கலி காலம்

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

அலர்மேல் மங்கை


சாப்பிட்டுக் கொண்டிருந்த போது வாசலில் அழைப்பு மணி சத்தமிட்டது.

‘யார்னு பாரு ‘

வித்யா எரிச்சலுடன் எழுந்து போனாள். அப்பள மாமி உள் வாசல் படியில் செளகர்யமாக கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

‘என்ன மாமி ? ‘

‘அப்பளம் வேணும்மான்னு கேளுடிம்மா.. உங்கம்மா சொன்னாப்ல உப்பு குறைச்சுப் போட்டிருக்கேன்… ‘

என்று கூறி விட்டுப் பாக்கை அள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்.

‘சரி, கொஞ்சம் இருங்க..அம்மா சாப்டுட்டு வருவா… ‘ என்று கூறி விட்டுத் திரும்ப எத்தனிக்கையில்,

‘சாப்டுண்டா இருந்தேடிம்மா ? பெல்லடிச்சுத் தொலச்சிட்டேனாக்கும்! சரி, சரி, நீ போய்ச் சாப்பிடு… ‘ என்றாள்.

‘சரி ‘ வித்யா மீண்டும் உள்க்ஷள் திரும்பினாள்.

‘அது சரி, இன்னிக்கு என்ன சமையல் ? ‘

‘ம்…சாம்பார், கத்திரிக்கா பொரியல்… ‘

‘ஆஹா..உங்காத்துல என்ன பொடியா ? அரைச்சு விட்டு வெப்பேளா ? ‘ – மாமி விடுவதாக இல்லை.

‘பொடிதான்.. ‘

‘அமாமாம். இந்தக் கால அவசரத்துல யாரு அரைச்சு விட்டு குழம்பு வெக்கறா ? ஆனா நேக்கு பொடியெல்லாம் கிட்ட வரப் படாது.. ‘

கூறி விட்டுப் பெரிதாகப் புன்னகைத்தாள் மாமி.

மாமிக்கு ஐம்பதில் இருந்து அறுபதுக்குள் எத்தனை வயது வேண்டுமானலும் மதிக்கலாம். சிறு வயதில் சும்மா தகதக வென்று மின்னியிருப்பாள்.

கண்ணும், மூக்கும், உதடும் செதுக்கினாற் போல இருந்தன. உடம்பு இன்னும் கட்டு விடாமல் இருந்தது. இத்தனை வயதுக்கும் ப்ரேஸியர் போட்டுக் கொண்டிருந்தது ரவிக்கை வழியாகத் தெரிந்தது.

வித்யா லேசாகச் சிரித்துக் கொண்டாள்.

‘ஏண்டிம்மா சிரிக்கறே ? நான் சொன்னது உனக்குச் சிரிப்பாயிடுத்தாக்கும் ? நீ போய்ச் சாப்பிடுடி குழந்தே ‘

என்று கூறி விட்டு மேலும் நன்றாகச் சாய்ந்து கொண்டாள். எங்கே நின்றால் இன்னும் பிடித்துக் கொள்வாளோ என்று வித்யா அவசரமாக உள்ளே திரும்பினாள்.

சாப்பிட்ட பின் அம்மாவும், ஆச்சியும் வெளியே வந்தனர்.

‘வாங்கோ, வாங்கோ..என்ன சாப்பாடு ஆயிடுத்தா ? ‘

மாமி வாய் கொள்ளாத புன்னகையுடன் அம்மாவையும், ஆச்சியையும் வரவேற்றாள்.

‘ம்…ஆச்சு..என்ன அப்பளத்துக்கு உப்பு குறைச்சுப் போட்டாங்களா ? ‘ அம்மா விசாரணையில் இறங்கினாள்.

‘ஆமா..உங்களுக்காகத் தனியான்னா இட்டேன்! பேஷா இருக்கும் பாருங்கோ.. ‘ என்று கூறி விட்டு அலுமினியத் தூக்கைத் திறந்து இரண்டு அப்பளக் கட்டுகளை எடுத்துக் கொடுத்தாள்

அப்பளத்துக்குப் பணத்தை வித்யா எடுத்துக் கொடுத்த போது மாமி இவளைப் பார்த்தவாறே,

‘குழந்தைக்கு என்ன வயசாறது ? ‘ என்றாள்.

‘பத்தொன்பது இப்ப முடிஞ்சிருக்கு.. ‘

‘கல்யாணத்துக்குப் பார்க்கறேளா ? ‘

‘இப்ப என்ன அவசரம் ? படிப்பு முடியட்டும். ‘

‘படிக்கிறாளா ? என்ன படிக்கிறா ? ‘

‘பி.எஸ்ஸி கடசி வருஷம். ‘

‘ம்..எனக்கும் ஒரு பேத்தி இருக்கா..அந்தப் பொண் கல்யாணத்துக்குத்தான் இப்டி அலையறேன்.. ‘

மாமி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

‘என்ன வயசு ? ‘

‘பதினஞ்சு முடிஞ்சிருக்கு… ‘

வித்யா சிரித்து விட்டாள்.

‘என்ன மாமி ? பதினஞ்சு வயசுப் பொண்ணுக்கா இப்பவே கல்யாணத்துக்குப் பாக்கணும் ? ‘

‘சேர்க்கறேண்டியம்மா…ம்..என் தலையெழுத்து!எம்பொண்ணுக்கு அம்பது பவுன் நகை போட்டுக் கல்யாணம் பண்ணி வெச்சேன். அவாத்துல இருந்து தின்னே கெட்டுப் போனா. குந்தித் தின்னா குன்றும் மாளுமோன்னோ ? ஆனா நான் ஒரு முழிச்சுண்டேன். கடன்காரன், எம் பொண்ணு நகைல கை வெக்கறான்னு தெரிஞ்சதுமே எல்லாத்தையும் வாங்கி பாங்க் லாக்கர்லேன்னா வச்சுருக்கேன்! இப்ப நான் போட்டுருக்கறது கூட வைரத் தோடுதான்… ‘ என்று பெருமையாகத் தன் தோட்டைக் காண்பித்துக் கொண்டாள்.

ஆச்சிக்கு ஒரே ஆச்சரியம்…

‘வைரத் தோடா போட்டிருக்கீங்க, மாமி ? ‘ என்று இரண்டு படி இறங்கி அமர்ந்து கொண்டாள்.

‘ஆமாம்மா….ப்ளூ ஜாகர். எங்கம்மா எனக்கும் கொள்ளை நகை போட்டுத்தான் கல்யாணம் பண்ணி வச்சா. எங்க வீட்டுக்காரர் பிஸினஸ் பண்றேன், புடலங்கா பண்றேன்னுட்டு கொஞ்சத்தை அழிச்சுட்டார். நா பாத்தேன்..என் நகையை எங்கப்பாட்டக் குடுத்து வச்சுட்டு, கயத்துல தாலியக் கோர்த்துப் போட்டுண்டேன். எங்காத்துகாரர் குடுடி நகையைன்னப்ப இதோ இதான் நகைன்னுட்டேன். வாயடச்சுப் போனார்… ‘

மாமி படபடவென்று பொரிந்தாள்.

‘மோர் வேணுமாம்மா ? ‘

ஆச்சி கதை கேட்கும் ஆவலில் உபசரித்தாள்.

‘அம்மாடி, நேக்கு வேண்டாம்மா. இன்னிக்கு விரதம். ஒரு தண்ணி கூட எங்கயும் தொடக் கூடாது. ஆத்துல போய்த்தான் இனி தொண்டையை நனைக்கணும். நீங்க கேட்டதோ போறும், குளிர்ச்சியா இருக்கு. இப்பக் கூட உங்காத்து மாமா இல்லேங்கறதுக்கோசரம்தான் இத்தன நாழி இருக்கறேன். ஒரு வீட்டுல உக்காரவே மாட்டேன். காலங் கிடக்கற கிடையில் பயமான்னா இருக்கு ? ‘

‘ நீங்க என்னம்மா வயசானவாதானே ? ‘

ஆச்சி கேட்டாள்.

‘மூச்! சாகற வரைக்கும் மானத்தைக் காப்பத்த வேண்டாம் ? உசுரை விட்டுறலாம்மா, உசிரை விடுறலாம். மானன்னா பெரிசு! என்ன சொல்றேள் ? ‘

‘தடையென்ன ? ‘ – ஆச்சி ஒத்துப் பாடினாள்.

வித்யா சிரித்தாள். ஆச்சிதான் எப்படி எல்லோர் கருத்துக்கும் ஒத்துப் போகிறாள்!

‘ஏண்டிம்மா சிரிக்கறே ? சத்தியம் நான் சொல்றது. ரோட்ல போறவன் பாத்தாலே உயிர் போயிடறது. நீ கல்யாணத்துக்கு நிக்கற பொண்ணு. காலேஜ் போறது சரி! மத்த நேரம் அனாவஸ்யமா வாசல் நடையில வந்து சும்மா நிக்கறதே தப்பாக்கும். கலி காலம்.. நாமதான் ஜாக்ரதையா இருக்கணும்..ஒருத்தர் பல்லு மேல நாக்கைப் போட்டுப் பேசறதுக்கு நாம விடலாமோ…சொல்லு ? ‘

வித்யாவுக்குக் கோபம் சுறுசுறுவென்று ஏறியது. மாமியைக் கன்னத்தில் பளார் பளாரென்று நாலு அறை விடலாம் என்று தோன்றியது.

மாமி விடவில்லை.

‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு நாம என்ன சொன்னாலும் தப்பாப் படறது. நானெல்லாம் கல்யாணம் பண்ணிகற வரை அப்பா, அண்ணா

முகத்தைத் தவிர வேற யாரையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டேன். கல்யாணம் கழிஞ்ச அப்புறம் ஆம்படையான் முகத்தைத் தவிர வேற யாரையும் பார்த்தது கிடையாது. ஆனா இந்தக் காலத்துக் குழந்தைகள் நடக்கற நடையே பயமான்னா இருக்கு ? ஒண்ணொண்ணும் நெஞ்சை நிமிர்த்துண்டு பஞ்ச கல்யாணிக் குதிரை கணக்கான்னா போறதுகள்! கொஞ்சமேனும் அடக்கம் வேண்டாம் ? எனக்கெல்லாம் இத்தனை வயசுக்கும் அன்னியன் பார்த்தாலே உடம்பு கூசிப் போயிடறது.ம்..கலி காலமாகிப் போச்சு. இப்பக் குமரின்னு தெரியறதா, கிழவின்னு தெரியறதா இந்தக் காலப் பசங்களுக்கு ? கிழவின்னாலும் இளிக்கரதுகள், குமரின்னாலும் இடிக்கறதுகள், சண்டாளப் பசங்கள்… ‘

மாமி புலம்பி ஓய்ந்தாள். அம்மாவும், ஆச்சியும் ‘ஆமாமாம் ‘ என்று தலையை அசைத்தார்கள். மாமி விடுவதாக இல்லை. குரலைக் கிசுகிசுப்பாக்கிக் கொண்டாள்.

‘எங்க நாங்குனேரில எங்காத்துக்குப் பக்கத்துல ஒரு பொண்ணு. மூக்கும், முழியுமா லட்சணமா இருக்கும். கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பம். அக்காவுக்கு இன்னும் கல்யாணமாகலை. இது டைப் கத்துக்கப் போறேன்னுட்டு அந்த இன்ஸ்டிட்யுட் பையனையே இழுத்துண்டு ஓடிடுத்து!பெரியவளுக்கே இன்னும் கல்யாணமாகலை. இதுக்கு அவசரத்தை பார்த்தேளா ? அனியாயம்..இனிமே அக்காவுக்கு எவன் வருவான் ? எதுக்குச் சொல்ல வரேன்னா காலம் கலி காலமயிடுத்தம்மா.. நானும் ஒரு பொண்ணைப் பெத்து வளர்த்தேன். ஒரு பேச்சுண்டோ ? தங்கம்னா ? ரேழிக்குக் கூட வர மாட்டா, அவ்வளவு கூச்சம்.பெரியவளாகி ரெண்டே வருஷத்துல ஒருத்தன் கைல பிடிச்சுக் குடுத்துட்டேன். இப்ப பேத்தி இருக்கா..அவளுக்கோசரந்தான் இவ்வளவு திண்டாட்டம்!ஆனா அதுக்கு நகையெல்லாம் இருக்கு..லாக்கர்ல வச்சிருக்கேன்… ‘

‘இவ்வளவு நகையெல்லாம் வைத்திருந்தும் இந்த வயசுல ஏன் இப்படி அலஞ்சு அப்பளம் விற்றுக் கஷ்டப் படுறீங்க ? ‘ என்று யாரும் கேட்கவில்லை.

மாமி கிளம்புவதாக இல்லை. ரவிக்கைக்குள் வைத்திருந்த பர்ஸை எடுத்து ரூபாயை எண்ண ஆரம்பித்தாள்.

‘குழந்தே! கூட ஒரு எட்டாணா தரப் படாதோ ? மாமிக்கு வெத்தலைச் செலவுக்கு ஆகும்.. ‘

சுவாரஸ்யமாக கதை கேட்டுக் கொண்டிருந்த ஆச்சி, அம்மா முகத்தில் லேசான திகைப்பு…

‘என்ன மாமி ? கல்லுக் கல்லா நகையெல்லாம் வச்சுட்டு வெத்தலைக்குப் போய் காசு கேக்கறீங்க ? ‘

‘நகை இருந்தா என்னடி குழந்தே ? அதெல்லாம் பேத்தியோடதல்லவா ? வெத்தலைக்குச் செலவு பண்ற பணத்துல பாவம் குழந்தைக்கு இன்னொரு பவுன் போடலாமே ? ‘ என்றாள் மாமி சாமர்த்தியமாக.

வித்யா சிரித்துக் கொண்டே ஒரு எட்டாணாவைக் கொடுத்தாள். மாமி பணத்தை வாங்கிக் கொண்டு, தூக்குகளை எல்லாம் எடுத்துக் கொண்டு,

‘போய்ட்டு வரேம்மா.. ‘ என்று கிளம்பினாள். அவள் வெளியே போகவும், சங்கரன் மாமா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

‘வாடா சங்கரா… ‘

ஆச்சியும், அம்மாவும் வாயெல்லாம் பல்லாக வரவேற்றனர். சங்கரன் மாமா ஆச்சிக்கு உறவு. ஒன்று விட்ட அண்ணன் மகனோ என்னவோ!

சங்கரன் மாமாவுக்கு ஜாகை பக்கத்தில் கிராமம். சொத்து ஏராளம். தோப்பு, வயல் எல்லாவற்றையும் குத்தகைக்கு விட்டு, ஜாலியாகத் திரியும் ‘ஷோக் ‘ பேர்வழி. பத்து நாட்களுக்கு ஒரு முறை டவுணுக்கு வராவிட்டால் மாமாவுக்கு மண்டை வெடித்து விடும். வரும் நேரமெல்லாம் ஆச்சியை வந்து பார்க்காமல் போக மாட்டார். அடிக்கடி ‘ஆரெம்கேவி ‘யில் மனிவிக்குப் புடவை வாங்கிக் கொண்டு வந்து காட்டுவார்.

‘என்ன மாமா ?எப்பவும் நீங்களே புடவை செலக்ட் பண்ணிடறீங்களே ? அத்தைக்குப் புடிக்க வேண்டாமா ? ‘ என்பாள் வித்யா.

‘ நீ பெரிய காலேஜ் குட்டி..ஜாக்கட் எடுக்கணும்னா கூட உன்னக் கேக்கணும். அத்தைக்கு என்ன ?சமர்த்து..எனக்குப் பிடுச்சுதுன்னா அவளுக்குப் போதும்! ‘ என்பார், பெருமையுடன்

‘இவ எங்கே இங்க வந்துட்டுப் போறா ? ‘ என்றார் மாமா, தெருவில் இறங்கிய அப்பள மாமியைப் பார்த்தவாறே.

‘இந்த மாமிகிட்டதான் இப்ப அப்பளம் வாங்கறோம், ‘ என்றாள் அம்மா.

‘அடப் பாவமே! ‘ என்றார் மாமா அதிர்ந்தவராக.

‘ஏண்டா, என்ன ? ‘ என்றாள் ஆச்சி.

‘மாமி யாரு தெரியுமா, உனக்கு ? ‘

‘ரெண்டு மாசமாத்தான் இந்த மாமிகிட்ட வாங்கறோம். நான்கு நேரி போலருக்கு ஊர்…… ‘

‘ நான்கு நேரி சீனிவாசன் இருக்காரே, அவருடைய ‘வப்பாட்டி ‘ ‘என்றார் மாமா, கடைசிச் சொல்லைச் சிறிது கிசுகிசுப்பாக.

ஆச்சியும், அம்மாவும் அதிர்ந்தனர்.

‘என்னடா சொல்றே ? ‘ என்றாள் ஆச்சி.

‘ஆமாம். சீனிவாசன் உயிரோட இருக்கற வரை நன்னா செலவழிச்சே அழிச்சா எல்லாத்தையும். சங்கீத சபாவுல ஒரு கச்சேரி விட மாட்டா. சீனிவாசனும் வித வித்மா நகையெல்லாம் போட்டதா பேச்சு. அந்த நகையெல்லாம் போட்டுப் பொண்ணைக் கல்யாணம் ப்ண்ணி அனுப்பினா. சீனிவாசன் இவளுக்குக் குடியிருக்க வீடு மட்டும் எழுதி வச்சார் போல. அப்புறம் திடார்னு அவரும் போய்ச் சேர்ந்துட்டார். இப்பப் போதாக் குறைக்கு மகளுக்குப் புருஷனோட என்ன தகறாறோ, அவளும் தன் பொண்ணோட இங்க வந்துட்டா…பாவம்..தலைஎழுத்தை பாரேன்….. ‘

மாமா பேசிக்கொண்டே போனார்.

‘இங்க வந்து ரெம்ப யோக்யமாப் பேசறாளே!..ம்..கலி காலந்தான்…போ.. ‘ என்றாள் ஆச்சி.

***

Series Navigation

அலர்மேல் மங்கை

அலர்மேல் மங்கை