சாரு நிவேதிதாவின் கோணல்கள் – நாடோடிப் பக்கம்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

நாடோடி.


ஒரு அதிகாலைப் பொழுதில் தோழி ஒருவர் தொலைபேசியில் அழைத்து ‘இளையராஜா பற்றி சாரு நிவேதிதா எழுதியிருப்பதைப் பார்த்தாயா. அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் ? ‘ எனக் கேட்டார். சரு நிவேதிதாவா யார் அது என விசரித்தில் கோணல் பக்கங்களைப் பற்றி அறிந்துகொண்டேன். படித்த சில பக்கங்களையும் என் விமர்சனக் கடிதங்களையும் அவற்றிற்கான அவரின் எதிர்வினைகளையும், ஒரு இலக்கியவாதி என அழைத்துக்கொள்ளும் அவருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பற்றிய கண்டிப்பான, உடன்பாடில்லாத (uncompromised) விமர்சனக் கட்டுரை இது. கோணல் எங்கே என்பதன் ஆராய்ச்சி என்றும் கூறலாம்.

1. திரு சாருநிவேதிதா அவர்களுக்கு,

வணக்கம். ‘விகடன்.காமில் ‘ உங்கள் கோணல் பக்கங்கள் சிலவற்றைப் படிக்க நேர்ந்தது.இலக்கியவாதிகள் பற்றியும், தமிழ்நாட்டு மாணவர்களின் இலக்கிய அறிவு பற்றியுமான உங்கள் கருத்துக்களைப் படித்தேன். Che Guerra, Gabriel Garcia Marquez, Carlos fuentes, Mario Varges Llosa, Regis Debrey, Friedrich Nietzsche, Kierkegaard, William Burroughs, Sadat Hasan Manto, Salman Rushdie போன்றவர்களைப் படித்தவர்கள்தான் இலக்கியவாதிகள் அல்லது இலக்கியத்தைப் பற்றிப் பேசதகுந்தவர்கள் என்பது போல ஒரு மாயையை உருவாக்கியுள்ளீர்கள். இது தவறானது மட்டுமல்ல வருந்தத்தக்கதுமாகும். மேலே குறிப்பிட்டுள்ள எவராவது கம்பனையோ வள்ளுவனையோ படித்திருப்பார்களா ? திருக்குறளைக்கூட படிக்கவில்லை இவர்கள் எப்படி இலக்கியவாதிகள் என்று நாங்கள் கேட்கக்கூடுமா ? விட்டால் சாருநிவேதிதாவைக்கூட படிக்கவில்லை நீ எப்படி இலக்கியவாதி என்று கேட்பீர்கள் போலுள்ளதே! நிறைய படிக்கவேண்டும். நல்லதுதான். அறிவும், மனமும் விரிவடையக்கூடும்; அல்லது வேறு நாட்டுப் படைப்புகளையும் அறிந்துகொள்ளப் படிக்கலாம். வரவேற்கத்தக்கதே. ஆனால் அப்படிப்படித்தவர்கள் தான் இலக்கியத்தைப்பற்றிப் பேசத்தகுந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது கண்டிக்கத் தக்கது.

தொலைக்காட்சி சேனல்கள் முக்கியமாக ‘கமர்ஷியல் ‘களாலேயே நடத்தப்படுகின்றன. இது யாவரும் அறிந்த உண்மை. அப்படியிருக்க ஒரு சேனல் காலைவேளையில் பேட்டி எடுக்க அழைத்ததாகப் புலம்பியிருக்கிறீர்கள். திரு.ரஜினி அவர்களை அந்தக்காலையிலேயே பேட்டி எடுக்க சொன்னதாகவேறு தம்பட்டம்! ரஜினியை அந்தக்காலையில் பேட்டி எடுத்தாலும் குறைந்தபட்சம் 2 கோடி மக்களாவது பார்ப்பார்கள் என்பதுதான் தழிழ்நாட்டு நிலை. பொதுமக்கள் யாருமறியாத உங்களை பேட்டி எடுக்க துணிந்ததற்கே அவர்களைப் பாராட்டவேண்டும். இதில் ‘எழுத்தாளனுக்கு தன்மானம் இல்லையா ? ‘ என்று சுயபுகழ்ச்சி வேறு. கமர்ஷியல் உண்மையை நேர்மையாக ஏற்றுக்கொள்வதுதான் அழகு. இதில் தன்மானம் பார்க்க என்ன இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை.

எங்கோ சந்தித்த நபர்கள் சிலர் நீட்ஷே பற்றியும் ஜூலியோ பற்றியும் கேட்டதாக வியந்து கூறுகிறீர்கள். ( ‘தமிழ்நாட்டு மாணவர்கள் இப்படி கேட்பார்களா ? ‘ என்றுவேறு கேள்வி). உங்கள் நாவல் நீட்ஷேவினுடையது போல இருப்பதாக ஒருவர் கேட்டார், உங்கள் கருத்துக்கள் ஜூலியோ போலிருப்பதாக ஒருவர் கூறினார் என்று பெருமையடித்துக் கொள்கிறீர்கள்! பிறநாட்டு படைப்புக்களைக் காப்பியடிப்பதைக்கூட நெஞ்சை நிமிர்த்தி சொல்ல நம்மவர்களால்தான் முடியுமென்று நினைக்கிறேன். இதை சொல்லும்போது உங்கள் தன்மானம் உங்களை இடிக்கவில்லையா ? ஒரு தேவாவொ ரஹ்மானோ ‘என் இசை இளையராஜா போலுள்ளது, மைக்கேல் ஜாக்சன் போலுள்ளது ‘ என்று கூறினால் காப்பியடித்துவிட்டார்கள் என்று எள்ளி நகைப்பதில் உங்களைப்போன்றவர்கள்தான் முன்னணியிலிருப்பார்கள். கலை உலகுக்கும் இலக்கிய உலகுக்கும் என்ன வித்தியாசம் பாருங்கள். கலையுலகில் காப்பியடித்தால் கேவலம் இலக்கிய உலகில் அதுவே பெருமை. அடடா! இலக்கியவட்டம் என்று கூறிக்கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் நின்றுகொண்டு பிறநாட்டுப் படைப்பாளிகளைப் பற்றி பேசுவதையே பெருமையாகக் கருதிக்கொள்ளும் இலக்கிய வாதிகளே, உங்கள் போலி கவுரவத்தை எப்போதுதான் நீங்களெல்லாம் விடப்போகிறீர்களோ ? வேற்று நாட்டு படைப்பானாலும் நல்ல படைப்புகளை வாழ்த்துவது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதையே வேலையாகக் கொண்டால் எப்படி ?

அடுத்து இசைவட்டம் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் எப்போது பார்த்தாலும் பீத்தோவன், வாக்னர், மொஸார்ட் என்றே பேசிக்கொண்டிருக்கும். ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதையும் பரவலாக ஆண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் மொழி, கலாச்சாரம், இசை போன்றவை உலகமுழுவதும் பரவியிருக்க அதுவே முக்கிய காரணம். சாமானிய மக்கள் தினமும் ஓடிச்சென்று பீத்தோவனை கேட்டுக்கொண்டிருக்கிறார்களா என்ன ? (அவர்கள் நாட்டிலேயெ அப்படி அனைவரும் கேட்பார்களா என்பது சந்தேகமே). இப்படி சாமானிய மக்கள் அதிகம் கேட்காத இசைதான் சிறந்ததென்று எப்படிக் கூறமுடியும். மக்களைச் சென்றடையும் கலையே சிறந்ததென்று நான் நினைக்கிறேன். How to name it ? Nothing but wind போன்றவற்றைக் கேட்டதுண்டா ? காதுக்கு மட்டுமேயான இசையை மனதுக்குள்ளும் செலுத்தி ஆன்மாவையே தொடவைத்த தெய்வீக இசை ‘இசைஞானி ‘ இளையராஜாவின் இசை. அதனாலேயேதான் ‘ராக தேவன் ‘ என்று அழைக்கிறோம். பீத்தோவன் பற்றியெல்லாம் தெரியாத என்னைப்போன்ற பாமரனையும் ரசிக்கவைத்த இளையராஜாவின் இசை பீத்தோவனின் இசையை விட சிறந்தது என்பதில் எனக்கு ஐயமில்லை. (இப்படி எழுதுவதை கண்டனம் செய்பவர்கள் செய்துகொள்ளலாம்.) இதை சொல்ல எனக்கு ஒரு பயமும் இல்லை. பெருமையே. பீத்தோவன் பற்றி தெரியாதவரிடம் ஜாஸ் (jazz) பற்றி பேசுவதா என அமைதியாக இருந்துவிட்டதாக பெருமையாக எழுதியிருக்கிறீர்கள். என்ன அவலம்.

பிறப்புரிமை பற்றிய வால்ட்டேரின் கருத்து மிகச்சரியானது. ஆனால் எது பிறப்புரிமை என்பதில் தான் சிக்கலே! அடுத்தவரைப் பாதிக்காத வரைதான் உங்கள் பிறப்புரிமைக்கு மதிப்பே. எழுத்துரிமை எனக்கூறிக்கொண்டு, ‘அவர் மோசமானவர், பொறுக்கி ‘ என்றெல்லாம் எழுதுவதும் பிறப்புரிமையா ? பிறப்புரிமையை பண்போடு பயன்படுத்தினால் தான் அதன் அர்த்தம் நியாயப்படும். எதைவேண்டுமானாலும் எழுதுவதே எழுத்துரிமை என்ற தவறான நிலையே அதிகம் காணப்படுகிறது. அதுவும் இப்போதுள்ள இலக்கியவாதிகளெனில் கேட்கவே வேண்டாம். உங்களைப் போன்ற இலக்கியவத்திகளென சொல்லிக்கொள்பவர்கள் பேசினால் என்னைப்போன்ற சாமானியர்களுக்குப் புரிவதேயில்லை. தங்களைப் பெரிய ஆளாகக்காட்டிக்கொள்ள எப்போது பார்த்தாலும் வால்ட்டேர், ருஷ்டி என்றோ அல்லது பின்நவீனத்துவம் முன்நவீனத்துவம் என்றோ பேசிக்கொண்டிருப்பது. அப்புறம் இலக்கியக் கூட்டங்களுக்கு மக்கள் வருவதேயில்லை என்றால் எப்படி வருவார்கள் ?

‘இளையராஜாவின் இசை என்பது பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள ஒரு படைப்பு. அதை விமர்சிக்க ஒருவனுக்கு உரிமை உண்டு ‘ என்கிறீர்கள். பின்னாலேயே ‘நான் இளையராஜாவின் இசையை விமர்சிக்கவில்லை ‘ என்கிறீர்கள். எனக்குப்புரியவில்லை. படைப்பை விமர்சிக்க உங்களுக்கு உரிமை உண்டு. படைப்பு தவரானதா, சரியானதா, தரமானதா தரமற்றதா (அதை அறியும் தகுதியும் வேண்டும்), நல்லதா கெட்டதா என்று பொதுவில் விமர்சிக்கலாம். பிடித்திருக்கிறது இல்லை என்பது உங்கள் தனிப்பட்ட அபிப்ராயம், அது விமர்சனம் அல்ல! அதைக் கேட்காமல் சொல்லவும் அவசியம் இல்லை. உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை எழுதும் சந்தை மடமாக விகடனை ஆக்கிவிட்டு, ‘இலக்கியப் பக்கங்களை( ?!!) தமிழ் மாணவர்கள் படிப்பதில்லை என எதற்கு புலம்புவானேன் ?

அழகியப்பெரியவனின் படைப்புக்களைப் பற்றிய உங்கள் விமர்சனமும், புகழ்ச்சியும் கண்டு சிலிர்த்துப்போனேன். ‘கிட்ட தட்ட ஒரு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் போல எழுதியிருந்தார் ‘ என்று கூறினீர்களே அப்போதுதான் உங்களின் ‘வஞ்சப்புகழ்ச்சி ‘ புரிந்தது! அழகியப் பெரியவனை இதைவிட அதிகமாக கேவலப்படுத்த முடியாதென்றே நினைக்கிறேன். ஏன் அவரைப்படிக்கும்போது ‘இலத்தீன் அமெரிக்கர்கள் இவரப்போல எழுதியிருக்கிறார்கள் ‘ என்று கூறலாமே ? அப்போது கூட ஒரு இந்தியரை வெளிநாட்டினவரைவிட அதிகமாக புகழந்துவிட உங்களைப் போன்றவர்களால் முடியாது. கு.ப.ரா போல, கி.ரா போல, சுந்தர ராமசாமி போல எழுதியிருக்கிறார் என்று யாரையும் எப்போதும் ஒப்பிட்டுவிடவே மாட்டார்கள். எப்போது அயல் நாட்டினரைக் கிட்ட தட்ட நெருங்கிவிட்டோம் என்று நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளும் அவலம். அயல் நாட்டுப் படைப்புக்கள் தான் சிறந்ததென்ற தாழ்வு மனப்பான்மை. நம்மவர்களோடு ஒப்பிட்டு நம்மவர்கள் சிறந்தவர்களென்று ஆகிவிட்டால் பின் இலக்கிய கூட்டங்களில் என்ன பேசுவது ? எப்படி காலந்தள்ளுவது ?

‘விமர்சனங்கள் எழுதுபவர்களெல்லாம் படித்தவர்கள், முழு முகவரியுடனேயே எழுதுகிறார்கள் ‘ என்று வியக்கிறீர்கள். பயந்து ஒளிந்து எழுத வேண்டுமா என்ன ? விமர்சனம் செய்வது குற்றமா என்ன ? ‘விமர்சனங்களுக்கு பதில் எழுதிக்கொண்டிருப்பதுதான் எழுத்தாளனுக்கு வேலையா ‘ எனக் கேட்கிறீர்கள். ஆனால் ‘நன்றாக இருக்கிறது, இங்கே வாருங்கள் செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் ‘ என்று புகழ்ந்து வரும் கடிதங்களை மட்டும் மறக்காமல் அடுத்த கோணல் பக்கத்திலேயே குறிப்பிட்டு விடுகிறீர்கள். அப்போது மட்டும் வேறு வேலையில்லை போலிருக்கிறது! பார்த்து, நீங்கள் தண்ணியடித்துவிட்டு உருண்டதைப் பற்றிப் படிப்பதுதான் எங்கள் வேலையா என வசகர்கள் கேட்டுவிடப்போகிறார்கள். விமர்சகர் என்றாலே ஆங்கிலத்தில் critique – the one who critisize என்றுதான் அர்த்தம். உங்களை புகழ்ந்து எழுதுபவர்கள் மட்டும் விமர்சகர்கள் மற்றவர்கள் ஆபாசக் கடிதம் எழுதுபவர்கள் என்ற உங்கள் கருத்து மிக வேடிக்கையானது. உங்களை வெறுமனே புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் ‘ஜால்ராக்கள் ‘ விமர்சகர்கள் அல்ல. நீங்கள் தண்ணியடித்த கதையையும், ஊர் சுற்றிய கதையையும் ‘இலக்கியம் ‘ என்று தலைப்பில் விகடன் வெளியிடுவது ஒரு அநியாயம். விகடனுக்குத்தான் வாசகர்கள்மேல் என்ன ஒரு மதிப்பு. சில இலக்கியவாதிகள் பற்றியும் இலக்கியம் பற்றியும் பேசுவதைத் தவிர கோணல் பக்கங்கள் உங்கள் சுயபுகழ்ச்சிகளே. படிக்க சுவாரசியமாக எழுதுவதற்கு என் வாழ்த்துக்கள்.

2. ‘அலிகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது ‘அதுதான் இந்துமதத்திலேயே இருக்கிறதே. அர்த்தநாரீஸ்வரர் ‘ என்று சொன்னேன் ‘ என்று எழுதியிருக்கிறீர்கள். இதைவிட அபத்தமான ஒப்பீடு இருக்கவே முடியாது. ‘ஒரு ஆண் பெண்ணின் சட்டையை அணிந்துகொண்டால் அதுதான் இயல்பானது-அவனை முழுமையான ஆணாக மாற்றுகிறது ‘ என்பது தவறான கருத்து. அது அவனை அலியாக மாற்றுகிறது. இந்த நிலையை அர்த்தநாரீஸ்வரருடன் ஒப்பிடுவது மிக அபத்தமான தவறு. அர்த்தநாரீஸ்வரர் முழுமையின் சின்னம். அலிகள் பாவம் தங்கள் நிலையையே முழுமையாக அடையமுடியாதவர்கள். அர்த்தநாரீஸ்வரர் ஆண்-பெண் தன்மைகளின் முழுமை. அலிகள் அத்தன்மைகளை அடைய முடியா இயற்கையின் மறுதலிப்பு. இரண்டும் நேரெதிரானவை. ஆண்கள் பெண்ணுடை அணிந்து நடித்தால் அதை ஒரு கேலிக்கூத்தாகவே நம்மால் ரசிக்க முடிகிறது. அவன் முழுமையடைந்துவிட்டதாக யாரும் கருதுவதில்லை. அர்த்தநாரீஸ்வரர் என்பது இந்துமதத்தின் ஒரு அற்புதத் தத்துவம். ஆண் பெண் சங்கமத்தில் முக்தி காணும் தெய்வீக நிலை. நான் அறிந்த வரையில் வேறு எந்த மதத்திலோ நாட்டிலோ இப்படிப்பட்ட அருமையான தத்துவம் இல்லை. ஒன்றும் தெரியாமல் இதை சாதாரண நிலைகளோடு ஒப்பிடுவது அறியாமை.

ஆணிடம் பெண் தன்மையும் பெண்ணிடம் ஆண் தன்மையும் இருப்பது உண்மை. ஆனால் ஆணிடம் உள்ள பெண் தன்மை சமூகக் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் கடுமையாக அடக்கப்படுகிறது என நீங்கள் கூறுவது தவறு. இயற்கையே அவற்றை அடக்கிவிடுகிறது என்பதுதான் உண்மை. ஆண்களை ஆண்களாகவும், பெண்களை பெண்களாகவும் உருவாக்க இயற்கைதான் முனைகிறது. ஹார்மோகளைப்பயன்படுத்தி அதை செய்கிறது. அப்படி உருவாக்கிய ஆணை ஆணாகவும் பெண்ணை பெண்ணாகவும் நிலைநிறுத்தவே சமூகக்கட்டுப்பாடுகள். சில சமயம் இயற்கையால் அடக்கிவைக்கப்பட்ட தன்மைகளை அடைய முனைவதும் உண்மையே. (அழிக்க அல்ல, அடைய). ஆண் எழுத்தாளர்கள் பெண்கள் பெயரில் எழுதுவது ஒரு வரலாற்று மோசடியே. உதாரணமாக ஒளவையார் ஒரு பெண்ணல்ல, அந்த பெயரில் ஒரு ஆண்தான் பாடல்கள் பாடியுள்ளார் என்று இப்போது யாராவது கூறினால் ஒளவையார்பற்றி நாம் அறிந்த வரலாறு முழுமையுமே ஒரு கேள்விக்குறியாகிவிடாதா ? உங்கள் பக்கங்களையே பின்னர் யாராவது – நீங்கள் ஒர் பெண் எழுத்தாளர் என நினைத்து- படித்தால் தமிழ் நாட்டுப்பெண்கள் மதுஅருந்துபவர்கள், பாரிலேயே குடியிருப்பவர்கள் என்றெல்லாம் நினைத்துவிட வாய்ப்புள்ளது அல்லவா ? எனவே சில காரணங்களுக்காக புனைப்பெயர் வேண்டுமெனில் ஆண் பெயரையே ஆணும் பெண் பெயரையே பெண்ணும் வைத்துக்கொள்வது நலம். மாற்றி வைத்துக்கொள்வது ஒரு வரலாற்று மோசடியே. (இது சட்டமல்ல , என் கருத்து…)

3. புத்தமதம் கடவுள் இல்லை என்று சொல்லும் மதம் என்று எழுதியிருந்தீர்கள். அது தவறான கருத்து. கடவுள் இல்லை என்று புத்தரோ, அம்மதமோ அறுதியிட்டுக் கூறவில்லை. எளிமையாகச் சொன்னால் ‘ஆசையே அழிவுக்கும் துன்பத்திற்கும் காரணம் ‘ என்பதுதான் புத்தரின் சாரம். உலகின் துன்பங்களுக்கும், கவலைகளுக்கும் காரணம் காணவே புத்தர் புறப்பட்டார். அவர் கண்டறிந்த உண்மையே – ஆசையின்மை. புத்தரிடம் யாராவது சென்று, ‘கடவுள் எங்கிருக்கிறார் ? ‘ என்று கேட்டால் அவர், ‘கடவுளா ? அவரைப்பற்றி உனக்கென்ன கவலை ? உன் வேலையை நீ கவனி ‘ என்று கூறியிருப்பர். ஆனால் அதன் அடிப்படை ‘கடவுள் இல்லை ‘ என்று கூறுவதல்ல. கடவுள் இருக்கிறார் என்று குறிப்பிட்டால் ‘அவர் எங்கிருக்கிறார் ? அவரைப்பார்க்க முடியுமா ? அவரை அடைவது எப்படி ? ‘ என்ற ஆசைகளும் கேள்விகளும் அதனால் கவலையும் துன்பமுமே ஏற்படும். உண்மையில் புத்தர் ‘கடவுள் இல்லை ‘ என்று கூறவுமில்லை இருக்கிறார் என்று ஒத்துக்கொள்வதுமில்லை. எந்த ஆசையுமற்ற அமைதியான மெளன நிலையே அவர் தவம் தத்துவம் எல்லாம். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது போன்ற வாதங்களுக்கே அவர் வருவதில்லை.

4. ‘ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத சமூகத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் ‘ என்று எழுதியிருந்தீர்கள். எங்களுக்கெல்லாம் ஜனநாயகம் தெரியாதென்று எப்படியய்யா கண்டுபிடித்தீர்கள் ? ஒருவேளை ஜனநாயத்தைப் பற்றி உங்களுக்கு மட்டும்தான் தெரியுமோ ? ‘தமிழ் மாணவர்களுக்கு இலக்கியம் தெரியாது; சமூகத்திற்கு ஜனநாயகம் தெரியாது; அவர்களுக்கு மொழிபெயர்க்க தெரியாது ‘ என்று அடுத்தவர்களைப்பற்றி குறை சொல்லிக் கொண்டிருப்பதுதான் ஜனநாயகம் தெரிந்தவர்களின் வேலை போலிருக்கிறது! வால்டேரைப் படித்ததனால் உங்களூக்கு ஜனநாயகத்தைப் பற்றி எல்லம் தெரியும் என்று அர்த்தமல்ல. வால்டேர் சொன்னது மட்டுமே ஜனநாயகமும் ஆகிவிடாது. அது ஜனநாயத்தைப்பற்றிய அவர் கருத்துக்கள் அவ்வள்வே. ஜனநாயகம் என்பது ஒரு சமூகத்தத்துவம். முழுமையாக வரையறுக்கப்பட்டதல்ல. சமூகத்தத்துவங்களுக்கு நிரூபணமும் கிடையாது. ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. இதில் மற்றவர்களுக்கு மட்டும் ஜனநாயகம் தெரியாதென்று நீங்கள் எப்படி கூறமுடியும் ?.

நீங்கள் அறநூல் எழுதவில்லை என்பது ஊருக்கே தெரியும். அறநூல் எழுதவில்லை என்று சொல்லிவிட்டதனால் எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்றும் அர்த்தமல்ல. அலிகள் பற்றி பேசிவிட்டு அர்த்தநாரீஸ்வரர் என்கிறீர், புத்த மதம் கடவுள் இல்லை என்கிறது என்கிறீர். இப்படி அறைகுறையாக அறிந்தவற்றைக்கொண்டு தவறாக எழுதாதீர்கள் என்று விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமையுண்டு. (இல்லை எழுத்துரிமை உங்களுக்கு மட்டும்தானா ?!). இப்படி தவறாக எழுதாதீர்கள் என்று சொல்வது ஃபாஸிசத்தின் ஆரம்பம் என்று நீங்கள் கூறுவது அபத்தமானது. நீங்கள் எதை வேண்டுமானாலும் வீட்டில் உட்கார்ந்து எழுதிக்கொள்ளுங்கள். தவறில்லை. ஆனால் பொதுவில் எதை வெளியிடலாம் – குறைந்தபட்சம் தவறான கருத்துக்களை வெளியிடக்கூடாது – என்பதற்காவது ஒரு வரைமுறை வைத்துக்கொள்ளுங்கள் என்று விமர்சிப்பது எப்படி ஃபாஸிசமாகும் ? யாராவது நீங்கள் எழுதியிருப்பதற்கு எதிராக விமர்சனம் சொன்னால் உடனே ஃபாஸிசம், சுதந்திரத்தில் தலையிடுகிறார்கள் என்று உளறினால் எப்படி ?

சுதந்திரம், எழுத்துரிமை என்பது எதைவேண்டுமானாலும் செய்வது/எழுதுவது அல்ல. அப்படி நினைப்பது முட்டாள் தனமானது. சுதந்திரம் என்பது அடிமைத்தனங்களிலிருந்து விடுபடுவது. கட்டுப்பாடுகளையும் களைவதல்ல. அடிமைத்தனத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் கூட வேறுபாடு தெரியாத நீங்கள் அடுத்தவருக்கு ஜனநாயகம்/சுதந்திரம் தெரியாது என்று கூறுவது வேடிக்கையானது. (கட்டுப்பாடும் ஒருவித அடிமைத்தனம்தான் என்று வசனம் பேச ஆரம்பித்துவிடாதீர்கள்!). அயலாரிடமிருந்து மட்டுமல்ல, அறியாமை, ஜாதி, மதம் போன்ற அனைத்து தளைகளிடமிருந்தும் விடுதலை அடைவது சுதந்திரம். ஒழுக்கம், பண்பாடு மற்றும் நடத்தைகளுக்கு நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் எல்லைகள்தான் கட்டுப்பாடு. தனிமனிதன் கட்டுப்பாடுகள் வேறுபடுவதால்தான் சமுதாயக் கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. எல்லோரும் சுதந்திரம் அடையவேண்டும், பிறர் சுதந்திரத்தையும் மதிக்கவேண்டும். ஆனால் சுதந்திரம் என்ற பெயரில் கிறுக்குத்தனமாக தனிமனித/சமுதாய கட்டுப்பாடுகளையும் களைய ஆரம்பித்தால் பின் மக்கள் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ வழிவகுத்துவிடும். எதிர்ப்பு வரும்போது, எதற்கெடுத்தாலும் ஜனநாயகப்போர்வைக்குள் ஓடி ஒளிந்துகொள்வது ஒரு நல்ல எழுத்தாளனுக்கு அழகல்ல. அவன் தான் எழுதுவதற்கு முழு பொறுப்பேற்கவேண்டும்-குறிப்பாக தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால். வரலாற்றின் புரட்சிகளைக்காணும்போது அதில் எழுத்தாளர்களுக்கு பெரும் பங்கு இருப்பது தெரியும். அதனால் தான் எழுத்தாளர்களுக்கு சமுதாயக் கடமைகள் இருப்பதாகக் கருதுகிறேன். இப்போதுள்ள வெகுஜன பத்திரிக்கைகளும், எழுத்தாளர்களும், இலக்கியவா(வியா)திகளும் இந்த சமுதாயக் கடமைகளை புறக்கணித்திருப்பது வேதனையானது.

மேற்கண்டவைகளே நான் உங்களுக்கு அனுப்பிய 4 மின்னஞ்சல்களின் சாரம். இதற்கு, ‘இப்படி விமர்சனம் எழுதாதீர்கள்; என்னை பைத்தியம் பிடிக்க செய்கிறீர்கள். எனக்கு கோபமாக வருகிறது. என்னால் எழுதமுடியவில்லை. என் எழுத்துக்குள் வர உங்களுக்கு உரிமையில்லை(! ?). மீண்டும் எழுதினால் போலீஸில் சொல்லிவிடுவேன். ‘ என்று சிறுபிள்ளைத்தனமாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தீர்கள். அந்த மின்னஞ்சலே உங்கள் இலக்கியத்திறனையும் புலமையையும்( ? ? ? ?) நன்கு விளக்கிவிட்டது. ஒரு சாதாரண/கடுமையான விமர்சனத்தைத் தாங்கும் பக்குவம் கூட இல்லாத நீங்கள் தமிழகத்திலேயே பெரும் இலக்கியவாதிபோல காட்டிக்கொள்வதும் பிற எழுத்தாளர்களை சாடுவதும் வேடிக்கையான அவலம். ‘விமர்சனம் அனுப்ப சொல்லி மின்னஞ்சல் முகவரி கொடுத்திருப்பது நீங்கள்தான். விமர்சனம் எழுதுகிறான் என்று சொல்லியெல்லாம் போலீஸிற்கு போகமுடியாது. தவறான கருத்துக்களை இனி எழுதாதீர்கள் ‘ என்று நான் பதில் அனுப்பியிருந்தேன். அதற்கு ஒரு சத்தமும் இல்லை. ஆனால் அடுத்த கோணல் பக்கத்தில் ‘ஒரு வாசகர் அரசியல் அறிக்கைகள் போல அபாசமாக தொடர்ந்து அஞ்சல் அனுப்புகிறார். இன்டர்போலுக்கு போய்விடுவேன் என்று ஒரு ‘இக்கு ‘ வைத்தேன் பிறகு சத்தத்தையே காணவில்லை ‘ என்று ஒரு மூட்டை பொய்யை அவிழுத்துவிட்டிருக்கிறீர். எப்படி ஐயா இப்படி கூசாமல் பொய் சொல்ல முடிகிறது ? விமர்சனம் எழுத வேண்டாம் என காலில் விழுந்து கெஞ்சிவிட்டு அந்தப்பக்கம் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் அழுங்காமல் பொய் சொல்வது. நீங்கள் எழுதுவது வெளியே வரும்; எங்கள் விளக்கங்கள் வெளியே வராது என்ற தைரியம். (வெகுஜன பத்திரிக்கையில் உள்ள உங்கள் நண்பர்கள் உங்களிடம் தெரிவிப்பதோடு சரி. வெளியிட மாட்டார்கள்!). அரசியல்வாதிகள் தோற்றார்கள் போங்கள். இதில் கோணல் பக்கங்களில் வருவது எல்லாம் முற்றிலுமான உண்மை என்று கூறியிருக்கிறீர்கள். அது எவ்வளவு பெரிய பொய்யாக இருக்கும் ? (முழு பூசணிக்காய் ?!). எதற்கெல்லாம் இண்டர்போலுக்கு போக வேண்டும் என்று கூட தெரியாத நீங்கள் ‘இக்கு ‘ வைத்து, நாங்கள் பயந்துவிட்டோமா. அடடா என்ன ஒரு நினைப்பு ? என் விமர்சனம் கடிமையாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இதில் ஆபாசம் என்ன இருக்கிறது என்று நீங்கள் கொஞ்சம் விளக்கினால் பரவாயில்லை. ஆபாசக் கடிதங்களாம். என்ன ஒரு நேர்மை. [உங்கள் மின்னஞ்சல்களும் என் மின்னஞ்சல்களுக்கு நகலும் பத்திரமாக இருக்கிறது. எனவே இப்படி நடக்கவேயில்லை என்று அடுத்த பொய்மூட்டையை அவிழ்க்க வேண்டாம்!].

நேர்மை என்றதும் உங்கள் மற்றொரு கோ.பக்கம் ஞாபகத்திற்கு வருகிறது. ‘வெளிநாடு வாழ் பெண்மணி ஒருவர் தங்களை சந்திக்க வந்ததாகவும், குடிக்காதீர்கள் என்று அறிவுரைக் கூறியதாகவும் (அவரிடம் ஒன்றும் சொல்லாமல்) அது உங்கள் சுதந்திரத்தையே பாதிக்கும் மோசமான செயல் ‘ என்றும் புலம்பியிருந்தீர்கள். அவர் என்னமோ உங்களுக்கு ஒழுக்கபோதனை செய்ய வந்துவிட்டதுபோல புலம்பல். வாசகி உங்கள் உடல் நலம் விரும்பி சொன்னதைக்கூட புரிந்துகொள்ள உங்களால் முடியவில்லை. ஒழுக்கமற்ற உங்கள் வாழ்வின் – மன உறுத்தலின் – தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடு. சதாரணமாக சொன்னதைக்கூட ஒழுக்க போதனையாக நினைப்பது. இப்படி போதிப்பது எனக்கு பிடிக்காது என்று நேரிடையாக சொல்லும் ஒரு சிறு நேர்மைகூட உங்களுக்கு இல்லை. (அவர் மனம் கஷ்டப்படும் அதனால் சொல்லவில்லை என்பதும் எடுபடாது. ஏனெனில் அவர் போனபின் முதுகில் பேசுவதுபோல கோணல் பக்கத்தில் எழுதியிருப்பது அதைவிட கஷ்டமாக இருந்திருக்கும்). கோணல் பக்கங்களில் நேர்மை அதிகமாக இருப்பதாக எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்றுவேறு பெருமையடித்துக்கொள்வது. சுயவாழ்வில் சிறு நேர்மை கூட இல்லாத உங்கள் எழுத்துக்களில் உள்ள நேர்மை குப்பைக்கு சமம். அதற்கு ஒரு மதிப்புமில்லை.

இந்த வாசகி போன்ற தமிழக அசடுகளைக்கண்டால் அழுவதா சிரிப்பதா எனத்தெரியவில்லை. இவரோ வெளிநாட்டில் வசிப்பவர். 2 வாரமோ 3 வாரமோ விடுமுறையில் சென்றிருப்பார். அதில் ஒருநாள் மெனக்கெட்டு சென்னை சென்று இப்படி கேவலமான மனிதர்களை சந்தித்து பின்னால் ஏச்சு வாங்குவது. தேவையா இது ?

குடிகாரன் என்று ஆபாசமாக கடிதம் அனுப்புகிறார்கள் என்று மூக்கால் அழுகிறீர். (குடிப்பது ஆபாசம் என்று எப்போதிருந்து கருத ஆரம்பித்தீர் ?). உங்கள் கோணல் பக்கங்களில் பாதிக்குமேல் நீங்கள் குடிப்பது பற்றி வருகிறது. அதையும் குடிப்பது ஏதோ யாருமே செய்யமுடியாத காரியம் போல பெருமையாக எழுதியிருக்கிறீர். நண்பர்களைப் பார்த்தால், வாசகர்களை சந்தித்தால் குடிப்பதுதான் வேலை. பிறகு குடிகாரணை குடிகாரன் என்று சொல்லாமல் தியாகி என்றா சொல்வார்கள் ?!

முன்னுக்குப்பின் முரணான உங்கள் எழுத்துக்களைப் பார்ப்போம். ‘பேப்பர் வாங்க கூட பணமில்லாமல் அமர்ந்திருந்தேன். என் (பள்ளி படிக்கும்) பையன் சேமிப்பிலிருந்து வாங்கி கொடுத்தான் ‘ என்று எழுதியிருக்கிறீர்கள். வெளியில் சென்றாலே ஆட்டோவில் தான் செல்வீர்கள். குடிப்பது எப்போதும் அயல்நாட்டு விஸ்கிதான். சாப்பிடுவது, காபி என்றால்கூட 5 நட்சத்திர ஓட்டலில் தான். ஆனால் எழுத பேப்பர் வாங்ககூட பணமில்லை!! ஒரு விஸ்கியின் விலை 1500 ரூபாய் என்று பெருமையாக எழுதுகிறீரே, ஒர் நாள் விஸ்கி குடிப்பதை நிறுத்தி 1500 ரூபாய்க்கு பேப்பர் வாங்கினால் ஒரு வருடத்திற்கு நீங்கள் உட்கார்ந்து எழுதாலாம். எழுதலாம்தான் ஆனால் நம்மால் குடிக்காமலிருக்க முடியாதே. இதை சொன்னால் ‘அறிவுரை சொல்கிறார்கள், சுதந்திரத்தில் தலையிடுகிறார்கள். குடிகாரன் என்று அபாசமாக ( ?!) எழுதுகிறார்கள் ‘. குடிப்பதை நாம் எதற்கு நிறுத்த வேண்டும் ? பையன் சேமிப்பு எப்படியோ போகட்டும்.

‘ஒரே ஒரு கதை எழுதிவிட்டு இறந்துவிட்டார் பெரியசாமி. அவரைப் போன்ற எழுத்தாளர்கள் உலகத்திலேயே கிடையாது. அவருக்கு உரிய அங்கீகாரத்தை தமிழகம் அவருக்கு வழங்கவில்லை ‘ என்று உளறுவது. பெரியசாமி யாரென்றே யாருக்கும் தெரியாது. எங்காவது கடலை மடித்த பேப்பரில் ஒரு கதை படித்துவிட்டு இப்படி பேச வேண்டும். ஒரு கதை எழுதியவர், அரைக்கதை எழுதியவர், எழுதலாமென்று நினைத்தவர், செத்துப் போனவர், இத்துப் போனவர் இவர்களையெல்லாம் அங்கீகாரம் செய்து, தலையில்வைத்துக் கொண்டு ஆடுவது தான் தமிழக மக்களுக்கு வேலை. அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கே கஷ்டப்படும் மக்களுக்கு இதைவிட வேறு வேலையே இல்லை பாருங்கள்.

‘நண்பரை சந்திக்க ‘பாரு ‘க்கு செல்லலாம் என நினைத்தேன். மழை வந்து கெடுத்துவிட்டது. மாடிவீட்டில் முந்திரி பருப்பைக் கொரித்துக்கொண்டு மழையை ரசித்து கவிதை எழுதுபவர்கள் மோசமானவர்கள். எத்தனை பேர்கள் ஓட்டை வீட்டில் ஈரத்தில் கஷ்டப்படுகிறார்கள். மழையைப் போல மோசமானது வேரில்லை ‘ என்கிறது உங்கள் கோ.ப. இதைவிட மோசமான சிந்தனையை நான் பார்த்ததேயில்லை. அதுவும் சென்னையில் இருந்து கொண்டு! நிலத்தடி நீரைக் காணவேயில்லை. சில வருடங்களில் தமிழகமே பாலைவனமாகிவிடும் அபாயம் இருப்பதாக அறிவியலாளர்கள் பயப்படுகிறார்கள். சென்னையில் கும்பிக் கழுவக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை. குடிக்கவே இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. தஞ்சையில் விவசாயிகள் பட்டினியால் தற்கொலை செய்துகொண்டு சாகிறார்கள். இந்த நிலையில் மழையைப்போல மோசமானது இல்லையாம். இதற்கு ஜால்ரா போடும் வாசகர் கடிதம் வேறு. வெளியில் சென்றால் கால் நனைந்துவிடுமாம். இவர் ‘தண்ணி ‘ அடிக்கப் போவது தடுக்கப்பட்டுவிட்டதல்லவா ?! என்ன ஒரு சிந்தனாவாதி ? மற்ற கவிஞர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் வேறு. மழையைப் போல அற்புதமான நிகழ்வும் தேவையானதும் வேறில்லை. மக்களை ஓட்டை வீட்டிலேயே வைத்திருக்கும் அரசியல்வாதிகளையும், அரசியல் அமைப்பையும் சாடினாலாவது ஒரு நியாயம் உண்டு.

‘நான் ஏழையில்லை. நான் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் படித்திருக்கிறேன். நான் பில் கேட்ஸ்-ஐவிட பணக்காரன் ‘ என்று நீங்கள் எழுதியிருப்பது உளறலின் – தற்புகழ்ச்சியின் உச்சம். ஆயிரமாயிரம் புத்தகம் படித்தவர் 2 சிறு பழமொழிகளைப் படிக்கவில்லை போலிருக்கிறது. ‘கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு ‘. ஒளவையார் போன்ற நிறை குடங்களுக்கு வரும் பணிவு. உம்மைப்போன்ற அரைவேக்காடுகளுக்கு வராதது வியப்பில்லை. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது ‘. நீர் எத்தனை புத்தகங்கள் படித்தாலும் யாருக்கு என்ன உபயோகம் ? உலகிலேயே பெரிய மென்பொருள் கம்பெனி வைத்து ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கும் பில் கேட்ஸைவிட இவர் பெரியவராம். பணக்காரராம். நினப்புதான் பொழப்பக் கெடுத்துச்சாம்!! பில் கேட்ஸை ஏனய்யா கேவலப்படுத்துகிறீர் ?!

‘ஞான பீட குழுவில் இருக்கும் சிலபேர் என் பெயரை சொன்னாலே பயப்படுகிறார்கள் ‘ என்று பெருமையாக (!) சொல்லிக்கொள்கிறீரே. உங்கள் புலமையைப் பார்த்து அவர்கள் பயப்படுவதாக நினைத்திருப்பீரே ?! ஒரு சிறுகதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. சேற்றில் விழுந்த பன்றியும் குளித்துவிட்டு கோவிலுக்கு போகும் யானையும் ஒரு சிறு பாலத்தில் சந்தித்துக் கொண்டதாம். சேறு மேலே படுமே என்று யானை ஒதுங்கி வழிவிட்டதாம். ‘என் பலத்தைப் பார்த்து பயந்து யானை ஒதுங்கிவிட்டது ‘ என்று பன்றி நினைத்துக்கொண்டு பீற்றிக்கொண்டதாம். உங்களைக் கண்டு அவர்கள் விலகுவது ‘துஷ்டாரைக் கண்டால் தூர விலகு ‘ என்ற பழமொழிக்கேற்ப. உங்களுக்கோ சுயக்கட்டுப்பாடு, நேர்மை ஏதுமில்லை; பண்பு ? ‘மூச் யாருகிட்ட என்ன பேசுற ? ‘ என்பீர். ஒழுக்கம் ? ‘கிலோ என்ன விலைனு சொல்லுங்க மணி கிட்ட சொல்லி(! ?) வாங்கிடலாம் ‘ என்பீர். படிப்பது பொழுதுபோக்கு, குடிப்பது வேலை. எழுதுவது தற்புகழ்ச்சிக்கு. பண்புள்ளவர்கள் உங்களைக் கண்டு விலகிப்போவதில் என்ன வியப்பிருக்கிறது. இருபத்தியைந்து லட்சத்திற்கு ஒரு தம்மடி குறைந்தால் கூட ஞாடபீட பரிசை வாங்கிக் கொள்ள மாட்டாராம். யாரோ கூப்பிட்டுக் கொடுப்பதுபோல.

சில நாட்களுக்கு முன் ஒரு இணைய தளத்தில் விரைவாக நவீன இலக்கியவாதியாகப் புகழ்பெறுவது எப்படி என்று ஒரு நையாண்டிக் கட்டுரைப் படித்தேன். அதைப்படிக்கப் படிக்க நீங்கள் அப்படியே அதற்குப் பொருந்தினீர்கள். அந்தக் கட்டரைப்படி..

1. முதலில் எழுதத்தெரிகிறதோ இல்லையோ எதாவது ஒரு குழுவில் (இப்பொது இலக்கிய உலகில் அரசியலைவிடக் குழுக்கள் அதிகம்) இணைந்துவிட வேண்டும்.. மற்றக் குழுக்களைத் தாக்கி எழுதவேண்டும்.

– இது அப்படியே உங்களுக்கு பொருந்தும். அவரைக் கண்டால் முகத்தைத் திருப்பிக்கொள்வேன். இவரோடு பேசவே மாட்டேன் என்று அருமையான் ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

2. ‘கலைஞர் ஒரு இலக்கியவாதியே அல்ல; ஜெயகாந்தனுக்கு எழுதவே தெரியாது; இளையராஜாவின் இசை இசையே அல்ல ‘ என்று சம்பந்தமில்லாமல் அவ்வப்போது குண்டு போட்டுக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மறக்காமலிருப்பார்கள்.

– இதுவும் உங்களைப்போல பலருக்குப் பொருந்தும்.

3. விமர்சனங்களுக்கு பதில் எழுதக்கூடாது. அதுதான் என் வேலையா எனக் கேட்க வேண்டும். ஆனால் மறக்காமல் பாராட்டிவரும் விமர்சன ஜால்ராக்களை பெரிய எழுத்தில் வெளியிடவேண்டும். – இதைப்பற்றி விரிவாகப் பார்த்துவிட்டோம்.

4. அதையும் மீறி விமர்சனம் எழுதினால், ‘என் திறமையையும் புகழையும் பார்த்து பொறுக்காமல் பொறாமையினால் இப்படி விமர்சனம் எழுதுகிறார்கள் ‘ என்று அடிக்கடி சொல்ல வேண்டும். இதனால் பண்புள்ளவர்களும், நல்லவர்களும் ‘பொறாமைக்காரன் ‘ பெயர் வந்துவிடுமென்று பயந்து சும்மா இருந்துவிடுவார்கள் !

– இது அப்படியே உங்களுக்குப் பொருந்தும். வெகுஜனப் பத்திரிக்கையில் எழுதி பெயர் வாங்குவது மக்களுக்குப் பொறுக்கவில்லை. என தமிழ் நண்டுக் கதை கூறியிருப்பது.

5. எப்போது எது எழுதினாலும், பேசினாலும் 4 அயல் நாட்டு எழுத்தாளர்கள் பெயரை மறக்காமல் குறிப்பிடவேண்டும். அவர்களுடன் தம்மை ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும். தவறியும் தமிழகத்தில் யாரையும் புகழ்ந்து பேசிவிடக்கூடாது. – இது பற்றியும் விரிவாகப் பார்த்துவிட்டோம்.

நன்றாக யோசித்துப் பார்த்தால் கோணல்கள் உங்கள் பக்கங்களிலில்லை என்று தெரிகிறது.

இப்போது கலை, இலக்கிய, அரசியலில் கடுமையான விமர்சனங்கள் அற்றுப் போய்விட்டன. அதனாலேயே மானங்கெட்ட அரசியல்வாதிகளும், தகுதியற்ற அரைவேக்காட்டு இலக்கியவாதிகளும், தரங்கெட்ட அசிங்கமான படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. பூனைக்கு மணி கட்ட எல்லோரும் பயந்துகொண்டிருக்கிறார்கள். இந்த கட்டுரை கடுமையான விமர்சனங்களை முன்வைக்க மக்களை அழைக்கும் ஒரு முதல் அ(ப)டியாக இருக்குமென்று நம்புகிறேன்.

வாழ்க தமிழ்.

நாடோடி.

Naadodi Palanichami to_writers@yahoo.com

Series Navigation

author

நாடோடி.

நாடோடி.

Similar Posts