கவிக்கட்டு 23

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

சத்தி சக்திதாசன்


நீ நிஜமா ? நிழலே !

நான் நடந்தபோது
நீயும் நடந்தாய்
நான் நின்றபோது
நீயும் நின்றாய்
நிழலே நீ நிஜமா ?

நான் சிரித்தேன்
உன் முகம் சிரிக்கவில்லை
நான் அழுதேன்
அப்போது நீ அழவில்லை
உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட
உள்ளம் கொண்டனையோ ?
நிழலே நீ நிஜமா ?

என் அன்னை பெற்றபோது
என்னுடனே பிறந்தனையோ ?
அறிந்தேனில்லை நான்
நான் வளரும்போது மட்டும்
ஏன்
சேர்ந்து வளர்ந்தனையோ ?
நிழலே நீ நிஜமா ?

மகிழ்ந்து நானும் எனை
மறந்து துள்ளும்போது
மறக்காமல் சேர்ந்து துள்ளும் நீ
மனம் வாடிக் கலங்கும் போது
மட்டும் பங்கு கொள்ள
மறப்பதென்ன ?
நிழலே நீ நிஜமா ?

மறைந்தான் ஆதவன் என்றால்
மறைக்கிறாய் உன்னை
இருளைக் கண்டு பயமா ?
இல்லை உன்னிறமும் கறுப்பா ?
இரங்கற்குணத்தை மனிதன்
இரவல் கொடுத்தான் என்றே
இரவுகளில் நீ உன்னையே
இழந்தனையோ ?
நிழலே நீ நிஜமா ?

பின்னேதான் வருகிறாய்
பிழையான பாதையை
தெரிந்தெடுத்தது நீயல்ல
தெளிவாக உணர்த்தவா
தொடர்ந்தாய் ?

லட்சியம் அடைந்தோர்
லட்சங்கள் உழைத்தோர்
சாதனை படைத்தோர்
சோதனை வென்றோர்
ஆயிரம் பேருண்டு
ஏன் தொடர்ந்தாய்
என் பின்னோடு ?
நிழலே நீ நிஜம்தானா ?

எதுவுமற்ற என்னிடம்
எண்ணிக்கையற்ற ஒன்றுண்டு
எப்போதும் உன் துயர் கண்டு
ஏங்கிடும் உண்மை மனமொன்று

உன்னை ஒன்ரு கேட்பேன்
உண்மை நீ என்றால் நிலைத்திடு
உணர்வுகளின்றி தொடரும் ஓர்
உயிரற்ற ஜடமென்றால் இன்றே
உன்னை மறைத்திடு

நிழலே நீ நிஜமா ?

0000

கண்களில் காண்பதெல்லாம் !

சத்தி சக்திதாசன்

கண்களில் காண்பதெல்லாம் உண்மையென்றால்
கன்னியவள் எனைக் கவர்ந்ததும் உண்மையன்றோ

எண்ணங்களில் விளைவது காதலென்றால் அன்பே
என் உள்ளத்தை அன்று கொன்றதும் காதலன்றோ

வண்ணங்களைக் கலப்பதுதான் ஓவியம் என்றால் உன்
வண்ணத்தாவணியில் என்முன்னே நடந்ததும் சித்திரமே

விண்ணிலே மிதப்பது வண்ண நிலவென்றால் நிச்சயமாய்
வட்டமான உன் பூமுகம் நிலாவைப் பெற்றதென்பேன்

மண்ணிலே அன்பு உண்மையென்றால் உன்னிடம் அன்று
மனதை இழந்து பின் நான் என்னை மறந்ததும் உண்மையே
—-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation