குறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


சமீபத்தில் மருந்துகளும்,உரிமங்களும் குறித்த ஒரு முடிவிற்கு உலக வர்த்தக அமைப்பில் (உ.வ.அ) உள்ள நாடுகள் வந்துள்ளன. 2001 ல் தோஹா கூட்டறிக்கையின் ஆறாவது பத்தியில் உள்ளதை நடைமுறைப்படுத்துவது குறித்த பிரச்னையில் உடன்பாடு எழவில்லை.பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. காகுன் மாநாடு வெற்றி பெறுமோ இல்லையோ இம்முடிவு உ.வ.அ மனிதாபின கண்ணோட்டத்துடன் இப்பிரச்சினக்கு தீர்வுகண்டுள்ளது என்று கூறுவதற்கு வாய்ப்பளிக்கிறது. ஆனால் இது வளர்முக நாடுகளுக்கு பெரும் வெற்றியல்ல.அவை முன்வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது, நிபந்தனைகளுடன்.இந்த நிபந்தனகள் வறிய நாடுகள் இந்தியா,பிரேசில் போன்ற நாடுகளிடமிருந்து மருந்துகள் வாங்குவதை இன்னும் எளிதாக்கவில்லை. மாறாக கடினமாக்குகிறது. குறிப்பிட்ட மூன்று நோய்களுக்கு மட்டுமே கட்டாய பயன்படுத்துஅனுமதியை (compulsory licensing) உபயோகிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் வாதம் நிராகரிக்கப்பட்டது.அந்த அளவில் இது வளர்முக நாடுகளுக்கு வெற்றிதான். அதே சமயம் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் காரணமாக generic producers அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும்- உற்பத்தியை அதிகரிக்க அல்ல.மாறாக மருந்துகளின் நிறம்,பாக்கிங் போன்றவற்றிகாக.

அறிவுசார் சொத்துரிமைகள் காரணமாக AIDS போன்ற நோய்களுக்கு மருந்துகள் கட்டுப்படியாகக் கூடிய விலையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கிடைப்பதில்லை, எனவே அவை தமக்கு தேவையான மருந்துகளை அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த உ.வ.அ விதிகளை தளர்த்தக்கோரி இயக்கம் நடத்தும் அமைப்புகள் (oxfam,msf) இவ்வொப்பந்தம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளன.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது சரியான தீர்வல்ல.மாறாக TRIPS ன் சில விதிகளை பொருத்தமான வகையில் பொருள்கொள்ள அனுமதிப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும்.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் TRIPS உரிமம்(பேடண்ட்) உள்ளோர் உரிமைகளை வலுப்படுத்துகிறது. இதன் 30 வது ஷரத்தை தாரளமாக பொருள்கொள்ள அனுமதிப்பது ஒரு தீர்வு. இதன் மூலம் வேறு சில பிரிவுகளால் கட்டாய பயன்படுத்துஅனுமதியை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சில தடைகளை நீக்க முடியும்.

கட்டாய பயன்படுத்துஅனுமதி- உரிமம் பெற்றவரின் உரிமத்தை பொது நலனுக்காக அரசு/அரசு அனுமதி பெற்ற அமைப்பு பயன்படுத்துவது.உதாரணமாக உயிர்காக்கும் மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டி பொது சுகாதரம் காக்க ஒரு தொத்து நோய் பரவும் போது அரசு அதற்கான மருந்து குறித்த உரிமத்தை பிற நிறுவனங்கள் பயன்படுத்த வகை செய்யலாம். அரசு இதற்கென உரிமத்தின் உரிமையாளர்/பயானளியின் அனுமதியின்றி கூட இதைச் செய்யலாம். இது பல நாடுகளில் பல முறை செய்யப்பட்ட ஒன்று.generic producers -, உரிமங்கள் உள்ள மருந்துகளிற்கு சமமான மருந்துகளை மலிவான விலையில் தயாரித்து விநியோகிப்போர்.உதாரணமாக AIDS நோய்க்கு அமெரிக்க நிறுவனங்கள் $10000 க்கு விற்கும் மருந்துகளுக்கு சமமான மருந்துகளை இந்திய நிறுவனங்கள் $300 க்கும், அதற்கும் குறைவாக விற்கின்றன.இவை generic producers.இது சாத்தியாமாக ஒரு முக்கிய காரணம் இந்திய உரிமச் சட்டம் மருந்துப்பொருள்களின் மீதான உரிமத்தை (patent on product) வழங்குவதில்லை, மாறாக செய்முறை மீதான உரிமத்தினை (patent on process) வழங்குகிறது.2005 ல் இது முற்றிலுமாக மாறிவிடும்

மேலும் அறிவுசார் சொத்துரிமைகள் பிரச்சினையின் ஒரு பரிமாணம்தான். AIDS நோய் தவிர்ப்பு,சிகிச்சைக்கு சர்வதேச அளவில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு அது சரியான முறையில் செலவு செய்யப்பட்டால்தான் ஒரளவேனும் அதன் மோசமான தாக்கங்கள் தவிர்க்கப்படும்.இது போன்றவற்றை விரிவாக எழுத முடியாத போது சற்று எளிமைப்படுத்திதான் எழுத வேண்டியுள்ளது.இது ஒரு குறிப்புதான், முழுமையான விளக்கமல்ல. TRIPS – Trade Related Intellectual Property Rights


இந்தியாவில் ஊடகங்களில் அந்நிய முதலீடு குறித்து விவாதம் உள்ளது.சமீபத்தில் ஸ்டார் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதி,அதன் முதலீட்டு

முறைகள் குறித்த செய்திகளை நீங்கள் அறிந்திருக்ககூடும்.

உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக,சேவைத்துறை தாரளமயமாக்கல் குறித்த பேச்சுவார்த்தைகளில் தகவல் தொடர்பு,ஒலிபரப்பு,ஒளிபரப்பு,திரைப்படங்கள் (Communications and Audiovisual Services) குறித்த விதிகள் தளர்த்தப்பட வேண்டும் எனவும்,இது குறித்த வர்த்தகம்-சேவை விதிகள் தாரளமயமாக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா கோரவுள்ளது.இதன் படி வர்த்தக்த்திற்கான தடைகள் தளர்த்தப்பட வேண்டும் என்ற பெயரில் அரசுகள் சந்தைசக்திகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.வர்த்தக்த்தடை என்ற பெயரில் பொதுநலனுக்கான தொலைக்காட்சி சேவைக்கு அரசின் ஆதரவு, ஊடகங்களில் உரிமை குறித்த விதிகள்,திரைப்படம் மற்றும் பிறதுறைகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட வேண்டும்/நீக்கப்பட வேண்டும் என்று கோர இது வழிவகுக்கும். இப்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஊடக உரிமை குறித்த சட்டங்கள் ஒரே குழுமம் பல ஊடகங்களில் (தொலைக்காட்சி,வானொலி,செய்தித்தாள்,பத்திரிகை போன்றவை) ஏகபோக நிலையினை அடைய தடையாக உள்ளன.சட்ட விதிகள் தளர்த்தப்பட்டபின்னும் கூட பல தடைகள் உள்ளன.

கனடாவும், பிரான்சும் கலாச்சார விதிவிலக்கு என்ற பெயரில் தங்கள் நாடுகளில் உள்ள திரைப்படத்துறை, ஊடகங்கள் அமெரிக்காவின் கலாச்சாரத்தொழில்துறை(ஹாலிவுட்,அமெரிக்க பத்திரிகைகள்,ஊடகங்கள்) யின் தாக்குதலை எதிர்கொள்ள உதவுகின்றன.அமெரிக்கா பிற நாடுகளில் உள்ள சந்தையை ஹாலிவுட் படத்தயாரிப்பாளர் நலனுக்காக திறந்து விட வேண்டும், படங்கள் திரையிடுவது குறித்த விதிகளை மாற்ற வேண்டும் எனக் கோருவதுடன், தேவையானால் SUPER 301, SPECIAL 301 விதிகளை அமுல்செய்வோம் எனவும் எச்சரித்தது.1992 ல் ECONOMIC TIMES ல் நான் எழுதிய ANOTHER VICTORY FOR CULTURAL EXPANSIONISM என்ற கட்டுரையில் இது குறித்து எழுதியிருக்கிறேன். சில வாரங்களுக்குமுன் ECONOMIC AND POLITICAL WEEKLY ல் பிரதீப் தாமஸ் எழுதியுள்ள கட்டுரை கலாச்சாரத்துறையில் சர்வதேச வணிகம், அறிவு சார் சொத்துரிமைகள், இந்தியாவில் உள்ள நிலை குறித்து விரிவாகக் கூறுகிறது.இதனை வாசகர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மேலும் விபரமறிய

http://www.mediareform.net/global

கலாச்சாரம்,பண்பாடு இவற்றை சந்தைச்சக்திகள் தீர்மானிக்கவிட்டால் என்ன ஆகும்.கோலிவுட்டை விழுங்க ஹாலிவுட் முயலும், FOX TV போன்றவை உலகெங்கும் ஒரே செய்தியைச் சொல்லும், பிரசார் பாரதி, தூர்தர்ஷ்ன்=இறந்த காலம் என்றாகும்.


மார்கெரெட மிட்சல் எழுதிய Gone With The Wind 1935 ல் வெளியானது, உலகில் மிக அதிகமாக விற்பனையான நாவல்களில் இதுவும் ஒன்று.பதிப்புரிமைக்காலம் நீட்டிக்கப்படாதிருந்தால் 1980 களில் இது பொதுக்களனுக்கு வந்திருக்கும்.1998 ல் அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றிய சட்டத்திருத்த்தின் படி பதிப்புரிமைக்காலம் ஆசிரியர் ஆயுள்,அப்புறம் 70 ஆண்டுகள் என நீட்டிக்கப்பட்டது.இதன் விளைவாக இது போன்ற பல நூல்கள், பாடல்கள், மிக்கி மெளஸ் போன்றவை பொதுக்களனின் பகுதியாவது பல ஆண்டுகள் தள்ளிப்போனது. Happy Birthday To You என்ற பாடலும் இன்று பதிப்புரிமையில் உள்ளது.

அலைஸ் ராண்ட்ல The Wind Done Gone என்ற நாவலில் Gone With The Wind கதையை வேறோரு கோணத்தில் காட்ட விரும்பினார். ஒரே கதையை உயர்சாதி கண்ணோட்டத்தில் எழுதலாம், தலித் கண்னோட்டத்திலும் எழுதலாம்.அது போல் அவர் எழுதிய நாவல் பதிப்புரிமையை மீறுகிறது என மிட்செல்லின் வாரிசுகள் சார்பில் வாதிடப்பட்டு இடைக்காலத் தடையும் பெறப்பட்டது.பின் மேல் முறையீட்டில் ராண்டல் எழுதியது பகடி எனவே நியாயமான பயன்பாடு (fair use) என்று வாதிடப்பட்டு தடை நீக்கப்பட்டது. தமிழில் இன்று புதுமைப்பித்தன், க.நா.சு, பிச்சமூர்த்தி உட்பட பலரின் படைப்புகள் நாட்டுமையாக்கப்பட்டதால் பொதுக்களனில் உள்ளன.அமெரிக்காவில் அரசு இப்படி நாட்டுமையாக்குவதாகத் தெரியவில்லை. இப்போது பொய்த்தேவை பகடி செய்து தெய்வமும் பொய்,பொய்யும் தெய்வம் என்று ஒரு நாவல் எழுதமுடியும், வெளியிட முடியும் யார் அனுமதியுமின்றி. நாட்டுரிமையாக்கப்பட்டாத போது அத்தகைய முயற்சியை எதிர்த்து க.நா.சு வின் வாரிசுகள்/பதிப்புரிமை உரிமையாளர் நீதிமன்றத்தில் தடை பெற முயலலாம்.அத்தகைய முயற்சிகள் வெற்றி அடைய வேண்டுமென அவசியமில்லை, ஆனால் முதலில் இடைக்காலத் தடை பெற்றால் கூட அதை நீக்காமல் தெய்வமும் பொய்,பொய்யும் தெய்வம் என்று நாவல் வெளியிடமுடியாது. சட்ட ரீதியான சிக்கல் வர சாத்தியக்கூறு உள்ளது என்பதே ஒரு படைப்பாளி,பதிப்பகத்தாரை மிகவும் யோசிக்க வைக்கும்.

மேற்கூறிய மிட்செல்லின் நாவல் ஒரு உதாரணம்.இது போன்ற பல உதாரணங்களை நடனம், நாவல், போன்ற பலவற்றில் காட்டலாம். பதிப்புரிமை கருத்துச் சுதந்திரத்திற்கு தடையாக உள்ளது என்பதற்காக பதிப்புரிமையை நீக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. மாறாக பதிப்புரிமைக்காலம், பதிப்புரிமையின் வரையரைகளில் மாற்றம் தேவை என்கிறேன்.இன்று அமெரிக்கா, ஐரோப்பாவில் மேற்கூறியவை குறித்து ஒரு பரந்த விவாதம் நடைபெறுகிறது.பதிப்புரிமைக்கான மாற்றுகள் குறித்தும் ஆராயப்படுகிறது. நான் பெரிதும் மதிக்கும் பல பேராசிரியர்கள் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார்கள்.மேலும் இணையம், பதிப்புரிமை குறித்தும் விவாதம் உள்ளது. நியாயமான பயன்பாடு,பொதுக்களன் இவை குறித்து சட்டத்துறையிலும், பிற துறைகளிலும் விரிவான ஆய்வுகள் உள்ளன.துரதிருஷ்டவசமாக தமிழில் பதிப்புரிமை குறித்த விவாதங்கள் எழுப்பப்ப்டும் பிரச்சினையை ஒட்டியே பார்க்கப்படுகின்றன, அது திரைப்படமாக இருந்தாலும் சரி, புதுமைப்பித்தன் படைப்புகள் மீதான சர்ச்சையாக இருந்தாலும் சரி.பூசாரிகள் தலபுராணங்களை வைத்து பிழைப்பு நடத்தும் போது அது குறித்த வரலாற்றியல் கேள்விகளை எழுப்புவது அவர்களுக்கு உவப்பானதாக இராதுதானே ?.


இந்த வாரக்குறிப்புகளில் அறிவுசார் சொத்துரிமை முக்கிய இடம் பெறக்காரணம் அதன் பன்முக பரிமாணங்களை, முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டத்தான். சில மாதங்களுக்குப் பின் இது குறித்து விரிவாக, தொடர்கட்டுரையாக எழுத எண்ணம்.இலக்கியம் முதல் கணிணி வரை இதன் தாக்கம் பல துறைகளில் இன்று உள்ளது.பதிப்புரிமையின் விரிவாக்கம் குறித்து கல்வித்துறையினர் அக்கரை காட்டுகின்றனர்,அஞ்சுகிறார்கள் என்றே சொல்லலாம்..நூலகர்கள் பதிப்புரிமை நூலகங்களின் செயல்பாடினைப் பாதிக்குமா என விவாதிக்கிறார்கள்.உரிமங்கள் அறிவியல் வளர்ச்சியைப் பாதிக்குமா என்று ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.எனவே இது குறித்த ஒரு குறைந்த பட்சப் புரிதல் இன்று அவசியம். தமிழ் லினக்ஸ் வெங்கடரமணனின் வலைப்பூக்களில் உள்ள குறிப்புகளையும் படியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். மைக்ரோசாப்ட் என்ன செய்தால் என்ன, c#,visual C++, போன்றவை நான் தொழில் செய்து பிழைக்க, டாலரில் சம்பாதிக்க உதவுகின்றன, அது போதும் என்று கருதுவோரும் உளர். வெங்கட் போன்றவர்கள் இதற்கு மாறான நிலைப்பாடு எடுப்பது வரவேற்கத்தக்கது.

http://www.tamillinux.org/venkat/myblog/

கீழ்கண்ட இணையத்தளத்தையும் காண்க

http://www.wacc.org.uk/publications/md/md2003-1/contents.html

**

ravisrinivas@rediffmail.com

Series Navigation