மாலதி
நான் பயப்படுவது விமரிசனங்களுக்கு அல்ல. பாராட்டுகளுக்குத் தான். குவிந்த கைகளுக்குள் படை இருக்கும் என்று சொல்லுவார் வள்ளுவர். அது என் வரை சரி. அப்படித்தான், என் கடைக்குட்டி மைத்துனர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் என் ‘வரிக்குதிரை ‘ புத்தகத்தை வெகுவாக பாராட்டியதாக என் மூத்த மைத்துனர் அறிவித்தார். வழக்கம்போல என் வயிற்றில் கிலி உட்கார்ந்தது.பாராட்டா ? அடக் கடவுளே! அது வில்லங்கமாகத்தானே இருந்து தொலைக்கும் ?விட்டு விட்டேன் அதோடு.நல்லகாலம். என் மூத்தாரும் கடைக்குட்டியும் இலக்கியப் பரிச்சயமுள்ளவர்கள்.கொச்சைகளை அடையாளம் காணத்தெரிந்தவர்கள்.குறிப்பிட்ட நண்பர் ஒரு தினப்பத்திரிகை மலரில் வரிக்குதிரைக்கு அழகான பாராட்டுரை எழுதினார். காமம் எழுதத் தயங்காத பெண் கவிஞராக என்னை ஏற்றி வைத்தார். ‘வெளியூர்க்காரன் ‘ கவிதை காமச்சுவை சொட்டச்சொட்ட எழுதப்பட்டிருப்பதாகச் சொல்லியிருந்தார். ஒரு பெண் தனக்குப் பரிச்சயமான ஆடவன் ஒருவன் வெளியூரிலிருந்து வந்து அவளிருக்கும் ஊரில் ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கென சேர்ந்து சிகிச்சையிலேயே உயிர் நீத்துவிட்ட மிக உருக்கமான சம்பவத்தை விவரிப்பதாக இருக்கும் கவிதை. ‘ஆறு மணி பஸ்ஸில் ஆறாமல் சென்று விட்டான் ‘ என்று இறப்பு குறிக்கப்படும். என் முன்னே வந்தவன் என் கண்மின்னல் கொண்டு சென்றான், என்னுடைய எல்லாமும் தன்னுடனே கொண்டு சென்றான், என்கிறது போல பூடகமான வாக்கியங்கள் இருந்தாலும் மிகத்தெளிவாக ‘தனிமை பத்திரத்தில் தீண்டத்தோன்றவில்லை,அமைதி அன்பு விரிவில் பேசவும் வார்த்தையில்லை ‘ என்ற பிறகு அதில் எப்படி காமம் சொட்டுமோ தெரியாது.
மழைத்தூறல் மாலையில்
அலுவல் நேரத்தில்
வெளியூர்க்காரன்
அசரீரியாய்
ஒலித்தான்
அரை நாள் பரீட்சைக்கு
அன்றே வந்தேன் என்றான்
அத்தனையும் விட்டு
அப்படியே விட்டு
ஓடோடிச்சென்றேன்
என்னைக் கண்ணில்
நிரப்பிக்கொண்டான்
இப்படி ஆரம்பிக்கும் கவிதை.ஆண் பெண் இருந்ததால் இடையில் அன்பும் இருந்ததால் முடிவுக்கு வந்து விட்டார் நண்பர்.
இப்படி கவிதைகளுக்குள் யானைப் பள்ளங்கள் இருக்கும் என்று மேல் தட்டு விமரிகர்களுக்குத்தெரியும். அவர்கள் எப்படி விமரிசனம் செய்வார்கள் தெரியுமா ?
இதோ பாருங்கள். என் ‘கத்தி ‘ கவிதை கனவி ‘ல் இடம் பெற்றிருந்தது. கத்தி ஒரு கேள்வியில் முடியும். விமரிசகர் சொல்கிறார். இதோ கத்தி கவிதையில் மாலதி கேட்கிறார் ஒரு கேள்வி. ‘இருபது வருடங்களுக்குக் கத்தியை ஏன் சுமந்தாய் ? ‘இந்தக் கேள்விக்கு யாருமே பதில் சொல்ல முடியாது. பதில் சொல்லக் கூடிய கேள்வியா அது ? அவ்வளவு தான். அப்படியே மேலே போய் விட்டார். கத்தியைத் தொங்கலில் விட்டு விட்டார்.தொகுப்பில் நான் கவிதைக்கு வீம்பு ‘ என்று தலைப்பு வைத்தேன். எனக்கு எதுவும் தொங்கலில் இருந்தால் பிடிக்காது.[இதில் என் கவிதையை மாலதிமைத்ரி எழுதியதாக வேறு சொல்லிட்டார். வேறு பேரிலாவது எனக்கு கவனம் கிடைத்ததே!] இன்னொரு உயர் உயர் ரகமிருக்கிறது விமர்சனத்தில். அ.முத்துலிங்கம் பற்றிப் பேசும்போது கி.ராஜநாராயணனை விலாவரியாகப் பேசுவது.இது செமை ஏமாற்று. தெரியாதவர்களுக்கு இரண்டு பேரையும் எந்த வகையில் சேர்க்கலாம் என்று புரியாமல் போகும். கி.ராஜநாராயணனோடு ஆபுதீனைப் பேசினால் அர்த்தமிருக்கும். பாலியத்தின் காட்டமான நெடியை மூக்குப்பொடி போலத் தூவி அனுபவிக்கவிட்டவாறே வட்டார வழக்கில் நாட்டாரின் சோகங்களைச் சொல்லிக்கொண்டு போவது இருவருடைய பொதுத் தன்மை. கி.ரா.வுக்கும் அ.முத்துலிங்கத்துக்கும் என்ன சம்பந்தம் ? கி.ரா. டெல்லி.அ.மு. சென்னை. அட!டெல்லியில் குதுப் மினார், சென்னையில் வங்காளவிரிகுடா, அதற்குச்சொன்னேன். அது வேறு இது வேறு. பரப்பான பரப்பு செம்பரப்பு முத்துலிங்கம். கி.ரா. செக்கு மாடு. ஆனால் பயங்கர உழவு. எதற்குச் சொல்கிறேன் என்றால் விமர்சனம் செய்யும்போது expose ஆகிற சாத்தியங்கள் மிக அதிகம். அதற்குத்தான் நிறைய பேர் வாயில் நுழையாத வெளிநாட்டுப்பேர்களின் லிஸ்ட்டை வைத்துக்கொண்டு அவ்வப்போது வெளியே நீட்டி மிரட்டுவார்கள். நமக்குத்தான் நெட்டுரு பண்ணவே வரமாட்டேன் என்கிறதே!அதனால் உண்மையாக விமரிசனம் பண்ணியாக வேண்டியிருக்கிறது. போன வாரம் ‘எல்லாக் கவிஞர்களும் எல்லா வார்த்தையும் போட்டு எழுதி வைக்கட்டுமே! ‘ என்று திருவாய் மலர்ந்தேன். ‘மாலதி சொன்னது ஏற்புடையதும் கவனிக்கத்தக்கதும் ஆகும் ‘ என்று ஒருவர் ஆரம்பித்ததுமே குடலைக்கலக்கியது எனக்கு. மாலதி! உனக்கா ? ஏற்பா! போச்சுடா! ஒளிந்துக்கொள் என்று அறிவு வலியுறுத்தியது. ‘பெண்கவிஞர்களின் கவிதைகளை நாம் எய்ட்ஸ் நோயாளிகளின் மனம் திறந்த பேட்டிகளைப்போல clinical ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் ‘என்று அபிப்பிராயம் சொல்லியிருந்தார், ஏற்புடையவர்.
ஐயோ!செத்தேன்! தணிக்கைக்குட்படாத பெண்குரலின் யதார்த்தம் என்பது எய்ட்ஸ் அளவு பயங்கரமானதா ?பூச்சு தான் சுத்தமா ? ஆரோக்கியமா ? அழுக்கும் மலமும் அசிங்கமும் இருந்தாலும் உண்மை அழகில்லையா ? அதை முன் வைப்பது நேர்மையில்லையா ?யதார்த்தம் பரவசமானது என்று நாம் நினைத்திருக்க ‘அது தான் எய்ட்ஸ் ‘ என்று நமக்குத் தெரிவிப்பதை என்ன சொல்ல ?அதுவாவது போகட்டும். அடுத்து வந்தது இன்னொரு ஆதரவுக் கருத்து. ‘வலைகளில் தேடித்தேடி ஆபாசம் பார்ப்பவர்களில்லையா ? அப்படித்தான் கெட்ட வார்த்தை போட்டு எழுதும் பெண்கவிஞர்களும் அவர்களின் வாசகர்களும். அவர்களை ஒன்றும் சொல்லக்கூடாது. ஜனநாயக விரோதம் அது ‘ என்று போட்டுக் கொடுத்தது அந்த ஆதரவு. அட்டேங்கப்பா! போர்னோவுக்கும் யதார்த்தத்துக்கும் வித்தியாசமே கிடையாதா ?
இப்ப சொல்லுங்க,
பாராட்டுக்குத்தானே பயப்பட வேண்டும் ?
மாலதி[6-7-04]
- மயிற்பீலிகள்
- Spellbound (2003)
- நாளை மறுநாள் – திரைப்படமும் அப்பாலும்
- ஓரம் போ – பாராட்டு வருது
- குறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி
- மெய்மையின் மயக்கம்-7
- வெள்ளைப் புலாவ்
- சனிக்கோளையும் அதன் துணைக் கோளையும் உளவு செய்யும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Probing Saturn
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- ஆட்டோகிராஃப் ‘ஓடி வரும் நாடி வரும் உறவு கொள்ள தேடி வரும் ‘
- கடிதம் – ஜூலை 8, 2004
- வேடத்தைக் கிழிப்போம் -1 (தொடர் கவிதை)
- கருக்கலைப்பு
- தமிழவன் கவிதைகள்-பதின்மூன்று
- சூடான் இனப் படுகொலை: ஒரு வேண்டுகோள்
- நேரடி ஜனநாயகம்
- கடிதங்கள் ஜூலை 8, 2004
- கடிதம் ஜூலை 8,2004
- கடிதம் ஜூலை 8 , 2004
- அறிவியலில் ஒரு வாழ்க்கை – நூறுவயதாகும் எர்னஸ்ட் மேய்ர்
- பூச்சிகளின் மிமிக்ரி
- மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் முதுமைக்கும் இனவிருத்திக்குமான மரபணுவைக் கண்டறிந்துள்ளார்கள்
- சேதுசமுத்திரம் திட்டம் தேவையா ?
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும் -2
- கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன்
- நாமக்கல் – பெண் சிசுக்கொலையும், லாரி தொழிலும், எய்ட்ஸ் நோயும்
- ஒரு மரக்கிளையில் சில நூறு குருவிகள் – நாடகம்
- விழிப்பு
- மஸ்னவி கதை — 12 : சூஃபியும் கழுதையும் ( தமிழில் )
- அக்கினிகாரியம்
- திருவள்ளுவர் சிலை பாதுகாப்புப் போராட்டம் : பெங்களூரில் அல்ல… கன்னியாகுமரியில்!
- என் காதல் இராட்சதா …!!!!
- என்னைப்போலவே
- உழைப்பாளர் சிலையோரம்….
- கவிக்கட்டு 14 – மண்ணுக்கும் விண்ணுக்கும்
- கோடிமணி நிலை
- மனம்
- கற்பின் கசிவு
- மரபணு மாறிய.
- கறியாடுகள்
- நீலக்கடல் – (தொடர்) – 27