கிரிஸ்துவமும் பிரிட்டிஷாரும் சாதியமும்

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

சின்னக்கருப்பன்


உயிர்மை ஜுலை மாத இதழில் வெளிவந்த ‘அடித்தள மக்களின் எழுச்சியில் கிறிஸ்தவம் ‘ என்ற தலைப்பில் அ மார்க்ஸ் அவர்கள் எழுதிய கட்டுரையின் எதிர்வினையாகவும் தொடர்ந்தும் இந்தக் கட்டுரை.

அமார்க்ஸின் முதல் வரியிலிருந்து அவரது மனச்சாய்வு வெளிப்படுகிறது. இந்துமதம் வேறு இந்துத்துவம் வேறு என்று அனைவரும் அறிவர். இந்துவாக இருப்பவர் இந்துத்துவத்தில் ஆர்வமுள்ளவராக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்திய கிரிஸ்துவர்களில் தொண்ணூறு சதத்திற்கும் மேற்பட்டோர் தென்னிந்தியாவிலும் கிழக்கிலுள்ள பழங்குடி மாநிலங்களில் வாழ்கின்றனர் என்பதாலும், ‘இந்துத்துவ ‘ மையப்பகுதியாக இருக்கும் மாநிலங்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் இருப்பதாலும், ‘ஆய்வாளர்கள் ‘ (யார் இவர்களென அறிய ஆவலாக இருக்கிறேன்) இந்திய கிரிஸ்துவத்தை திராவிட பழங்குடி மதம் என்று கூறுகிறார்கள் என்று எழுதுகிறார் மார்க்ஸ். தென்னிந்தியாவில் முக்கியமாக தமிழ்நாட்டில் 3 சதவீத தமிழர்களே கிரிஸ்துவர்களாக இருக்கிறார்கள். 16ஆம் நூற்றாண்டில், அதாவது சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னர் தமிழ்நாட்டுக்கு வந்த கிரிஸ்துவம் இன்னும் 3 சதவீதத்தைக் கூட தாண்டாமல் இருப்பது எப்படி திராவிட பழங்குடி மதமாக கிரிஸ்துவத்தை ஆக்க முடியும் ? எதற்காக இப்படி திராவிட அடையாளத்தையும் கிரிஸ்துவ அடையாளத்தையும் மத அடிப்படையில் ஒன்றிணைக்க முயற்சி ?

இந்தியாவின் வடகிழக்கில் வாழும் பழங்குடியினரிடம் வருவோம். ஆங்கிலேயரால் 1873இல் Bengal Eastern Frontier Regulation மூலமாக வடகிழக்கில் பழங்குடியினர் பிரதேசம் என்று வரையறுக்கப்பட்ட பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு கிரிஸ்துவ மிஷனரிகள் மட்டுமே செல்லும்படி அனுமதிக்கப்பட்டனர். 1875இல் கிரிஸ்துவ மதம் விதைக்கப்படும் கன்னி நிலமாக இந்த பிரதேசங்கள் வரையறுக்கப்பட்டன. ( Descriptive Account of Assam, by William Robinson and Angus Hamilton) ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு புரோடஸ்டண்ட் சர்ச்சுக்கு ஏகபோக உரிமையாக ஆக்கப்பட்டது. இப்படி அமைப்பு ரீதியாக அரசு ரீதியாக அங்கு கிரிஸ்துவ மதமாற்றத்தை கொண்டு வந்தபின்னர் இன்று பழங்குடி மதம் என்று பிரச்சாரம் செய்ய அ மார்க்ஸ் முதலானோர் முனைகின்றனர். (இணைப்பு 1 )

மயிலாப்பூர் பார்ப்பனர்களால் தாமஸ் கொல்லப் பட்டதான ‘வரலாறை ‘ கூறும் மார்க்ஸ் பரதவர்களைச் சுரண்டிய அராபிய வணிகர்கள் முஸ்லீம்கள் என்பதை மிகவும் வசதியாய்ச் சொல்லாமல் விடுவது பற்றியும் என்ன சொல்வது ?

வரலாறு , மரபு என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டும் நம்பிக்கைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்வதற்கு மட்டும் மார்க்ஸ் வசதியாக மறந்துவிடுகிறார். வாடிகனே இந்தக் கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொன்னபோதிலும் விடாப்பிடியாக மரபையும், வரலாறையும் நம்பிக்கையோடு போட்டுக் குழப்ப என்ன அவசியம் வந்தது மார்க்ஸுக்கு ?

**

அடுத்து, சிங்காலின் வாதத்துக்கு வருவோம். ‘அடிப்படைக் கல்வியை வளர்ப்பது என்கிற கொள்கை உலகளாவிய கிறிஸ்தவ ஒழுங்கை இந்தியாவிற்குள் கொண்டுவரும் சதி என்பதுதான் சிங்காலின் வாதம். ‘ என்பது அ மார்க்ஸின் புரிதல். சிங்கால் சொல்வது வேறு. அடிப்படைக் கல்வியை அதிகரிப்பது என்ற பெயரில் வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை அதிகரிக்க உதவுவது கிரிஸ்துவ மதத்தைப் பரப்பவே உபயோகப்படுத்தப்படும் என்பது சிங்காலின் வாதம். இரண்டுக்கும் வெவ்வேறு புள்ளிகள் இருக்கின்றன. அ மார்க்ஸின் வரியில் சிங்கால் அடிப்படைக் கல்வியை எதிர்க்கிறார் என்ற அழுத்தம் வருகிறது. சிங்காலின் வரிகளில் அடிப்படைக் கல்விக்கு அழுத்தம் இல்லை. கிரிஸ்துவ மதப்பரப்பலே அழுத்தம் கொண்ட புள்ளி. சிங்கால் இருக்கும் இந்துத்துவ குழுமம் கிரிஸ்துவ மிஷனரிகளுக்குப் போட்டியாக வனவாசி கல்யாண் கேந்திரங்கள் ஒரு நபர் பள்ளிகள் ஆகியவற்றை பழங்குடியினர் நடுவே நடத்துகின்றது. கிரிஸ்துவ மிஷனரிகள் பழங்குடிகள் இந்துக்கள் அல்லவென்று கூறி அவர்களை கிரிஸ்துவர்களாக மாற்ற முனைகிறார்கள். பழங்குடியினர் இந்துக்கள்தாம் எனக்கூறி இந்துத்துவ மிஷனரிகள் அவர்களை இந்துக்களாக ‘மாற்ற ‘ முனைகிறார்கள். பழங்குடியினர் வழிபாட்டு முறைகளை தன் வரலாறு முழுவதும் பாகன் (pagan) எனக்கூறி அவமானப்படுத்தி வந்த கிரிஸ்துவம் ‘திராவிடப் பழங்குடி மதம் ‘ என்று பெயர் சூட்டப்படுவதை விட பாகன் (pagan) வழிபாட்டு முறைகளை இன்னும் விட்டுவிடாமல் இருக்கும் இந்து மதம் அவர்களை இந்துக்கள் எனக்கூறுவது தர்க்கத்துக்கு ஒவ்வாததா ?

அ மார்க்ஸ் எழுதுகிறார், ‘. கிறிஸ்தவம், இஸ்லாம் முதலான அருள்வெளிப்பாட்டு மதங்களில் ‘வார்த்தை ‘ என்பது வெறும் வார்த்தை அல்ல. அது கடவுளால் அருளப்பட்டது. அந்த வார்த்தைகளின் தொகுதியாக உள்ள புனித நூற்களைக் கற்பதன் மூலமே ஒருவர் மனித மாண்பைப் பெற முடியும். நல்வாழ்வு நெறியை அடைய முடியும். இறைவனின் நற்செய்தியை உணர முடியும். மறு உலக வாழ்வுக்கன்றி இக உலக வாழ்விற்கே மொழியும் கல்வியும் அவசியம் ‘. உண்மை என்ன ? புரோடஸ்டண்ட் கிரிஸ்துவம் தோன்றும் காலம் வரைக்கும் கிரிஸ்துவ மதப்புத்தகங்கள் பிராந்திய மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்படவே இல்லை. விவிலிய புத்தகங்களை கற்பதும், அவற்றை விளக்குவதும் மதகுருக்களின் ஏகபோக உரிமையாகவும், மதகுருக்கள் போதனைகள் மூலம் மக்களை அரசனுக்காகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இன்னொரு சேனைகளாகவே இருந்தனர். கிரிஸ்துவ மதகுருக்களுக்கும் அரசர்களுக்கும் இடையேயான அதிகாரப்போட்டியின் விளைவாகவே புரோடஸ்டண்ட் மதமும் தோன்றியது. பலதரப்பட்ட கிரிஸ்துவ இறையியல்களை ஒரே வரியில் கொச்சைப்படுத்திக்கூற அ மார்க்ஸ் முனைவது ஆச்சரியமானது. ஒவ்வொரு கிரிஸ்துவ சர்ச்சும் மேன்மை அடைய வெவ்வேறு வழிமுறைகளைப் போதிக்கின்றன. சில சர்ச்சுகளில் சமாரிடன் போன்று நற்காரியங்களைச் செய்தவர்கள் அவர்கள் யேசுவை அறியாதிருந்தாலும் சுவர்க்கத்தை அடைவார்கள் என்றே கூறுகின்றன. ‘இந்து மதத்தில் ‘ என்று ஆரம்பித்து மீண்டும் பொய்களை எழுதுகிறார் அ மார்க்ஸ். சற்றே கீதையை படித்தால், கிருஷ்ணன் எண்ணற்ற யோகங்களைக் கூறுகின்றார். அவரவருக்கு எந்த யோகம் உவப்பானதோ இனிதானதோ அதனை ஏற்றுக்கொண்டு இறைவனை அடையும் வழிகள் பேசப்படுகின்றன. அதில் இவர் கூறும் கர்மயோகத்திலிருந்து பக்தி யோகத்திலிருந்து ஞானயோகத்திலிருந்து விபூதி யோகத்திலிருந்து எத்தனையோ யோகங்கள் பேசப்படுகின்றன. ஞானயோகம் பேசும்போது பகவத்கீதையில் இது பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்று எழுதப்பட்டுள்லதா என்று அ மார்க்ஸே விளக்கட்டும்.

அடுத்து கே ஆர் மல்கானி அவர்கள் ‘இந்துக்களுக்குக் கல்வி எதற்கு ? ‘ என்று கேட்டதற்கு வருவோம்.

கே ஆர் மல்கானியுடனான பேட்டியை திரித்து நியூயார்க் டைம்ஸ் பிரசுரித்தபோது கே ஆர் மல்கானி அவர்கள் தன்னுடைய பேட்டி கொச்சைப் படுத்தப்பட்டதாக கூறி தன்னுடைய முழு வாதத்தையும் அனுப்பி வைத்தார். இது சில ஏடுகளில் பிரசுரமானது. இதுதான் கே ஆர் மல்கானி கூறியது.

Correction on Education: Malkani said, ‘I did not say that education is not relevant to the Indian conditions or that education is not crucial for the Indian economy. When asked what I thought of the role of education in development, I explained: EDUCATION is vital to development. But, unfortunately, education in India is not development-oriented. Schooling is just bookish; it has no vocational content. As a result we have lot of educated unemployment. Also our educational system is not geared to the needs of villagers and farmers. We have the same text books for urbanites and ruralites. We hold annual examinations when rural kids are needed in the field for crop harvest- ing. On the other hand, our summer holidays come, not when the rural kids need to be on the farm, but when they have nothing to do. Because of this lack of co-ordination between the needs of the rural poor and our educational system, a whole lot of villagers don ‘t find it worth their while to send their kids to school. We spend too much on college education and too little on primary education. There are village schools that don ‘t have a black-board. All this has to be corrected if education is to play a more decisive role in development. ‘

*

கே ஆர் மல்கானியின் பேச்சு நியூயார்க் டைம்ஸ் இதழால் திரிக்கப்படுவதற்கும் அ மார்க்ஸால் திரிக்கப்படுவதற்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று நம்புகிறேன். கே ஆர் மல்கானி அவர்கள் அடிப்படைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்றும் கிராமப்புற கல்விக்கூடங்களுக்கு அதிகப் பணம் ஒதுக்கவேண்டும் என்றும் அதில் நடைமுறை விவசாயம் மற்றும் சிறுதொழில் சம்பந்தப்பட்ட கல்வி அதிகம் இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார். இதில் ‘இந்துக்களுக்கு கல்வி எதற்கு ? ‘ என்ற வரிகளைக் கண்டுபிடிக்கும் நியூயார்க் டைம்ஸ் இதழும் அ மார்க்சும் (சில பல காரணங்களால்) பாராட்டப்படவேண்டியவர்களே. இந்து சமூகத் தலைவர்கள் கல்வியை வெறுத்தொதுக்குபவர்கள் என்ற பிரச்சாரம் எதற்கு என்று தெரியவில்லை. இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்தியாவில் 450 கல்லூரிகள் இருந்தன. அதில் 66 மட்டுமே கிரிஸ்துவக் கல்லூரிகள். இத்தனைக்கும் அத்தனை ஆண்டுகாலம் பிரிட்டிஷ் அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் கிரிஸ்துவ மிஷனரிகளுக்கு கல்லூரிகளும் பள்ளிகளும் அமைக்க உதவியபோதும் பெரும்பான்மையான கல்லூரிகளும் பள்ளிகளும் இந்துக்களாலேயே நடத்தப்பட்டு வந்திருக்கின்றன.

சிங்காலையும் கே ஆர் மல்கானியையும் எதிர்க்கவேண்டுமெனில் தாராளமாக எதிர்க்கட்டும். ஆனால் அதனை இவ்வாறு திரித்து, பொய் சொல்லி எழுதவேண்டிய நிர்ப்பந்தம் என்ன அ மார்க்ஸ் அவர்களுக்கு என்பதுதான் எனக்குத் தெரியாதது.

**

மார்க்ஸ் எழுதுகிறார் ‘ஆனால் கிறிஸ்தவம் தன்னோடு இறைவனின் ‘வார்த்தை ‘யைக் கொண்டுவந்தது. அதை அறிவதற்கு மொழியும் கல்வியும் தேவை என்பதை உணர்ந்து வந்தது. ‘

கிறிஸ்தவம் தன்னோடு இறைவனின் ‘வார்த்தை ‘யைக் கொண்டு வந்தது என்றால், அதை அறிவதற்கு மொழியும் கல்வியும் தேவை என்பதை உணர்ந்து வந்தது என்றால், பாவம் தமிழ்நாடு. இறைவனின் வார்த்தைகள் என்று மற்ற கலாச்சாரங்கள் அழைப்பதெல்லாம் இறைவனின் வார்த்தைகள் இல்லையா ? கிரிஸ்துவம் பரப்பும் இறைவனின் வார்த்தைகள் அல்லாது மற்ற கலாச்சாரங்கள் கொண்டுவரும் இறைவனின் வார்த்தைகள் யாருடைய வார்த்தைகள் ? மொழியும் கல்வியும் இல்லாமலா திருக்குறளும், தொல்காப்பியமும் இங்கு தோன்றின ?

நேர்மையாய் இந்த நிகழ்வைப் பதிவு செய்யவேண்டுமென்றால், விவிலியம் பரப்புவதற்கான தொழில் நுட்பத்துடன் கிறிஸ்துவம் வந்தது என்று சொல்லியிருக்க வேண்டும் மார்க்ஸ். இஸ்லாமும் இதே போன்ற வார்த்தையைக் கொண்டு வந்திருந்தாலும், அது கிரிஸ்துவம் விவிலியத்தை அச்சடித்துப் பரப்பியதுபோல தனது வேதத்தை அவ்வாறு பரப்பவில்லை. காரணம் அவர்களிடம் ‘வார்த்தை ‘ இல்லாமலிருந்ததால் அல்ல. அவர்களிடம் அதற்கான தொழில்நுட்பம் இல்லை.

கிரிஸ்துவத்தில் இணைவது விடுதலை என்று திருப்பித் திருப்பி எழுதும் அ மார்க்ஸ், காலனியாதிக்கச் சொல்லாடல், தாம் ஆளும் மக்கள் ஆன்மீகமோ கலாசாரமோ இல்லாத பின்தங்கிய மக்கள் என்றும் அவர்கள் ஆளும் வர்க்கத்தின் நியமங்களை ஏற்றுக்கொள்வதே அவர்களின் விடுதலை என்றும் பிரச்சாரம் செய்வதைத்தான் எதிரொலிக்கிறது.

சென்னையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது எவ்வளவு பள்ளிக்கூடங்கள் இருந்தன அவற்றில் என்ன சொல்லித்தரப்பட்டன, யார் படித்தார்கள் என்பதையும், எவ்வாறு பாரம்பரிய கல்விக்கூடங்களை பிரிட்டிஷ் அரசு நிர்மூலமாக்கியது என்பதையும் பாரம்பரிய கல்விக்கூடங்களை அழித்து அதன் மீது எவ்வாறு கிரிஸ்துவ பள்ளிகளை எழுப்பியது என்பதையும் தர்மபால் எழுதிய ‘அழகானமரம் ‘ புத்தகத்தில் காணலாம். (இணைப்பு 5)

பிரிட்டிஷ் ஆட்சியாளரின் உடனடி நோக்கமாக இருக்கும் கலாச்சார பொருளியல் நிறுவனங்களை காலனிய அமைப்பின் உட்கூறுகளாக ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும், தெளிவாகவே பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ந்த ஆட்சிக்கு கிரிஸ்துவப்பரவல் நீண்டகால நோக்கமாக இருந்தது என்பதே உண்மை. நேரடியான கிரிஸ்துவச் சார்பு சிப்பாய் கலவரத்தில் முடிந்தாலும் அதன் பின்னர் கிரிஸ்துவச் சார்பை பின்னே தள்ளிவிட்டு ஆட்சியை நீட்டித்துக்கொள்வது முன்னணிக்கு வந்தும் தன்னுடைய கிரிஸ்துவச் சார்பு நிலைப்பாட்டை முழுவதுமாக கைகழுவிவிடவில்லை. ஆனால், அப்படிப்பட்ட நிலைப்பாடு பிரிட்டிஷ் அரசு இந்துக்கோவில்களின் ஏராளமான சொத்துக்களை அபகரிக்க தடையாக இருக்கும் என்ற காரணமே இந்துமதத்தை நேரடியாக எதிர்க்க பிரிட்டிஷ் அரசை தடுத்தது. இந்துக்கோவில்களின் நிர்வாகத்தை குத்தகைக்கு விடுவதன் மூலம் ஏராளமான பணத்தை பிரிட்டிஷ் அரசு பெற்றது. இதுவே பிராம்மணர்களும் பிராம்மணரல்லாத மற்ற மேல்சாதியினரும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டவும் காரணமாக அமைந்தது. (இணைப்பு 2 ) கோவில் அரசியல் பற்றிய மேல் விவரங்களுக்கு அப்பாத்துரை கட்டுரைகளைக் காணவும். (இணைப்பு 6)

பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொண்ட நிறுவனங்களில் சாதியமும் ஒன்று என்பது உண்மையே. அடித்தள மக்களின் பிரச்னைகளின் போது சாதி இந்துக்கள் பக்கமே அரசு நின்றது என்பதும் பெருமளவு உண்மையே. ஏனெனில் சாதி இந்துக்களின் ஆதரவின்றி காலனிய ஆதிக்கத்தை நீட்டிப்பது கடினம். இதுவேதான் இதற்கு முந்தைய காலனியாதிக்க மதமான இஸ்லாத்துக்கும், அரசாண்ட மொகல் மற்றும் சுல்தானேட்டுக்களுக்கும் நடந்தது. இந்து மதத்தை ஒடுக்குவதும், இந்துக்கோவில்களை அழிப்பதும் ஒரு புறம் மதக்கடமையாக மொகல்களாலும் சுல்தானேட்டுகளாலும் செய்யப்பட்டிருந்தாலும், ஆட்சி தொடர்ந்து நீட்டித்திருக்க அங்கங்குள்ள இந்துக் கோவில்களுக்கு உதவி செய்வதும், அங்கங்குள்ள இந்து மேல்சாதியினரை அரசு அலுவல்களில் உட்காரவைப்பதும் தேவையாக இருந்தது. (இணைப்பு 2)

மேற்கண்ட புரிதலுக்கும் இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களை நிர்வாகிகளாக நியமித்த நிகழ்வு பற்றிய மார்க்ஸின் புரிதலுக்கும் உள்ள வேறுபாட்டைச் சற்று ஊன்றிப் பார்க்க வேண்டும். இஸ்லாமிய மன்னர்கள் இந்து நிர்வாகிகளை நியமித்ததை இஸ்லாமிய மன்னர்களின் மதச்சார்பின்மைக்கு உதாரணம் என்று பாராட்டும் மார்க்ஸ் , பிரிட்டிஷ் அரசு சாதி இந்துக்களை நியமித்ததில் சரியாகவே சாதியத்தை ஏற்றுக்கொண்டதைக் காண்கிறார். இஸ்லாமிய அரசர்கள் ஏற்றுக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாகச் சாதியத்தைச் சுட்டிக் காட்டிவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு காரணமாய் இருக்கலாம்.

பிரிட்டிஷ் அரசு சாதியத்தை ஒரு நிறுவனமாக தன் நடைமுறை அரசியலில் ஏற்றுக்கொண்டிருந்தும், சாதியம் பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நகரங்களில் ஏறத்தாழ சுத்தமாக சாதிமுறை அழிந்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் சாதி வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் கிரிஸ்துவ சமூகத்தில் அ மார்க்ஸ் எதிர்பார்க்கும் அளவுக்கு சாதியம் மறையவில்லை. ஆனால் கிரிஸ்துவத்தை விட தீவிரமாக சாதியத்தை அங்கீகரிக்காத இஸ்லாமிலும் சாதி முறை புகுந்திருக்கிறது. அதுவும் இஸ்லாமிய மரபு என்றும், இஸ்லாமிய வரலாற்றின் அடிப்படை என்றும் புது ஜாதிகள் இஸ்லாமில் தோன்றியிருக்கின்றன. ஷேக், சையது போன்ற மேல்சாதி முஸ்லீம்கள் தங்களை மேலானவர்களாகவும், நபி பிறப்பு வழி வந்தவர்களாகவும், பிஞ்சரா, டெரிவிஷ், டகாரா போன்றவர்கள் கீழ் சாதியினராகவும் மதிக்கப்படுகிறார்கள். அஷ்ரஃப் (ஷரஃப்) மேல் பிறப்பாளர்களாகவும், அஜ்லஃப் கீழ் பிறப்பாளர்களாகவும் மதிக்கப்படுகின்றார்கள். அதிலும் அஷ்ரஃப் ஜாதிக்குள்ளாகவே பல காரணங்களால் அதிக அந்தஸ்து தரப்படுவது வழக்கமாகவே இருந்திருக்கிறது. நபியுடனான ரத்த உறவு உடையவர்களோ, நபி பிறந்த குரேஷி இனத்தில் பிறந்தவர்களாக இருப்பதோ, ஏதேனும் அரபு இனத்தின் வழி வந்தவர்களாக இருப்பதோ, இந்தியாவுக்குள் வந்த முஸ்லீம் ராணுவத்தின் வழித்தோன்றல்களாக இருப்பதோ அஷ்ரஃப் ஜாதிக்குள் இன்னும் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுத்தந்தது. (இணைப்பு 3)

பொதுவாக இந்தியாவில் இருக்கும் மற்ற மதங்களில் இருக்கும் சாதி உணர்வு இந்து சமூகத்திலிருந்து பாதிப்புக்குள்ளானதாகவே கூறப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் இஸ்லாம் முதலில் ஆட்சிப்பொறுப்பேறிய பாக்தூனிஸ்தான், சிந்து மாநிலங்களிலும் சாதி உணர்வு இன்னும் போகாமல் இருப்பதும், சொல்லப்போனால் இந்தியாவை விட தீவிரமாக அங்கு சாதி உணர்வு இருப்பதும் நாம் கவனிக்க வேண்டியது. ஒரு குறிப்பிட்ட உதாரணமாக சிந்து மாகாணத்தை எடுத்துக்கொள்வோம். அங்கு முகமது பின் காஸிம் படையெடுத்து வந்து சிந்து அரசைக் கைப்பற்றியதும் செய்த முதல் காரியம் அங்கிருந்த அனைத்து பிராம்மணர்களையும் கொன்றதுதான். சிந்தி பிராம்மணர்களைக்கொன்ற வருடம் கி பி 712. ( இன்று சிந்தி பிராம்மணர்கள் என்று யாருமே இல்லாத காரணம் அதுதான்) ஆனால், சாதி முறை அழியவில்லை. ஆட்சி புரிந்தவர்கள் ஷத்திரியர்களும் நில உடைமையாளர்களும் இஸ்லாமியர்களாக ஆனார்கள். பெரும்பாலான வியாபாரிகளும் தலித்துகளும் இந்துக்களாகவே தொடர்ந்தார்கள். முஸ்லீம் ஆனவர்களும் தங்களது சாதிகளை விட்டுவிடவில்லை. சாதிகளுக்கு மறு பெயர் சூட்டப்பட்டது. clan என்ற பெயரில் சாதி தொடர்ந்தது. சாதி விட்டு சாதி திருமணம் செய்துகொண்ட பெண்களைக் கொல்வதன் பெயர் கெளரவக்கொலைகள் (honour Killings). அதனை தடுக்க இதுவரை பாகிஸ்தான் அரசால் ஒரு சட்டம் கூட ஏற்படுத்த முடியவில்லை. கெளரவக்கொலைகள் ((honour Killings) செய்த ஆண்களை தண்டிக்கக்கூடாது என்று பாக்துனிஸ்தான் முதலமைச்சரே பேசினார்.

1300 வருடங்களாக இஸ்லாம் சிந்து மாகாணத்தில் ஆட்சி புரிந்தும் சாதி அழியவில்லை என்றபோது, ஏன் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தொடங்கி சற்றே 150 வருடங்களுக்குள்ளாக சாதி அழிய ஆரம்பித்து இன்று சாதிகளற்ற நகர மையங்கள் உருவாகி வருகின்றன ? இத்தனைக்கும் அ மார்க்ஸ் அவர்களே குறிப்பிடுவதுபோல, பிரிட்டிஷ் ஆட்சி சாதி என்பதை அங்கீகரித்தே ஆட்சி செய்துவந்தும் கூட ? கிரிஸ்துவ மதம் இந்து மதத்துக்கு சமானமாகவே சாதிமுறையைப் பின்பற்றியும் கூட ஏன் இந்தியாவில் சாதிமுறை அழிந்தது ?

அதற்கான பதிலுக்கு மார்க்ஸிடம்தான் செல்லவேண்டும். அ மார்க்ஸ் அல்ல, கார்ல் மார்க்ஸ்.

உற்பத்தி உறவுகள் என்ற அடித்தளக் கட்டுமானத்தின் மீதுதான் எந்த கலாச்சார கட்டுமானமும் அமைக்கப்பட முடியும். கீழே இருக்கும் உற்பத்தி உறவுகள் மாறும்போது மேல் கட்டுமானமாக இருக்கும் கலாச்சாரம் சமூக உறவுகள் பேச்சு எழுத்து அனைத்தும் மாறுதலடையும்.

மனித சமூகம் ஒவ்வொரு கண்டத்திலும், வேட்டையாடி உண்ணுதல், ஆடு மாடுகளை மேய்த்தல், நிரந்தர விவசாயம், நில உடமை அமைப்பு, மூலதன அமைப்பு என்ற ரீதியில்தான் வளர்கிறது. (இதற்கான சிறப்பான புத்தகம் ஜேரட் டைமண்ட் எழுதிய கன்ஸ், ஜெர்ம்ஸ், ஸ்டால். இணைப்பு 4) அந்தந்த சூழ்நிலையில் அந்த உற்பத்தி உறவுமுறைகளின் அடிப்படையிலேயே அங்கங்கு கலாச்சாரமும் அதனை நியாயப்படுத்தும் வாழ்க்கைத் தத்துவங்களும் தோன்றுகின்றன. (இப்படிப்பட்ட அமைப்பை நோக்கிச் செல்லும் அனைத்து சமூகங்களும் பல்வேறு உருவங்களில் சாதியத்தை உருவாக்குகின்றன. அதனாலேயே, இந்தியாவுக்கு சுத்தமாக சம்பந்தமில்லாத ?வாய் தீவுகளில் சாதியம் தோன்றியது. ஓரளவுக்கு விவசாய நில உடமை அமைப்புக்கொண்ட ஏமனில் சையதுகள் வேறு சாதியினருடன் திருமணம் செய்துகொள்வதில்லை. நைஜீரியாவில் இத்தனைக்காலம் கிரிஸ்துவம் அங்கு பரவியிருந்தாலும் அங்கிருக்கும் தீண்டாமையையும் சாதி முறையையும் அழிக்க முடியவில்லை. ஜப்பானில் பெளத்தமதம் இத்தனைக்காலம் இருந்திருந்தாலும் புராக்கு மக்களுக்கு எதிரான தீண்டாமையையையும் சாதிமுறையையும் போக்க முடியவில்லை.) மேய்ப்பு (pastoral) கலாச்சாரம் அதன் உற்பத்தி உறவுமுறைகள் காரணமாகவே ஒரு ஈகாலிட்டேரியன் சமூகத்தைத்தான் உருவாக்க முடியும். எல்லோருக்குமே ஒரே தொழில் என்பதால் தொழில் ரீதியாக குடும்பங்களைப்பிரிக்க வேண்டிய தேவை இல்லாத சமூகம் அது. அரபியர்கள் இங்கு வரும்போது, இந்தியா ஏற்கெனவே ஒரு முதிர்ந்த நில உடமை சமுதாயமாக இருந்தது. முதிர்ந்த வேலைப்பங்கீட்டுக்கு (division of labor) அமைப்புக்கு ஏற்கெனவே வந்துவிட்ட ஒரு சமூக அமைப்பு.

மேய்ச்சலைத் தொழிலாக கொண்டிருந்த அரபியர்களும் இதர இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களும் இந்தியா வந்தபோது இந்தியாவின் நில உடமை அமைப்புக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டார்கள். ஏனெனில் நில உடமை அமைப்பு மேய்ச்சல் தொழிலை விட வரலாற்று ரீதியில் முன்னேறிய அமைப்பு. ஆனால், பிரிட்டிஷார் இந்தியா வந்தபோது அவர்கள் இந்தியாவை விட வரலாற்று ரீதியில் முன்னேறிய மூலதன பொருளாதார அமைப்பின் (capitalist) பின்னணியிலிருந்து இந்தியாவுக்கு வந்தார்கள். முதலியமே இந்தியாவின் சாதி உறவுகளை பொருளற்றுப் போக வைத்த அமைப்பு. கிரிஸ்துவம் அல்ல. ஆனால் தன்னுடைய அரசை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள கிரிஸ்துவம் வேண்டும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். (பிறந்த குழந்தைகளை தேம்ஸ் நதியில் வீசிக்கொண்டிருந்த ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து சுரண்டிய பணத்தால்தானே நாகரிகத்தின் உச்சமாக ஆனார்கள் ? அவ்வாறு உச்சத்துக்குச் சென்ற பின்னர் இந்தியர்களை நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் என்று காட்டுவதற்கு கிரிஸ்துவ மிஷனரிகள் பிரச்சார படையாக வேண்டாமா என்ன ?)

ஆனால், பிரிட்டிஷார் இந்தியாவில் சாதி முறை நீட்டித்திருக்க உதவினார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது அ மார்க்ஸ் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் மூலமாக அல்ல. இந்தியாவின் நில உடமைப் பணக்காரர்கள் வெளிநாட்டு தொழிற்சாலைகளைப் பார்த்து இந்தியாவிலும் தொழிற்சாலைகளை அமைக்க முனைந்தபோது நேரடியாகவும் மறைமுகமாகவும் இங்கிலாந்தின் தொழில்துறை வளத்தையும் தக்கவைக்க வேண்டி தீவிரமாகத் தடுத்தார்கள். இங்கு ஆரம்பித்துக்கொண்டிருந்த முதலிய வளர்ச்சியை முளையிலேயே கிள்ளி தடுத்ததன் மூலமாகவும், அவர்கள் பின்னால் வந்த இந்திய சோசலிஸ்டுகள் லைசன்ஸ் கோட்டா முறையை அமல்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட முதலியத்தை அனுமதித்து ஏற்கெனவே பணக்காரர்களே பணம் ஈட்ட முடியும் என்று ஊழலின் மூலமாக நிச்சயம் செய்து தந்ததாலுமே இந்தியாவில் சாதிமுறை இன்னமும் நீடிக்கிறது. முதலியத்தை வளரவிடாமல் அடித்து இன்னொரு சாதியமாக உருவாக்கப்பட்ட சோசலிச அமைப்பு சாதியத்தை நீட்டிக்கவே உதவியது. நரசிம்மராவ் காலத்தின் பின்னர் தடையற்று முன்னேறும் முதலியம் அதன் வேகத்தோடு இணையாக சாதியத்தின் அழிவு வேகத்தையும் கொண்டு வந்துகொண்டிருக்கிறது.

முதலியத்தின் கீழ் சாதியம் இருக்கமுடியாது. முதலியமே சாதியத்தை அழிக்கக்கூடியது. ஆனால், எல்லா வரலாறுகளும் அதன் எச்சங்களை விட்டுச் செல்லும். அது போல, ஸ்மித் என்ற தொழில்முறை சாதிப்பெயர் இன்னும் ஆங்கிலேயர்கள் மத்தியில் இருப்பதுபோல, இந்தியாவின் சாதிப்பெயர்களும் சாதாரண கடைசிப்பெயர்களாக குடும்பப்பெயர்களாக நின்றுவிடும். பேரரசுகளை அமைக்க உதவிய பொருளாதார அமைப்பான அடிமை முறை காலாவதியானாலும் இஸ்லாமும் கிரிஸ்துவமும் இன்றும் இருப்பது போல, இந்தியாவின் நில உடமை அமைப்பான சாதிகள் அழிந்தாலும் இந்துமதம் அழிந்துவிடாது.

மார்க்ஸின் பூர்வஜென்மத்தில் அவர் அடைந்திருந்த மார்க்ஸிய ஞானத்தில் சிறிது இருந்தாலே இது விளங்கிவிடும். ஆனால் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை மறுத்தால் தானே, இந்துமதமே பிராமணிய சதி என்று திரும்பத் திரும்பப் பொய் சொல்லிக் கொண்டே இருக்க முடியும் ? அதனால் பெரியாரிஸ்ட் ஆனவுடன் இவர் தியாகம் செய்த முதல் கோட்பாடு மார்க்ஸியமே.

ஆனால், இதையெல்லாம் தெரியாதவரா அ மார்க்ஸ் ? அல்ல. ஆனால் அ மார்க்ஸ் சொல்ல வருவது அதல்ல. உள்ளத்தில் இருப்பது வார்த்தைகளில் வந்துவிடுகிறது. அ மார்க்ஸ் அவர்களால் கட்டுரை முழுவதும், கிரிஸ்துவ மதப்பிரச்சாரம் ‘நற்செய்தி ‘ என்றே எழுதப்படுகிறது . ‘கிறிஸ்தவம் ஒரு அடித்தள மக்களின் மதமாக எழுச்சி பெற்ற வரலாறை ‘ என்று கிரிஸ்துவத்தை பெருமைப்படுத்தும் வார்த்தைகளை எழுதுகிறார். ‘மற்றவர் வீரமாமுனிவர் ஆனார். சங்கராச்சாரி மாதிரியில் உடையையும் வாழ்க்கையையும் மேற்கொண்டனர். ‘ மார்க்ஸின் வார்த்தைகளில் வீரமாமுனிவர் வீரமாமுனி ஆகவில்லை. ஆனால் சங்கராச்சாரியார் சங்கராச்சாரி ஆகிவிட்டார். ‘சாணார்கள் (நாடார்) கிறிஸ்தவ இயக்கத்தில் இணைந்தனர் ‘ இயக்கம் என்பதற்கு அ மார்க்ஸ் வைத்திருக்கும் வரைமுறை மிகவும் இளகியது போல காணப்படுகிறது. பார்ப்பனர்கள் தோமாவைக் கொன்ற கட்டுக்கதையை, கத்தோலிக்க சர்ச்சே ஒப்புக்கொள்ளாத கட்டுக்கதையை வரலாறு என்று எழுதுகிறார் அ மார்க்ஸ். மதம் மாற்றினார் என்று எழுத மனம் வராமல் ‘கிறிஸ்தவர்களாகத் திரு முழுக்கு அளித்தார் ‘ என்று எழுதுகிறார்.

**

அ மார்க்ஸ் எழுதுகிறார். ‘கல்வி அறிவு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு நடமாடும் நற்செய்தியாளரானான். ‘

**

உற்பத்தி உறவுகளே கலாச்சார மற்றும் சமூக உறவுகளை நிர்ணயிக்கின்றன என்ற பொருள்முதல்வாத மார்க்ஸிய பார்வையை தலை முழுகிவிட்டு, சாதியம் என்பது பார்ப்பனர்களின் கற்பனையில் உதித்த சதி என்னும் கருத்துமுதல்வாத பெரியாரிய சிந்தனையை இதுகாறும் பிரச்சாரம் செய்துவந்தார். இன்று கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன் என்ற பெரியாரிய சிந்தனையை தலை முழுகிவிட்டு நடமாடும் நற்செய்தியாளராக மலர்ந்திருக்கும் அ மார்க்ஸ் அவர்கள், அறிவியற்பூர்வமான சிந்தனைக்கும், மதம் தாண்டிய மனிதத்துவத்திற்கும் எப்போதேனும் வருவார் என்று காத்திருக்கலாம்.

***

இணைப்புகள்

1) Northeast India: Target of British apartheid by Ramtanu Maitra and Susan Maitra

http://www.larouchepub.com/other/1995/2241_ne_india_history.html

2) The star in the east: the controversy over Christian missions to India, 1805-1813 Historian, Spring, 1998 by Karen Chancey

‘Scott-Waring even hinted that Hinduism might be the better religion, commenting that ‘the religion of Brahma has done more for the lower orders of the Hindoos than Christianity seems to have done for the corresponding classes in Europe. ‘

http://www.findarticles.com/p/articles/mi_m2082/is_n3_v60/ai_20649392

3) இஸ்லாமில் ஜாதிகள்.

http://www.infinityfoundation.com/mandala/h_es/h_es_karan_caste.htm

4) Guns, Germs and Steel by Jared Diamond.

5) The Beautiful Tree, Indian Education in the Eighteenth Century, by Dharmapal , 1981

6) Worship and Conflict Under Colonial Rule: A South Indian Case (South Asian Study) by Arjun, Appadurai

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்