ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

ஜெயந்தி சங்கர்


பேசினால் ஓரளவிற்கு நன்றாகவே புரிந்து கொண்டு சின்னச் சின்ன பதில்கள் அளிக்கக்கூடிய அளவில் மட்டும் தான் செம்மொழிகளுள் ஒன்றான சீனமொழி எனக்குத் தெரியும். காதுகளைத் தீட்டிக் கொண்டு பொது இடங்களில் கேட்பதனாலும் அறிந்த நண்பர்கள் பேசும் போது வாய் பார்த்திருப்பதனாலும் தான் அது கூடச் சாத்தியமானது என்று சொல்ல வேண்டும். சீனக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாசித்த எனக்கு மூலத்தில் சொல்லப் பட்டிருப்பதை வாசிக்கவும் அறியவும் இயல்பாகவே மிகுந்த ஆவல் எழுந்தது. ஆனால், பேச்சு மொழியை அதுவும் ஆரம்ப கட்டம் வரை மட்டுமே பயின்றிருந்தேன். அதன் மூலம் உச்சரிப்புகள் முறையாக எப்படியெப்படி இருத்தல் வேண்டும் என்று மட்டுமே அறிய முடிந்தது. இன்னும் ஐந்து பேரைக் கூட்டிக் கொண்டு வா, அடுத்து intermiate levelலில் சேர்த்துக் கொள்வேன் என்றார் அந்த ஆசிரியர். அது என்னால் முடியாமல் போனதால் அத்தோடு என்னுடைய பேச்சு மொழி வகுப்பு நின்று போனது. சீனமொழி சீனர்களுக்கே கற்பதற்கு சிரமமாக இருந்து வருகிறது. சீனாவில் பேசுவதற்கும் சிங்கப்பூரில் பேசுவதற்கும் மொழியில் மிகப் பெரிய வேறுபாடும் நிலவுகிறது.

சீனமொழியானது பல்வேறு ஒலிகளால் ஆனது. அம்மொழியில் சொற்களே இல்லை. சீனச் சித்திர எழுத்தின் ஒவ்வொரு கீற்றும் ஒரு ஒலியைக் குறிக்கும். ஒலிகளின் இணைப்பே வெவ்வேறு பொருள்களைக் கொடுக்கும். ச்ஸ¤ என்ற ஒலி இலக்கம் 4 கைக் குறிக்கும் அதே ஒலி நுட்ப வேறுபாட்டுடன் ஒலிக்கும் போது சாவைக் குறிக்கிறது. ப்பா எனும் ஒலி இலக்கம் 8 யும் அதே ஒலி நுண்ணிய வேறுபாட்டுடன் ஒலிக்கும் போது செல்வம்/ ஐஸ்வரியம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். அதனால் தான், சீ£னர்களுக்கு விருப்பமான இலக்கமாக 8டும் அவர்கள் வெறுக்கும் இலக்கமாக 4கும் விளங்குகிறது. தமிழில் குறில் நெடில் என்று இரு தொனிகள் இருப்பது போல சீனத்தில் ஒவ்வொரு ஒலிக்கும் குறைந்தது 4 தொனிகள் உண்டு. மா என்பது அம்மா, குதிரை, தூசு, கைகால் மரத்துப் போதல் ஆகிய நான்கு பொருள்களைக் கொடுக்கும் வகையில் நான்கு தொனிகளில் ஒலிக்கப் படுகின்றது. இலக்கணம் என்று பெரிதாக இம்மொழியில் கிடையாது சிற்சில எளிய விதிமுறைகளைத் தவிர. இறந்த கால நிகழ்கால வேறுபாடுகளைக் காட்டும் சொற்களும் இல்லை. ஒரே விதமான வினைச் சொற்கள் மட்டும் தான் என்ற நிலையில் ‘ஏற்கனவே’ என்பது போன்ற சொல்லைச் சேர்த்தே இறந்த காலத்தை அவர்கள் குறிக்கிறார்கள். இதனால் தான், பெரும்பான்மையினமான சீனர்கள் ஆங்கிலத்தில் I came, I went, I ate போன்ற இறந்த காலங்களை I come already, I go already, I eat already என்று பேசிப்பேசி அது மற்ற இனத்தினரிடையேயும் பரவியிருப்பதை நீங்கள் சிங்கப்பூர் வந்தால் கவனிக்கலாம். தமது மொழியில் உள்ளதைப் போலவே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் வேறுபாடு நிலவுதல் வேண்டும் என்று சீனர்கள் நினைப்பதும் இதற்கொரு முக்கிய காரணம். அதே போல ஒருமை பன்மைக்கும் சீனமொழியில் விகுதிகள் எதுவுமே கிடையாது. நீ என்றால் தமிழில் நீ என்றே பொருள். நீ மன் என்றால் பன்மை. வோ என்றால் நான். வோ மன் என்றால் நாங்கள். பழந்தமிழில் ஒருவரை மரியாதையுடன் நின் என்று குறிப்பதை நாம் அறிவோம் அல்லவா? சீனத்திலும் நின் என்றே formal லாகச் சொல்வார்கள். சீனத்திற்கும் தமிழுக்கும் சின்னச் சின்ன ஒற்றுமைகள் நிலவுவது போல நான் உணர்ந்ததுண்டு. இது தனியானதொரு ஆராய்ச்சிக்குரியது. விநோதங்கள் பலவற்றைக் கொண்டிருக்கும் சீன மொழி குறித்து இது போல நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாசிக்கவென்று ஏராளமான நூல்களை நூலகத்திலிருந்தும், சீன நண்பர்களிடமிருந்தும் இரவல் பெற்று உதிரியாகச் சேகரித்து உருவான நூல் இது. சீன நண்பர்களில் பலரும், “ஆங்கில மொழிபெயர்ப்பில் சீனக் கவிதையா?”, என்று விநோதமாகத் தான் என்னைப் பார்த்தார்கள். “நாங்களே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாப் புரிஞ்சிப்போம், இதுல சைனீஸ் பொயட்ரிய இங்லீஷ்லயெல்லாம் படிக்கிறதாவது? அத உங்க மொழியில கொண்டு போறதுன்னா,.. அதெல்லாம் சரிப்படுமா? ஆமா, எதுக்கு உனக்கு இந்த வேலையெல்லாம்?”, என்றெல்லாம் விதவிதமாகக் கேட்டனர். எனக்குப் பயனுள்ள வகையில் நுட்பமாக வேறெதையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. சீனக் கவிதைகளின் மேல் எனக்கிருந்த ஈர்ப்பு மட்டும் குறையவில்லை. 326 பக்கங்களைக் கொண்ட ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்’ எனும் சீனக்கவிதைகளின் தொகுப்பானது வரலாறு, சமூகம், இலக்கியம், கலாசாரம் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்களில் அணுகக் கூடிய ஆதிகாலந்தொட்டு தற்கால நவீன கவிதைகள் வரையிலான கவிதைகளைக் கொண்டிருக்கிறது.

மொழிபெயர்ப்பானது எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி தன் கவிதையில் மறைந்த ஹீப்ரு கவிஞர் யெஹ¤தா அமிசாய் அழகாகவும் எளிமையாகவும் சொல்வார்.

மொழிபெயர்ப்பின் போது

ஒரு மனிதனிடமிருந்து

அவன் சொற்களை

மௌனமாக நாம்

மாற்றுகிறோம்

இன்னொரு மனிதனுக்கு.

ஒரு நாவிலிருந்து

வேறிரு உதடுகளுக்கு.

நம்மை அறியாமல்

அப்போது

நடந்து கொள்கிறோம்

ஒரு தந்தையைப் போல்,

இறந்து போன தனது தந்தையின்

உருவ ஒற்றுமைகளைத்

தன் மகனுக்குக் கொடுத்து விட்டு

இருவரைப் போலவும்

தோற்றமளிக்காத

வேறொரு தந்தையைப் போல்.

பொதுவாகவே, பழமை கெடாமல் கொடுக்க நினைத்து உணர்வின் தீவிரத்தைச் சொல்லத் தவறும் மொழிபெயர்ப்பைக் காட்டிலும் நவீன வடிவத்தில் கொடுக்கப்படும் கவிஞனின் உணர்வுகளே தற்காலத்தில் அதிகமும் விரும்பப் படுகின்றன்றன. மொழிபெயர்க்கப்பட்ட பிறகும் சீனக்கவிதைகள் கவித்துவக் கூறுகளுடன் பல வேளைகளில் அமைந்து விடுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த சீனமொழி இன்றில்லை. முன்பெப்போதும் விட சமீப காலங்கள் அம்மொழி அதிக சீர்திருத்தங்களைக் கண்டிருக்கிறது.

சீனமொழி வல்லுனர்களில் ஓரளவுக்கு ஆங்கிலப் புலமையுடையோரைக் காண்பதரிது. அதிருஷ்டவசமாக, கல்வியமைச்சில் பணியாற்றவென்று சீனாவிலிருந்து வந்திருந்த சீனமொழி ஆசிரியை ஒருவர் அடுத்த தொகைவீட்டில் அப்போது வசிப்பது நண்பர் ஒருவர் மூலம் தெரிய வந்தது. அவரை நானாக வலியச் சென்று பேசி நட்பேற்படுத்திக் கொண்டேன். மொழிபெயர்த்தவற்றைச் சரி பார்க்கவென்று போன போது ஆங்கில மொழியாக்கத்தை சீன மொழி மூலத்துடன் ஒப்பிட்டு ஆங்காங்கே ஓரிரு சொற்களைத் திருத்தியும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆங்கில மொழியாக்கம் என்றும் இனங்கண்டு சொன்னார். நவீன கவிதைகள் சீனாவுக்கு வெளியில் வாழும் சீனர்களாலும் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் பட்டுள்ளன. ஒரே காலகட்டத்தில், ஒரே பழங்கவிதை வகையில் எண்ணற்ற கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் தேர்ந்தெடுப்பதும் தொகுப்பதும் மொழிபெயர்ப்பதும் மிகமிகக் கடினம் என்பதை சீக்கிரமே அறிந்தேன். நூற்றுக்கணக்கில் இருந்தாலும் பரவாயில்லை. ஒவ்வொரு வகைக்கும் ஆயிரமாயிரமாக இருந்தால் எப்படித் தான் தேர்ந்தெடுப்பது? நூலுக்கென்று சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. கடலிலிருந்து ஒரு சிறுதுளி நீர் போல ஒரு சிறுஅறிமுகமாக மட்டுமே கொடுக்க முடியும் என்பதும் புரிந்தது. இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் ஒரு தனி நூலாகக் கூடிய அளவில் சீனக்கவிதையுலகு வான்வெளியென விரிந்து பரந்து இருக்கிறது. எங்கு தொடங்கி எங்கு முடிக்கவென்று பல கட்டங்களில் நான் குழம்பியதுண்டு.

இந்திய எழுத்தாளரான விக்ரம் சேத் உள்ளிட்ட பலர் சீனக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஒரே சீனக்கவிதை பத்து பேரால் ஆங்கிலத்துக்கு பத்து விதமாகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறான இரண்டு கவிதைகள் தமிழுக்கு அப்படியே வரும் போது வாசிப்பவர்களுக்கும் சீன மொழியின் வளமை புரியும் என்று கருதி அதற்கென்றே சில பக்கங்களை ஒதுக்கியிருந்தேன். அந்தப் பகுதிகளை ரசித்த பலரும் என்னுடன் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நூலுக்காக உழைத்த காலங்களில் கற்றவை நிறைய. இன்னும் கற்பதற்கு நிறைய இருக்கிறதென்றும் அறிந்தேன். தமிழில் மொழிபெயர்ப்புத் துறையானது பல அடுக்குகளில் நிறைய அலசவும் ஆராயவும் வேண்டிய துறையாகவே தொடர்ந்து இருந்து வருவதால் மொழிபெயர்ப்பு அறிவைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் மொழிபெயர்ப்புகள் குறித்து சிலவற்றை மட்டும் மிகச் சுருக்கமாகச் சொல்ல நினைக்கிறேன். சிங்கப்பூரில் தமிழும் ஓர் அதிகாரத்துவ மொழி என்பதால் தென்கிழக்காசியத் தொகுப்புகளில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் ஆங்கில, சீன, மலாய் மொழிகளிலிருந்து தமிழுக்கும் என்று மொழிபெயர்ப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. சில மேலை நாடகங்கள் மொழியாக்கங்களாகவும் தழுவல்களாகவும் உள்ளூரில் தமிழ் மொழியில் நூலாக்கம் கண்டுள்ளன. செ.பா.பன்னீர்செல்வம், பி.கிருஷ்ணன் போன்ற சிலர் மொழியாக்கங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கனகலதா, இளங்கோவன் போன்றவர்களின் சில கவிதைகளும் வேறு சிலரது சிறுகதைகளும் ஆங்கிலத்திற்குச் சென்றுள்ளன. அது மட்டுமின்றி, தேசிய நூலக வாரியத்தின் ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ இயக்கத்தின் சிறு நூல்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மரகதம்’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்ட சில சீனக்கதைகள், voices என்ற இதழ் மற்றும் முன்பே நின்றுவிட்ட ‘சிங்கா’ என்ற இதழ் ஆகியவையும் மொழிபெயர்ப்புக்கான தளங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பல்லினப் பண்பாட்டைக் கொண்டுள்ள சிங்கப்பூரில் மொழிபெயர்ப்புத் துறையானது மேலும் தீவிரமாகவும் முனைப்பாகவும் வளர வேண்டிய நிலையில் இருக்கிறது.

படைப்பிலக்கியம் செய்ய முடியாத பல பண்பாட்டுப் பரிவர்த்தனைகளைச் செய்ய வல்லது மொழிபெயர்ப்பிலக்கியம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால், பிற இலக்கியங்களைக் கொணர்ந்திங்கு சேர்க்கும் அதே வேளையில் தமிழிலக்கியத்தை திசையெட்டும் கொண்டு சேர்த்தல் முன்பெப்போதும் விட சுருங்கி வரும் இன்றைய உலகில் மிக இன்றியமையாததாகிறது என்பதே என்னுடைய கருத்து.

(நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)

Series Navigation