எஸ். ஜெயஸ்ரீ
தேடல் என்பது ஒருவகையான பயணம். அத்தேடலின் விளைவுகளைக் காட்டிலும் அத்தேடலின்போது கிட்டும் அனுபவங்களே முக்கியமானவை. அவை இனியவையாகவும் இருக்கலாம். கசப்பானவையாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு அடியாகக் கடந்து நாம் பெற்றவை அவை என்னும் அம்சமே தேடலில் கருதத்தக்கவையாக அமைகின்றன. வாழ்வின் பொருளைத் தேடி புத்தர் அலைந்துபெற்ற அனுபவமும் தமிழ் ஏடுகளைத் தேடி உ.வே.சா. அலைந்துபெற்ற அனுபவமும் வரலாற்றுப் புகழ் வாய்ந்தவை. தொடக்கத்தில் மிகவும் ஆர்வத்தோடு தேடலில் ஈடுபடும் ஒருசிலர் இறுதியில் படிப்படியாக ஆர்வம் குறைந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். மனம் சலித்து ஒதுங்கிவிடுகிறார்கள். அடைந்த அனுபவங்களே போதுமென்று ஓய்ந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் நடுவே குன்றாத ஆர்வமும் சலிப்பில்லாத முயற்சியும் ஓயாத மனஎழுச்சியும் கொண்டவராகக் காணப்படுகிறார் பாவண்ணன். தன்னைச் சுற்றிய புறஉலக நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பதன்வழியாகவும் அவற்றை மீண்டும்மீண்டும் அசைபோட்டுப் பார்ப்பதன்வழியாகவும் வாழ்வின் பொருளை அறிவதற்கு எப்போதும் முயற்சிசெய்தபடி இருக்கிறார் பாவண்ணன். கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல வடிவங்களில் அந்த அனுபவங்கள் படைப்புகளாகின்றன. ‘துங்கபத்திரை’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாவண்ணனின் பதினேழு கட்டுரைகளும் ஏதோ ஒருவகையில் தாம் கண்டுணர்ந்த உண்மையை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதத்திலேயே அமைந்துள்ளன.
‘பச்சை நிறத்தில் ஒரு பறவை’ என்றொரு கட்டுரை இத்தொகுப்பின் முக்கியமான ஒன்று. நண்பர்களுக்காக வழக்கமாகக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு மைதானத்தருகே தாம் கண்ட ஒரு புதிய பறவையின் அழகில் மயங்கி அதன் பெயரைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொள்கிறார் பாவண்ணன். யாருக்கும் அவர் சொல்கிற அடையாளங்களைக் கொண்டு பறவையின் பெயரைச் சொல்லத் தெரியவில்லை. யாருமே அருகில் இல்லாத ஒரு நாளில் மீண்டும் அவருக்குமட்டுமே அந்தப் பறவை காட்சி தருகிறது. ஏதோ ஒரு பறவைதானே என்று விட்டுவிடாமல் தொடர்ந்து அதைப்பற்றியும் அதன் பெயரைப்பற்றியும் பாவண்ணன் யோசிப்பதிலிருந்து சாதாரண விஷயங்களைக்கூட ஆர்வத்தோடும் ஒரு தேடுதல் வேட்கையோடும் அவர் அணுகுவதைக் காணலாம்.
இன்றைய வேகமான உலகில் வீடுகள் என்பவை வசிப்பதற்கான இடம் என்றுமட்டுமே பார்க்கப்படுகிறது. வீட்டுச் சொந்தக்காரருடன் பிரச்சினைஎன்றோ, வசதி குறைவானது என்றோ யாரும் வீடு மாற்றுவதற்குத் தயங்குவதில்லை. வீடு, நிலம் என்பவை வியாபாரப் பொருட்களாகிவிட்ட சூழலில் வீடுகளை விற்பதும் வாங்குவதும்கூட வெறும் பொருள் பெருக்கும் விஷயமாகிப் போய்விட்டது. ஆனால், வீடு என்பது வெறும் பருப்பொருள் மட்டுமல்ல. அது மனிதர்களுடைய உணர்வுகளோடு தொடர்புடையது என்பதை ‘ஒரு வீட்டின் ஆயுட்காலம்’, ‘எரிந்த வீடும் எரியாத நினைவுகளும்’ என்ற இரு கட்டுரைகளிலும் சொல்கிறார் பாவண்ணன். ஒரு வீட்டின் ஆயுட்காலம் கட்டுரையில் வீடு கட்டுவதற்காக குவிக்கப்பட்ட மணல்குவியலில் ஒரு குழந்தைகூட ஏறிக் குதித்து விளையாடாதது பாவண்ணனுக்கு வருத்தத்தை அளிக்கிறது. மாறிவரும் சூழலோ, கட்டுப்படுத்தும் ஊடகங்களோ, இன்னதென்று தெரியாத ஏதேதோ நோய்த் தொற்றுகளோ குழந்தைகளை மணலில் விளையாட விடாமல் தடுக்கின்றது. தம் சிறுவயதில் மணலில் விளையாடும்போது அம்மா வந்து அழைத்துப் போவதை நினைவுகூறும் பாவண்ணன், ‘சிறுவயதில் பெற்றோர் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள். பெரியவர்களாகும்போது பிள்ளைகள் பெற்றோரை அழைத்துச் செல்கிறார்கள்’ என்ற வார்த்தைகள் பொருள் பொதிந்தவை. வீடு, குழந்தைகள், முதியோர் எனப்பல விஷயங்கள் கட்டுரை சொல்லாமல் சொல்லும் விஷயங்களாக நம் சிந்தனைக்கு விடப்பட்டுள்ளன.
‘எரிந்த வீடும் எரியாத நினைவுகளும்’ கட்டுரையில் ஒரு மாறாத நினைவுச்சின்னமாக மாறிவிடும் திறவுகோல் நம் மனத்தைக் கனக்கச் செய்கிறது. இலங்கையில் எண்ணற்ற சொல்லொணா வேதனைகளைத் தாங்கிக்கொண்டு, நிச்சயமற்ற வாழ்வை மக்கள் வாழ்கிறார்கள் என்னும் வேதனைமிகுந்த உண்மை, உள்ளமைந்த பொருளாக, ஊமைவலியாக கட்டுரையில் இழையோடுவது கவனிக்கத்தக்கது.
‘அழிந்துபோன அறிதல்முறை’ கட்டுரையில் பாவண்ணன் மிகவும் கவலையோடு எடுத்துரைக்கும் விஷயம் மெக்காலே கல்வித் திட்டமுறையால் நம் பண்பாட்டில் நிகழ்ந்த சரிவுகள். இச்சரிவுகளால் எந்த அளவுக்கு நம் தேசத்தவர் முட்டாளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும்போது ஆங்கிலேயரின் சூழ்ச்சி புரிகிறது. அந்தத் திட்டத்துக்கே அடிமையாகி இன்று நம் சுயத்தையே இழந்துகொண்டிருக்கிறோம். இந்தக் கல்வித் திட்டத்திலிருந்து மாற்றத்தைத் தேடும் பாவண்ணனுக்கு பழைய குருகுலக்கல்வி எங்கோ ஒரு மருத்துவர் குடும்பத்தில் நடக்கும்போதும் ஈஷா யோக மையத்தில் கவனிக்கக்கிடைக்கும்போதும் மனம் பொங்கிவழிகிறது.
இந்தக் கல்விமுறை சார்ந்த மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தபோதும் இன்றைய கல்விமுறையில் பண்பாடு, சமூகம், தத்துவம் போன்ற துறைகளையொட்டி ஆர்வமும் மனவிரிவும் அடைவதற்கான வாய்ப்புகளே இல்லாததையும் வெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான அணுகுமுறை பெருகிவிட்டதையும் கண்ட வருத்தமும் பாவண்ணனுக்கு இன்னொரு பக்கத்தில் இருப்பதையும் உணரமுடிகிறது. கல்வி, மதிப்பெண், வேலை எதையுமே அறிவின் தேடலாகப் பார்க்காமல் பணம் சம்பாதிக்கும் முறைமையாகவே கல்வியைப் பார்க்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். அதனாலேயேகூட பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான நெருக்கம் குறைந்துவருகிறது. இன்றைய பொருளாதார உலகம் இப்படித்தான் நம்மை ஆக்கிவைத்திருக்கிறது. ‘புதிய பெற்றோர்கள்’ கட்டுரையில் இப்படியான வருத்தங்களை நமக்கும் ஏற்படுத்துகிறார் பாவண்ணன். இக்கட்டுரையில் இடம்பெறும் விவசாய சமூகத்தைச் சேர்ந்த பழைய பெற்றோர்களின் வாழ்வில் கல்வி குறுக்கிட்டு சற்றே தடுமாற்றத்தில் ஆழ்த்தியதைப்போலக் கல்விச்சமூகத்தைச் சார்ந்த புதிய பெற்றோரின் வாழ்வில் கனவுகள் குறுக்கிட்டு தடுமாறவைப்பதாகத் தோன்றியது என்ற வரிகள் ஒவ்வொருவரும் அனுபவித்து உணரக்கூடியது.
பாவண்ணனுக்கு தேடல் சுகானுபவமாய் இருப்பதனாலேயே தேடலில் ஈடுபட்டு ஏதேனும் கண்டுவிடும் மனிதர்களைக் காணும்போது பேரானந்தம் அவரைத் தொற்றிக்கொள்கிறது. ‘சாவை வென்ற வீரர்’ வில்லியம்ஸ் பற்றி ஒரு புத்தகத்தைப் படித்திருக்கிறார். காயம் பட்ட இடத்தில் தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கான சில முக்கியமான நடவடிக்கைகளை அறுவை சிகிச்சையின்போது எடுக்கவேண்டும் என்று நினைக்கும் வில்லியம்ஸ் என்னும் மேலைநாட்டு மருத்துவர், அந்நடவடிக்கைகளுக்குத் தன்னையே சோதனைக்களமாக மாற்றி, அவற்றின் மகத்துவத்தை உலகமறியச் செய்யவைத்த சம்பவத்தை அறிந்து மனம்நெகிழ்ந்து போகிறார் பாவண்ணன். ஒரு புத்தம்புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றை எதிர்கொள்வதில் காட்ட நேர்கிற உறுதியும் உழைப்பும் திறம்பட இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ‘மகிஜா என்னும் மாமனிதர்’ கட்டுரையிலும் குப்பைமேடாக இருந்த இடத்தைத் துய்மைப்படுத்தி, ஒரு பூங்காவாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபடும் மகிஜா பாவண்ணனைக் கவர்கிறார். அரசியல்வாதிகளைப்பற்றி தொனிக்கும் எள்ளல்கள் இக்கட்டுரைக்குச் சுவையூட்டுகின்றன.
‘துங்கபத்திரை’, ‘அருவி என்னும் அதிசயம்’ ஆகிய இரண்டு கட்டுரைகளிலும் பாவண்ணனின் இயற்கை மீதான தாகமும் ஆசையும், அதனால் ஏற்படும் ஆனந்தமும் வெளிப்படுகின்றன. துங்கபத்திரை நதியையும் ஜோக் அருவியையும் பாவண்ணன் விவரிக்கும் அழகில் வாசகர் மயங்குவது உறுதி. கட்டுரையின் ஒவ்வொரு வரியும் அவற்றின் அருகிலேயே நாம் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. துங்கபத்திரையைக் காண்பதற்காக குழந்தைகளை அழைத்துவரும் ஆசிரியரைப் பார்த்து, வெளிப்படையாகப் பேசுகிற குழந்தைகளைப் பார்த்து மகிழும் காட்சியும் குறிப்பிடத்தக்கது. அறிதல்முறையைப்பற்றிய கட்டுரையையும் நம்மால் இங்கே தொடர்புபடுத்திப் பார்க்கமுடிகிறது.
‘நெஞ்சை நிரப்பிய பாடல்கள்’ கட்டுரையில் புரந்தரதாசரின் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ஏற்கனவே அக்கமகாதேவி, பசவண்ணர் போன்றவர்களுடைய பாடல்களைக் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். இறைவன், பிறவி, மனிதனில் இறைவனைக் காணுதல், பொய்யான பக்தி போன்ற கேள்விகளின் தேடலாக அமைந்த பாடல்கள் இவரை வெகுவாகக் கவர்ந்துவிடுகின்றன என்பதன் வெளிப்பாடே இந்தக் கட்டுரை. புரந்தரதாசரின் கீர்த்தனைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது இக்கட்டுரை.
ஏழைகளை மிகவும் ஏழைகளாகவும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் மாற்றும் இன்றைய தாராளமயப் பொருளாதாரம்தான் கழைக்கூத்தாடிகளையும் நாடோடித் தொழிலாளர்களையும் நம் முன்னே உலவவிட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாத சிலமனிதர்களைப் பார்த்து வேதனைப்படுகிறார், ‘பார்வையும் பரிவும்’ கட்டுரையில்.
‘ஆறுதல்’, ‘சந்திப்பு’ கட்டுரைகள் சிறுகதைக்கு ஒப்பானவை. கதைகள் கற்பனை அல்ல. வாழ்க்கையின் கணங்களிலிருந்தே அவை உருப்பெறுகின்றன என்னும் உண்மையை வாசகர்கள் உணர்ந்துகொள்ளும்வகையில் இவை அமைந்திருக்கின்றன.
தம்மைச் சுற்றி நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களையும் உரையாடல்களையும் உள்வாங்கி, அவற்றை அழகான கட்டுரைகளாக வாசகர்களுக்கு வழங்கியிருக்கிற பாவண்ணன் பாராட்டுக்குரியவர். கட்டுரைகளில் அங்கங்கே தென்படும் கவித்துவம் மிகுந்த வரிகள், தொகுப்பைப் படித்துமுடித்தபிறகும் மனத்தில் நிழலாடியபடி இருக்கின்றன.
(துங்கபத்திரை-கட்டுரைகள், பாவண்ணன். எனி இந்தியன் பதிப்பகம், தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17, தொலைபேசி: 24329283)
ஜூலை 2008 ‘வார்த்தை’ இதழில் வெளியான புத்தக விமர்சனம்.
- அக அழகும் முக அழகும் – 1
- தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா
- தாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் !
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- தாகம்
- பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்
- எழுத்துப்பட்டறை – மும்பையில்
- ஹாங்காங்கின் இலக்கிய வெள்ளி
- 27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை
- தேடலின் தடங்கள்
- ‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்
- ஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்
- நீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்
- தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்
- என்றும் நீ என்னோடுதான்
- கவிதைகள்
- லஞ்சத்திற்கு எதிரான கருத்தரங்கம்
- Release function of the felicitation volume for the renowned epigraphist Mr. Iravatham Mahadevan
- ‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா
- ஏலாதி இலக்கிய சங்கமம்
- முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி ! [கட்டுரை: 38]
- “தொலையும் சொற்கள்”
- அலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)
- விஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று
- வயதில்லாமல் வாழும் உயிர்
- நினைவுகளின் தடத்தில் – 15
- தயிர் சாதம்
- ரெண்டு சம்பளம்
- வெள்ளித்திரை ஒளியில் ஈசல்
- ஊர்க்கிணறு
- எது சுதந்திரம்?
- இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்
- “மறக்கவே மாட்டோம்”
- தருணம்/2
- எட்டு கவிதைகள்
- குயில்க்குஞ்சுகள்
- வன்முறை
- ஏமாற்றங்கள்
- தொலைந்த வார்த்தை
- தன்நோய்க்குத் தானே மருந்து!
- சுதந்திரம்: சித்தம் போக்கு!! (மொழிச் சித்திரம்)
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)