Terminal (2004)

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

மாது


முதன் முறையாக அமெரிக்காவிற்கு வருகிறீர்கள். உங்கள் தாய்மொழியைத் தவிர வேறு மொழி ஏதும் உங்களுக்குத் தெரியாது. வழக்கமான விசாரனைகளுக்காக ( ‘எதற்காக அமெரிக்கா வருகிறீர்கள் ? எவ்வளவு நாட்கள் இங்கிருப்பீர்கள் ? எங்கே தங்கப் போகிறீர்கள் ? ‘) வரிசையில் போய் நிற்கிறீர்கள். பரிசோதனை அதிகாரி உங்களது பாஸ்போர்ட்டை ஒரு இயந்திரத்தில் தேய்க்கிறார். இயந்திரம் சிகப்பில் அலறுகிறது. ‘மன்னிக்கவும் நீங்கள் அமெரிக்காவிற்குள் செல்ல முடியாது ‘ என்கிறார் அதிகாரி. உங்கள் நாட்டு அரசாங்கத்தை போராளிகள் கைப்பற்றியுள்ளனர். உங்களது பாஸ்போர்ட் செல்லுபடியாகாது. தாய் நாடு என்று ஒன்று உங்களுக்கு கிடையாது. நீங்கள் திரிசங்கு ஆக்கப் பட்டு விட்டார்கள். இப்போதைக்கு விமான நிலையம் தான் உங்கள் வீடு. என்ன செய்வீர்கள். இதுதான் கதை. மிகவும் சுவாரசியமான, ஆனால் மெல்லிய கரு.

ஸ்பீல்பெர்க் (Spielberg) டாம் ஹன்க்ஸின் (Tom Hanks) உதவியுடன் இந்த கதையை படமாக்க முயன்றிருக்கிறார். இரு வல்லவர்கள் இணைந்திருக்கிறார்கள். ஆனால் …. ?

க்ரக்கோஷியா என்ற (கற்பனை) ஐரோப்பிய நாட்டவர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹன்க்ஸ். அவருக்குத்தான் முதல் பத்தி நிலைமை. தன் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தால், ந்யூ யார்க் விமான நிலையத்தை விட்டு வெளியே போக முடியாத நிலைமை. தன் வெகுளித் தனத்தாலும் (வெகுளித் தனம் – Forrest Gump நாயகனுக்கு கைவந்த கலை) நல்ல குணத்தாலும் அங்குள்ளோரை கவர்கிறார். இடையே சிறு காதல் (காதரின் ஜெட்டா ஜோன்ஸ்), சிறு சல சலப்பு (விமான நிலைய அதிகாரியாக நடிக்கும் Stanley Tucciயுடன்).

டாம் ஹன்க்ஸ் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை. கட்டம் போட்ட முழுக்கைச் சட்டை, அதற்குப் பொருந்தா நிறத்தில் ஒரு குழாய், சற்றே பெருத்த தோப்பை, தத்து பித்து மொழி, அசடு வழியும் முகம் – பாத்திரத்தில் நன்றாக பொருந்தியிருக்கிறார். அவரது நடிப்பு நிறைய இடங்களில் சிரிப்பு வரவழைக்கிறது. ஆனால் அவரை மட்டுமே நம்பி படத்தை நகர்த்த முயற்சித்திருப்பதால், படம் சில இடங்களில் ஜவ்வு போல் இழுக்கிறது. அளவுக்கு மீறி ஹன்க்ஸின் நடிப்பு திகட்டுகிறது. ஸ்டான்லி டுஸ்ஸி போன்ற நல்ல நடிகர் சரியாக உபயோகப் படுத்தப் படவில்லை.

சில கமல் படங்களில் பார்த்திருக்கிறேன் – இடைவேளை வரை படம் விறு விறுப்பாக செல்லும். இடைவேளைக்குப் பிறகு தியேட்டரில் உட்கார முடியாது. சரக்கெல்லாம் முதல் பாதியிலேயே தீர்ந்திருக்கும். நேரத்தை நிரப்ப வேண்டும் என்று படத்தை இழூத்துக் கொண்டிருப்பார்கள். அதே நிலைமையை இங்கேயும் உணர முடிகிறது. ஒன்றரை மணி நேரத்திற்குக் குறைவாக படத்தை முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ. நிச்சயமாக இரண்டு மணி நேரத்திற்கு மேல் இழுத்துச் செல்ல சிரமப் பட்டிருக்கிறார் இயக்குனர். மெல்லிய கரு என்பதால் நம்ப முடியாத நிகழ்வுகளும் தேவையில்லாத காட்சிகளும் (காதல்) திணிக்க பட்டிருக்கிறது.

இந்த வருடத்திற்கான ஆஸ்கர் நிச்சயமாக இந்த படத்திற்கோ, படத்திற்காக ஸ்பீல்பெர்க்கிற்கோ ஹன்க்ஸிற்கோ கிடைக்காது என்று நம்புகிறேன். மற்றவர்களின் படம் என்றால் மூன்று நட்சத்திரங்கள் கொடுத்திருக்கலாம். ஸ்பீல்பெர்க் போன்ற பெரிய மனிதர் சொதப்பியிருப்பதால் ஒன்று அல்லது ஒன்றரை நட்சத்திரம்தான் கொடுக்க முடியும்.

ஒரு வெள்ளிக் கிழமை இரவு, அதிக எதிர்பார்பில்லாமல் போய் பார்த்து வாருங்கள்.

—-

tamilmaadhoo@yahoo.com

Series Navigation