கருத்தியல் தர்மம் காக்க!

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

பி.ஏ.ஷேக் தாவூத்


இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய மிகப் பெறும் அருட்கொடை மறதி. அதனால்தான் தனக்கு வாழ்வில் ஏற்பட்ட பல துன்பகரமான சம்பவங்களை எல்லாம் கால இடைவெளிகளில் மனிதன் மறந்து போய்விடுகின்றான். இவ்வித மறதி இல்லாவிட்டால் மனிதன் மனநோய்க்கு ஆளாக நேரிடலாம். ஆனால் ஒரு சிலருக்கு மறதியே வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தி விடும். தெரிவு செய்த மறதி (selective amnesia) வகையை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம். சில தெரிவு செய்த விடயங்களை மட்டும் இந்த நோய் பாதித்தவர்கள் மறந்து விடுவார்கள். நண்பர் மலர்மன்னன் அவர்கள் இத்தகைய selective amnesia மறதியினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். (இந்த நோய் அவருக்கு இல்லாவிட்டால் இஸ்லாமிய வெறுப்பு என்ற ஓர் கண்ணாடி அணிந்தே எல்லாவற்றையும் காண்கின்றார் என்ற முடிவுக்கு நம்மால் வரமுடியும். அதாவது மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாக தெரிவது போல) ஏனெனில் அமீனின் கடிதத்திலிருந்து ஒரு மேற்கோளை காட்டிவிட்டு பின்னர் இல்லை என்று அடுத்த வாரத்தில் மறுத்து அதற்கு அடுத்த வாரம் அமீன் அவர்களின் அதே கருத்துக்கே ஆதாரம் கேட்டு நிற்கின்றார். (“காட்டுமிராண்டி அரபுகளின் வாழ்வை செப்பனிட வந்தவர் மட்டுமே முஹம்மது (ஸல்) அவர்கள் என்று”)

சமூகத்தில் கருத்தியலை உருவாக்கக் கூடிய எந்த ஒரு எழுத்தாளனுக்கும் இத்தகைய தெரிவு செய்த மறதி நிலை ஏற்படுதல் கூடாது. அப்படி ஏற்படின் முதல் வாரம் தான் சொன்ன கருத்துகளையே அடுத்த வாரம் மறுத்து அதற்கு அடுத்த வாரம் அதையே ஆதரிக்கும் அவல நிலை ஏற்பட்டுவிடலாம். அது சமூகத்திற்கு தீங்கை விளைவிக்கும் செயலாகவும் அமைந்துவிடலாம். அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இந்த மறதி நோய் வசதியாக இருக்கலாம். திருவாளர் அத்வானி அவர்களுக்கு இந்த மறதி நோய் இருக்கின்றது என தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முன்னர் எழுப்பிய குற்றச்சாட்டு நமக்கு இங்கு நினைவுக்கும் வரலாம். அரசியல் தேவைகளை பொருத்து அந்த நோய் குணமாகவும் செய்யலாம். அது இங்கு பேசுபொருளும் அல்ல. காட்டுமிராண்டி அரபுகளின் வாழ்வை செப்பனிட மட்டுமே இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வந்தார்கள் என்பதற்கு நண்பர் மலர்மன்னன் எந்த ஆதாரத்தை முன்வைக்கின்றார் என்பதே என்னுடைய “தேறுக தேறும் பொருள்” கடிதத்தின் சாராம்சம். இறைத்தூதர் காட்டுமிராண்டி அரபுகளின் வாழ்வு செப்பனிடலை மட்டுமே செய்ய வந்ததாக குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ அல்லது வரலாற்றின் மற்ற நூல்களிலோ எங்கு இருக்கிறது என்பதை நண்பர் மலர்மன்னன் விளக்கினால் நன்றாக இருக்கும்.

நண்பர் மலர்மன்னன் தனக்கு இருக்கும் selective amnesia வை மறைக்க கருத்து திரித்தலிலும் ஈடுபடுவது மிகவும் அருவருக்கத்தக்க செயலாகவே இருக்கிறது. “பிற மதத்தவர்கள் கடவுளாக வழிபடுபவர்களை இழிபடுத்தாதே” என்ற ஓர் அறிவுரை குர்ஆனில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிற போது இந்து சமயத்தவர்களில் சிலர் கடவுளாகவோ அல்லது அதற்கு இணையானவர்களாகவோ நினைத்து வணங்கப்படும் ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் நான் எப்படி இழிவுபடுத்த முடியும்? அவர்களை எங்கு இழிவுபடுத்தினேன் என்பதை நண்பர் மலர்மன்னன் விளக்க வேண்டும்.

நண்பர் மலர்மன்னன் அடுத்த ஒரு கண்டுபிடிப்பையும் (அதாவது அறியாமையை) தன்னுடைய கடிதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். உருது மொழி பேசுபவர்கள் எல்லாம் நேரடியாக அரபு வழி முஸ்லிம்கள் மற்ற மொழி பேசுபவர்கள் மதம் மாறியவர்கள் என்ற ஓர் அற்புதமான வரலாற்று உண்மையை சொல்லியிருக்கிறார். உருது மொழி பேசும் இந்துக்களை எந்த பட்டியலில் சேர்க்க போகிறீர்கள் மலர்மன்னன் அவர்களே? இந்தியாவை பொறுத்தவரை இருக்கின்ற முஸ்லிம்களில் 99 சதவிகிதம் இந்திய மண்ணை சார்ந்தவர்கள் . இஸ்லாத்தை தம்முடைய வாழ்வியல் நெறியாக தழுவிக் கொண்டவர்கள் இவர்கள். குற்றச்சாட்டு வைப்பவர் தான் அதை நிரூபிக்க வேண்டும். இது தான் உலக நியதி. இதை தான் இந்திய அரசியல் சட்டமும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் நண்பர் மலர்மன்னன் ஒரு குற்றச்சாட்டை எம்மீது வைத்து விட்டு (எம்முடைய முன்னோர்கள் நிர்பந்தந்தால் இஸ்லாத்திற்கு மாறியவர்கள் என்ற குற்றச்சாட்டு) நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க சொல்கிறார். இவருடைய நீதியின் அளவுகோலை எங்கு கொண்டு போய் நிறுத்துவது? ஒருவேளை இது தான் மனுநீதியோ? இந்த மனுநீதியே தேவையில்லை என்றுதான் எம்முடைய முன்னோர்கள் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்களோ என்னவோ?

மேலும் மலர்மன்னன் அவர்களின் கடிதத்தில் பாகிஸ்தான் மதரசாவில் குண்டுவெடித்தது என்ற தகவலை படிக்கும்போது இங்கே பெண் சாமியாரினியும் ஆன் சாமியாரும் மாலேகான் மசூதியில் குண்டு வைத்து விட்டு ஏன் சாவு எண்ணிக்கை குறைவாக இருந்தது என்ற அவர்களின் தொலைபேசி உரையாடலும் ஞாபகத்திற்கு வருகிறது. இவை இப்போது பேசுபொருளும் அல்ல. அவரின் கடிதத்தில் பல பேசுபொருளை தாண்டி திசைதிருப்புதலை நோக்கியே பயணிக்கிறது.

இஸ்லாத்தை பற்றிய எல்லா புரிதலும் தமக்கிருப்பதாக சொல்லும் நண்பர் மலர்மன்னன் அவர்களுக்கு, இஸ்லாம் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது ஆறாம் நூற்றாண்டில். இந்த சிறிய வரலாற்று உண்மை கூட தெரியாத மலர்மன்னன் தம்முடைய கடிதத்திலும் கட்டுரையிலும் பதினான்காம் நூற்றாண்டு என்றே எழுதுகிறார். இதில் தனக்கு எல்லாம் தெரியும் என்று அறுதியிட்டு வேறு சொல்கிறார். இவரிடம் எப்படி கருத்து பரிமாற்றம் செய்ய முடியும் என்ற கவலை வேறு எம்மை இப்போது பீடித்திருக்கிறது. ஒரு விடயம் தெரியாதது குற்றமல்ல. ஆர்வமிருந்தால் கற்றுணர்ந்து விடலாம். ஆனால் தெரியாத ஒரு விடயத்தை எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவது அபத்தமானது. இது ஆபத்தனாதும் கூட. இத்தகைய அபத்தைத்தான் மலர்மன்னன் இவ்வளவு நாளும் செய்து கொண்டு வருகிறார். அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடைய அன்பர் ஸ்வயம் சனாதன் அவர்களிடம் (அன்பர் ஸ்வயம் சனாதன் எழுப்பிய அனைத்து வினாகளுக்கும் ஒரு கடிதத்தில் பதிலளிக்க முடியாது. அவரைப் போன்ற அன்பர்களின் சந்தேகங்களை போக்கும் வண்ணம் விரைவில் இஸ்லாத்தை பற்றிய ஒரு தொடரை எழுத இருக்கிறோம்) இருக்கும் தேடலில் நூறில் ஒரு பங்காவது மலர்மன்னனிடம் இருக்குமா என்பது சந்தேகமே.

எல்லாம் தெரிந்ததாக சொல்லிக் கொள்ளும் நண்பர் மலர்மன்னன் அவர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டல். விண்வெளியில் சாதனைகளை புரிந்து வருகின்ற நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் வாயில் முகப்பில் “கற்றது கைமண்ணளவு” என்ற பழமொழி தான் எழுதியிருப்பதாக ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம். அது உண்மையா அல்லது பொய்யா என்று எனக்கு தெரியாது. ஆனால் இந்த பழமொழி உணர்த்த விரும்பும் உண்மையை நண்பர் மலர்மன்னன் அறிந்து கொண்டால் சரியே.

– பி.ஏ.ஷேக் தாவூத்

pasdawood@gmail.com

Series Navigation