நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன்

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

அரவிந்தன் நீலகண்டன்


ஆகஸ்ட் 2002 இல் மும்பை புகைவண்டி ஒன்றில் பட்டபகலில் அனைத்து பயணிகள் முன்பும் ஒரு மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒரு வெறியனால் மானபங்கப்படுத்தப்பட்டாள். அங்கு பயணிகள் பலர் இருந்தும் அவர்களில் ஒருவர் கூட இக்கொடுமையான செயலை எதிர்க்கவில்லை என்பது தேசத்திற்கே அதிர்ச்சி அளித்தது. துன்புறுவோரைக் காணுகையில் உதவுவது எனும் பண்பு குறித்து நம் அனைவருக்குமே சிறுவயது முதலே கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் நிலை எவ்வாறு உள்ளது. மும்பை புகைவண்டி சம்பவம் போலவே உலகமெங்கிலும் பல நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1960களில் நியூயார்க் நகரில் நடந்த கிட்டி ஜெனோவீஸ் எனும் இளம் பெண்ணின் கொலை 38 சாட்சிகள் பார்த்துக்கொண்டிருக்க 35 நிமிடங்களாக தெருவில் நடைபெற்றது. எவருமே தலையிடவில்லை. ஒரே ஒரு நபர் மட்டும் மிகுந்த மனப்போராட்டத்திற்கு பின் ஒரு நண்பரிடம் ஆலோசனை கேட்டபின் காவல்துறைக்கு தொலைபேசி மூலம் செய்தியை தெரிவித்தார். நியூயார்க் டைம்ஸ் மூலம் இச்செய்தி பிரபலமாகி நாடு தழுவிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சர்ச்சை ஜான் டார்லே மற்றும் பிப் லடானே எனும் இரு உளவியலாளர்களுக்கு ஒரு ஆச்சரியகரமான கருதுகோளை உருவாக்கியது. பாதிப்புக்குள்ளாகும் நபர் அருகில் இருக்கும் ஆட்களின் எண்ணிக்கையை பொறுத்து கிடைக்கும் உதவி குறையும். ஒரு நபருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவர் பாதிப்பு அடையும் போது அவர் அருகில் ஒருவர் மட்டுமே இருப்பதே மிகவும் நல்லது. முரணாக தோன்றுகிற இந்த கருதுகோளை சில பரிசோதனைகள் மூலம் டார்லேயும் லடானேயும் பரிசோதிக்க விரும்பினர்.

பரிசோதனையாளர் தான் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நகர வாழ்வினால் ஏற்படும் தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாக தன்னை கல்லூரி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டார். மாணவர்கள் தனிப்பட்ட சொந்த பிரச்சனைகளை பிறர் முன் விவரிக்கவும் விவாதிக்கவும் தயங்குவார்கள் என்பதால் அவர்கள் தங்கள் பெயர்கள் தெரிவிக்கப்படாமல் தனி அறைகளில் வைக்கப்படுவார்கள் எனவும் அவர் மாணவர்களுக்கு தனித்தனியாக அறிவித்தார். மாணவர்கள் தங்களிடமுள்ள மைக்ரோபோன்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு உரையாடல் நடத்த முடியும். புறத்தலையீடு இந்த உரையாடலை பாதிக்கும் என்பதால் பரிசோதனையாளர் இந்த உரையாடல்களில் பங்கு பெறவோ கவனிக்கவோ முடியாது என்றும் பரிசோதனையில் பங்குபெறும் மாணவர்களுக்கு கூறப்பட்டது. பரிசோதனை நடத்தப்பட்ட போது பங்குபெறும் மாணவருக்கு தான் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் உரையாடுவது போல தோன்றும் ஆனால் உண்மையில் எந்த ஒரு சமயத்திலும் ஒரு மாணவரே அங்கு உண்மையான பரிசோதனையாளர்களுடன் உரையாடிக்கொண்டிருப்பார். ‘மற்ற மாணவர்களோ ‘ பொதுவாக பதிவு செய்யப்பட்ட உரையாடல்களாக இருக்கும். பரிசோதனையின், தொடக்கத்திலேயே உரையாடலை தொடங்கும் மாணவராக நடிக்கும் பரிசோதனையாளர் அல்லது பாதிக்கப்பட்டவராக நடிக்கவிருப்பவர் தான் நியூயார்க் நகரத்தின் வாழ்க்கைக்கு தாக்குப்பிடிக்க இயலாமல் மன-அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மிகுந்த தயக்கத்துடனும் நாணத்துடனும் கூறுவார். தேர்வுகளுக்க்காக கடினமாக படிக்க வேண்டி வரும்போது தனக்கு வலிப்பு நோயும் வருவதுண்டு எனவும் கூறுவார். பின்னர் (பதிவு செய்யப்பட்ட) ‘மற்ற மாணவர்கள் ‘ ஒவ்வொருவராக தங்கள் பங்குக்கு சிலவற்றை கூறுவார்கள். உண்மையில் பரிசோதனையில் ஈடுபடுத்தப்படும் மாணவரும் தனது முறை வரும் போது பேசுவார். இப்போது மீண்டும் முதல் மாணவரின் முறை வருகையில் அவரது குரல் மிகுந்த சத்தத்துடனும் வார்த்தைகள் குழறியபடியும் பின்வருமாறு ஒலிக்கும், ‘எனக்கு … அ ..அஹ்…வலிப்பு வர்ற மாதிரி இருக்கு… யாராவது உத..உதவி செஞ்சா ப்ளீஸ் எனக்கு உதவி…(குரல் வெகுவாக இறங்கித் தடுமாறுகிறது. பிறகு மேலும் ஏறுகிறது) நான் இறக்கப்போ….றேன்…உதவ முடிஞ்சா….செத்துட்டு இருக்கேன்…உதவ்…உதவி! ‘ (சில முனங்கல்கள் பின் அமைதி). இப்போதுதான் உண்மையான பரிசோதனையின் மையக்கட்டம் வருகிறது. உண்மைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நம் மாணவர் தன் அறையை விட்டு வெளியேறிச் சென்று ‘வலிப்பால் அவதிப்படும் சக மாணவருக்கு ‘ உதவுவாரா ?

தாங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவருடன் இருப்பதாக பரிசோதனை வடிவமைக்கப்பட்ட போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஏறத்தாழ அனைவருமே (98 சதவிகிதம்) வலிப்பால் பாதிக்கப்பட்டவருக்காக உதவ தங்கள் அறையை விட்டு வெளிவந்தனர். ஆனால் தாங்கள் மொத்தமாக நான்கு பேர் இருந்து உரையாடுவதாக மாணவர்கள் நினைகும் படி உருவாக்கப்பட்ட பரிசோதனையில், 31 சதவிகிதத்தினரே உதவ முன்வந்தனர். மூன்று பேர் என நினைத்தவர்களில் 62 சதவிகிதத்தினர். அதாவது பாதிப்புக்கு உள்ளாகும் நபருடன் அதிக சக-ஆட்கள் நிற்கும் போது பாதிப்பிலிருந்து காப்பாற்றும் பொறுப்பு நிற்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு விகிதிக்கப்படுகிறது. ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 45 விநாடிகளில் காப்பாற்ற அல்லது கவனிக்கப்படும் சாத்தியக்கூறு, ஒரே ஒரு நபர் நிற்கும்போது 50 சதவிகிதம் என்றால் அதேஇடத்தில் ஐந்து ஆட்கள் நின்றுக்கொண்டிருந்தால் 0 சதவிகிதம்.

இந்த பரிசோதனையில் வெளியான மற்றொரு சுவாரசியமான விஷயம்: பொதுவாக சக மனிதனுக்கு பொது இடத்தில் நடக்கும் பாதிப்பினை, ஒரு துரும்பைக்கூட அசைத்துப்போடாமல் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மற்றவர்களை பற்றிக் கவலைப்படாதவர்கள் என நினைப்பதும் தவறானது என்கின்றனர் டார்லேயும் லடானேயும். இந்தப் பரிசோதனையில் உதவ முன்வராதவர்கள் பின்னர் பரிசோதனையின் பொறுப்பாளர்களிடம், பாதிக்கப்பட்டவர் நன்றாக இருக்கிறாரா ? சரியான நேரத்தில் அவரை காப்பாற்றிவிட்டார்களா என விசாரித்தனர். அவ்வாறு விசாரிக்கும் போது அவர்கள் நடத்தை நடுக்கத்துடனும் உண்மையான ஆதங்கத்துடனும் வெளிப்பட்டது. டார்லே மற்றும் லடானேயின் கூற்றுப்படி உதவ முன்வந்தவர்களை விட இவர்களே உணர்ச்சிபூர்வமாக பாதிக்கப்பட்டிருந்தனர். ஆக அவர்கள் உதவக்கூடாது எனும் முடிவுடன் செயல்படவில்லை மாறாக முடிவெடுக்கமுடியாத அசெளகரிய நிலையில் இருந்தனர்.

பாதிக்கப்பட்டவரை சுற்றி நிற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்கும் உதவியின் அளவையும் அந்த உதவி கிடைக்கும் வேகத்தையும் நிர்ணயிக்கிறது. ஆனால் உதவியினை அது மட்டுமே நிர்ணயிப்பதில்லை. ஒருபொது இடத்தில் ஏற்படும் விபத்தின் போதும் சரி அல்லது எந்த நிகழ்ச்சியின் போதும் சரி ஒருவரின் எதிர்வினை சூழ்ந்திருக்கும் நபர்களின் நடத்தைகளால் பாதிக்கப்படுகிறது.

நியூயார்க் கிராண்ட் செண்ட்ரல் ஸ்டேஷனின் பயணிகள் காத்திருக்கும் அறையில் இரு பெண்கள் ‘ப்ரிஸ்பீ ‘ விளையாடுகின்றனர். தவறுதலாக அது மற்றொரு பெண் மீது சென்று விழுகிறது. அந்தப்பெண் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிரித்தபடியே அவளும் அந்த விளையாட்டில் ஈடுபடுகிறாள். அந்த அறையில் இருந்தவர்களில் 86 சதவிகிதத்தினரும் அந்த விளையாட்டில் சிரித்தவாறே பங்கு பெறுகின்றனர் அல்லது விளையாடுபவர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.

நியூயார்க் கிராண்ட் செண்ட்ரல் ஸ்டேஷனின் பயணிகள் காத்திருக்கும் அறையில் இரு பெண்கள் ‘ப்ரிஸ்பீ ‘ விளையாடுகின்றனர். தவறுதலாக அது மற்றொரு பெண் மீது சென்று விழுகிறது. அந்தப்பெண்ணோ அதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக எரிந்து விழுகிறாள். இப்படி பொது இடத்தில் ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறீர்களே கண்ணில் பட்டால் என்ன ஆகும் என கேட்கிறாள். ‘ப்ரிஸ்பீ ‘யை உதைத்து தள்ளுகிறாள். இப்போது அந்த அறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல ஆங்காங்கே நின்று கொண்டிருந்த பிரயாணிகள் வரை வந்து அந்த சிறுமிகளை கண்டித்து விளையாட்டை நிறுத்தும்படி கூறுகின்றனர்.

டார்லே மற்றும் லடானேயால் வடிவமைத்து அரங்கேற்றப்பட்ட மற்றொரு பரிசோதனை இது. விளையாடும் பெண்களும் அந்த மற்றொரு பெண்ணும் பரிசோதனையாளர்களால் அனுப்பப்பட்டவர்கள். பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது காத்திருந்த பயணிகளின் நடத்தை.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஜான் டார்லே வடிவமைத்த மற்றொரு பரிசோதனை மானுடச்சூழல் தனிநபரின் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் ஏற்படுத்தும் தாக்கத்தை தெளிவாக காட்டுகிறது. பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களில் சிலர் தனியாக தனி அறைகளில் அமர்ந்து சில படங்களை வரைய வேண்டும். வேறு சிலரோ ஜோடியாக அமர்ந்து வரைய வேண்டும். அவ்வாறு ஜோடியாக அமர்ந்து வரைபவர்களில் சிலர் ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்தபடி அமர்ந்து வரைய வேண்டும். மற்றவர்களோ முதுகுக்கு முதுகாக அமர்ந்து வரைய வேண்டும். இவ்வாறு வரைந்து கொண்டிருக்கும் போது திடாரென அடுத்த அறையில் ஏதோ ‘தட தட ‘வென ஏதோ விழுந்த ஒலி கேட்பதுடன் ‘ஐயோ அம்மா என் கால் போச்சே! ‘ என ஒரு ஓலம் கேட்கும். தனியாக அமர்ந்திருந்தவர்களில் 90 சதவிகிதத்தினர் ஒலி கேட்டதும் உதவிட எழுந்தனர். ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தவர்களில் 80 சதவிகிதத்தினரும், முதுகுக்கு முதுகாக அமர்ந்திருந்தவர்களில் 20 சதவிகிதத்தினரும் உதவிட எழுந்தனர். தனியாக இருப்பதும், ஒருவரை ஒருவர் பார்ப்பதும், அல்லது முகம் பார்க்காமல் இணைந்திருப்பதும் ஏன் உதவுதலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ? விழுகிற ஒலி கேட்டவுடனேயே அடுத்தவர் முகம் காட்டும் சமிக்ஞைகள் இருவராக இருப்பவரது நடத்தையை தூண்டுகிறது. ஆனால் இணைந்திருக்கையில் வெறும் ஒலி மட்டுமே கேட்க அடுத்தவர் முகம் தெரியாமல் இன்னொருவரும் இருக்கிறார் என்பது மட்டுமே அறியப்பட்டிருக்கையில் உதவ எழும் எதிர்வினையை அது தாமதப்படுத்துகிறது.

ஒரு அறைக்குள் மூவர் இருக்கின்றனர். அந்த அறைக்குள் ஒரு திறப்பின் வழியாக சிறிதளவு புகை வர ஆரம்பிக்கிறது. அங்கிருக்கிறவர்களில் இருவர் சில நொடிகள் அந்த புகையை பார்த்தபின் தன் தோள்களை குலுக்கி ‘இது ஒன்றுமில்லை ‘ என்பது போல நடந்து கொள்கின்றனர். ஒரு அறைக்குள் ஒருவர் மட்டும் இருக்கிறார். அந்த அறைக்குள் ஒரு திறப்பின் வழியாக சிறிதளவு புகை வர ஆரம்பிக்கிறது.

முந்தைய ‘மூவர் இருக்கும் அறை ‘ பரிசோதனைகளில் பரிசோதனை தொடங்கப்பட்டு ஆறு நிமிடங்கள் வரை (அதுதான் பரிசோதனையின் கால அளவும் கூட) எவரும் புகை குறித்து புகார் செய்யவில்லை. ஆனால் ஒருவர் மட்டுமிருக்கும்படியாக நடத்தப்பட்ட பரிசோதனைகளிலோ இரண்டு நிமிடக்களில் 75 சதவிகிதத்தினர் புகை குறித்து புகார் செய்துவிட்டனர்.டார்லே மற்றும் லடானேயால் வடிவமைக்கப்பட்ட இன்னமுமொரு பரிசோதனை இது. நம் தனிப்பட்ட அறிதல் மற்றும் நடத்தை என நாம் நினைக்கும் ஒரு செயல் உண்மையில் உடனிருப்போரின் நடத்தை மற்றும் அறிதல்களால் தாக்கம் அடைகிறது என்பதை உணர்த்தும் இந்த உளவியல் நிகழ்வினை டார்லே மற்றும் லடானே பன்மைத்துவ அறியாமை (pluralistic ignorance)என அழைக்கின்றனர்.ஒருவரின் தனித்துவ வெளிப்பாட்டினை தடை செய்யும் பொறுப்புணர்வு விகிதப்படுதலும் சரி, பன்மைத்துவ அறியாமையும் சரி ஆபத்திலிருப்பவருக்கு உதவுவதை தடுக்கும் விதத்தில் செயல்படும் காரணிகளாக அமைகின்றன.

இந்த உளவியல் பரிசோதனைகள் காட்டும் முக்கிய உண்மைகள் ஆபத்திலிருக்கும் ஒரு மானுட உயிர் காப்பாற்றப்படுவதைக் குறித்ததாகும். ஆபத்திலிருப்பவரை அவரைச் சூழ்ந்திருப்போர் காப்பாற்றாமல் வேடிக்கை பார்ப்பது சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சி மறத்துவிட்டதால் என்கிற எதிர்மறை கருத்தாக்கம் தவறானது, மேம்போக்கான மனச்சித்திரத்தை உருவாக்குவது. காம்ரேட் அறிவுஜீவிகள் முதலாளித்துவ சமுதாயத்தில் தனிமனித தன்மை அதிகமாகி சமுதாய உணர்வு குன்றிவிட்டதால்தான் இந்த குளறுபடிகள் என்று கூட சித்தாந்திப்பார்கள். ஆனால் உண்மை அதிக சிக்கலும் பன்முகத்தன்மையும் வாய்ந்தது என்பதை டார்லே மற்றும் லடானேயின் பரிசோதனைகள் காட்டுகின்றன. பொதுவாக பொறுப்புணர்வு விகிதப்படுதலும், அசாதாரண சூழல் மனதில் உருவாக்கும் தயக்கநிலையும், சுற்றியொருப்போரின் ஒட்டுமொத்த நடவடிக்கையும், பன்மைத்துவ அறியாமையுமாக இணைந்து உருவாக்கும் ஒரு உளவியல் கோளத்தில் சிக்கி நிற்கும் உறைநிலையே உதவியின்மை. இத்தனையையும் மீறி ஆபத்திலிருக்கும் ஒருவருக்கு உதவிட முன்வர தனிமனித மதிப்பீட்டுத்தளம் வலிமையுடையதாக இருக்கவேண்டும்.

பயன்படுத்தப்பட்டவை:

q டார்லே.J.M. & லடானே B. ‘Bystander Intervention in Emergencies: Diffusion of Responsibility ‘, Journal of Personality and Social Psychology ‘, 8, 377-383 (1963)

q ஹான்ஸ் & மைக்கேல் ஐஸன்க், ‘Where has the Godd Samaritan gone ? ‘ in ‘Mindwatching ‘ பக்.16-24, புக் க்ளப் அஸோஷியேட்ஸ் (1981).

q கீழ்காணும் இணைய முகவரியில் ஐய்ன் ராண்டின் முதலாளித்துவத்தை ஆதரிக்கும் ஆப்ஜெக்டிவிச அணுகுமுறையில் இப்பிரச்சனை அணுகப்பட்டுள்ளது.

www.objectivistcenter.org/articles/csilk_why-kitty-genovese-die.asp

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்