This entry is in the series 20110320_Issue

கயல்விழி கார்த்திகேயன்


இதுவரை திரையிலும் கண்டிராத
ஒரு பனிச்சூழல்..
திட்டுத்திட்டாக ரோஜா இதழின்
நிறத்தில் சில துளி அடையாளங்கள்..
நகர்கிறது குவியம் மேல் நோக்கி..
என் கடைவிழி வழிந்தோடும் குருதிக்கண்ணீர்
கீழுள்ள பனிமேல் பட்டு
தோன்றுகிறது ரோஜாநிறத் திட்டு..

மையிட்டது போல்
குருதி நிறை கண்கள்
திரண்டிருக்கின்றன ஒரு திசையில்..
பாசமாய்ப் பல நாள் சித்திரமென
பார்த்து ரசித்த உன் பாதத்தடங்கள்
கொடூரமாய்த் தெரிகின்றன முதன்முறையாய்,
தடத்தில் குதிகால் என் பக்கம் என்பதாலோ!

கண்ணுக்கெட்டும் தொலைவுமட்டும்
உன்னைத் தேட நினைத்துப்பின்
கானல்நீராய் உன்னைக் கனாவிலும்
காண விருப்பமில்லாமல் கண்திறக்கிறேன்..

கண்மூடாதிருக்கும் என் மடிகணினியின்
திரையில் முகம்காட்டி முகநூலில்
சொல்கிறாய் “கனவுகள் இனிதாகட்டும்!”

Series Navigation