கவிக்கட்டு 12 – கொஞ்சம் ஆசை

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

சத்தி சக்திதாசன்


ஓடும் முகிலின் மீதமர்ந்து
உலகை வலம் வர
என் மனதில் என்றுமே
கொஞ்சமாய் ஆசை !

மலரின் மீது வண்டு
வந்தமர்ந்து
தேனுறுஞ்சும் ஓசையைக்
கேட்கக் கொஞ்சம் ஆசை !

பாலைவனத்திலே
ஏங்கிக் கிடக்கும்
பூங்கொடியின் வேரை
மழையாகி நனைத்து
மகிழக் கொஞ்சம் ஆசை !

பசியாலே வாடித் துடிக்கும்
பிள்ளையின் கையிலே
கடிக்கக் கடிக்கக்
குறையா ரொட்டித்
துண்டாய் மாறக்
கொஞ்சம் ஆசை
அந்தக் குழந்தைக்
கண்களிலே மலரும்
மகிழ்வதனைக் காணக்
கொஞ்சம் ஆசை !

தாமரை இதழின் மீதமர்ந்து
ஆதவனைக் கண்டதும்
அழகுற மலரும்
அந்த
அற்புதத்தைக் காணக்
கொஞ்சமாய் ஆசை !

இலைகளின்
இடையே மறைந்திருந்து
இனிய மாலைத் தென்றல்
இதமாய் அவைகளை வருடும்
இன்பத்தை உணரக்
கொஞ்சமாய் ஆசை. !

கள்ளமில்லாக் குழந்தையின்
களங்கமில்லா உள்ளத்தைப்
பார்த்து மகிழும்
கண்ணாடியாய் மாறிடவே
காலமெல்லாம் மாறாத
ஆசை !

வானுலகில் ஓர் தேவதையாய் மாறி
அன்னை தந்தை
பாட்டன் பாட்டி
பாரதி கம்பன்
அருகருகே அமர்ந்திருந்து
அரட்டை அடிப்பதைக்
காணக்
கொஞ்சமாய் ஆசை !

கொஞ்சக் கொஞ்ச ஆசைகளைக்
கோர்த்து மாலையாய்
கொஞ்சிச் சிரித்து
மகிழும் குழந்தையின்
கழுத்தில் போட்டு
ஆனந்தமாக ஆசை.

0000

செம்மொழிச் செந்தமிழ்

சத்தி சக்திதாசன்

பாடுவோம் இன்று ஆனந்தமாய் ஆடுவோம் உலகத் தமிழர் நாம் எம்மொழி
பாரதத்தினில் ஒரு பெருமை பெற்றது தமிழ் மொழி இன்று செம்மொழி

பயன் என்ன என்று கேட்பதை விடுங்கள் கெளரவம் அடைந்தது தமிழ்மொழி
பழம்பெரும் மொழியின் கழுத்தில் அடுத்தொரு அணிகலன் அதுவே செம்மொழி

கல்லும் மண்ணும் நிறைந்த பாதையில் நீண்ட பயணம் வந்தது நம்மொழி
கனிவாய் அதன் பாதையில் இன்று விழுந்தது பூமழை அதுவே செம்மொழி

பாரதி தட்டிக் கொடுத்து வளர்த்ததந்த மொழி தன்னிகரற்ற இனிய மொழி
பாரினில் வாழும் தமிழர் தலை நிமிர்ந்து கோஷமிடுவோம் எம்மொழி செம்மொழி

தமிழைப் பாடுவோம் ; தமிழைப் போற்றுவோம் இனிய மொழி என் தமிழ்மொழி
தரணியில் தமிழன்னைனைக்கு அடுத்தொரு ஆபரணம் அவள் மொழி செம்மொழி

0000

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்