அ.முத்துலிங்கம் பரம்பரை-3

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

சிவஸ்ரீ


மலேசியாவில் பத்துமலை முருகனை படிப்படியாய் ஏறி வேண்டிக் கொண்டவுடன் கேட்ட நாளில் வந்து பிறந்து விட்டான் பையன் எங்கள் சித்திக்கு. கேட்ட நாளில், கேட்ட படி பிறந்ததினால் அவன் கேட்டதற்கு மாறாய் செய்யும் துணிவு எங்களில் யாருக்கும் மட்டுமல்ல, ஏ.ஆர்.ரஹ்மானுக்கே இருக்கவில்லை. அவனுக்கு ஒன்றரை வயசு இருக்கும் போது இரவுகளில் அவன் தூங்கனுமென்றால், அவனை இரு கைகாளாலும் பூப்போல ஏந்தி கன்னத்தோடு கன்னம் வைத்து, அவன் காதுகளுக்குள் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை மெல்லிசாய்ப் பாட வேண்டும். அப்படிப் பாடிக் கொண்டிருக்கும் போது உட்காரக் கூடாது, நிற்கவும் கூடாது, படுக்கக் கூடவே கூடாது. ஒரே லயத்தில் நடந்து கொண்டே பாட வேண்டும். சத்தமாகவும் பாடக்கூடாது, ரகசியமாகவும் பாடக் கூடாது. அவன் முகக்குறிப்புணர்ந்து சரியான டெசிபலில் பாட வேண்டும். மனம் தளராமல் பாடினால் ஒரு முப்பது, நாற்பது பாடல்களிலேயே எதாவது ஒரு வரியில் சிட்டுப் போல் ஒரு கொட்டாவி வருமே, அது அவ்வளவு நேரம் நான் அடக்கி வைத்திருந்த கொட்டாவியை விரட்டி, மீதி இரவுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்து விடும். இதில் அதி முக்கியனது ஒரு முறை பாடிய பாட்டை, அன்று மறுமுறை பாடி விடக் கூடாது. அவனுடைய கொட்டாவியை நம்பி, பாடின பாட்டைத் திரும்ப மட்டும் பாடினால், கீறல் விழுந்த இசைவட்டுப் போல், என் மூக்கில் கீறல் விழுந்திருக்கும், பூனைக்குட்டிக்கு முளைத்திருப்பது போன்ற அவன் சிப்பி நகங்களால் அரைத்தூக்கத்திலும் கிள்ளி விடுவான் என் மூக்கில். என்னுடைய இந்த இக்கட்டு தெரியாமல் ஏ.ஆர்.ரஹ்மானோ வருடத்துக்கொரு படத்துக்கு, அதுவும் அஞ்சாறு பாட்டு மட்டுமே போடுகிறார். ஒரு இரவுக்குப் போதுமா ?

எங்கள் சித்தியின் தவப் புதல்வனுக்கு அக்காவாய்ப் பிறந்து வைத்ததால், ஒரு பாட்டை அவனிடம் பாடுமளவுக்கு மனசிலானப்புறம் திரும்ப மறுமுறைக் கேட்பதானால் என் நகங்களும் துறுதுறுக்கின்றன ஒரு மூக்கைத் தேடி. ‘சிரிச்சு சிரிச்சு வந்தான் சினா தானா டோய் ‘ என்று நாள் முழுக்க நாலாபக்கமிருந்தும் பாய்ந்து காதுக்குள் வெடித்து, தலை மேல் தொம்தொம்மெனக் குதித்து, தரையிலிருந்து ட்டுடுன் டூன்டூன்டூன் டுன் என எகிறி குதித்துத் தாக்குதல் நடத்தும் போது தேடித் தேடிப் பார்க்கிறேன், இந்த வானொலி, தொலைக்காட்சி, மெகா இசைவட்டு ஒலிப்பான்களுக்கெல்லாம் மூக்கே அகப்படவில்லை கிள்ளுவதற்கு.

பாட்டு மட்டுமல்ல, புத்தகம் வாசிப்பதும் அப்படியே. ஒரு புத்தகம் ஒரு முறை தான் படிக்க இயலுகிறது, அது பாடப் புத்தகமானால் கூட. ஏற்கனவே படித்திருந்தாலும், யீசூன் நூலகத்தில் அது பற்றிப் பேசச் சொல்லிக் கேட்டதால், தி.ஜானகிராமனின் ‘மோகமுள் ‘ளை எடுத்து வந்து வைத்து ஒரு வாரமாய் அதைப் பிரிக்கவேயில்லை, நண்பன் MUT வரிசையிலிருந்து சரக்கென உருவித் தந்த ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘யை அன்றைக்கிரவே மொத்தமாய்ப் படித்து முடித்த பின்னும், ஒரு வார காலமாய் மறுபடி எத்தனை முறை படித்தேன் என்று எண்ணக் கூட நேரமில்லாது படித்தேன்.

‘கவிதையாக இருக்கிறது ‘ என்றேன் நண்பனிடம்

‘சிறுகதைகளாக அல்லவா இருக்கும் ? ‘ என்றான்

‘இப்படி ஒரு நண்பன் கண்ணிமைக்கும் நேரத்தில் உருவிக் கொடுத்த புத்தகம் என்னைக் கண்ணிமைக்க விடாது படிக்கப் படிக்கப் பரவசப் படுத்துவது கவிதையா இருக்கு ‘ என்றேன்.

ஆனாலும் இது வேறு ஒரு சங்கடத்தில் கொண்டு போய் விட்டது. இன்னும் இரு தினங்களில் யீசூன் நூலகத்தில் பேசவேண்டுமே. நிகழ்ச்சிப் பொறுப்பாளருக்குத் தொலைபேசினேன்.

‘மோகமுள்ளைப் பற்றி எத்தனையோ பேர், எத்தனையோ காலமாய்ப் பேசி வருகிறார்களே, நான் ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘ பற்றிப் பேசுகிறேனே ‘ என்றேன், அப்பாவிடம் கெமிஸ்ட்ரி பிடிக்கலைப்பா, ஃபிஸிக்ஸ் படிக்கிறேன் என்று ஒரு செமஸ்டர் முடிந்ததும் அடம்பிடித்ததைப் போல்.

‘அந்தப் புத்தகம் திரைப்படமாக எடுக்கப் பட்டிருக்கிறதா ? ‘ என்று கேட்டார் பொறுப்பாளர். ‘கதையும் காட்சியும் என்ற இந்த நிகழ்ச்சியே, திரைப்படமாக எடுக்கப்பெற்ற புத்தகங்களைப் பற்றிப் பேசத் தான். நீங்கள் ஒரு மணி நேரம் பேசிய பிறகு, அந்தத் திரைப்படத்திலிருந்து காட்சிகள் ஒரு மணி நேரத்திற்குக் காட்டப் படும் ‘ என்றார்.

‘கடந்த மாதம் ‘அழகி ‘ படம் பற்றிப் பேசப்பட்டதே ‘ என்றேன்.

‘தங்கர்பச்சான் தனது ‘கல்வெட்டுக்கள் ‘ என்ற சிறுகதையையே ‘அழகி ‘யாக எடுத்தார் ‘ என்று பொறுப்பாக பதில் சொன்னார் பொறுப்பாளர்.

இதைக் கேட்டவுடன் தான் சென்னையில் இருக்கும் என் மாமா பையன் திருமுருகனுக்கு உடனடியாய்த் தொலைபேச நேர்ந்தது. ஒரு முறை நாங்கள் திருமுருகன் படித்த திரைப்படக் கல்லூரிக்கு அவரைப் பார்க்கச் சென்ற போது, அங்கிருந்த புல்வெளியில் நின்ற இரு கொக்கு சிலையின் பின்னிய கழுத்துகளுக்கிடையே சிவப்புச் சேலையுடுத்திய ஒரு பெண்ணை மெல்ல எழும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் எழும்ப இவர் ‘கட் ‘ என்றார். மீண்டும் எழும்ப இவர் மீண்டும் ‘கட் ‘ என்றார். இப்படியே மீண்டும் மீண்டும். இப்படித் திரும்பத் திரும்பக் கேட்கும் போது, நான் மருதாணியிட்டு நன்கு வளர்த்து வைத்திருந்த நகங்கள் துறுதுறுத்ததைக் கவனிக்கா விட்டாலும், எனக்கு எட்டாத உயரத்தில் ஏணி போலிருந்த இருக்கை மேல் கொண்டு போய்த் தன் மூக்கைப் பாதுகாப்பாய் வைத்து விட்டார்.

ஆனால் அந்த மூக்கு வியர்க்க வியர்க்க, அந்தச் சிவப்புச் சேலை பெண்ணையும் அந்தக் கொக்குகளைப் போல் கழுத்து நீண்ட சிலையாக்கி விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இவர் ‘கட் ‘ சொல்லிக் கொண்டிருந்த வேகத்தில் படம் எடுத்தால், மகாராஜாவின் ரயில் வண்டி, மகாராஜாவின் மாட்டு வண்டியாக அல்லவா ஆகி விடும் என்ற கவலை எனக்கு இருந்த போதும், இரண்டு வருட காலமாக அவர் ஓட்டிக் கொண்டிருக்கும் ‘மெட்டி ஒலி ‘ தொலைக்காட்சித் தொடரை விடாமல் பார்த்து வரும் குவீன்ஸ்டெளன் தோழி, அவர் போன மாதம் கல்யாணம் செய்து கொண்ட போது, அவள் கன்னத்தில் தடவிய ‘கவர் கேர்ள் ‘ கரைந்து அவளின் சொந்த நிறத்தைக் காட்டிக் கொடுத்ததைக் கூட பொருட்படுத்தாது அழுததை நம்பி, அவருடைய கைத்தொலைபேசிக்கு அழைத்தேன். மகாராஜாவின் ரயில் வண்டியிலிருந்து எதாவது ஒரு கதையை அவசரமாய்த் திரைப்படமாக்க வேணுமே என்று கேட்டேன். அவர் ‘கட் ‘ என்று கத்தி விட்டு, ‘உன்னை இல்ல, சொல்லு ‘ என்றார்.

எப்படித் தான் ‘கட் ‘ சொல்லாது எடுத்தாலும், இரண்டு நாளைக்குள் படமெடுக்கும் வித்தையை இனிமேல் தான் நல்லபாம்பிடம் கற்று வரவேணுமென்றார். இந்த மெட்டி ஒலியை இன்னும் இரு வருடங்களுக்கிடையில் முடிப்பது தமிழ்மக்களின் உடல் நலன் கருதி உசிதமாகாது என்பதால், அதை முடித்த மறு நிமிடம் என் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதாகவும் வாக்குத் தந்து விட்டு, கட் சொன்னார்.

அதற்கடுத்த சனிக்கிழமை தான் முத்துலிங்கம் பெயரில் சில ராக்கெட்டுகள் உருவாயின. சிங்கையின் உயர்நிலைப் பள்ளிப் பிள்ளைகளுக்குப் புதுக்கவிதைகளை அறிமுகம் செய்து வைக்கும் படலம் அது. பாரதியில் தொடங்கி இப்ப வரைக்கும் எழுதுபவர்களின் கவிதைகள் பற்றிப் பேசி விட்டுக் கடைசியாய்ப் பிள்ளைகளிடம், ‘அ.முத்துலிங்கம் எழுதிய மகாராஜாவின் ரயில் வண்டி படிங்க, கவிதானுபவம் கிடைக்கும் ‘ என்றேன். நான் கவிதைகளை வாசித்துக் காட்டிக் கொண்டிருந்த போது, கையிலிருந்த காகிதத்தில் சிரத்தையாய்ச் செய்து வைத்திருந்த ராக்கெட்டில் அ.முத்துலிங்கம் என்று குறித்து வைத்துக் கொண்டார்கள்.

இதற்கிடையில் ‘முதல் அத்தியாயத்திலிருந்த ‘நம் ‘ முத்துலிங்கத்தை, இரண்டாவது அத்தியாயத்தில் காணலையே ‘ என்றான் நண்பன்.

‘இப்ப ‘என் ‘ முத்துலிங்கம் என்று வாசி ‘ என்றேன்.

ஒரே புகை பொங்கிப் பெருக்கெடுத்தது. அவன் காதிலிருந்தா என்று பார்த்தேன். ப்ளோக்குக்குக் கீழ குப்பைத் தோம்பில் கொசுமருந்து அடிப்பவர் கிளப்பிய புகை தானது என்பது ஜன்னலில் எட்டிப் பார்த்த பிறகு தான் தெரிந்தது.

இப்படி, பத்துமலை முருகன் அருளிய சித்திமகன் எனக்கருளிய ‘படித்ததை மறுபடி படிக்கவியலாத பழக்கத்தை ‘ மகாராஜாவின் ரயில் வண்டி மாற்றி விட்டது நல்லதா, கெட்டதா என்பதைத் தெரிய முத்துலிங்கம் எழுதிய ‘குங்கிலியக் கலய நாயனார் ‘ கதையைப் படிக்க வேண்டும். அதிலிருந்து சில வரிகள்:

எனக்குக் கனடாக் காரரைச் சீண்டுவதில் ஒரு தனி இன்பம், ‘அப்ப, ஹுமெலின் இந்த போதைப் பழக்கம் மிகவும் கெட்டது. இதை முற்றிலும் அழித்த பிற்பாடு என்ன செய்வதாக உத்தேசம் ? உமக்கு வேலை போய் விடுமே ? ‘ என்று கேட்டேன்.

அப்கானிஸ்தானில் பத்து லட்சம் பேர் இதற்கு அடிமை. இது தவிர, போதைப் பொருள் உற்பத்தி உலகத்திலேயே 35 வீதம் இங்கே தான். இவர் தனியாளாக இதை ஒழித்துக் கட்ட கொடுக்குக் கட்டிக் கொண்டு கனடாவில் இருந்து வந்து குதித்திருக்கிறார். இது நடக்கிற காரியமா ? மலையை இடித்து மூக்குப் பொடி போட்டு முடிக்கிற கதை தான்.

இதற்கு கனடாக்காரர் பதில் கூறு முன் ஜெர்மன்காரர் முந்திக் கொண்டு சொன்னார்:

‘பழக்கத்தில் ‘நல்ல பழக்கம், கெட்ட பழக்கம் ‘ என்று இல்லை; ‘விடக் கூடிய பழக்கம் ‘, ‘விட முடியாத பழக்கம் ‘ இப்படி இரண்டு தான். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் தேநீர் வேண்டும்; சிலருக்கு சிகரெட் தேவை; இது இல்லாமல் நடுக்காட்டில் இவர்களை விட்டால் தலையைப் பிய்த்துக் கொண்டு பைத்தியமாகி விடுவார்கள். எந்தப் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதை மீறினால் தான் கஷ்டம். ‘

அதற்கு கனடாக்காரர் ‘ எனக்கு ஒரு நண்பர் இருந்தார். புத்தகக் கடையென்றால் அவருக்குப் பைத்தியம். எந்த ஒரு கடையைக் கண்டாலும் புகுந்து விடுவார். நேரகாலம் தெரியாமல் உள்ளே இருப்பார். இருக்கிற காசெல்லாவற்றையும் கொடுத்து புத்தகங்களை அள்ளுவார். காசில்லா விடில் உங்களிடமும் கடன் வாங்குவார். புத்தகம் படிப்பது நல்ல பழக்கம். அதிலும் அவார் அறிவு சார்ந்த புத்தகங்களைத் தான் படிப்பார். இருந்தும், அவர் வரையில் இந்த நல்ல பழக்கமும் ஒரு கெட்ட அடிமைப் பழக்கம் தான். ஏனெனில், அவரால், இதை விட முடியவில்லையே ‘ என்றார்.

….

….

….

‘ஒரு பழக்கமானது எப்போது அடிமைப் பழக்கமாக் மாறுகிறது என்பதைக் கண்டு பிடிக்க முடியுமா ? ‘

ஜெர்மன்காரர் அந்தச் சமயம் பார்த்து தன் பையில் இருந்து ஒரு வளைந்த போத்தலை எடுத்தார். அவர் எப்பவும் அதில் குடிவகை வைத்திருப்பார். எந்தக் காடு, மேடு, மலை, சமுத்திரம் என்றாலும் அதைக் ‘கவசகுண்டலம் ‘ போலக் காவிக் கொண்டு திரிவார். அவர் ஒரு மிடறு குடித்து விட்டு சொன்னார்:

‘அது மிகவும் சிம்பிள். ஒரு மனிதனைப் பத்து நாள் பட்டினி போட வேண்டும். அதற்குப் பிறகு ஐந்து ரூபாயை அவன் கையில் கொடுத்துப் பார்க்க வேண்டும். அவன் நேராக சிகரெட் வாங்க ஓடினால் அவன் அந்தப் பழக்கத்துக்கு அடிமை. ‘

‘எனக்கு சவ்வரிசிப் பாயசம் என்றால் உயிர். திரும்பத் திரும்ப சாப்பிடுவேன்; களவெடுத்தும் கூட சாப்பிடுவேன். இதுவும் அடிமைப் பழக்கமா ? ‘ என்று கேட்டேன்.

அதற்கு கனடாக்காரர் ‘ச்சீ, அது எப்படி அடிமைப் பழக்கம் ஆக முடியும் ? நீ வயிறு நிறைய பாயசம் குடித்து ஓய்ந்த பின் யாராவது உன் முன்னே ஒரு கப் பாயசத்தை நீட்டினால் உனக்கு குமட்டிக் கொண்டு வருகிறதே. அது அடிமைப் பழக்கம் அல்ல. அடிமைப் பழக்கம் என்றால் அதற்கு முடிவே கிடையாது. ‘போதும் ‘ என்று நீ சொல்லவே மாட்டாய். அறிவு நிலையில் இருக்கும் வரை எடுத்துக் கொண்டே இருப்பாய்; உன் முடிவு உன் வசமே இல்லை ‘ என்றார்.

பாடப் புத்தகத்தைக் கூட இரண்டாவது தடவை படிக்காத என் பழக்கத்தை மாற்றும் வல்லமை மகாராஜாவின் ரயில் வண்டி புத்தகத்துக்கு இருந்தது நல்லது என நினைத்த அதே நேரம், பத்து நல்ல புத்தகத்தைக் கையில் கொடுத்தாலும், பிரிக்காது, ரயில் வண்டியவே திரும்பத் திரும்பப் படிப்பது அடிமைப் பழக்கமாகி விடாதிருக்க முடிவு செய்து அதற்கொரு உபாயம் செய்தேன். அதற்கு மாற்றாய், முத்துலிங்கத்தின் ‘திகடசக்கரத் ‘தையும் ‘வம்சவிருத்தி ‘யையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். இப்போது மகாராஜாவின் ரயில் வண்டி இருந்த போதிலும், அதை வைத்து விட்டு, இந்த ரெண்டில் எதையாவது ஒன்றை என் விருப்பம் போல் படிக்க முடிவதால் நான் எந்த அடிமைப் பழக்கத்திலும் மூழ்காது தப்பித்து விட்டேன்.

ஆனால் திகடசக்கரத்தைப் படித்த போது தான் முத்துலிங்கம் தம் அருமை மகளுக்குச் சொல்லித் தராத ஒரு உண்மையை என் பாட்டி எனக்குச் சொல்லித் தந்திருப்பது புரிந்தது. அவருடைய ‘மாற்றமா தடுமாற்றமா ‘ சிறுகதையில் இப்படி வருகிறது:

ஏன் எங்கள் பெண்கள் எல்லாம் தலை குனிந்த படியே நடக்கிறார்கள் ? அதுவும் அவர்கள் தலைவிதியா ?

ஒரு புலவர் கூட்டத்தில் பேசுகிறார் : ‘சீதை மாடத்திலே நின்று கொண்டிருக்கிறாள். ராமன் கீழே. அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். சீதை கீழே பார்க்கிறாள், ராமன் மேலே பார்க்கிறான். கீழ் நோக்கிப் பார்ப்பது பெண்ணுக்கு அழகு; நிமிர்ந்து பார்ப்பது ஆணுக்கு அழகு. ‘

பேதமையை பெண்ணின் லட்சணம் என்று சொல்லியிருக்கிறார்கள். ‘ஒன்றும் தெரியாமை ‘ (Ignorance) இது லட்சணமா ? அது கூடப் பரவாயில்லை. மடமை (Stupidity) கூடப் பெண்ணின் லட்சணமாமே; அது அப்படித் தான் என்றால் எங்கள் பெண்களில் அந்த லட்சணம் நிரம்பி வழிகிறது தான்.

அடடா, முத்துலிங்கம் மங்கையராய்ப் பிறப்பதற்கான மாதவம் செய்து ஒரு பெண்ணாய்ப் பிறக்காது போனதினாலும், எனக்குப் போல் அவருக்கு ஒரு அப்பத்தா பிறக்காததினாலும் அப்படித் தலைகுனிந்து நடப்பது பேதமை அல்ல, புத்திசாலித்தனம் என்று தெரியாது போயிற்று.

Thought would destroy their paradise

No more; Ignorance is bliss

Tis folly to be wise

என்று Thomas Gray சொல்லியதைப் படிக்காமலே என் அப்பத்தாவுக்கு இது தெரிந்திருந்தது.

தொடரும்…. (அடுத்த வாரம்)

– சிவஸ்ரீ (sreeeiii@poetic.com)

Series Navigation

சிவஸ்ரீ

சிவஸ்ரீ