மெய்மையின் மயக்கம்-20

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

தத்துவம்

நாட்டில் பகட்டுக் கார வித்தகர்கள் பலர் இருக்கிறார்கள். திடிர்-திடிர் என்று புதிர்களைப் போட்டு உடைத்து நமக்குத் திகைப்பு ஊட்டுவதற்கு இவர்கள் முற்படுவார்கள்.

மந்திரம் சொல்லி மழை பெய்ய வைக்கிறேன் என்று ஒருவர் கூறுவார். மழைக் காலமாக இருந்தால் கன மழை பெய்து அவரது மந்திரத்தைப் பலிக்கச் செய்து விடும்; அவருக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் அது இருந்து விடக் கூடும். அருள் வாக்குக் கூறுகிறேன் என்று ஒருவர் கூறுவார். அவரது அருள் வாக்கிற்கு ஏற்பச் சிலரது இருள் வாழ்க்கையில் சில சமயங்களில் ஒளி ஏற்றப் பட்டு விடுவதும் உண்டு.

கடவுள் செத்து விட்டார் என்று கூறி நம்மைத் திகைத்திட வைக்கின்ற பகட்டுக் காரச் சிந்தனையாளர்கள் நம் இடையே இல்லையா, என்ன! அதே நேரத்தில், தத்துவத்தின் வரலாற்றினை எழுதிடத் தொடங்கித் தத்துவத்தினது மரணத்தின் வரலாற்றினை எழுதி முடித்தவர்களும் இல்லாமல் இல்லை. ஜெய மோகன் போன்ற கதைஞர்களுக்குத் திகைப்பாக இது இருந்திடலாம் என்ற போதிலும், தத்துவம் செத்துப் போய்ப் பல காலம் ஆகி விட்டது என்பதுதான் உண்மை!

மறை பொருள் வாதத்தின், அதாவது, உடலம் கடந்த மறை பொருள் வாதத்தின் வரலாற்றினை எழுதத் தொடங்கிய பியர் :பெய்லி, இறுதியில் அதன் மரணத்தின் வரலாற்றினை எழுதி முடித்து இருந்தாராம்—-கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்.

தத்துவத்தின் மீது கார்ல் மார்க்சுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருந்தது அல்ல இதற்குக் காரணம்; மாறாக, முதலாண்மையின் எழுச்சியுடன் தத்துவம் மரித்துப் போய் விட்டு இருந்ததுதான் இதற்குக் காரணம். எனினும், நமது ஜெய மோகனுக்கு இது தெரியாமல் இருப்பதுதான் அவலம்!

தெரிந்து இருந்தால், அதன் கல்லறை அருகே நின்று கொண்டு கண்ணீர் வடிப்பதற்கு அவர் தவறி இருந்து இருக்க மாட்டார். ஏனென்றால், தத்துவம் என்பது அவருக்கு மிகவும் பிடிக்கும்—-பெரும் பான்மையான எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் அது பற்றி அதிகமாக எதுவும் தெரியாது என்பதால்; எனவே, அதைப் பற்றி அதிகமாகப் பேசி அவர்களை அவர் மிரட்டி விடலாம் என்பதால்!

எனினும், தத்துவத்திற்கு ஜெய மோகனோ எதிர் ஆனவர்; அதாவது, பழைய தத்துவங்களுக்கு, குறிப்பாக, தருக்கங்களால் ஆன தத்துவங்களுக்கு! எனவே, அதருக்கமான தத்துவங்கள்தாம் அவருக்குப் பிடிக்கும் என்று நாம் எடுத்துக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை.

இதில் வேடிக்கை என்ன வென்றால், தத்துவத்தைப் பற்றி அடிக்கடிப் பேசுவதில் ஜெய மோகனுக்கு ஆர்வம் உண்டு; அதே நேரத்தில், அதற்கு எதிராகத்தான் அவர் பேசிட வேண்டும் என்னும் நெருக்கடியும் அவருக்கு உண்டு!

பெரிய பெயர்கள்

எனக்கு ஜெய மோகன் எழுதி இருந்த மடல்கள் ஒன்றில் பெரிய மிரட்டல் ஒன்றினை எனக்கு அவர் விடுத்து இருந்தார்—-அன்பினைத் தத்துவத்தால் தொட்டு விட முடியாது என்று!

ஆனால், அது வல்ல மிரட்டல்! கூடவே அவர் குறிப்பிட்டும் இருந்தார்—-எஸ். என். நாக ராஜன் அப்படிக் கூறுகிறார் என்று! அதுதான் மிரட்டல்!

ஜெய மோகனுக்கு நான் பதில் எழுதினேன்—அன்பினைத் தத்துவத்தால் விளக்கிக் காட்டிட முடியும் என்று; எஸ். என். நாக ராஜன் அவர்களாலும் அன்பினைத் தொட்டு விட முடியும் என்று; ஆனால், அன்பினைத் தொட்டு விடுவதால் ஏற்பட்டு விடக் கூடிய ஆபத்துகளை எண்ணி அவர் அஞ்சிக் கொண்டு இருக்கிறார் போலும், என்று!

இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இம் மாதிரியான மிரட்டல்கள் ஒன்றும் புதியவை அல்ல.

கம்யூனிசச் ‘சித்தாந்தம் ‘, ‘தத்துவார்த்தம் ‘ என்று சொல்லப் படுவன வற்றில் எல்லாம் தேர்ந்தவர்களாக இருப்பதாக நாம் கருதுகின்ற வித்தகர்கள் எல்லோரும், மார்க்சின் பெயரை மட்டும் இன்றி, அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிந்து கொண்டு வந்து இருக்கின்ற அத்தனை கம்யூனிஸ்ட்டுகளின் பெயர்களையும் சொல்லிச் சில சமயங்களில் நம்மை மிரட்டுவார்கள்.

விசயம் ஒன்றும் பெரியது அல்ல! இவர்களின் வாதங்களுக்கு ஆதாரம் என்ன ? என்று நாம் கேட்டால், ‘மார்க்ஸ் ‘ கூறினார்; ‘லெனின் ‘ கூறினார்; ‘மாவோ ‘ கூறினார்; என்று வெறும் பெயர்களைச் சொல்லியே நம்மை இவர்கள் மிரட்டி விடுவார்கள், அவ் வளவுதான்! ஆனால், பெயர்கள் எப்படி ஆதாரம் ஆகி விட முடியும் ?

இப்படித்தான் ‘விட்ஜென்ஸ்டானி ‘ன் பெயரைச் சொல்லி நம்மை மிரட்டிட முற்படுகிறார் ஜெய மோகன்! ‘விட்ஜென்ஸ்டான் ‘ என்ன கூறினார் ? என்பதை ஜெய மோகன் கூறிடாத வரை, அவரது பெயரை இவர் குறிப்பிட்டுக் கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை; நாம் மிரளப் போவதும் இல்லை!

மார்க்சின் பெயர்

முதல்: தொகுதி ஒன்றில், மிகை-மதிப்புப் பற்றிய தமது ஆய்வினை ‘உற்பத்திச் செலவு ‘ என்னும் மையத்தில் இருந்து கார்ல் மார்க்ஸ் தொடங்குவார்.

சரக்குகளது மதிப்பின் வெளிப்பாடுதான் பணம் என்றும் மிகை-மதிப்பின் வெளிப்பாடுதான் ஆதாயம் என்றும் முடிவு செய்து விட்டதன் பின்னர், ‘உற்பத்திச் செலவு ‘ என்பதை மையமாகக் கொண்டு ஆதாயம் பற்றிய ஆய்வினை அவர் தொடங்குவது சரியானதாக எனக்குப் பட வில்லை.

அதாவது, ஒரு குறிப்பிட்ட அளவு மதிப்பின் வெளிப்பாடுதான் ஒரு குறிப்பிட்ட அளவு விலை என்று கார்ல் மார்க்ஸ் முடிவு செய்து இருப்பதால், மதிப்பு என்பதில் இருந்துதான், குறிப்பாக, மதிப்பு-விலை என்பதில் இருந்துதான், தமது வாதங்களை அவர் தொடங்கி இருக்க வேண்டும் என்று நான் கருதினேன். எனவே, ஒரு சரக்கினது மதிப்பின் வெளிப் பாடான ஒரு விலையின் வழமையான (நார்மல்) நிலவரத்தில் இருந்துதான், மிகை-மதிப்பு பற்றிய ஆய்வினை யாரும் தொடங்கிட வேண்டும் என்றும் எனக்குத் தோன்றியது.

அப்படி என்றால், வழமையான மதிப்பு-வழமையான விலை என்று எந்த விலையை நாம் எடுத்துக் கொள்வது ? என்பது கேள்வி—-விலையில் இருந்துதான் மதிப்பினை நாம் புரிந்து கொள்ள முடியும் என்பதால்; கண்ணுக்குத் தெரிகின்ற ஒரு பருப் பொருளாக மதிப்பு என்பது இல்லை என்பதால்!

ஜெய மோகனின் பாணியில் கூறுவது என்றால், அவ் அப்போது ஏறி-இறங்கிக் கொண்டு வருகின்ற விலைகளை—-அதருக்கத்தினை—-மையமாகக் கொள்ளாமல், மதிப்பினை மறுநிகர்த்திடக் கூடிய ஒரு மதிப்பு-விலையினை—-தருக்கத்தினை—-மையமாகக் கொண்டு, மிகை-மதிப்புப் பற்றிய தருக்கத்தினை அடுக்கிக் கொண்டே சென்று, இறுதியில், ஆதாயம் என்னும் அதருக்கத்தினைப் புரிந்து கொள்வதற்கு நாம் முயன்றிட வேண்டும் என்று நான் கருதினேன்.

ஆனால், இது வல்ல இங்கே நமக்கு முக்கியம். இது பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், ‘வாழ்க்கையின் கேள்விக ‘ளைப் படித்துப் பார்த்துக் கொள்ளலாம். இதில் முக்கியம் என்ன வென்றால், எனது குருவாக நான் கருதுகின்ற நண்பர் கீதாவிடம் நான் வாதிடத் தொடங்கி இருந்தேன் என்பதுதான்!

எந்த விலையை நியமமாக வைத்துக் கொண்டு—-எந்த விலையை வழமையான ஒரு விலையாக எடுத்துக் கொண்டு—-அதனுள் அடங்கிக் கிடக்கின்ற மதிப்பில் இருந்து தொடங்கி, மிகை-மதிப்பினை நாம் தெரிந்து கொள்வது ? என்று ஒரு கேள்வியை அவரிடம் நான் எழுப்பினேன்.

‘உற்பத்திச் செலவு என்கின்ற நியமத்தில் இருந்துதான் மிகை-மதிப்பினை நாம் புரிந்து கொள்ள முடியும் ‘ என்று கீதா வாதித்தார்.

‘எப்படி ? ‘ என்று நான் கேட்டேன்.

‘ ‘மார்க்ஸ் ‘ கூறுகிறார்! என்று கூறி எங்கள் விவாதத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பதற்கு அவர் முற்பட்டார்.

எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. ‘உங்கள் முன்னால் நான் இருக்கிறேன்; என்னிடம் நீங்கள் பேசுங்கள்; மார்க்சைக் கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள்! ‘ என்று அவரிடம் நான் கூறினேன்.

‘மார்க்சை எப்படி நாம் ஒதுக்கி வைக்க முடியும் ? அவரே கூறி விட்ட பிறகு… ‘

‘உங்கள் மார்க்சைக் குப்பைத் தொட்டியில் போடுங்கள்; என்னிடம் நீங்கள் பேசுங்கள்; மார்க்ஸ் கூறி விட்டார் என்பதனாலேயே எதுவும் சரியாகி விட முடியாது! ‘ என்று அவரிடம் நான் கூறிட நேர்ந்தது.

நமது தாய்-தந்தையரை விட யார் நமக்குப் பெரியவர்கள்! அவர்கள் சுட்டிக் காட்டுகின்ற கடவுளர்களைக் கூட நம்மில் சிலர் புறக் கணித்து விடுகிறோம் என்றால், நமக்கு எதற்கு மனிதக் கடவுள்கள், அதுவும், குட்டித் தேவதைகள்!

இப்படிப் பட்ட சூழ் நிலைகளைத் தாங்கள் எதிர் கொள்ள வேண்டிய காலம் ஒரு நாள் வந்திடாமல் போய் விடாது என்பதைத் தங்கள் கவனத்தில் எழுத்தாளர்கள் இருத்திக் கொள்வது நல்லது; பெயர்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, அப் பெயர்களைத் தாங்கிய மனிதர்களின் கருத்துகளை எடுத்து உரைத்திட முற்படுவது அதை விட நல்லது!

எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எழுத்தாளர்களை நாம் நாடுகிறோம்; காசு கொடுத்து வாங்கி அவர்களது நூல்களை நாம் படிக்கிறோம். நிலைமை இப்படி இருக்க, தங்களுக்குத் தெரிந்தனவற்றை எல்லாம் எழுதுவதற்கு முன் வந்திடாமல், அவற்றை அவர்கள் மூடி மறைத்து விடுவது என்ன ஞாயம் ? அல்லது, தங்களுக்குத் தெரியாததை எல்லாம் எழுதி, நம்மை அவர்கள் ஏமாற்றிட முற்படுவதுதான் என்ன வகையான நாணயம் ? எழுத்தாளர்களே, வாசகர்களுக்காகக் கொஞ்சம் நீங்கள் இரங்குவீர்களாக!

தத்துவத்தின் மரணம்

முதன் முதலில் எழுத்தைக் கண்டு பிடித்தவர்கள் வணிகர்களாகத்தாம் இருந்து இருக்க வேண்டும் என்று பி. :டி. சீனிவாசனார் கருதுகிறார். இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்! எனினும், எழுதுவது ஒன்றும் சிறியது ஒரு விசயம் அல்ல; அதுவும் எழுத்தாளர்களாக இருந்து மற்றவர்களுக்காக எழுதுவது!

சாக்ரட்டாசுக்கு எழுதத் தெரியாது என்று சொல்லப் படுகிறது. என்றாலும், பிளேட்டோவின் எழுத்துகளில் அவர் வாழ்ந்து கொண்டு வருகிறார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், விசயம் அது வல்ல!

வரலாறு, அரசியல், பொருளாதாரம், அறிவியல், அறிவின் தேற்றம், என்று எல்லாம் வெவ்வேறாக ஆய்வுத் துறைகள் வளர்ச்சி அடைந்து வந்து இராத அந்தக் காலத்தில், ஆய்வு நோக்கில் எழுதப் பட்டன வெல்லாம் தத்துவங்களாகத்தாம் கருதப் பட்டு வந்து இருந்தன.

தொல்காப்பியர் என்றாலும் சரி, இளங்கோ வடிகள் என்றாலும் சரி, திரு வள்ளுவர் என்றாலும் சரி, அல்லது பிளேட்டோ, அரிஸ்ட்டாட்டில் என்றாலும் சரி, தத்துவ ஞானிகளாகத்தாம் அனைவரும் கருதப் பட்டு வந்து இருந்தனர்.

17-18-ஆம் நூற்றாண்டுகளில், தத்துவத்தில் இருந்து பூத வியல், உடலியல், முதலியன பிரிந்து சென்று விட்டு இருந்த கதையினைப் ‘புனிதக் குடும்பத் ‘தில் சுருக்கமாகக் கார்ல் மார்க்ஸ் விளக்குகிறார். பொருளாதாரம் என்பது கூட தத்துவம் என்றுதான் கருதப் பட்டு வந்து இருந்ததாம்; இதனை ஹே:கலினால் பொறுத்துக் கொள்ளவும் முடிய வில்லையாம்!

இப்படி, ஒரே துறையாக இருந்து கொண்டு வந்து இருந்த ஆய்வுத் துறையில் இருந்து பல் வேறு துறைகள் பிரிந்து சென்று விட்டதன் பின்னர், தத்துவத்திற்கு என்று தற் பொழுது எஞ்சி இருக்கின்ற ஒரே ஒரு துறை, அறிவின் தேற்றம் (தியரி ஆஃப் நாலெட்ஜ்), அல்லது அறிவு இயங்கு இயல் (எபிஸ்ட்டிமாலஜி) மட்டும்தான் ஆகும்.

அதே நேரத்தில், அறிவு இயங்கு இயல் என்பது தனி ஒரு துறையாக—-தருக்கம் என்றும் அதருக்கம் என்றும்—-வளர்ந்து வந்து கொண்டு இருப்பதால், தத்துவம் என்பது செத்துப் போய் விட்டது என்று நாம் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அந்தக் காலத்து அறிவாளர்களின் சிந்தனைகளைப் பற்றி நாம் பேசுகின்ற பொழுதில் கூட, தத்துவம் என்று இல்லாமல், அவர்களது சிந்தனைகளினுள் அடங்கிக் கிடக்கின்ற பல் வேறு துறைகளையும் நாம் பிரித்துப் பார்த்திட முடியும்.

இதனால்தான், தத்துவம் பற்றி ஜெய மோகனோ அல்லது அவர் போன்றவர்களோ பேசுகின்ற பொழுது ஒரு மாய்மையாக நமக்கு அது தோன்றுகிறது.

ஏனென்றால், யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு மறை பொருள் அது! எனவே, தத்துவம் பற்றி இன்று யாரும் பேசிக் கொண்டு இருப்பதில் எந்தப் பொருளும் இல்லை. இனி, தருக்கம்-அதருக்கம் என்பது கூட அறிவு இயங்கு இயலின் பாற் பட்டதுதான் ஆகும்.

எனினும், தத்துவம் என்னும் சொல்லை நாம் காப்பாற்றிதான் ஆக வேண்டும் என்றால், அறிவு இயங்கு இயல் என்பதற்குப் பதிலாக அதனை நாம் பயன் படுத்திக் கொள்ளலாம்; பருமை வாதம், கருத்து வாதம், முதலிய அமைவு வாதங்களையும் (ஆன்ட்டாலஜி) இயங்கு இயல், இயங்கா வியல், முதலிய அணுகு முறை வாதங்களையும் இதற்குள் நாம் சேர்த்தும் கொள்ளலாம், அவ்வளவுதான்!

தேடல்

தேடுகிறேன், தேடுகிறேன், என்று நமது எழுத்தாளர்களில் சிலர் கூறுகின்ற பொழுது, நம்முள் ஒரு மயக்கம் ஏற்பட்டு விடுவது உண்டு—-யாரும் தேடாத—-தேடிட

முடியாத—-வேறு எதையோ இவர்கள் தேடுகிறார்கள் என்று! ஆனால், இவர்கள் தேடுவதோ உண்மையைத்தான் ஆகும்; அதாவது, வாழ்க்கையின் உண்மையை!

இதற்கு அப்பால் தேடல் என்பதற்கு வேறு எந்த ஒரு பொருளும் இருந்திட முடியாது என்பதால், உண்மையை இவர்கள் தேடுகிறார்கள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், உண்மையைத் தேடாதவர்கள் உலகில் யாராவது இருந்து இருக்கிறார்களா ? என்றால், அதுதான் இல்லை! தங்கள் வாழ்க்கையின் உண்மையை ஒவ்வொரு மனிதனும் தேடிக் கொண்டுதான் இருக்கிறான்—-படித்தவனாக அவன் இருந்தாலும் சரி, பாமரனாக அவன் இருந்தாலும் சரி!

எனவே, தேடுகிறேன், தேடுகிறேன், என்று கூறி, ‘உண்மை-தேடி ‘களாகத் தங்களை மட்டும் முன்னிறுத்திக் கொள்வதற்கு எழுத்தாளர்கள் முற் படுவதில் உண்மை எதுவும் இல்லை.

அது சரி, இந்த உண்மை என்பதுதான் என்ன ?

உண்மை

‘கூழின் உண்மை அதைக் குடிப்பதில் இருக்கிறது ‘ என்று ஏங்கெல்ஸ் கூறுகிறார். ஆனால், உண்மை (ட்ருத்) என்பதன் மூலம் எதனைக் குறிப்பிடுவதற்கு அவர்

முற்படுகிறார் ? என்பதுதான் கேள்வி.

‘உண்மை என்ன ? ‘ என்று கேட்கின்ற ஒரு மனிதன், ‘நிகழ்ந்தது என்ன ? ‘ என்றுதான் கேட்கிறான். நிகழ்மை (ஃபாக்ட்) என்னும் பொருளில் உண்மை என்னும் சொல் இங்கே பயன் படுத்தப் பட்டு இருக்கிறது.

‘உண்மை பேசு ‘ என்று நமக்குப் பெரியவர்கள் அறிவுரை கூறுகின்ற பொழுது, நிகழ்ந்ததை நேர்மையாகச் சொல் என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள்.

நமது ஏங்கெல்ஸோ தன்மை என்னும் பொருளில் உண்மை என்னும் சொல்லைப் பயன் படுத்தி இருக்கிறார்.

‘கற்பனை வேறு; உண்மை வேறு ‘ என்று நாம் கூறுகின்ற பொழுது, மெய்மை (ரியாலிட்டி) என்னும் பொருளில்தான் உண்மை என்னும் சொல்லை நாம் பயன் படுத்துகிறோம். அப்படி என்றால், ‘உண்மையைத் தேடுகிறேன் ‘ என்று சொல்பவர்கள் எதனைத்தான் தேடுகிறார்கள் ? என்னும் கேள்வி எழுகிறது.

எப்படியும், வாழ்வின் உண்மையைப் பற்றி நாம் பேசுகின்ற பொழுது, வாழ்க்கை உறவுகளின்—-மனித உறவுகளின்—-விதிகளைப் பற்றிதான் நாம் பேசுகிறோம் என்பதில் நமக்கு ஐயம் எதுவும் இல்லை. இந்த விதிகளைப் பற்றிய அறிவுதான் ‘காரண அறிவு ‘ என்றும் ‘அறிவியல் அறிவு ‘ என்றும் அழைக்கப் பட்டும் வருகிறது.*

—-*வாழ்க்கையின் ‘உண்மை ‘யைக் கண்டு பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் இளைஞர் முதல் முதியவர் வரை அனைவரும் அவ்வப்போது எழுச்சி கொள்வதை நாம் கண்டு வருகிறோம். வாழ்க்கையின் உண்மையினைச் சமுதாயத்தில் காண முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்ட காரணத்தால் காடுகளிலும் மலைகளிலும் உண்மையைத் தேடி அலைந்த துறவியரைப் பற்றியும் நாம் கேள்விப் பட்டு இருக்கிறோம். ஆனால், ‘உண்மை ‘ என்பதன் மூலம் நாம் எதனைக் குறிப்பிடுகிறோம் என்பதுதான் கேள்வி.

ஒரு மதவாதிக்கு இஃது ஒரு பிறழ்ச்சனையாகவே தெரிவதில்லை. உண்மையை அவன் கடவுளோடு அடைவு படுத்துவதால், மேலும், கடவுளைப் புரிந்து கொள்வது மனிதனால் முடியாதது என்ற முடிவுக்கும் அவன் வந்து விடுவதால், உண்மையைக் காண வேண்டும் என்ற அவசியம் இல்லாமலேயே அவனது பிறழ்ச்சனை தீர்ந்து விடுகிறது; அல்லது தீராத இந்தப் பிறழ்ச்சனையைத் தேடி அலைவதிலேயே அவன் காலத்தைக் கழித்து விடுகிறான். ஆனால், ஒரு மார்க்சியனுக்குப் பிறழ்ச்சனை இப்படியே தீர்ந்து விடுவதில்லை. உண்மையைக் கண்டு பிடிப்பதில் இத் தகைய சிக்கலும் கூட அவனுக்கு இல்லை.

சமுதாயம் என்பது மனித உறவுகளின் தொகுப்பு என்பதால், மார்க்சியத்தைப் பொறுத்த வரை சமுதாயம் என்றால் மனிதர்களின் இடையே உள்ள உறவு என்று பொருள். நிலவி வருகின்ற உறவுகள் உடைந்து சிதறுகின்ற வரை, இவ்வுறவுகளே நிதமும் புதுப்பிக்கப் பட்டு வருகின்ற காரணத்தால், இவ்வுறவுகளின் இயக்கத்தில் ஒரு விதி, அல்லது ஒழுங்கு முறை இருந்தாக வேண்டும். சமுதாய இயக்கத்தினுள் ஓர் ஒழுங்கு முறையாக ஊடாடி நிற்கின்ற இந்த விதிதான் மார்க்சியத்தைப் பொறுத்த வரை வாழ்க்கையின் உண்மை.

ஆக, உண்மையைக் காண வேண்டும் என்ற முனைப்பு, ஒரு மார்க்சியனைப் பொறுத்த வரை, சமுதாயத்தின் இயங்கு விதியை—-இயற்கையின் இயங்கு விதியை அல்ல—-காணுகின்ற முனைப்பாக மாறுகிறது. (பார்க்க: முதல்:பணம்: அதிகாரம் ஒன்று: தமிழாக்கம், பக்.15-16.)

—-

இந்தக் ‘காரண அறிவு ‘க்கு எதிரான ஓர் ஆயுதமாகத்தான் அதருக்கம் என்பதனை ஜெய மோகன் மற்றும் அ. மார்க்ஸ் போன்ற புதிய வித்தகர்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள் எனலாம். மனத்தின் விடுதலை: அணிந்துரையில் பின் வருமாறு சொ. கண்ணன் எழுதி இருந்ததும் இதனால்தான் போலும்:

‘தர்க்கம் இல்லாமல் அதர்க்கம் இல்லை என்று யதிக்குத் தெரிந்த அளவுக்கு அ. மார்க்சுக்குத் தெரிய வில்லை. அதனால்தான், தர்க்கத்தை மிகுந்த அக்கறையுடன் வளர்த்துச் சென்று, அதர்க்கத்தில் ஆதி மஹஸை நிறுவுகிறார் யதி. ஆனால், அ. மார்க்சோ அதர்க்கத்தை ஏற்றுத் தர்க்கத்தை நிராகரிப்பதன் மூலம், அதர்க்கத்தின் வன் முறையை மறைமுகமாக ஏற்கிறார்.

இதை ‘விதியின்மை ‘ என்று எடுத்துக் கூறி, ‘அதர்க்கத்தை ‘க் கலவரங்களின் தொகுப்பாக ‘வாழ்க்கையின் கேள்விகளி ‘ல் இருபது ஆண்டுகளுக்கு முன்பே பிரகாசம் அடையாளம் காட்டியதை அ. மார்க்ஸ் அறிந்திருக்க மாட்டார். இன்றைய முதலாண்மைச் சமுகத்தின் விலை வாசி ‘ஏற்ற-இறக்க ‘ நிலவரங்களில் தர்க்கத்தையும் அதர்க்கத்தையும் யாரும் அடையாளம் காணலாம். (பார்க்கவும்: வாழ்க்கையின் கேள்விகள் (1999), பக்.91-97, 130, 181, 203, 231, 258 முதலியன.)

‘தர்க்கத்தின் ‘ மையப் புள்ளியை விட்டு விலகிக் ‘குதர்க்கம் ‘ ஆகாத வரை, ‘அதர்க்கத்தை ‘ மக்கள் பொறுத்துக் கொள்ளுகிறார்கள். தர்க்கத்தின் சுற்று வட்ட எல்லையை அதர்க்கம் மீறும் போது, புதிய தர்க்கங்களை, புதிய கரணியங்களை, புதிய விதிகளை உருவாக்கிக் கொள்ள மக்கள் முயற்சி செய்கிறார்கள். இதைத்தான் சமுதாயப் புரட்சியின் காலம் என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

இப்படிப் பட்ட ஒருமை வாத மார்க்சிய மதிப்பீடுகளை உள் வாங்கிக் கொள்ளாததால், ஒருமை வாத மதிப்பீட்டுக்கு எதிராகப் பன்மை வாத மதிப்பீட்டை இவர்கள் முன் வைக்கிறார்கள்; அதாவது, இரட்டை வாத மதிப்பீட்டை முன் வைக்கிறார்கள். ‘ (பார்க்க: மனத்தின் விடுதலை, பக்.26.)

ஆக, அதருக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்பதும் அரியது ஒரு கண்டு பிடிப்பு என்று நாம் கருதுவதற்கு இதில் எதுவும் இல்லை என்பதும் தெளிவு.

இனி, ஜெய மோகனின் ‘மொழிபு ‘ என்பதனைப் புரிந்து கொள்ளுகின்ற வகையில், ‘காரண அறிவு ‘ என்பது பற்றிச் சிறிது நாம் பார்த்து விடுவோம்.

02-09-2004

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்