சென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

சின்னக்கருப்பன்


**

நைஜீரியாவில் நடக்கும் வேலை நிறுத்தம் மற்றும் மதக்கலவரங்களும், கொலம்பியாவில் நடக்கும் வன்முறையும், பெட்ரோலின் உலக நிர்ணய விலையை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு பீப்பாய் கச்சா பெட்ரோலியம் 53 டாலர் அளவுக்கு ஏறி நிற்கிறது.

இது உலகளாவிய பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவரும் என்பதைச் சொல்லித்தெரியவேண்டியதில்லை. சீனாவின் வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேவையான கச்சா எண்ணெய் விலை ஏறும்போது அவை இந்த பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

வெகு காலமாக அமெரிக்கா மத்தியக் கிழக்கு நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு (வேறு எப்படி, அவைகளில் தனி நபர் சர்வாதிகாரத்தை ஊக்குவித்துத்தான்) பெட்ரோலிய விலையை கட்டுக்குள் வைத்திருந்தது. இன்னும் வைத்துக்கொள்ள முயற்சி செய்துவருகிறது. ஆனால், கச்சா பெட்ரோலியத்தை உற்பத்தி செய்யும் மையப்புள்ளி நகர்ந்து சென்று, இன்று மிகவும் நிலையற்ற வன்முறை மிக்க நாடுகளில் மையம் கொண்டிருக்கிறது. ஈராக், காஸ்பியன் கடல் நாடுகள், தென் அமெரிக்க நாடுகள், மேற்கு ஆப்பிரிக்கா போன்றவற்றிலிருந்தே இனி உலக பெட்ரோலியம் வரும். அவைகளை நிலையாக வைத்துக்கொண்டு பெட்ரோலியத்தைப் பெறுவது என்பது இனி ‘பயங்கரவாதத்தை ஒடுக்கும் ‘ வேலை என அறிவிக்கப்பட்டு நடக்கும். இஸ்லாமுக்கு எதிராக கிரிஸ்துவ மதப்பரப்பலும், மெக் டொனால்ட் முதலியமும் தீர்வு என்ற பிரச்சாரமும் நடக்கும்.

இந்தியாவும் சீனாவும் என்ன செய்யப்போகின்றன ? சீனா ஏற்கெனவே பசிபிக் பெருங்கடல் சுற்றி உள்ள இடங்களில், அதுவும் பெட்ரோல் இருக்கக்கூடிய இடங்களில் உரிமை கொண்டாட ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவோ, கச்சத்தீவு பாணியில், இருப்பதையும் அள்ளிக்கொடுக்கும் பரந்த மனம் கொண்டவர்கள் கையில் இருக்கிறது.

***

சிறுபான்மை இட ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பை தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் அறிவித்தது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

முஸ்லீம்களுக்கு கொடுக்கும் இட ஒதுக்கீடு மூலம், மஹாராஷ்டிராவில் 2004 தேர்தல் சமயத்தில் சரிந்த ஆதரவை மீட்டெடுத்து காங்கிரஸ் முஸ்லீம்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணமே காரணம்.

இது ஒரு வகுப்புவாதச் செயல் என்று பாஜக கண்டனம் செய்திருக்கிறது! பாஜகவுக்கு இன்னும் ஒரு விஷயம் புரியவில்லை என்றால் என்ன செய்ய முடியும். இந்துக்களுக்கு ஏதேனும் உபகாரம் செய்வதே வகுப்புவாதம். முஸ்லீம்களுக்கோ அல்லது கிரிஸ்துவர்களுக்கோ (அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலங்கள் உட்பட) உபகாரம் செய்வது வகுப்புவாதம் அல்ல. வேண்டுமானால், தமிழகத்து தலைசிறந்த அறிவுஜீவிகளிடம் கேட்டுப் பாருங்கள்.

ஆந்திராவில் முஸ்லீம் இட ஒதுக்கீடு பற்றி அறிவிப்பு வந்த போது, இது பற்றி ஒரு கட்டுரை தனியே எழுத ஆரம்பித்தேன். அது சில பல வேலைகளால் நின்று போய் மறந்தும் போய் விட்டேன். அதனை முடித்து அனுப்பி வைக்க முயற்சிக்கிறேன்.

***

வேடிக்கையான விஷயங்கள் பல நம் நாட்டில் நடக்கின்றன. அதில் ஒன்று பகவத்கீதையைப் பற்றி ராம கோபாலனும், கலைஞர் கருணாநிதியும் பேசுவது. ராம கோபாலனுக்கும் கலைஞருக்கும் அது ஒரு இந்து மத அடையாள அட்டை. உள்ளே இருப்பது இருவருக்குமே தேவையில்லாத விஷயம். ஏனெனில் இருவருமே கீதை சொல்லும் கர்ம வீரர்கள். சும்மா சோம்பிக் கிடந்து விதி விட்ட வழி என்று சொல்பவர்கள் அல்லர்.

என்ன வினோதம் என்றால், ராம கோபாலனும் சரி, கலைஞர் கருணாநிதியும் சரி, இருவருமே அரசாங்கப்பதிவேட்டில் இந்துக்கள். இவர்கள் கிரிஸ்துவர்களோ, முஸ்லீம்களோ, பார்ஸிகளோ யூதர்களோ அல்லர்.

இந்து மதத்தில் மட்டுமே இப்படிப்பட்ட கூத்து நடக்கும். அதுவும், எந்த ஒரு வன்முறையும் இன்றி நாடகம் போல மக்களால் பார்க்கப்படும். வளர்க இந்து மதம். வாழ்க அது கொடுக்கும் சுதந்திரம்.

***

கெர்ரி- புஷ் விவாதம் பார்த்திருப்பீர்கள்.

அப்படி ஒரு விவாதம் இந்தியாவில் தமிழகத்தில் வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அது நடந்தால், நிஜத்திலேயே ஒரு சொதப்பப்பா சமாச்சாரத்தை பார்க்கலாம்.

அப்புறம் செனி – எட்வர்ட்ஸ் விவாதமும் நன்றாக இருந்தது.

கெர்ரி வருவதோ புஷ் வருவதோ எந்த ஒரு அடிப்படை வித்தியாசத்தையும் இந்தியாவில் ஏற்படுத்திவிடாது. அமெரிக்காவின் நலன்களே (புஷ் விவகாரத்தில் பெரும் கம்பெனிகளின் நலன்கள் சற்று முன்வரிசையில்) எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளுக்கும் முக்கியம். ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகளை விலக்கிக்கொள்ளப்போகிறேன் என்று கெர்ரி அறிவிக்கவில்லை. புஷ் சரியாக ஈராக் போரை நிர்வகிக்கவில்லை நான் சரியாக நிர்வகிப்பேன் என்பதே கெர்ரியின் வாதம்.

பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்று அறிக்கை வருகிறது. இதெல்லாம் முக்கியமான விஷயங்களே அல்ல. ஈராக் போருக்கான காரணம் பெட்ரோலும் டாலரின் மதிப்புமே. அது அமெரிக்காவில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால், அதை போருக்கான காரணமாகச் சொன்னால், அமெரிக்க மக்களிடையே இந்தப் போருக்கு ஆதரவு கிடைக்காது. இது கெர்ரிக்கும் தெரியும்.

கெர்ரி வெற்றி பெற்றால், புஷ் மீது போருக்கான பழியைப் போட்டுவிட்டு, வழக்கம் போல ‘அமெரிக்க நலன்களை ‘ கவனிக்க ஈராக் போரை தொடர்ந்து நடாத்துவார்.

ஒன்றும் வித்தியாசம் இல்லை.

***

பாகிஸ்தானில் சென்ற வாரம் ஸ்யால்கோட் நகரத்தில் ஷியா பிரிவினர் மசூதியில் தற்கொலைப்படை வெடிகுண்டு வெடித்து 30க்கும் மேற்பட்ட அப்பாவி வழிபடுவோர் கொலையுண்டனர். அதற்கு பதிலாக இன்று பாகிஸ்தானின் முல்தான் நகரத்தில் ஷுனி பிரிவைச் சார்ந்த தீவிரவாதிகள் நடத்திய மாநாட்டில் கார் குண்டுகள் வெடித்து 40க்கும் மேற்பட்டவர்கள் கொலையுண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை பிரிவைச்சார்ந்தவர்களது மாநாட்டில் வெடித்துள்ள குண்டுகள், அதன் அளவுக்கு மீறிய பெரும் கலவரத்தை உண்டாக்க வல்லவை.

ஷியா ஷுனி பிரிவு சண்டைகள் ஆபத்தானவை. அது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள இஸ்லாமியரிடமும் பரவக்கூடியவை. (இந்தியாவில் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியரின் எண்ணிக்கையை விட அதிகமான இஸ்லாமியர் உள்ளனர். சுமார் 14 கோடி)வடக்கு இந்தியாவிலும், ஹைதராபாத், கேரளா போன்ற பகுதிகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானிய குடும்பங்களுடன் குடும்ப உறவுகள் கொண்டவர்கள். ஆகையால், இது போன்ற வகுப்புவாதச்சண்டைகளைச் செய்யும் அமைப்புக்களை பாகிஸ்தான் ஒடுக்கவேண்டும். இவற்றில் பெரும்பாலான ஷுனி பிரிவு தீவிரவாதக்குழுக்களை பாகிஸ்தான் ராணுவ அரசே வளர்த்துவிட்டிருக்கிறது. ராணுவத்துக்கு தொலை நோக்கு சிந்தனை கிடையாது. மக்கள் நலம் முக்கியம் கிடையாது. ஏனெனில் மக்கள் வாக்குக்கள் மூலம் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் அல்லர் அவர்கள். அவர்களுக்கு எல்லாமே தற்காலிக தந்திரத் திட்டங்களும், புள்ளிவிவரங்களுமே. அரசியல்வாதிகள் எவ்வளவு தவறுகள் செய்தாலும் ஜனநாயகத்தை நான் விரும்புவதன் காரணங்களில் இதுவும் ஒன்று.

இந்தியர் நலன் கருதி, இந்த பிரிவுச் சண்டைகளுக்கு எதிரான குரலை அனைவரும் எழுப்ப வேண்டும்.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்