This entry is in the series 20031106_Issue

புகாரி


……………………………

ஏணிப் பொழுதுகளில்
இதயம் ஏற்றிவைத்த
ஈராயிரம் கோடி தீபங்களை
ஒட்டுமொத்தமாய்
ஊதி அணைத்துக்கொண்டு
இருளின் கறுத்த உதடுகள்

தன்
ஆளுமை அதிகரிப்பில்
இருளுக்கு இணை
இருளே…
இருளே…

ஊதி அணைத்துப்
பூரித்துப் போவதில்
எப்போதும் அது ஓர்
பிறந்தநாள் பிள்ளை

0

எத்தனைதான்
சகித்துச் சகித்து
நரம்புகள் வெடிக்க
முகம் இறுக்கி
இருள் நஞ்சை
விழுங்கிக்கொண்டாலும்

விழிகளென்னவோ
வெளியேறத் துடிக்கும்
வெறியோடுதானே
ஒவ்வொரு
நொடிப்பொழுதும்
படபடக்கின்றன

0

இறுதியாய்…

அணைய மறுத்து
அல்லாடித்
தவித்துக்கொண்டிருக்கும்
அந்த
ஒற்றைத் தீபமொன்றே
போதும்….
போதும்…

மீண்டும்
அத்தனை தீபங்களையும்
ஏற்றிவிடலாம் என்ற
விடாப்பிடி நம்பிக்கையோடு
வாழ்க்கை
சாகாமல் கிடக்கும்
தன்
உயிர்த்தேடல்களை
உணர்வுகளில்
பூட்டிக்கொண்டு
**
அன்புடன் புகாரி
buhari@rogers.com

Series Navigation