வாணவேடிக்கைகளூம், உள்ளிடுங்கிய அறைகளும்

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

சுப்ரபாரதிமணியன்


சென்றாண்டில் இந்தியாவில் நடைபெற்ற இரண்டு முக்கியமான சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பரிசுகளைப் பெற்ற ஈரானியப் படம்:: பயர்வொர்க்ஸ் வெட்னஸ்டே…” (சர்வதேச திரைப்பட விழக்கள்: கோவா திருவனந்தபுரம்). இப்படமும், இவ்வாண்டில் வெளியாகியிருக்கும் தஹ்மினா மிலானி என்ற பெண் இயக்குனரின் ‘žஸ்பயர்’ என்ற ஈரானிய படமும் ஈரானிய திரைப்பட வரலாற்றில் பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் பற்றின அக்கறையையும், அவை நெடும்தூரம் கடந்து வந்திருப்பதையும் காட்டுகின்றன.
ஈரானிய படங்களில் வீடுகளும், வீடுகளின் உள்ளமைப்புகள், உள்ளறைகள் போன்றவை தவிர்க்கப்பட்டு வெளிப்புற காட்சிகள், மணல்வெளிகள், வீதிகள், காடுகளின் பின்னணியில் சம்பவங்கள் நிகழ்வது காட்டப்படுவது சாதாரணமானதாக வெகு ஆண்டுகளாக அமைந்திருக்கிறது.
வீடுகளும், வீடுகளுக்குள்ளுமான காட்சி அமைப்புகளில் பெண்கள், அவர்களின் நடவடிக்கைகள் காட்டப்படுவது தவிர்க்கவியலாததாகிவிடும். ஆண், பெண் நெருக்கம், தொடுகை, அவர்களின் வீட்டிற்குள்ளான உரையாடல் என்பவை ஈரானிய மத அடிப்படையிலான ஒழுக்கம் சார்ந்த பல கேள்விகளை எழுப்பும். அவை பல ஆண்டுகளாக தடைசெய்யப்பட்ட விடயங்களாக ஈரானில் நிகழ்ந்து வருகின்றன.
1970ல் ‘தி கௌ’ என்றபடம் வெளியானபோது ஈரானிய அதிபர் கொமேனி திரைப்படம் குறித்து ஒரு சட்டம் இயற்றினார். பெண்களது தலைமுடியை படத்தில்காட்டக்கூடாது, காதல் மற்றும் காமத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் இருக்கக்கூடாது, ஆண், பெண் மத்தியிலான எந்தவித தொடுகை பற்றினக் காட்சிகளும் இருக்கக்கூடாது என்பதை கொமேனி வலியுறுத்தினார். இக்கட்டுப்பாடுகளை முன்வைத்து திரைப்படங்களை இயக்க கற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.
புகழ்பெற்ற இயக்குனரான அப்பாய் கியாரஸ்டமியின் ‘டேஸ்ட் ஆப் செர்ரி’ படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை. ‘கப்பா’ படத்தில் காதல் வயப்படும் பெண்ணின் முகம் காண்பிக்கப்படுவதில்லை. ’20 பிங்கர்ஸ்’ என்ற படத்தில் இருட்டில் காண்பிக்கப்படும் வெளிப்படையில்லாத பாலுறவு காட்சியும்,இரத்தபோக்கு குறித்த குறிப்புகளைக் கொண்ட வசனக்குறிப்புகளும் காரணம் காட்டப்பட்டு ஈரானில் திரையிட தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்கள் ஒரு பெண் அல்லது இரண்டு பெண்கள் ஒரு ஆண் என்ற ரீதியிலான முக்கோணக் காதல் கதைகளைக் கொண்ட ‘எ டைம் டு லிவ்’, ‘நர்கீஸ்’ போன்ற படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாவில் பரிசுகளைப் பெற்றிருந்தாலும் ஈரானில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டன. ஒரு படத்தில் ஒரு நடிகைக்கு மேக்கப் போடுவதற்காக ஒரு ஆண் நியமிக்கப்படுகிறார். ஆனால் அந்தப் பெண்ணை மேக்கப்பிற்காகவும் தொட அந்நாட்டு சட்டம் அனுமதியளிக்கவில்லை. அந்த நடிகையின் ஆறு வயது பெண் குழந்தையை தற்காலிகமாக மனச் சடங்குகளில் உட்படுத்தி, அந்த நடிகை ரத்த சொந்தம் என்ற வகையில் மாமியார் என்ற மதரீதியான பந்தத்தை உண்டாக்கி அந்த ஆண் மேக்கப் போடுபவராக அனுமதிக்கப்பட்டார். கொமேனியின் புரட்சிக் காலத்தில் திரைப்படம் ஒழுக்கமில்லாத கலையாகப் பார்க்கப்பட்டு திரைப்படக் கலைஞர்களின் வாழ்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. ஈரானில் இருநூறு திரைப்பட அரங்குகள் தீயிடப்பட்டுக் கொளுத்தப்பட்டன. அறுநூறு பார்வையாளர்கள் தீயில் கருகி செத்தனர். கொமேனியின் வேத வாக்குகளும், ஷருயாத் விதிகளும் தணிக்கை விதிகள் என்றாகின.
அரசு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ஈரானிய புதிய திரைப்படங்களில் பெண்களை மையமாக் கொண்ட படங்கள் வெளிவர வழி வகுத்தது. அப்பாஸ் கியரஸ்டமியின் ‘டென்’ (பல்வேறு பெண்களின் மன அவஸ்தைகள், விவாகரத்து பிரச்சனைகள், குடும்பத்திலிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தங்கள்) ஜாபர் பனாஹ’யின் ‘தி சர்க்கில்’ (சிறையிலிருந்து வெளிவரும் ஒரு பெண் வீட்டில் சேர்க்கப்படாதபோது தெருவில் அலைகிறாள்: விவாகரத்து கோரும் சமயத்தில் கர்ப்பமாகும் பெண்ணொருத்தி கருக்கலைப்புக்கென அலைகிறாள். தன் குழந்தையை ஒரு வீதியில் விட்டுச் செல்கிறாள் ஒருத்தி:: கார் ஒட்டுபவனுடன் ஒருத்தி விபச்சாரத்திற்கு முயல்கிறாள்), தஹ்மினா மிலானியின் “டூ உமன் ‘ ( தோழிகளான இரு பெண்களின் மாறுபட்ட வாழ்க்கை). இவரின் ” பிப்த் ரியாக்சன்” ( கணவன் விபத்தில் இறந்த பின்னால் தன் தாய் வீட்டிற்குத் துரத்தப்படும் பெண், தன் குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ளப் போராடவேண்டியிருக்கிறது) போன்றவை குறிப்பிடத்தக்கப் படங்களாக பெண்களை மையமாக வைத்து சமீப ஆண்டுகளில் வெளியாகியிருக்கின்றன.
இவ்வகையில் இவ்வாண்டில் வந்திருக்கும் இரு படங்கள்: ஆஸ்கார் பர்ஹாதியின் “பயர் ஒர்க்ஸ் வெட்னஸ்டே”, தஹ்மினா மிலானியின் ” žஸ்பயர் ‘ ஈரானியப் பெண்கள் பற்றின வெளிப்பாடுகளைக் கொண்டிருப்பவை.
ஆஸ்கார் பர்ஹாதியின் இயக்கத்திலான படத்தில் இளம் பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. கல்யாணம் பற்றின கனவுகளுடன் இருக்கிறாள். புத்தாண்டையொட்டி ஒரு வீட்டை சுத்தம் செய்யும் வேலைக்கு ஒரு நாள் போக வேண்டியிருக்கிறது. மத்திய தர குடும்பம். கணவன், மனைவி. மனைவி வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுகிறாள். ஆனால் பக்கத்து வீட்டிற்கு வரும் அழைப்புகளை ஓட்டுக் கேட்கிறாள். தன் வீட்டுக்கு வரும் அழைப்புகளில் பக்கத்து வீட்டுப் பெண்ணின் தொலைபேசி எண்ணும் இருக்கிறது. கணவன் மீது இருக்கும் சந்தேகம் வலுக்கிறது. வேலைக்காரப் பெண்ணிற்கு சுத்தம் செய்யும் வேலையை கொடுத்துவிட்டு கணவனின் அலுவலகத்திற்கு சென்று வேவு பார்க்கிறாள். கணவனிடம் அதனால் அடிபடுகிறாள். மனைவி வீட்டைவிட்டுப் போக ஆயத்தமாகிறாள். அடுத்த நாள்காலை குடும்பத்துடன் வெளிநாடு செல்ல விமானப் பயணத்திற்கு žட்டு எடுத்தாகிவிட்டது. சமாதானம் பெருமூச்சு விட வைக்கிறது. குழந்தைக்கு புத்தாண்டு வாண வேடிக்கை காட்ட கூட்டிவரும் கணவன் பக்கத்து வீட்டுப் பெண்ணை தனிமையில் சந்திக்கிறாண். ஆனால் அழகு நிலையத்தை வீட்டிலேயே நடத்தும் கணவன் இல்லாத அவள் இந்த உறவு போதும்,பிரிந்துவிடலாம் என்கிறாள். அது தவிர்க்க இயலாதது. உன் குடும்பம் சிதறாமல் இருக்க ஏதுவாக இருக்கும் என்கிறாள். காதலி, மனைவி, குடும்பம் என்ற அலைக்கழிப்பு. இரவு குழந்தைக்கு புத்தாண்டு வாண வேடிக்கையை காட்டிவிட்டு வேலைக்காரப் பெண்ணை அவனது காதலனிடம் விட்டுவிட்டு வருகிறான். வேலைக்காரப்பெண்ணின்
ஒருநாள் வாழ்க்கையில், திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் அவளின் குதூகலத்தின் ஊடாக, இருபெண்களின் வாழ்க்கையைப் பார்க்க நேருகிறதை இப்படம் விவரிக்கிறது. அவளின் வேலைக்கு சென்ற அனுபவம்: வேலைக்கு போன இடத்து பெண்ணின் கணவன் மீதான அவநம்பிக்கைகளும், சச்சரவுகளும்: தனிமையான அழகுநிலையப் பெண்ணின் தனிமை வாழ்க்கையும் என் விரிகிறது இப்படத்தில். அழகு நிலையப் பெண்ணின் இன்னொரு புறமாய் இருக்கும் ஆணையும் சுட்டிக் காட்டுகிறது. பெண்களுக்கு மத்தியிலான பாதுகாப்பின்மையை அவர்கள் உணர்வதை இப்படம் விவரிக்கிறது. ஈரானியர்கள் புத்தாண்டை மார்ச்21ம் தேதி கொண்டாடுகிறார்கள். அன்றையதினம் புதன்கிழமையாக அமைகிறது. அன்றைய தினத்து நிகழ்வுகள் இப்படமாக மூன்று பெண்களை முன் வைத்து நகர்கிறது.
தஹ்மினா மிலானியின் “žஸ் பையர்” தலைப்பு அரசியல் சூழல் குறித்த யூகத்தை முன் வைக்கிறது. ஆனால் மேல்தட்டு கணவன் மனைவிக்கிடையிலான உறவுச் சிக்கல் குறித்தது இப்படம்.இந்த பெண் இயக்குனரின் “தி ஹ’ட்டன் ஹாப்” என்ற படம் 2001ம் ஆண்டு வெளியானது. ஈரான் புரட்சி, மத விஷயன்ங்களை இப்படம் கேள்விக்குறியாக்கிய காரணத்தால் இந்த இயக்குனர் சிறயி அடைக்கப்பட்டார். இரண்டு வார தண்டனைக்குப் பின் விடுவிக்கபட்டாலும் அவர் மீதான் வழக்கு நிலுவையில் உள்ளது. ” எந்த நேரமும் கடுமையான தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனையாக கூட அது இருக்கலாம்” என சென்றாண்டு இந்தியா வந்திருந்த மிலானி தெரிவித்தார். இவரின் ஒன்பதாவது படம் இது. இச்சூழலில் இப்படத் தலைப்பு அரசியல் குறித்த பல எதிர்ப்பார்ப்புகளை மிலானியிடம் உருவாக்கியிருந்தது. ஓவியர், பொறியாளர் இருவரும் மேல்தட்டைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். மோதலில் விளையும் காதல். திருமணத்திற்கு பின் ஆடம்பரமான வாழ்க்கை. சிறுசிறு சச்சரவுகள். இது அவர்களின் தினசரி வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையயும் பாதிக்கிறது. விவாகரத்துவரை செல்கிறார்கள். மனோதத்துவ நிபுணர் அவர்கள் இருவரையும் பத்து நாட்கள் பிரிந்திருக்கச் சொல்கிறார். உங்களுக்கு ஜந்துவயது குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் முப்பது வயதான உங்களை மீறுகிறார்கள். உங்களின் முப்பது வயதிற்குரிய மனமுதிர்வு இல்லாமல் செய்துவிட்டார்கள். அவர்களை உங்களிடமிருந்து வெளியேற்ற வேண்டும் என்கிறார். பிரிந்திருக்கும் பத்து நாட்களில் தங்களைப் பரிžலித்துக் கொள்வதற்காய் சில பயிற்சிகளைத் தருகிறார். பிரிவும், பயிற்சி முறைகளும் அவர்களை நிதானமாக்குகிறது. மிலானியின் முந்தின படங்களின் பெண்கள் பிரச்சனை குறித்த அக்கறையும், அரசியல் கேள்விகளும் முற்றிலும் தவிர்க்கப்பட்ட விதமாய் மேல்தட்டு குடும்பப் பிரச்சனை இப்படத்தில் மையமாகியுள்ளது. வெகுஜனத் தன்மையுடன் அதற்கான திரைக்கதையமைப்புடன் இப்படத்தை அவர் அணுகியிருக்கிறார் என்பது அவரின் படங்களில் நிறைய எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ஈரானிய இயக்குனர் மக்மல்பப்பின் இவ்வாண்டின் படமான “ஸ்கிரேம் ஆப் த ஆண்ட்ஸ்” படத்தில் வரும் பெண் மதம், ஆன்மீகம், லௌகீகவாழ்வு, குழந்தை பெற்றுக் கொள்ளும் வாழ்வில் முழுமை பற்றின எண்ணங்களுடன் தனது நாத்திக காதலனுடன் முரண்படுபவளாக இருக்கிறாள். மிலானியின் படத்து பொறியாளர் பெண்ணின் முரண்பட்ட உலகத்தை கொண்டவள் இவள்.


subrabharathi@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்