This entry is in the series 20040624_Issue

நாகூர் ரூமி


====
வெகுகாலமாயிற்று
விளங்கிக்கொள்ள
நம்முடையது போலல்ல
இறைவனின் காதுகள் என.

கூட்டுப்பிரார்த்தனையில் ஒரு நாள்
கதறிக்கதறிக் கையேந்தினார் ஒருவர்
அழுதழுது கேட்டார் ஒருவர்
கேட்டதா என்றேன்
வந்து சேரவேயில்லை என்றான்
சிரித்துக்கொண்டே.

வேதனைப்பட்டேன்
ஏழுவானம் தாண்டும் சப்தம்
எழுப்ப முடியுமா மனிதனால் என.

ஏன் எட்டவில்லை என்றேன்
காற்றை மட்டும் கொண்டு யாருமென்
கதவைத் திறக்க முடியாதென்றான்.

அரபியில் கேட்டால் அர்ஷை அடையுமா
உர்துவில் கேட்டால் உன்னைச் சேருமா
தமிழில் கேட்டால் தவறுதான் என்ன
என்றெல்லாம் கேட்டேன்.

மறுபடியும் புன்னகை
புன்னகையில் பிரகாசத்தில்
உருகிப் போயின
தூசுபடிந்து கீறல்கள் விழுந்த என்
வார்த்தைக் கண்ணாடிகள்.

ஐயமற அறிந்துகொண்டேன்
இப்போது நான்
இறைவனுடைய காதுகள்
நம்முடையதைப் போலல்ல
என.

அர்ஷ் — இறைவனது இருக்கை

ruminagore@hotmail.com
ruminagore@yahoo.com
ruminagore@gmail.com

Series Navigation