திருவள்ளுவர் சிலை பாதுகாப்புப் போராட்டம் : பெங்களூரில் அல்ல… கன்னியாகுமரியில்!

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

அசுரன்


தமிழனாகப் பிறந்தபோதிலும் உலகப்பொதுமறையாக திருக்குறளை யாத்து இத்தரணிக்குத் தந்தவர் தமிழர்களின் அறிவாசானான திருவள்ளுவர். பொதுமறை தந்த திருவள்ளுவர் தமிழன் என்பதால் பெங்களூரில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலை திறக்கப்படாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோணிப்பையில் சுற்றுப்பட்டு நிற்கிறது. பெங்களூர் தமிழ்ச் சங்கம் தொடர்ச்சியாக வழக்கு மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் இதற்காகப் போராடிவருகிறது. நிற்க, முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கடல் நடுவே நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் காழ்ப்புணர்வால் பராமரிக்கப்படாமல் சீரழிந்துவருகிறது.

இதுகுறித்த செய்திகளை சிலை அமைப்பின் பின்னணியில் பார்ப்போம்.

திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்தாரா அல்லது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருநயினார்க்குறிச்சியில் பிறந்தாரா என்பது குறித்து இருவேறு கருத்துகள் இருந்தாலும்கூட குமரி மண்ணில் பிறந்தவர் என்பதற்குக் கூடுதலான ஆதாரங்கள் தரப்படுகின்றன. என்றாலும் கூட ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ‘ என்பதை யாரால் மறுக்கமுடியும்.

தமிழ் மொழியானது செந்தமிழ் என்று நம்மால் அழைக்கப்பட்டாலும்கூட, இந்தியாவிற்கு வெளியே பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கும் பெருமை பெற்றது என்று நாம் எடுத்துச்சொன்னாலும்கூட இப்போதுதான் அதனைச் செம்மொழியாக்குவதற்கான எண்ணமே இந்திய அரசுக்கு வந்திருக்கிறது.

வள்ளுவரின் புகழைப் பறைசாற்ற திருக்குறள் போதும் என்றாலும் சென்னை வள்ளுவர் கோட்டமும் கன்னியாகுமரி முனையில் கடல்நடுவே அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையும் தமிழகத்திற்கு அடையாளங்களாகிக் கூடுதல் பொலிவூட்டுகின்றன. குமரிமுனையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு அருகிலுள்ள பாறையில், கடல்நடுவே 133 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் இன்றைய நிலை ‘வான்புகழ் சிலையழித்து கெட்ட பேரெடுத்தத் தமிழ்நாடு ‘ என்று ஆக்கிவிடுமோ என்ற அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திருவள்ளுவர் சிலையானது தமிழக அரசால் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகிலுள்ள சோளிங்கநல்லூர், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கணபதி ஸ்தபதியின் மேற்யார்வையில் சுமார் 500 சிற்பிகள் 8 ஆண்டுகளாகப் பணிசெய்து இந்தச் சிலையை உருவாக்கியுள்ளனர்.

1976ஆம் ஆண்டிலேயே இப்பணி தொடங்கப்பட்டாலும் பின்னர் செயலூக்கமின்றி தடைபட்டு நின்றது. 1990களில், குறிப்பாக, 1996ல் கருணாநிதி தமிழக முதல்வரானதும் இப்பணி விரைவுபடுத்தப்பட்டது. 1996 சட்டமன்றத் தேர்தலின்போது, நக்கீரன் நிருபர் நண்பர் முத்துக்குமாரும் நானும் இறுதிக்கட்ட தேர்தல் கள நிலவரங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு, நெல்லையிலுள்ள ஒரு விடுதியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது, அமைச்சரவை நியமனத்தின்போது, கன்னியாகுமரி சட்டமன்றத்தொகுதியில் வெற்றிபெற்றிருந்த நீல.சுரேஷ்ராஜன் யாரும் எதிர்பாராத வகையில் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதையொட்டி செய்தி வெளியிடுவதற்காக கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையமைப்புப் பணிகள் எப்படியிருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்காக நானும் நிருபரும் கன்னியாகுமரிக்குச் சென்றோம். அங்கே எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எப்பணியும் நடைபெறாமல்- சிற்பிகள் அமர்ந்து பணிசெய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த ஓலைக்கொட்டகை முற்றிலும் இற்று விழுந்து, ஆங்காங்கே ஈர்க்குகள் மட்டுமே நீட்டிக்கொண்டிருந்தன. சிலையமைப்புக்காக நிறுவப்பட்டிருந்த அடிக்கல்லோ, நீண்ட நேரத் தேடலின் பின்னர்- ஒரு முட்புதரிலிருந்து எங்களால் கண்டெடுக்கப்பட்டது. அந்த அவலங்களை பதிவுசெய்துவிட்டு, அமைச்சரிடமும் நேர்காணல் செய்தோம்.

இதையடுத்து சிலையமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

சிலையின் அமைப்பு என்று பார்த்தோமானால், 38 அடி உயர பீடத்தின் மீது 95 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது (மொத்தம் 133 அடி). இது 133 அதிகாரங்களைக் குறிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல மொத்தச் சிலையும் 10 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் யாக்கப்பட்டிருப்பதைக் குறிப்பதாக உள்ளன. இச்சிலைக்காக 7,000 டன் கிரானைட் கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய கற்சிலை என்ற பெருமையை இச்சிலை பெற்றுள்ளது.

இச்சிலையை (ஆங்கிலப்) புத்தாயிரமாண்டின் முதல் நாளான 2000 சனவரி முதல்நாள் அன்றைய தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி திறந்துவைத்தார். இது உலகத் தமிழரின் நெஞ்சமெல்லாம் உவகையை விதைத்தது. ஆனால், அன்றைய எதிர்க்கட்சி இன்றைய ஆளுங்கட்சியாகிவிட்டதால் அரசியல் மனப்பான்மையால் இன்று கவனிப்பாரற்றுக் கலங்கி நிற்கிறார் வள்ளுவர். உப்புக்காற்றின் தாக்குதலை எதிர்கொண்டு நிற்பதற்காக பூசப்படவேண்டிய பாலிசிலிக்கான் பூச்சு இன்னும் பூசப்படாததால் கடந்த சூன் மாதம் பெய்த மழையில் திருவள்ளுவர் மண்டபம் ஒழுகுகிறது; சிலையில் கல் இணைப்புகள் வழியாக உப்பு நீர்த்துளிகள் வடிந்து உட்புறச்சுவர்களில் உப்புப்படிவங்கள் படிந்துள்ளன. இணைப்பு சிமின்ட் பூச்சுகள் சேதமடைந்து சிறுசிறு துண்டுகளாக விழுகின்றன. வாயிலுக்கு கதவுகள் போடப்படாமல் மூங்கில் தட்டிகளால் மூடப்பட்டுள்ளன. சன்னல்கள் அடைக்கப்படவில்லை, இதனால் 24 மணி நேரமும் சுதந்திரமாக வீசும் கடல் காற்றால் சிலை சேதமுற்றுவருகிறது. விளக்குத்தூண்கள் துருப்பிடித்துள்ளன, மண்டபத்தின் தளங்கள் சேதமடைந்துள்ளன. கம்பீரமான யானை முதலான கலைப்பொருட்கள் சேதடைந்துள்ளன. கல்லில் தமிழிலும் ஆங்கிலத்திலும் செதுக்கப்பட்டிருந்த குறட்பாக்கள் நம்மால் படிக்க முடியாத அளவிற்கு உப்பு நீரால் அரிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் சிலையின் திருப்பாதங்கள், கைகள், மேலாடை உள்ளிட்ட கலைநுணுக்கம் மிக்கப்பகுதிகள் சேதடைந்துள்ளன.

இந்நிலையை மாற்றி, சிலையைச் சீரமைக்கவேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாகப் பல்வேறு தமிழர் அமைப்புகளும் அரசை வலியுறுத்தியும் பலனே இல்லை. அவ்வப்போது கன்னியாகுமரிக்கு வரும் அமைச்சர்கள், ‘பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; பணி விரைவில் தொடங்கும் ‘ என்று அறிவிப்பார்கள். நடவடிக்கைதான் ஏதும் இல்லை. கடைசியாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லர் 2003 அக்டோபர் 30ஆம் நாள் இப்பராமரிப்புப் பணிக்காக முதலமைச்சர் 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கி ஆணை பிறப்பித்துள்ளதாக ஒரு அறிக்கை விடுத்தார். ஆனால், இன்றுவரை எப்பணியும் நடக்கவில்லை.

இச்சிலைக்கு பாலிசிலிகான் பூசுவதற்கு 60 இலட்சம் ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஒருவேளை இதனைப் பராமரிக்கப் போதுமான பணம் அரசிடம் இல்லையோ என்று தோன்றலாம். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் இதனை வந்து பார்வையிட்டவர்கள் 16 இலட்சம்பேர். தற்போது சிலையைப் பார்க்க விவேகானந்தர் பாறைக்குச் சென்றபின்னரே வர முடிகிறது. எனவே பயணிகள் கட்டணமான 20 ரூபாயில் 5 ரூபாயை சிலை பராமரிப்புக்கு என்று பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்துவிடுகிறது. இதன்மூலம் கடந்த ஆண்டு மட்டுமே 80 இலட்சம் ரூபாய் வசூலாகியுள்து. குறைந்தபட்சம் இதன்மூலம் மட்டுமே இதுவரை சுமார் 2 கோடி ரூபாய்வரை சேர்ந்துள்ளது. (நன்றி: ராணி வார இதழ்). எனவே பணம் ஒரு பிரச்சினையே அல்ல, யாரும் தனியே இதற்கென்று பணம் ஒதுக்கத் தேவையே இல்லை.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏதாவதொரு அணையிலிருந்து பாசனத்திற்காக நீரைத் திறக்கவேண்டும் என்றாலும்கூட முதலமைச்சரின் ஆணைப்படியே திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கின்றனர். (முன்பு இப்பொறுப்பு மாவட்ட ஆட்சியர்கள் வசமே இருந்தது). எங்கோ இருக்கும் குக்கிராமத்தின் தண்ணீர் தேவையைக்கூட அறிந்து அணையைத் திறக்க ஆணையிடும் தமிழக முதல்வருக்கு வான்புகழ் வள்ளுவர் சிலை சேதமுற்று வருகிறது என்பது தெரியாதா என்ன ?.

2003 சூன் 19ஆம் நாள் சென்னை வந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை அடையாளம் காண தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார். ஆனால் உலகின், தமிழின் மிக உயர்ந்த நூலாகத் திருக்குறளைஜ் தந்த வள்ளுவரின் சிலையோ அவல நிலையில் நிற்கிறது.

‘அலையும் மலையும் உள்ளவரை சிலையும் இருக்கும் ‘ என்றார் இச்சிலையை வடித்த கணபதி ஸ்தபதி. அது உண்மையாகுமா ?

படங்கள்: புலவர் கு.பச்சைமால், கருங்கல் கண்ணன்

0

வால்:

தொடர்ச்சியான கோரிக்கைகளின் பின்னரும் அறிவாசான் திருவள்ளுவர் சிலையைக் காக்காத தமிழக அரசைக் கண்டித்து எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் நாள் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு பட்டினிப்போராட்டம் நடத்த சூன் 26 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற குமரி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழாலயம் இயக்குநர் புலவர் கு. பச்சைமால் தலைமையில் நடந்த இக்கூட்டத்திற்கு தலைநகர்த் தமிழ்ச்சங்க பொதுச்செயலாள˜ புலவர் த.சுந்தரராசன் முன்னிலை வகித்தார். மேலும், தமிழியக்கம் அரணமுறுவல், நேசமணி தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் மு.ஆல்பன்ஸ் நத்தானியேல், குமரித் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாள˜ அசுரன், தமிழ்நாடு இளைஞர் பேரவை தமிழ். முகிலன், தமிழ்ச் சான்றோர் பேரவை கண்ணன், இனியன் சுதன், சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கானோரை பங்கேற்கச் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதையொட்டி சூலை 3 ஆம் நாள் நடைபெற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் 25 பேர் கொண்ட போராட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.(asuran98@yahoo.com)

Series Navigation

அசுரன்

அசுரன்