கீறல்பட்ட முகங்கள்

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

தீபச்செல்வன்


உங்கள் கொடிகள்
உயரவே பறக்கிறது
உங்கள்
குரலும் முகமும்
எங்களை கீறீ
நிறையவே வலிமையை
சாதித்துவிட்டது.

குண்டுகளால் காயப்பட்ட
எமது முகங்கள்
மறைக்கப்பட்டிருக்கின்றன
அலறிவிடாமல்
காயங்கள் நசுக்கி
மருந்திடப்பட்டிருக்கின்றன.

நாங்கள் மறைந்திருந்தபடி
மிக தொலைவிலிருந்தே
பேசுகிறோம்
குருதி பீறிட
உங்கள் நகங்களால்
கீறப்பட்ட
எமது முகங்களை
நீங்கள் விரும்பியபடி
யாரும் பார்க்கமுடியாது.

அதனால் தொடர்ந்தும்
நீங்கள் எல்லோரும்
விமானங்களையும்
குண்டுகளையும்
எறிகணைகளையும்
உற்பத்திசெய்யுங்கள்.

எமது முகங்களில்
நீங்கள் செய்த
விஞ்ஞானங்களை
எறிந்து காயப்படுத்தி
சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

எங்கள் முகங்களுக்காகவே
இன்னும் புதியவைகளை
சிந்தனை செய்தும்
பரிமாறுங்கள்.

உங்கள் சாதனைகளின்
ஒளிப்பதிவுகள்
இதோ வருகிறது
உலகம் முழுவதிலும்
முக்கியமாக
காண்பிக்கப்படுகிறது.

உங்கள் உற்பத்தி
குறித்தே எல்லோராலும்
பேசப்படுகிறது
திருப்தியுடன் கைகளைப் பரிமாறி
அதிகாரங்களைப் பகிர்ந்து
புன்னகைத்து
உயர்த்திப் பேசுங்கள்.

மறைக்கப்பட்ட எமது
முகங்களின் கீறல்களிலும்
நசுக்கப்பட்ட எமது குரல்களின்
முனகல்களிலும்
உங்கள் வல்லமை பொருந்திய
கொடிகளை
உயரப்பறக்கவிடுங்கள்.


(இந்தக்கவிதை 11.08.2006 அன்று போர் வெடித்த தருணத்தில் எழுதப்பட்டது. சமாதானம் அன்று ஏ9 பாதையை முறித்தபடி இருந்த உயிரும் இழக்கிறது. கிழக்கில் தொடங்கிய போர் அன்றிலிருந்து வடக்கிலும் பரவத் தொடங்கியது. )
deebachelvan@gmail.com

Series Navigation