த்து கூறுகிறார்கள். ‘இண்டிபெண்டன்ஸ் டே ‘ மற்றும் ‘கோட்ஸில்லா ‘ போன்ற படங்கள் மூலம் ‘Size alone matters Brain doesn ‘t ‘ என்பதை தன் வாழ்க்கை தத்துவமாக காட்டிய ரோலண்ட் எம்ரிச்தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

புது டெல்லியில் நடக்கும் ஒரு சுற்றுப்புற சூழலியல் மாநாட்டில் ஆரம்பமாகிறது கதை. அமெரிக்க நாட்டைச் சார்ந்த (வேறெந்த நாடாக இருக்கமுடியும் ?) தட்பவெப்பவியல் ஆய்வாளர் ஜாக் ஹால் (டென்னின் க்வாய்ட்) பனிக்காலம் வரவிருக்கும் அபாயத்தை குறித்து கூறுகிறார். நம் சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் அபாயமாக அதை அவர் விவரிக்கிறார். அங்கிருக்கும் அமெரிக்க துணை ஜனாதிபதி இந்த அபாய அறிவிப்பை விமர்சிக்கிறார். மாநாடு நடக்கும் போதே டெல்லியில் பனி படியும்படியாக கடும் குளிர். தொடர்ந்து வெகுவிரைவாக உலகமெங்கும் ஆரம்பிக்கின்றன தட்பவெப்ப நிலை மாற்றங்கள். கடும் பனிப்புயல்கள் பூமியைத்தாக்குகின்றன. புவியின் மேலிருக்கும் செயற்கைக்கோள்களிலிருந்து புவியைப்பார்க்கும் விண்வெளிவீரர்கள் பார்வையிலிருந்து பனிப்புயல் மண்டலம் காட்டப்படுகிறது. பூமியின் வளிமண்டலத்தின் முழு ஆற்றலும் திரை முழுமையாக விசுவரூபம் கொள்கையில் நாம் நம் இருக்கைகளில் உறைந்து போகிறோம். (கூடவே இது வெறும் ஹாலிவுட் கிராபிக்ஸ் பூச்சாண்டித்தனம் தான் உண்மையில் இப்படி எல்லாம் நடக்காது என்று ஏதோ ஒரு சின்ன சமாதானமும் செய்து கொள்கிறோம்.) என்றோ ஒருநாள் இப்படி நடந்தால் அதில் என் பைக்கிற்கும், குளிர்சாதனப்பெட்டிக்கும் தொடர்பு இருக்குமா என்கிற எண்ணம் நமக்கே ஏற்படுகிறது. அமெரிக்கர்களுக்கு எப்படியோ ? இந்த பெரும் புவியளாவிய தட்பவெப்ப நாடகத்திற்கு உள்ளாக இருவித மானுட உறவுகளின் விசைகளும் ஊடாடுகின்றன. பனிக்காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்கள் சுற்றுப்புற அகதிகளாக மெக்சிகோவில். உலகெங்கும் பனி படர்வதை காட்டுகிறார்கள் (ஆசியாவில் சீனா வரை மூடும் பனி ஏனோ பாரதம் மீது அதிகமாக படரவில்லை.) ஒரு பெரும் நூலகத்தின் நூல்கள் மனித உயிர்களை உறைபனியிலிருந்து காக்க தீக்கிரையாக்கப்படுகின்றன. மின்னல் வெட்டுவது போல தோன்றி மறைகிற ஒரு சிறு உரையாடலில், அதீத ஆணியத் தத்துவம் பனிக்காலம் தொடங்கும் தருணத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நடைமுறையில் பயனளிக்காத கல்வி என்கிற பிரச்சனை அமெரிக்க கல்வி அமைப்புகளிலும் இருப்பதை நாம் ஆச்சரியத்துடன் படத்தில் உணர்கிறோம். உலகெங்கும் பனிப்புயல் வீசுகையில் நியூயார்க்கில் நடக்கும் மாணவர்களுக்கான அறிவுப்போட்டியில் அஸ்டெக்கினரை வென்ற ஸ்பானிஷ்காரர்கள் பற்றிய கேள்வி, அறிவியலும் அதிகார நிறுவனமும் செயலாற்றுகையில் ஏற்படும் பிரச்சனைகள்( ‘நீங்கள் அறிவியலோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அரசியலையும் பொருளாதாரத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்வோம் ‘), தர்மபுத்திரரை போல நாயை விடாமல் அணைத்தபடி நிற்கும் நியூயார்க் கறுப்பின பிச்சைக்காரர் தன் சாலைவாழ்க்கையில் நியூயார்க் நகர பனிக்காலங்களை தான் எதிர்கொண்ட முறைகளை பனியுகத்தை எதிர்நோக்கும் பணக்கார சிறுவனுக்கு கற்றுக் கொடுக்கும் முறை இவையனைத்துமே கீற்றுக்களாக ஆனால் முழுக்கதையோட்டத்துடன் ஏதோ ஒரு தளத்தில் தன்னை இணைப்பதாகவே தோன்றுகின்றன. உதாரணமாக, இறுதியில் புதிய பனிக்காலத்துடன் மானுடம் வாழ வேண்டிய காலகட்டத்தின் தொடக்கத்தில் படம் முடிகிறது. போகிற வழியில் ஒரு அசட்டு ஊகம்: தந்தையின் குரல் கேட்டு பெரும் அழிவு நிகழ்வொன்றில் மற்றவர்களுக்கு பைத்தியகாரத்தனமான தோன்றும் முடிவை எடுக்கும் ஒரு மகனும் அவனைச்சார்ந்தவர்களும் காப்பாற்றப்படுவதும் மற்றவர்கள் அழிவதும் ஒரு நோவா தொன்மத்தை நினைவூட்டுவதாக இல்லையா ? மானுடம் என்றாலே இந்த ஹாலிவுட் காரர்களுக்கு வட-அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களுக்கு அப்பால் உலகமே இல்லையா என்கிற கேள்வி மனதில் எழுகிறது. (பிறகு இந்த திரைப்படம் குறித்து எழுத கூகிள் மூலம் தேடிய போது இணையத்தில் வளிமண்டல வெப்பமேற்றத்திற்கும் வங்கக் கடலோர புயல்களுக்குமான தொடர்பு குறித்து கிடைத்த தகவல்களும் மிக சொற்பம்.) கூடவே, ஹாலிவிட்டின் சந்தைக்குத்தானே அவர்கள் படம் எடுக்கமுடியும் என்கிற விடையும் தெரிகிறது. நாம் சந்தித்த நம் இயற்கை சீற்றங்களை நம் கோலிவுட்டோ அல்லது பாலிவுட்டோ என்றைக்கு படமாக்கினார்கள் ? ஒரிசா புயலும் குஜராத் பூகம்பமும் அவற்றில் சிக்கிய, அவற்றை எதிர்நின்ற மானுடத்தின் கதையும் ஏன் நம் திரைப்படத்துறையால் திரைக்கு வரவில்லை ? பல படங்களில் ஒற்றை டூயட்டுக்கு வெளிநாடுபோகிற அல்லது செட் அமைக்கிற பணத்தில் அழகான ஒரு அறிவியல் கதையை உருவாக்கமுடியும் என்றே தோன்றுகிறது.

இனி திரைப்படத்தின் நிகழ்வுகளின் அறிவியல் சாத்தியக்கூறுகளுக்கு வருவோம்.

வளி மண்டலத்தை வெப்பமேற்றும் வாயுக்களை மனித குலம் அதிக அளவில் வெளியிடுவதால் துருவ பிரதேசங்களில் பனி உருகுகிறது. இதன் விளைவாக கடல் நீர்மட்டம் அதிகரிக்கிறது. இது அனைவருமே அறிந்த ஒரு சூழலியல் அபாயம். அதற்கும் மேலாக மற்றொரு அபாயமும் உள்ளது. துருவங்களிலிருந்து பனி உருகுவதால் உலகக்கடல்களில் இயற்கையாக உள்ள நீர்சுழல்கள் பாதிக்கப்படலாம். இச்சுழல்கள் பூகோள அளவில் இயங்கும் பெரும் வெப்பக்கடத்திகள். 10 இலட்சம் அணுமின் நிலையங்களால் உருவாக்கப்படும் ஆற்றலுக்கு நிகரான ஆற்றலுடைய இந்தச்சுழல்கள் பாதிக்கப்பட்டால் ஐரோப்பாவிலும் வட-அமெரிக்காவின் கிழக்குப்பகுதிகளிலும் வெப்ப நிலை கீழிறங்கும். ஐரோப்பாவில் சராசரி வெப்பநிலை 5 இலிருந்து 10 டிகிரி செண்டிகிரேட் குறையும். இது சற்றேறக்குறைய 20,000 ஆண்டுகளுக்கு முன் நிலவிய பனிக்காலம் (iceage) போன்ற நிலையை உருவாக்கலாம். இது அறிவியலாளர்கள் கூறுகிற செய்தி. இந்த பனிக்காலம் வர சில நூற்றாண்டுகளாகலாம் அதற்குள் மனிதக்குலம் இந்த அபாயத்திலிருந்து மீண்டுவிடலாம் என நினைப்பவர்களுக்கு சில அறிவியலாளர்கள் அடுத்த இருபது ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த பனிக்கால அபாயம் ஏற்படும் சாத்திய கூறு உண்டு என்கிறார்கள். திரவ நீர் பனியை போல சூரிய வெப்பத்தை பிரதிபலிக்காது. மாறாக உள்ளேற்றுக்கொள்ளும். இதுவும் வெப்பத்தை அதிகரித்து துருவ பனியை மேலும் உருகச் செய்யும்.

அபாயமாக புவியின் தட்பவெப்பத்தையே மாற்றிவிடும் வலு கொண்ட சூழலியல் நிகழ்ச்சியாக வளிமண்டல வெப்பமேற்றல் முன்வைக்கப்பட்டபோது சில அறிவியலாளர்களால் ‘வீணான பயமுறுத்தும் வேலை ‘ என கூறப்பட்டது. வளிமண்டல வெப்பமேற்றலை வெறும் கற்பனையூகம், அவ்வாறே வெப்பமேற்றல் இருந்தால் கூட அது ஒன்றும் ஆபத்தானது அல்ல எனும் நிலைபாட்டை சர்.ப்ரெட் ஹோயலின் ‘Ice ‘ எனும் நூல்களில் காணலாம். 1980களில் வெளியான நூல் இது. ஹோயல் இறுதி வரை தன் தீர்மானங்களை மாற்றவேயில்லை. ஆனால் இன்று ‘கீரின் கவுஸ் எஃபெக்ட் ‘ என அறியப்படும் வளிமண்டல வெப்பமேற்றல் இன்று அறிவியல் உண்மை. கடந்த ஒரு நூற்றாண்டில் உலக வெப்பநிலை ஒரு டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளது. கடல்நீர் மட்டங்கள் 10 இலிருந்து 20 செண்டிமீட்டர்கள் ஏறியுள்ளன. புகழ் பெற்ற ‘நேச்சர் ‘ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக்கட்டுரையின் படி 2050-இல் 10 இலட்ச உயிரின வகைகள் (species) வளிமண்டல சூடேற்றத்தாலும் அதன் தொடர்விளைவுகளாலும் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளன. சில பத்தாண்டுகளில் பனிக்காலம் உருவாகுமென்பது சாத்தியமான ஒன்றுதான். நிகழ்தகவு குறைவான விழுக்காடு கொண்ட சாத்தியக்கூறு. சில நூற்றாண்டுகளில் எனும்போது நிகழ்தகவு அதிகரிக்கும் சாத்தியக்கூறு. ஆனால் திரைப்படத்தில் காட்டப்படும் ஒரு சில வாரங்களில் நடக்கும் புவியணைந்த அதீத சூழ்நிலை மாற்றமென்பது நடக்க இயலாத ஒன்று.

திரைப்படத்தில் மாணவர்கள் நியூயார்க் நகர அருங்காட்சியகத்தை பார்வையிடுகின்றனர். அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு பதப்படுத்தப்பட்ட மாமோத் எனும் யானை வகை உயிரினத்தை பார்த்து அது திடாரென ஏற்பட்ட கடந்த பனியுகத்தில் அழிந்துவிட்ட ஒரு உயிரினமாகவும் அப்போது அது உண்டு கொண்டிருந்த உணவுகள் அதன் வயிற்றில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது ஒருவித அறிவியல் முலாம் வதந்தியே ஒழிய இதில் உண்மை இல்லை. ஸிம்மர்மேன் மற்றும் டெட்போர்ட் எனும் ஆராய்ச்சியாளர்கள் 1976 இல் புகழ்பெற்ற சயின்ஸ் இதழில் மமோத்கள் இறந்து பலகாலங்களுக்கு பின்னரே உறைபனியில் அகப்பட்டதாக நிறுவியுள்ளனர். உறைபனியிலிருந்து மீட்கப்பட்ட இந்த மமோத்களின் உடலினுள் இறந்த பின் ஏற்படும் பாக்டாரிய பாதிப்புகளின் பின்னரே அவை உறைநிலை அடைந்ததுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அறிவியலாளர்களால் மறுக்கப்பட்ட தவறான நிலைபாடான ‘பனியுகத்தால் மமோத்களின் திடார்மரணம் ‘ இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் மக்களின் மனமண்டலத்திற்கு ஏற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாரதத்தில் வெப்ப அலைகளின் தீவிரமும் அவை கொல்லும் மனித உயிர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. திரைப்படத்தின் இணையதளம் கடந்த வருடம் வெப்ப அலையில் பாரதத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1500 என்கிறது. இது பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை ஒருவேளை உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம். கடந்த சில வருடங்களில் கடுமையான புயல்கள் மற்றும் வெள்ளப்பெருக்குகள் நம்மை தாக்கியுள்ளன. ஹிமாலய பெரும் பனி படர்வுகளும் உருகிவருகின்றன. சூழலியலின் முக்கியத்துவம், அதனை எதிர் கொள்ள வேண்டிய நம் ஒவ்வொருவரின் பங்கு ஆகியவற்றை இளம் தலைமுறையினருடன் விவாதிக்க இத்திரைப்படம் களப்பணியாளர்களுக்கு நல்ல வாய்ப்பினை தருகிறது.

ஆனால் திரைப்படத்தின் அடிப்படையான அறிவியல் நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. வளிமண்டல வெப்பமேற்றம் நம் புவியின் ஒட்டுமொத்தச் சூழலை எத்திசையில், எந்த அளவு, எவ்விதமாக பாதிக்கும் ?வெள்ளித்திரை எழுப்பும் இக்கேள்விகளுக்கான பதில்களை வான் திரையில் விரைவில் காணப்போவது நாமா ? நம் சந்ததிகளா ?

இத்திரைப்படத்தின் இணையதளம்: www.thedayaftertomorrow.com

மற்றும் காண்க:

http://news.nationalgeographic.com/news/2004/05/0518_040518_dayafter.html

http://news.nationalgeographic.com/news/2004/05/0527_040527_DayAfter.html

வளிமண்டல வெப்பமேற்றல் குறித்த நாஸா செய்திக்கு காண்க:

http://science.nasa.gov/headlines/y2004/05mar_arctic.htm

—-

infidel_hindu@rediffmail.com

Series Navigation