தீபாவளி 2009
யூசுப் ராவுத்தர் ரஜித்

அப்பத்தைப்
பங்கு வைத்து
எத்தனை பூனைகளை
ஏமாற்றினேன்
வெளிச்சம்
போட்டுக் காட்டி
எத்தனை விட்டில்களின்
இறகொடித்தேன்
பொய் தடவி
பொய் தடவி
எத்தனை புண்களை
புரையோடச் செய்தேன்
நக வெட்டியாய் நடித்து
எத்தனை விரல்களை
நறுக்கிப்போட்டேன்
பொதுச் சத்தை
உறிஞ்சி உறிஞ்சி
எத்தனை வேர்களை
வேகவிட்டேன்
தாகம் தணித்த
குடிநீர்க் குளங்களில்
எத்தனை முறை
வாய் கொப்பளித்தேன்
உமியை மட்டுமே
நட்புக்குத் தந்து
எத்தனை முறை
ஊதி ஊதித் தின்றேன்
எல்லாவற்றிற்கும் முடிவு?
இதோ இதோ தீபாவளி
10..9..8..7..
6..5..4..3..2..1
டுப்.. டம்.. டுப்.. டமால்௪
ஊ …. உ.. உ.. உ௪
உதித்தது தீபாவளி
எனக்குள் உதிர்ந்துவிட்டான்
அந்தப் பழைய நான்
இதோ உதித்துவிட்டான்
புதிய நான்
வாழ்க தீபாவளி 2009