திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நரகம்

This entry is in the series 20090416_Issue

ஸ்ரீபன்



சொர்க்கத்தின் வாசல்
எங்கு தொடங்குகிறதோ தெரியாது
நரகத்தின் வாசல் மட்டும்
கொழும்பிலிருந்து தொடங்குகிறது

சித்திரகுப்தர்கள் கையில்
நீண்ட மரண சாசனங்கள்
எமதர்மனுக்கு மட்டுமென்ன
நீண்ட கால வழக்குகளை
சடுதியில் முடித்து
விடுமுறை போகும் அவசரம்

பாசக் கயிறு பற்றாக்குறைபோலும்
இந்தியாவிற்கு அடக்கடி
பயணப்படும் எமதூதர்களுக்கும்
அப்படியொரு அவசரம்

யாருமில்லை உதவ இன்று
என்ன நடக்கும் பெரிதாக
நரகத்தில் கால்பதிப்பதைவிட
சொந்தமண்ணிலேயே கெத்துப்போகிறோம்
ஈழத்தமிழராகவே

உயிரென்ன பெரிதா?
நரம்புகளால் பின்னப்பட்டு
கை கால் முழைத்ததால் மட்டும்
மனிதனென்று அடையாளமா?

சொந்த மண்ணிலேயே
செத்துப்போகிறோம்
உணர்வுள்ள மனிதராய்


Series Navigation

About ஸ்ரீபன்

ஸ்ரீபன்

View all 9 articles →

நரகம்

This entry is in the series 20030413_Issue

சித்தார்த் வெங்கட்


‘We are not targeting civilians ‘
– Donald Rumsfeld, 23/03/2003.

பூம்….

இதோ இன்னொன்று.
மிக அருகில்.
மிக மிக அருகில்.
சதை கருகும் வாசம் தலையை கனக்கவைக்கிறது.
மனதையும்.

இது நரகம்.

உண்மை. நாங்கள் குறிபார்க்கப் படவில்லை.
விழும் குண்டுகள் எங்களுக்கானவை அல்ல.
ஆனாலும் இது நரகம்.

நரகத்தில் மரணம் இல்லை.
அங்கு வாழ்வும் இல்லை.
நரகத்தில் இழப்பே மிஞ்சும்.
அல்லது இழப்பின் அச்சம்.

நாகரீகம் வளர்த்தவர்கள் நாங்கள்.
இன்று காட்டு மிராண்டிகளாய் சித்தரிக்கப்படுகிறோம்.

இருப்பவனுக்கு பதவி வேண்டும்.
வருபவனுக்கு பணம் வேண்டும்.
இடையில் உருளும் பகடைகள் நாங்கள்.

உண்மை. நாங்கள் குறிபார்க்கப் படவில்லை.
விழும் குண்டுகள் எங்களுக்கானவை அல்ல.
எங்கள் மேல் விழுந்தால் தான் என்ன ?

இரண்டு வரி மன்னிப்பும்,
ஒரு நிமிட மெளன அஞ்சலியும் (நேரம் இருந்தால்)
செலுத்தினால் போகிறது.

வாழ்க மானுடம்.

siddhu_venkat@yahoo.com

Series Navigation

About சித்தார்த் வெங்கட்

சித்தார்த் வெங்கட்

View all 5 articles →