சோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

சின்னக்கருப்பன்


சமீபத்தில் காண்கனில் நடந்த WTO பேச்சுவார்த்தைகளை திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு அருண் ஜெட்லி இந்தியாவின் விவசாயிகளின் எதிர்காலத்தையும், இன்னும் கோடிக்கணக்கான ஏழை நாடுகளின் விவசாயிகளின் எதிர்காலத்தையும் கவிழ்த்துவிடுவாரோ என்று பயமில்லை. நான் எதிர்பார்த்தது போலவே முரசொலி மாறனைப் பின் தொடர்ந்து அருண் ஜெட்லியும் இந்தியாவின் விவசாயிகளுக்காகவும், இந்தியா மற்றும் ஏழை நாடுகளின் நலனுக்காகவும் மிகவும் தீவிரமாகப் போராடினார்கள். இருந்தும், பணக்கார நாடுகள் ஜெயித்துவிடுமோ என்று நான் அஞ்சினேன். அப்படியெல்லாம் நடக்காமல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. கேண்கனில் பேச்சு வார்த்தை அடைந்த தோல்வி ஒரு விதத்தில் வளரும் நாடுகளுக்கு வெற்றி என்று சொல்ல வேண்டும்.

நான் திகிலுடன் பார்த்ததன் காரணம் வேறு.

இன்றைய போர் எங்கே இருக்கிறது ? அது வியாபாரத்தில் இருக்கிறது.

ஒரு நாட்டு மக்கள் வாழ்வதும் வீழ்வதும், அந்த நாடு எப்படி மற்ற நாடுகளுடன் வர்த்தக உறவைக் கொண்டிருக்கிறது என்பதிலும், தன்னுடைய மக்களை எவ்வாறு காப்பாற்றுகிறது என்பதிலும் தான் இருக்கிறது. அதற்கான இன்றைய போர் காண்கனில் நடைபெற்றது. அந்தப் போரை நான் நன்கு கவனித்துக்கொண்டேதான் இருந்தேன். அதுவும் ஒரு பாரபட்சமான பார்வையுடன். அல்லது அப்படி என்னைப் பார்க்கவைத்துவிட்டார்கள் அங்கே பேசிய அதிகாரிகள். ஐக்கியநாடுகள் சபையின் அதிகாரிகள் கூட தாங்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களோ அந்த நாட்டின் நலனின் பக்கமே இருந்துகொண்டு, பேசுவதை மட்டும் எல்லா மக்களும் பொதுவானதுபோல பேசினார்கள். சிங்கப்பூர் பிரேரணைகள் என்ற பெயரில் வளர்ந்த நாடுகள் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப வளரும் நாடுகள் தங்களது வர்த்தக தடைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கோரிக்கையோ வேறு விதமானது. சொல்லப்போனால், இந்தப் பேச்சு வார்த்தைகளுக்கு சற்று முன்னர், பிரேசில், சீனா, தெற்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை இந்திய அதிகாரிகள் சந்தித்து தெற்கு கூட்டம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள். உடனேயே, ‘இல்லாத ஒரு பிரிவை இந்தியா உருவாக்க முனைகிறது ‘ என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பியப் பத்திரிக்கைகள் எழுதின. இந்தியப் பேச்சுவார்த்தை அதிகாரிகளை கேவலப்படுத்தி எழுத முனைந்தன. இந்தியாவில் மிக அதிகமான ஊழல் நடைபெறுகிறது என்று வாக்கில் சில பத்திரிக்கை செய்திகளும் வந்தன. (இது புதிதா என்ன ?).

ஐரோப்பா (EC) இந்தியாவிடம் என்ன கேட்கிறது என்ற கோப்பு என்னிடம் இருக்கிறது. இதோ அது

இந்திய கோப்பு

( கூடவே என்னிடம் பாகிஸ்தானிடம் EC என்ன கேட்டிருக்கிறது, சீனாவிடம் என்ன கேட்டிருக்கிறது ஆகிய கோப்புகளும் இருக்கின்றன. )

இந்திய விவசாயிகளின் தற்கொலை பற்றி கவலைப்பட்டு பிபிஸி எழுதிய செய்தியைப் பாருங்கள். WTO பற்றியோ, ஏழை நாடுகளின் மீது திணிக்கப்படும் கடன் சுமை பற்றியோ, அந்தக் கடன் சுமையால் விதிக்கப்படும் வரிகள் பற்றியோ, சமூக பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஏழை நாடுகளில் உருவாக்கி இருக்கும் உலக வங்கி பற்றியோ எதுவுமே இல்லாமல், ஒரு கட்டுரை. மன மருத்துவரிடம் சென்று கவுன்ஸலிங் செய்தால் சரியாகப் போய்விடும் என்று சொல்கிறது பிபிஸி கட்டுரை.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/3112506.stm

இதில் ஆச்சரியம் இல்லை. இதற்காகத்தானே பிபிஸி இருக்கிறது ? இன்று தி ஹிண்டுவிலிருந்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலிருந்து, ஸ்டார் நியூஸிலிருந்து பிபிஸி பாக்ஸ் நியூஸ் வரை செய்தி நிறுவனங்கள் தங்களது தலைவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப செய்திகளை திரிப்பதும், செய்திகளை மறைப்பதும் செய்து வருகின்றன. அதற்கு ‘நடுநிலை ‘ என்ற போர்வையில் பிபிஸிக்களும் அதற்கு ஊத இந்தியாவின் அறிவுஜீவிகளும் துணை நிற்கிறார்கள்.

ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ?
டாக்டர் வந்தனா சிவா

பேச்சு வார்த்தையின் போது, மிகத் தெளிவாகவே, அமெரிக்கா மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஒரு பக்கமும் சுமார் 110 ஏழை நாடுகள் மறுபக்கமும் நின்று வாதிட்டன. (இந்தியா மற்றும் சில நாடுகளின் முன்முயற்சி வளர்ந்து, 110 நாடுகளை உள்ளடக்கிய ஒரு சக்தியாய் உருவாயிற்று.) பணக்கார நாடுகளின் கோரிக்கை, பணக்கார நாடுகள் உற்பத்தி செய்யும் பொருட்கள், உபகரணங்கள் ஆகியவற்றிற்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு கொடுப்பது மற்றும், ஏழை நாடுகளின் உள்ளே இருக்கும் உற்பத்திக்கும், வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்கும் சமமான அந்தஸ்து கொடுப்பது ஆகியவை. ஆனால், ஏழை நாடுகளின் கோரிக்கையோ, விவசாயப் பொருட்களைச் சார்ந்தது. ஏழை நாடுகள் உள்ளே தொடர்ந்து விவசாயம் மான்யம் கொடுக்கவும், பணக்கார நாடுகள் இன்று கொடுக்கும் ஏராளமான விவசாய மான்யத்தை நீக்குவது அல்லது குறைப்பது ஆகியவை சம்பந்தமானது. பணக்கார நாடுகள் கொடுக்கும் விவசாய மான்யம் எவ்வாறு ஏழை நாட்டு விவசாயிகளுக்கு பேரிடியாக இருக்கிறது என்பதைப் பற்றிய திண்ணை மொழி பெயர்ப்பு கட்டுரை இதோ.

ஏன் அமெரிக்க விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஏழை நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடியாக இருக்கிறது ?
ஆண்ட்ரூ கேஸல்

விவசாய மான்யத்தை குறைப்பதோ அல்லது நீக்குவதோ அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ செய்யப்போவதில்லை. ஐரோப்பா மட்டுமே சுமார் 300 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விவசாயிகளுக்கு மான்யம் வழங்குகிறது. இதனால், விவசாய விளைச்சலுக்கு ஆகும் செலவு ஒரு ஏழை நாட்டு விவசாயிக்கு ஆகும் செலவை விட குறைவு. இவ்வாறு அடிமாட்டு விலையில் உற்பத்தி செய்யப்படும் ஏராளமான கோதுமை ஏழை நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டால் என்ன ஆகும் ? அமெரிக்க கோதுமை வாங்குவார்களா ? அல்லது கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் கோதுமையை, அரிசியை வாங்குவார்களா ? இது இந்தியாவின் உயிர்நாடியான விவசாயத்தையும் விவசாயிகளையும் அடிவயிற்றில் அடிக்கும் காரியமல்லவா ? இது ஏற்கெனவே ஏராளமான நாடுகளில் நடந்துவிட்டது. மேலை நாடுகளின் பிரதிநிதி ஒரு ஸ்விஸ் பேங்க் கணக்கை கவருக்குள் போட்டு ராணுவ சர்வாதிகாரியிடம் நீட்டினால், எங்கே கையெழுத்துப் போட வேண்டும் என்றுதானே கேட்பான். இந்த ரீதியில் ஏராளமான ஏழை நாடுகளின் விவசாயிகளே இன்று அமெரிக்கக் கோதுமையையும் ஐரோப்பிய உணவையும் வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். வாங்க கையில் காசில்லை என்றால், அதுவே ‘கிரிஸ்தவ உணவு உதவி ‘ உருவத்தில் வரும். ஒரு சிலர் செயிண்ட் ஆக , புனிதர்கள் ஆவார்கள். ஏழ்மை போற்றப்படும்.. இத்யாதி. புத்தம்புது காலனியாதிக்கம் தயார். கூடவே பசி பஞ்சத்தால் நடக்கும் இனப்படுகொலையும். இதுவே இன்றைய போர்.

இந்தப் போரில் ஏழை மக்களின் ஆயுதம் முழு ஜனநாயகமே. ஊழல் மண்டிய அரசியல்வாதியைக் காரணம் காட்டி ராணுவ ஆட்சிக்கு சார்பாக ஒரு கருத்து இந்தியாவில் கூட உருவாகி வருவது வேதனை அளிக்கிறது. ஊழல் பண்ணும் அரசியல்வாதிக்கு மாற்று, ஊழல் பண்ணாத அரசியல் வாதியும், ஊழல்களை மக்கள் மன்றத்தில் வைக்கும் உறுதியான பத்திரிகைகளும், ஊழல்காரர்களுக்கு தண்டனை அளிக்கும் சுதந்திரமான நீதித்துறையும் தான் என்பது அழுத்தமாய்ப் பிரச்சாரம் செய்யப் படவேண்டும். மாற்றும் தீர்வும் நிச்சயம் ராணுவ சர்வாதிகாரம் அல்ல. இந்தப் போரில் உண்மையான ஆயுதம், ஊழலற்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதே. அத்தோடு கூட உண்மையான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதும் ஆகும். அதே நேரத்தில் தெரிந்த பிசாசு தெரியாத தேவதையை விட மேல் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கும் சோனியாவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.

இந்த போரில் இத்தாலி நாடு ஐரோப்பாவின் சக நாடுகளுடன் நிற்கிறது. இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாட்டு விவசாயிகளைக் காப்பாற்ற இத்தாலியும் போப்பாண்டவரும் இதர ஐரோப்பிய தேசங்களும் என்ன ஒரு தகிடுதத்தமும் பண்ணத் தயாராக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் சோனியா காந்தி போன்ற ‘மேலிடம் ‘ இந்தியாவின் தலைமைப் பீடத்தில் உட்கார்ந்திருப்பது இந்தியாவின் விவசாயிகளுக்கு ஆபத்தானது. நமக்கு காங்கிரஸ் கலாச்சாரம் தெரியும். அது ஜனநாயகக் கலாச்சாரம் அல்ல. இருந்திருக்கக் கூடிய ஜனநாயகக் கலாச்சாரம் இந்திரா காந்தியால் காங்கிரசுக்குள் தீர்த்துக் கட்டப்பட்டது. அது இன்று மேலிடத்தைத் தொழும் ஒரு கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்தின் காரணமாக, சோனியா காந்தி அன்றைய ஒரு தொழில் வர்த்தக மந்திரிக்கு போன் போட்டு, ஒன்னும் சத்தம் போடாமல் கையெழுத்துப் போட்டு விட்டு வா என்றால் நாம் என்ன செய்வோம் ? நமது பத்திரிக்கைகளோ காங்கிரஸின் அடிவருடிப் பத்திரிக்கைகள். பாஜக தொண்டன் பண்ணும் ஒரு திருட்டை செக்குலரிஸமே அழிக்கப்படுகிறது என்று எழுதும் பத்திரிக்கைகள் சோனியா இந்திய பிரஜையாகக் கூட இல்லாமலேயே மாருதி உத்யோகில் பதவியில் இருந்ததை கண்டுகொள்ளாது. வெளிநாட்டு மருமகள், இந்திய பிரஜா உரிமை வாங்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த போதே, இந்திய அரசாங்க ரகசியங்களை பிரதமர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தது பற்றி நம் ‘தேசியப் பத்திரிக்கை ‘கள் மூச்சு விடாது. அப்படிப்பட்ட நேரத்தில் நம்மை காப்பாற்றப்போகிறவர்கள் யார் ?

இதுவரை திமுகவின் முரசொலி மாறனும், பாஜகவின் அருண் ஜெட்லியும் சிறப்பாகவே வேலை செய்திருக்கிறார்கள். ஆனால் இது எதிர்காலத்தில் தொடரும் என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. ஆனால், ஒரு ஐந்து வருடம் சோனியா ஆட்சி செய்தால் கூட நடக்கக்கூடிய பேரிழப்பு, ஒரே ஒரு முறை செய்யக்கூடிய தவறு (இத்தாலியினர் பார்வையில் சரியாக இருக்கலாம்) நீண்டகால பாதிப்பை இந்தியாவிலும், ஏனைய ஏழை நாடுகளின் விவசாயிகளின் வாழ்க்கையிலும் விளைக்கும். அல் ப்ராங்கன் என்ற நகைச்சுவை எழுத்தாளர் ஒரு முறை சொன்னார். ‘நம் தவறுகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். மிகவும் பெரிய தவறாக இருந்தால், குறைந்தது மற்றவர்களாவது கற்றுக்கொள்ளலாம் ‘

நம் முன்னால் பெரு நாட்டின் அல்பர்ட்டோ புஜிமுரி கதை இருக்கிறது. இத்தனைக்கும், அந்த நாட்டின் மிகச்சிறுபான்மை பிரிவைச் சார்ந்தவர் புஜிமுரி. பெரு நாட்டின் ஜப்பானிய வம்சாவளியைச் சார்ந்தவர். பெரு நாட்டை ஜப்பான் மாதிரி ஆக்கிக் காட்டுகிறேன் என்று சபதமிட்டு பெரும் ஆதரவுடன், எதிர்பார்ப்புடன் பெரு நாட்டின் அதிபர் ஆனவர். அவர் மீது நம்பிக்கை வைத்து பெரு நாட்டின் மக்கள் ஓட்டுப்போட்டார்கள். அவரது ஆட்சிக்காலத்தில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடியது. தேர்தல்களில் பெரும் தில்லுமுல்லுகள். ஊழல்கள். இன்று புஜிமுரி ஜப்பானுக்கு ஓடிவிட்டார். அங்கு அவர் பிரஜாஉரிமையும் வாங்கி தங்கிவிட்டார். புஜிமுரியை பெருவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று ஜப்பான் சொல்கிறது.

நம்மால், மலேசியாவுக்கு ஓடிப்போன பிசாத்து குட்டோரோச்சியையே திருப்பிக்கொண்டுவர முடியவில்லை. சோனியா உண்மையில் இந்தியா மீது அன்பும், இந்திய நீதித்துறையின் மீது நம்பிக்கையும் கொண்டவர் என்றால், தன் ஆத்ம நண்பர் குட்டோரோச்சியை இந்தியாவிற்கு வரச் செய்டிருக்கலாம். வெள்ளைத் தோல் மீது மோகம் கொண்ட இந்திய மக்கள் சோனியாவிற்கு வாக்களிக்கத் தயாராய்த் தான் இருப்பார்கள். சோனியா இத்தாலிக்கு ஓடிப்போனால் என்ன செய்வோம் ?

ஒரு நரசிம்மராவோ அல்லது ஒரு சரத்பவாரோ காங்கிரஸில் இருந்தால் என் ஓட்டு நிச்சயம் அதற்குத்தான். ஆனால், வம்ச அரசியலைப் பிடித்துக்கொண்டு தொங்கும் காங்கிரஸ் ஆபத்தானது. அதுவும் சோனியா காந்தியை பிரதமராக முன்னிருத்தும் காங்கிரஸ் மிகவும் ஆபத்தானது. சிந்தித்துப் பாருங்கள். வெட்கம் கெட்டுப் போய் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிகளும் சோனியாவை பிரதமராக்க ஆதரவு தெரிவிக்கின்றன. சீனாவில் இப்படி ஒரு ஜெர்மானிய மாது பிரதமராக ஆக, அட சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியை விடுங்கள், இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி கூட ஆதரவு தெரிவிக்குமா ? அப்படி என்ன இந்தியர்கள் மீது நமக்கு இளக்காரம் ? சோனியாவிற்கு இந்தியா மீது அன்பு இருந்தால், இந்த விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம். நான் காங்கிரசுக்காக உழைப்பேன், ஆனால் நரசிம்ம ராவ், சரத் பவர் போன்றவர்களை பிரதமராக்குவேன் என்று சொல்லலாமே ? (முன்னாள்) காங்கிரஸ் தலைவர் (கேஸரி) மீது அடிதடி ஆட்களைக் கொண்டு ஏவி துரத்திவிட்டு, தான் தான் பிரதமர் என்று அலைகிறார்.

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல். நிச்சயமாக சோனியா பிரதமராக ஓட்டுப் போடாதீர்கள்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்