ஓ…. கல்கத்தா!

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

ப்ரகாஷ்ராயன்


தலைப்பைப் பார்த்து, இருபது, முப்பது வருடங்களுக்கு முன் வந்த ஒரு விவகாரமான நாடகம் பற்றிய சமாசாரம் என நினைத்து உள்ளே வந்தவர்கள் மன்னிக்கவும். இது வேறு.

கல்கத்தாவுக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது அது கொல்கொத்தாவாக மாறவில்லை. படியளக்கும் முதலாளியின் கட்டளை . மறுக்க முடியாது. வேலைக்கு சேரும் போது, எல்லாவற்றிற்கும் தலையாட்டிவிட்டு, ஊருக்கு போ என்றதும் ‘அய்ங் உய்ங் ‘ என்று சிணுங்கினால் வேலையிலிருந்து தூக்கி விடுவார்கள். வேலை ஒன்றும் அப்படி கஷ்டமானது இல்லை. பிச்சைக்காரன் செய்கிற வேலைதான். என்ன டை, ஷூ போட்டுக் கொண்டு பிச்சை எடுக்கலாம். என் திருவோட்டில் விழவேண்டியது சில்லறைகள் அல்ல. ஆர்டர்கள். குறைந்தது, 10 லட்ச ரூபாய்க்கான ஆர்டர்கள்.

செக் லிஸ்ட் ஒன்றை தயார் செய்து, மறக்காமல், டூத்பேஸ்ட்,ப்ரஷ், விஐபி உள்ளாடைகள், ரயில் டிக்கெட் என்று சூட்கேசில் அடைத்துக் கொண்டிருந்தபோது, கலிங்கத்தில் தண்டவாளத்தில் ரயில் தடம் புரண்டது என்று சுகன்யா பாலகிருஷ்ணன், வீட்டு வரவேற்பறையில் செய்தி சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆஹா! நல்ல சகுனம்.

ராம் விலாஸ் பாஸ்வான் மீது பாரத்தைப் போட்டு விட்டு கிளம்பினேன்.

குட்டியூண்டு மண்சட்டிகளில், இஞ்சி தட்டிபோட்ட டாயை குடித்துக் கொண்டே ஒன்றரை நாளை செலவாணி செய்து, கடைசி ஸ்டேஷனில், ரயிலில் இருந்து இறங்கியதும்தான் அது கல்கத்தா இல்லை ஹெளரா என்று தெரிந்தது.

‘வேர் இஸ் கல்கத்தா ? ‘

நாலு பேரிடம் தமிழ், ஆங்கிலம் , அரைகுறை இந்தி, சைகை பாஷையில் எல்லாம் சண்டை போட்டு, கல்கத்தாவை கண்டு பிடித்தேன். பாலத்தை கடக்க வேண்டுமாம்.

மேலே ஆதிகாலத்து டிராமும், அடியில் அதி நவீன மெட்ரோ டிரெயினும் ஓடும் வினோத நகரம் அது. கல்கத்தாவாசிகளின் மீன் ஆசை, கால்பந்து வெறி, நகர நெரிசல், சிவப்பு மையில் எழுதப்படும் கவிதைகள், ஓகாரம் சேர்த்த உச்சரிப்பு, மோஹன்பகான், கடுகெண்ணை வாசம், பழம்பெரும் தியேட்டர்கள், தேபஸ்ரீராய் , தேசிய நூலகம், கண்ணில் நீர் வர கையேந்திபவனில் சில்லி சிக்கன் சாப்பிடும் வெள்ளைக்காரர்கள், அலுக்கவே அலுக்காத ரபீந்த்ர சங்கீத் , வெண்கழுத்தில் கருகமணியுடன் கையில்லா ரவிக் அணிந்த அழகுப் பெண்கள், காளி காட்(ghat), ஹெளரா இரும்புப் பாலம் போன்ற சேதிகள் எல்லாம் பலரும் அறிந்த ஒன்றுதான் புதுசாக வேண்டும் என்றால், ஹெளரா டு எஸ்பிளனேட் பஸ்ஸில் பக்கத்து சீட்டில் உரசிக்கொண்டு அமர்ந்த கடுகெண்ணை வாசக்காரியின் அருகாமையை சொல்லலாம்.

லேகின் அபி நை. ஃபிர் கபி.

ஏற்கனவே, புக் செய்யப்பட்ட இடத்தில் செக் இன் செய்து, குளித்து முடித்து தயாரானதும் பார்த்தால் மணி 12 ஆகிவிட்டிருந்தது.

முதல் நான்கு நாட்கள் ஏதும் ப்ரச்சனை இல்லை. வழக்கமான அதே வேலை. , சென்னை தெருக்களில் சுற்றுவதற்கு பதிலாக அபனிந்த்ர சரானி, சவுரங்கி தெரு, ஏஜேசி போஸ் ரோட், ஷோவா பசார் என்ற வினோத பெயர் கொண்ட தெருக்களில் சுற்ற வேண்டும். வேறு ஏதும் மாற்றமில்லை.

நான்காவது நாள் ஒரு பெரியவரை சந்தித்தேன்.

வளைகுடா நாடுகளில் இருந்து கச்சாவை இறக்குமதி செய்து, அரித்து புடைத்து, சலித்து, கலப்படம் செய்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வஸ்துவைத்தான் இந்தா வெச்சிக்கோ என்று சில தேவதைகள் நமக்கு கொடுக்க, அதை வைத்துத்தான் நீங்களும் நானும் ஸ்கூட்டர், ஏரோப்ளேன் என்று சுகமாக ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அஃகோர்ஸ் லிட்டருக்கு முப்பத்தி சில்லறை கொடுத்துத்தான்.

நான் பார்த்த அந்த பெரியவர், அப்படியாகப் பட்ட ஒரு தேவ நிறுவனத்தின் ஒரு உப தளபதி.

அரை மணி நேரந்தான் அப்பாயின்மெண்ட்.. மிஸ்டர் ஜொயப்ரகோஷ் என்று என் பெயரைக் கொலை செய்த அந்த துவாரபாலகியைக் மன்னித்து விட்டு உள்ளே சென்று, வந்த வேலையைத் துவங்கினேன். பிச்சை எடுத்த அந்த விவரெமெல்லாம் இந்த புலம்பலின் நோக்கத்துக்கு அப்பாற்பட்டது. அது வேண்டாம்.

15 நிமிடங்களிலேயே வேலை முடிந்ததும், நான் நன்றி சொன்னேன். வேலை முடிந்ததென்றால், திருவோட்டில் சில்லறை விழுந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. ‘இன்று போய் நாளை வா, நான் எங்கள் தொழில் நுட்ப ஆசாமிகளிடம் பேசுகிறேன். ஒரு டெமோவுக்கு ஏற்பாடு செய் ‘ என்றார்.

இது போதுமே. டையையும் சூட்கேசையும் பாம்ப்லட்டுகளையும் பார்த்தாலே துரத்தியடிக்கும் ஆசாமிகளுக்கு நடுவில் இவர் தெய்வமில்லையோ ?

எங்கள் நிறுவனத்தின் சார்பாக, நாங்கள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வு ஜர்னலை அவருக்கு அளித்தேன். புரட்டிப் பார்த்து விட்டு,

‘What ‘s this ? It ‘s all trash என்று கமெண்ட் அடித்து விட்டு ஞாபகமாக அதை ட்ராயரில், அதாவது மேஜை ட்ராயரில் போட்டுக் கொண்டார்.

நான் கிளம்ப யத்தனிக்க, அவர் just a minute என்றார். நான் மீண்டும் அமர்ந்தேன். டைரி, காலண்டர் ஏதாவது கொடுப்பாராயிருக்கும். பசி வேறு உயிர் போகிறது.

அவர் என்னைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். சரிதான், தாத்தாவுக்கு பொழுது போகலை போலிருக்கு.

என்ன படித்து இருக்கிறேன், என்ன சம்பளம், கல்யாணம் ஆகி விட்டதா ( கிளவனுக்கு கொழுப்பு, 24 வயசுப் பயலைப் பாத்து கேக்கற கேள்வியா இது ?), கல்கத்தா பிடித்திருக்கிறதா ? ( ஆம் என்று பொய் சொன்னேன்), கணிப்பொறி படித்து விட்டு ஏன் இந்த வேலை செய்கிறேன் ( என் தலைஎழுத்து. வேற என்ன ? ), கல்கத்தாவில் எங்கே தங்கி யிருக்கிறேன் ( சொன்னதும், அது ரொம்ப கலீஜான இடமாச்சே), என்றெல்லாம் விலாவரியாகக் கேட்டார்.

சாப்பிட்டாயா என்ற கேள்விக்கு மட்டும் உண்மையான பதில் சொன்னேன்.

சொன்னதும், ‘why dont you have lunch with me ? ‘ என்றார் (ஊர் விட்டு ஊர் வந்தவனுக்கு விருந்தோம்பல் செய்கிறாராம்).

எனக்கு வியப்பு. ஏனென்றால் இது வழக்கமில்லை. மேலும் பிச்சைக்காரர்களிடம் பரிவு காட்டுவது நம் தேசத்து நடைமுறையல்லவே. வயிறு சரி என்று சொன்னாலும், வாய் அதை வேண்டாம் என்று நாசூக்காக மறுத்தது. . நல்ல பசியுடன் வெளியில் வந்தேன்.

இங்கே ஒரு விஷயத்தைச் சொல்லியாகவேண்டும். அதுதான் சாப்பாட்டுப் பிரச்சினை. சென்னை அல்லது ஐதராபாத் போன்ற நகரங்கள் மாதிரி ஒட்டல்கள் அங்கு கிடையாது. காலை உணவு டாக்கடைகளில், ரசகுல்லா, பூரி, சமோசா என்று கிடைக்கும். எஸ்பிளனேட் அருகில், மலையாளத்தார் மெட்ரோ தியேட்டர் மாடியில் நடத்தும் எதோ ஒரு விலாஸில் நம்ம பக்கத்து ‘ஊணு ‘ கிடைக்கும். மதியம் வர்த்தக மையங்கள் நிறைந்த பகுதிகளில் நடைபாதை வண்டிகளில் கிடைக்கும் உணவுகள்தான் பெரும்பாலும். இரவும் அவ்வாறே.

வந்த முதல் நாளில் ஒட்டலைத் தேடித்தேடி களைத்துப் போய், கடைசியாக சிக்கிய ஒரு ஒட்டலில் நுழைந்ததும், விலைப் பட்டியலில், சொத்தையே எழுதிக் கேட்டார்கள். எனக்கு சார்லஸ் பாபேஜ் காலத்திய கம்ப்யூட்டரும் ஒன்றும் , BIFR கறுப்பு கட்டம் கட்டிவிட்ட ஒரு நிறுவனத்தின் பதினெட்டு பங்குகளும் தவிர வேறு சொத்து ஏதும் இல்லாததால், டண்டா பானி மட்டும் குடித்து விட்டு வெளியே வந்து விட்டேன்.

அதிலிருந்து கையேந்தி பவன்கள் தான். அடுத்த முறை இந்த ஊருக்கு வருவதற்குள் அப்பாவை நாமினியாகப் போட்டு ஒரு பாலிசி எடுத்துவிட்டுத்தான் இம்மாதிரி இடங்களில் சாப்பிடவேணும் என நினைத்துக் கொண்டேன் ( மகன் தந்தைக்காற்றும் உதவி ? ? ? ?) .

அங்கே சாப்பிட முதலில் ஒரு மாதிரியாக இருந்தாலும், அம்மாதிரி இடங்களில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து தேற்றிக்கொண்டேன். அவர்களில் பலர், பூட்ஸ் டை அணிந்திருந்த கனவான்கள்., அவர்கள் தோரணையும் வந்து இறங்கும் வண்டிகளையும் வைத்துப் பார்த்தால், அவர்கள் நிச்சயம் என்னை விட பலமடங்கு அதிகம் சம்பாதிப்பவர்களாக இருக்க வேண்டும். இது ஒரு ஆறுதல்.

லிப்டில் இருந்து வெளியில் வந்து ,சற்று தூரம் நடந்து , செளரங்கி சாலையின் வலதுபுறத்தில் இருக்கும் ஷேக்ஸ்பியர் சரானி என்னும் சந்தில், வழக்கமான இடத்தில் சாப்பிடச்சென்றேன்.

சாலையைப் பார்த்த வண்ணம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, முற்பகலில், பார்த்த அதே பெரிசு, காரில் என்னைக் கடந்தது. என்னைப் பார்த்தாரா என்று தெரியவில்லை. பார்த்திருந்தால் , நான் அழைத்த போது, எக்சிக்யுடிவ் லன்ச்சை வீம்பாக மறுத்து விட்டு நடுரோட்டில் போஜனம் செய்கிறான் பார் என்று கிண்டலாகச் சொல்லாவிட்டாலும், மனதிலாவது நினைத்துக் கொள்வாரே என்று வெறுப்பாக இருந்தது.

அடுத்தா நாள் அவரை பார்த்தாக வேண்டும் திரும்ப எதிர்பட்டால் என்ன செய்வது என்று ஒரு மறைவில் நின்று கொண்டு சாப்பிட்டு முடித்தேன். நல்ல கூட்டம்.

காசு கொடுத்துவிட்டுத் திரும்பிய போது, அங்கே, அந்த பெரியவர், தன் காரின் மீது ஒரு ப்ளேட்டில் மசால் தோசையை வைத்து, சாம்பார் சட்னி சகிதம் ஹதம் செய்து கொண்டிருந்தார். அதை விட விசேஷம், கண்டு கொள்ளாமல் போன என்னை, கைதட்டி கூப்பிட்டு ஹலோ சொன்னதுதான்.

icarus1972us@hotmail.com

Series Navigation