தாயின் தனிச்சிறப்பு

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

பவளமணி பிரகாசம்


‘தாயிற்சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ‘ என்பது ஆன்றோர் வாக்கு. அந்த குடியிருந்த கோவிலின் சிறப்பு மிகவும் அலாதியானது. ஒரு தாய் ஆற்றும் கடமைகள் சாமான்யமானவையல்ல. தன் குழந்தைக்கு உணவளித்து, உடையுடுத்தி, நோய் நொடியிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்ல ஒரு தாயின் கடமைகள். தொப்புள் கொடியை துண்டித்தவுடன் தாயும், சேயும் உடல்ரீதியாகத்தான் பிரிக்கப்படுகிறார்கள். அந்த சேய், அது ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, எத்தனை வயதானாலும் தன் தாயை சார்ந்தே இருக்கிறது. தாயன்பில் கதகதப்பு, எந்த சுழ்நிலையிலும் பாதுகாப்பு, ஆதரவு கிடைக்கும் என்ற எதிபார்ப்பு – இவைதான் காலங்காலமாய் அனுபவம் உணர்த்தும் உண்மை.

அப்படி ஒரு மகத்தான சக்தி படைத்த தாயால் களிமண்ணை பிசைந்து உருவம் செய்வது போல எளிதாக இள வயதிலிருந்தே குழந்தைகளை தட்டிக் கொடுத்து, கண்டித்து, பாராட்டி, நேர்வழி காட்டி நல்ல பிரஜைகளாய் உருவாக்க முடியும்.

தாயின் தனித்திறமையால் உருவாவது குழந்தையின் அறிவு. அறிவு என்பது மூளை வளர்ச்சியின் வெளிப்பாடு. மூளை இருக்கிறதே அது ஒரு மிக அதிசயமான, அற்புதமான மிஷின். கருவிலேயே திருவாக மிளிர்ந்த பிரகலாதன், அபிமன்யு போன்றோர் கதைகளை கேட்டிருக்கிறோம். கருவிலிருக்கும் குழந்தைக்கு கேட்கவும், கேட்டதை கிரகிக்கவும் முடிகிறது என்று இப்போது விஞ்ஞானபூர்வமாக நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை பிறந்து வெளியுலகை அடைந்த பின்னர் அது வளர்ந்து பேசப்படிக்குமுன்பே அதன் மூளையில் ஏகப்பட்ட சங்கதிகள் பதிவாக ஆரம்பித்து விடுகின்றன. சப்தங்கள், காட்சிகள், உருவங்கள் என பல விஷயங்கள் மூளைக்குள் நினைவுகளாக சேமிக்கப்படுகின்றன. ஒருவர் வளரும் சூழ்நிலைக்கேற்ப, படிக்கும், பார்க்கும், கேட்கும் விஷயங்களுக்கேற்ப சேமிக்கப்படும் நினைவுகள் அமைகின்றன. அத்தோடு ஒவ்வொருவர் மூளையும் தனித்தன்மை வாய்ந்தது. அதன் செயல்பாடு பிரத்யேகமானது.

நன்றாக பட்டை தீட்டிய வைரத்தின் மேல் ஒளி படும் போது எப்படி பல வண்ணங்கள் பளீரிடுமோ அது போல மூளைக்கு ஒரு தகவல் செல்லும் போது அதனோடு சம்பந்தப்பட்ட, ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்ட பல நினைவுத் தகவல்கள் மின்னலடிக்கும். இதை ஆங்கிலத்தில் association of ideas என்று சொல்வார்கள். இது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாய் நிகழும். உதாரணமாக ஒரு வார்த்தையை சொல்லி சட்டென்று நினைவுக்கு வருவதை சொல்லுங்கள் என்று கேட்டால் வெவ்வேறு பதில்கள்தான் கிடைக்கும். ‘இனிப்பு ‘ என்று சொன்னால் ஒருவர் ‘சர்க்கரை ‘ என்பார், ஒருவர் ‘லட்டு ‘ என்பார், இன்னொருத்தர் ‘சாக்லேட் ‘ என்பார், வேறொருவர் ‘மாம்பழம் ‘என்பார். அது போல ‘வெள்ளை ‘ என்றால் ஒருவருக்கு ‘பாலும் ‘, இன்னொருவருக்கு ‘புறாவும் ‘, ஒருவருக்கு ‘மல்லிகையும் ‘ , இன்னொருவருக்கு ‘சுண்ணாம்பும் ‘ நினைவுக்கு வரும். ‘ஒன்று ‘ என்று சொன்னால் ‘ஒன்றே குலம்,ஒருவனே தேவன் ‘ என்றோ, ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் ‘ என்றோ, ‘ஒரு குழந்தை போதுமே ‘ என்றோ வெவ்வேறு ஞாபகங்கள் நினைவுக்கு வரும். இப்படியான ஞாபகங்கள், சங்கதிகள் மனித மூளையில் குழந்தை பருவத்திலிருந்தே சேர்ந்து கொண்டே வரும்.

குழந்தைகளின் மூளையை ரத்தினக்கற்கள் நிரம்பிய பெட்டகமாகவோ, வேண்டாதவையும் அசுத்தங்களும் நிறைந்த குப்பைத்தொட்டியாகவோ மாற்றுவது அன்னையரின் கையில் தான் இருக்கிறது. நல்ல ஆரோக்கியமான குடும்ப சூழலில் வளரும் குழந்தை மிகச் சிறந்த பிரஜையாக உருவாவது திண்ணம். பெரியவர்கள் சண்டைகளை பார்த்து பழக்கப்பட்ட குழந்தைகள் மனதில் வக்கிர எண்ணங்களும், தாழ்வு மனப்பான்மையும் வளர வாய்ப்புண்டு. நல்ல கருத்துள்ள கதைகள், சான்றோர்கள், அறிஞர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள் போன்றவை குழந்தைகள் மனதில் உயர்ந்த லட்சியங்களை உருவாக்கும். ஒழுக்கத்துடன் வளர உதவி செய்யும். அவர்களுக்கு ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான பாதிப்புகள் ஏற்படச் செய்ய வெண்டியது தாய்மார்களின் கடமை, திறமை. குழந்தைகளை, தங்கள் அன்புச் செல்வங்களை பொறுப்புடனே அறிவுக்களஞ்சியங்களாய் , நாளைய சமுதாயத்தின் செம்மையான சக்திகளாய் அன்னையர்கள் உருவாக்குவார்களாக!

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்