This entry is in the series 20040708_Issue

பனசை நடராஜன்


நீ குடிப்பதில்லை, புகைப்பதில்லை,
‘வேறெதுவுமா ‘ இல்லையென்று
கண்சிமிட்டி நண்பன் கேட்டான்!
சற்றுத் மெளனித்தாலும்
அவனாகவே தவறாக
அர்த்தம் கொண்டுவிடுவானென்று
அவசரமாய் ‘இல்லை ‘யென்றேன்,
‘வேடம் போடாதே..பொய்யனே! ‘ என்று
விருட்டென்று போனான்!

இப்படிக் கண்ணுக்கு வண்ணக்
கண்ணாடி அணிந்து கொண்டு
நம் நிறத்தை இன்னதென்று
எண்ணிக் கொள்வர் பலர்!

ஆடையின்றி திரியும் அவர்களுக்கு
கோவணம் கட்டியவர்கள்
கோமாளியாய் தெரிவார்கள்!
போவோர் வருவோர் நம்மேல்
பூசிவிட்ட வேடங்களை
களைத்துப் போகாமல்
கலைத்துப் போடுவோம்!

வசதிக்கு வணங்காமல்
அதிகாரத்துக்கு அஞ்சாமல்
விளைவை எண்ணிக்
கவலைக் கொண்டு
வளைந்து கொடுக்காமல்
உண்மைக்குச் சாமரமும்
தீமைக்குத் தீப்பொறியும்
வீசுகின்ற வினோத
எழுதுகோல் கொண்டு
வேடங்களைக் கிழிப்போம்…!

(தொடரும்)

– பனசை நடராஜன், சிங்கப்பூர் –
(panasainatarajan@yahoo.com)

Series Navigation