‘ஏய் ‘, ‘கில்லி ‘, ‘சுள்ளான் ‘-எதிர்காலத் தமிழகம் ?

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

நா.முத்து நிலவன்


கலையும், கலைகள் காட்டும் வாழ்க்கை நெறிகளுமே ஒரு சமூகப்போக்கின் குறுக்குவெட்டுத் தோற்றங்கள்.கலைத்தொடர்புச் சாதனங்கள் வெறும்கண்ணாடி போன்றவை என்பதால், உள்ளதைத்தான் அப்படியே பிரதிபலிக்கும் என்றுமட்டும் சொல்லிவிடமுடியாது. நவீன ஊடக வளர்ச்சியில், அவற்றின் தாக்கம் சமூகக்கருத்தை உருவாக்குவதிலும், நல்லதாகவோ கெட்டதாகவோ ஒருகருத்தை வளர்த்தெடுப்பதிலும் பெரும்பங்கு வகிப்பதைக் கவனிக்கவேண்டும்.

கதை,கவிதை போலும் இலக்கியங்கள் சமூகத்தில் நிகழ்த்தும் பாதிப்புகளை விடவும் தொலைக் காட்சி மற்றும் திரைப்படங்களில் காணும் கலைவடிவத்திற்கு விளைவும் அதிகம், வேகமும் அதிகம். பெரிய அரசியல்கட்சிகளின் தீர்மானங்களுக்கு நிகரானது இக்கலைவடிவங்களின் சாராம்சம்.

அந்த வகையில், பாரம்பரியம் மிகுந்த கவிதையும், பாட்டும் கூத்துமாய் உலகம் வியக்க செழித்துக்கிடந்த நம் தமிழ்ச்சமூகத்தில், இன்றைய -பெரும்பாலான மக்கள்காணும்- கலைவடிவங்கள், ‘அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும் உச்சத்தில் கொண்டவை ‘யாகி வருவதுடன், நம்மையும் ‘ஊமைச் சனங்களாக ‘ வளர்க்க உரம் போட்டு வருவது மிகுந்த கவலை தருவதாகவே உள்ளது.

‘வீரபாண்டிய கட்டபொம்மன் ‘, ‘கப்பலோட்டிய தமிழன் ‘ என்றெல்லாம் பெயர் சூட்டிமகிழ்ந்த தமிழ்த் திரைப்பட உலகம், இன்று ‘ஏய் ‘, ‘கில்லி ‘, ‘சுள்ளான் ‘ என்றெல்லாம் பெயர் வைக்கும் அளவுக்குப் பொறுப்பற்ற நிலைமைக்குப் போய்விட்டதை எண்ணிக் கவலைப் படாமல் இருக்கமுடியவில்லை.

கடந்த 18 மாதங்களாக வெளிவந்த நேரடித்தமிழ்ப்படங்கள் 125. (2003இல்90+2004இல் ஜூன் முடிய35). இதில் சில படங்களின் பெயர்கள்: பாப்கார்ன், வெல்டன், தூள்,ஜே.ஜே.,எஸ்.மேடம், தம்,செமரகளை,குத்து,ஜோர்! இதெல்லாம் என்ன ? இதுபோல அர்த்தமற்ற -அல்லது ஆங்கிலத்திலான- சுமார் 22 (அதாவது நான்கில் ஒரு பங்கு) படங்களின் பெயர்கள், எந்த அளவிற்குத் தமிழ்த் திரைப்பட உலகம் பொறுப்பற்று இருக்கிறது என்பதற்கு சாட்சிகளாக நிற்கின்றன. மொழியளவிலும், சமூக அளவிலும் எந்த அளவுக்கான அலட்சியம் என்பதை அறிந்தவர் அறிவாராக.

இந்த ஒன்றரை ஆண்டுக்காலத்திலேயே, ‘புன்னகைப் பூவே ‘, ‘நிலவில் களங்கமில்லை ‘, ‘கண்களால் கைதுசெய் ‘ போலும் கவித்துவம் மிகுந்த நல்ல பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன என்பதை, கவனத்தோடு பாராட்டவேண்டும். ஏனெனில், நல்ல தமிழ்ப் பெயர்களை மட்டும் வைத்துக்கொண்டு உருப்படாத கதைகளோடு வந்த படங்களும் உண்டு, ‘ஆட்டோ கிராப் ‘ போல ஆங்கிலப்பெயர்களை பெயர்களை வைத்துக்கொண்டு வந்த அருமையான படங்களும் உண்டு!

‘படங்களின் பெயர்களில் என்ன இருக்கிறது ? ‘ என்று சிலர் நினைக்கலாம். தலைப்பிலேயே படம்எடுப்பவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டுவிடலாமே ? அதில் காணப்படும் ‘விட்டேத்தி ‘யும், ‘விடலைத் தன்மை ‘யும் தான் அந்தப் படம் முழுவதும் விரவியிருக்கும் என்பதுதானே சிக்கல்! மூலக்கதை கூட, ‘அநியாயம் தோற்கும், நியாயம் வெல்லும் ‘ எனும் பஞ்சதந்திரக்கதையாக இருக்கலாம்.ஆனால்,அதைக் காட்சிவடிவாக்க அவர்கள் காட்டும் தந்திரத்திற்குப் பஞ்சமே இருக்காது! அடாடா! குட்டிச்சுவரில் உட்கார்ந்து/ வீதியில் பாட்டுப்பாடி/ வகுப்பு நேரத்தைக் ‘கட் ‘டடித்து, ‘தம் ‘ அடித்து, ‘பீர் ‘குடித்து/ பெண்களைக் கிண்டல் செய்து/ அப்பாவை எப்போதும் வெறுத்துப்பேசி/ பொழுதைக் கழிக்கும் விடலைதான் பின்னர் ஊரே புகழும் ‘பெரீய்ய்ய ‘ மனிதனாகிவிடுவானாம்! இந்த மாணவர்கள்/ விடலைகள்/ வேலைவாய்ப் பில்லாதவர்கள்தாம் திரும்பத்திரும்ப வந்து படத்தைப் பார்ப்பவர்கள் என்பது தெரியாதா என்ன ? அதனால் படப்பெயர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்!

சில ஆண்டுகளின் முன்பு ‘ஜீன்ஸ் ‘ என்றொரு தமிழ்ப்படம் வந்தது. ‘அட! ‘இரட்டையர் கதை ‘ என்பதைஉணர்த்தும் வகையில், ‘ஜீன்கள் ‘ (GENES) என்று ஆழ்ந்து யோசித்துப் பெயர் வைத்திருக் கிறார்களே! என்று,(என்னைப் போல்) ‘கிறுக்குத்தனமாக,தவறாக ‘ யாரும் புரிந்துகொண்டு விடக்கூடாது ‘ எனும் கவலையோடு, அந்தப் பட விளம்பரங்களில் ‘JEANS ‘ என்றே ஆங்கிலத்திலும் போட்டார்கள்! எந்த அளவிற்கு ‘அர்த்தமற்ற பெயர் வைக்கும் கலை ‘யில் இவர்கள் தேர்ந்திருக்கிறார்கள் பாருங்கள்!

இந்தியச் சுதந்திர மாளிகையைக் கட்டி எழுப்புவதற்காகத் தன் சதையைச் சேறாகவும், ரத்தத்தை நீராகவும் வார்த்ததோடு உயிரையே அடிக்கல்லாகவும், தன்மானத்தையே மேற்காரையாகவும் இட்டுச்சென்ற தியாகியர் எண்ணற்றோர்! உயர்குணம் மிகுந்த அந்தத் தலைவர்களைப் பற்றி நம் குழந்தைகளுக்கு உரியவகையில் எடுத்துக்கூற நமக்கும் ‘நேரமில்லை ‘!

இந்நாளின் இழிந்த குணங்கள் பலவும் நிறைந்த தலைவர்களையே ஊடகங்களில் பார்த்துப் பார்த்து வளர்ந்துவரும் நம் குழந்தைகளுக்கு ‘ஆதர்ச புருஷர்கள் ‘ யார் ? ‘இளைய தளபதி ‘, புரட்சிக் கலைஞர் ‘ ‘இளைய திலகம் ‘, எனும் தமிழ்ப் புகழ்மொழிகளோடு, ‘சூப்பர் ஸ்டார் ‘, ‘எவர்க்ரீன்-ஸ்டார் ‘ ‘சுப்ரீம் ஸ்டார் ‘, ‘அல்டிமேட் ஸ்டார் ‘ ‘க்ஷன்கிங் ‘எனும் பட்டங்களோடும் சின்ன-வண்ணத் திரைகளில் உலாவந்து-உதிர்ந்துபோகக்கூடிய- நட்சத்திரங்களையே இன்றைய மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் நெஞ்சில் நிறுத்திவருவது நல்லோர்கள் நெஞ்சை உறுத்துவதாக அல்லவா இருக்கிறது ?

பொதுவாக நல்ல நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், கதையின் சாராம்சத்தைச் சொல்வதாகவுமே திரைப்படங்களின் பெயர்கள் இருக்கவேண்டும், அப்படித்தான் பெரும்பாலும் இருந்தன. ஆனால் அப்படியே இன்றும் இருப்பதாகச் சொல்லமுடியாது. இருப்பினும், நல்லதமிழில் -கவித்துவமாக இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த -இருக்கின்ற- சில இயக்குநர்களும் உண்டு! ‘கல்யாணப்பரிசு ‘முதல், ‘காதலுக்குமரியாதை ‘ வரை இந்தவகையினர் தொடர்வது பாராட்டுக்குரியது. ஆனால், புகழ்பெற்றுவிட்ட நடிகர்களுக்கான பட்டங்கள் கலைத்தன்மையிலிருந்து விலகி அரசியல் நோக்கோடு அமையத் தொடங்கியதும், அவர்கள் தம் படப்பெயர்களை கதைகளை விடவும் தமக்காகவே அமைக்கத் தொடங்கியதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதான்.

இன்றைய இளம் நடிகர் ஒருவரை ‘இளைய தளபதி ‘ என்று சொல்கிறார்கள். அரசியலில் சில மக்கள் போராட்டங்களுக்குத் தலைமையேற்ற இளைய தலைவர்களை ‘தளபதி ‘ என்றும் ‘மக்கள் தளபதி ‘ என்றும் கூறுவதையாவது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். இந்த ‘சினிமாத் தளபதி ‘கள் எந்தப் போர்க்களத்தில் யாருக்கெதிராகப் படை நடத்தி, வெற்றிக்கொடி நாட்டினார்களாம் ?

திரைக்கதைப்படி ‘அநியாயம் செய்யும் ‘ சில பெரியமனிதர்களின் அடாவடித்தனத்தை எதிர்த்து – ‘டூப்பு ‘களை பலிகடாவாக்கி- வேசப் போர்புரிவதற்கே இவர்களை ‘தளபதி ‘ என்றழைத்தால், அதே படங்களில், நடனம் என்ற பெயரில், அசிங்கமான அசைவுகளுடன் இவர்கள் வழங்கும் பாசக் கூத்திற்கு என்ன பட்டம் தருவது ? இதனால், அவர்களுக்குக் கிடைப்பதோ சில பல கோடிகள். நம் குழந்தைகளுக்குக் கிடைப்பதோ எதார்த்தமற்ற ஒரு மாய உலகம் பற்றிய மனக்கோட்டைகள் தானே ? இதிலிருந்து நம் குழந்தைகளை மீட்டெடுக்க, நம்மிடம் ஏதுமில்லையே ?

இந்தத் தளபதிகளும், சூப்பர்-சுப்ரீம்-அல்டிமேட்-எவர்க்ரீன்-ஸ்டார்களும் ‘நடிகர் திலக ‘த்தையோ ‘புரட்சிநடிகரை ‘யோ முன்னுதாரணமாக நினைப்பார்களேயானால்,அது கேலிக்கூத்தாகத்தான் முடியும். ‘வெட்கங்கெட்ட வெள்ளைக் கொக்குகளா – நீங்க- விரட்டி அடிச்சாலும் வாரீகளா ? ‘ என்றும், ‘தேம்சு நதிக்கரையின் கொக்கு -நர- மாம்ச வெறிபிடித்த கொக்கு ‘ என்றும் வள்ளி திருமணத் தில்கூடதேசபக்தியைமேடையில் கொண்டுவந்து,கைதாகி,மேடையிலேயே உயிர்துறந்த கலைஞர்களும் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்பதாவது இந்த ‘ஸ்டார் ‘களுக்குத் தெரியுமா ?

இவர்களுக்குத்தான், படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடிப்பதற்காகப் பன்னாட்டுக் ‘கும்பினி ‘க்காரர்கள் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்களே, பிறகு தேசமாவது பக்தியாவது! ஆயினும் அவர்களிடையே ‘அது என்தேசத்திற்கு எதிரானது ‘ என்று நடிக்கமறுத்தார் மம்மூட்டி என்பதே பெருமை யானது.இச்செய்தி உண்மையெனில், இன்னும் பாஸ்கரதாஸ்,விஸ்வநாததாஸ்,ஜானகியம்மாள்களின் தேச பக்தக் கலைப்பாரம்பரியம் முற்றிலுமாக அற்றுப்போய்விடவில்லை என்றறிய சற்றேறுதலாக உள்ளது!!

இவர்கள் படங்களில், ‘ஜெய்ஹிந்த் ‘ முழக்கத்துடன், தேசவிரோதிகளைப் பிடிக்கப் போவார்கள்! ஆனால் கூடவரும்ஒருபெண் ‘கண்ணா என்சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருச்சு ‘ என்று கதறுவாள்! இவர்கள் படங்களில்,கல்லூரிமாணவராகவருவார்கள், உலகில்லாதஒரு ‘குரூப்டான்ஸ் ‘ இருக்கும். ஆனால் கல்லூரிமுதல்வர் ‘கேணை ‘யாகவும், ஆசிரியர்கள் ‘கிறுக்காக ‘வுமே இருப்பார்கள்!

இவர்கள் படங்களில், ‘சந்தன ‘வீரப்பனைக் காட்டுக்குள் தேடிச்சென்று பிடித்து விடுவார்கள்! ஆனால், அரசாங்கம் தேடும்போது ஒரு பத்திரிகைக்காரனை அனுப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்! இவர்கள் படங்களில், மனிதர்களை ஒன்றாகப்பாவிக்கும் சாதிமதஒற்றுமையே சத்தியம் பேசும். ஆனால், அவர்களே தம் சாதிபார்த்து வெல்லும் வியூகங்களோடு அரசியலில் இறங்குவார்கள்!!

இவர்கள் படங்களில் ஆறு மாடிக்கட்டிடத்தின் மேலிருந்துகூட அனாயாசமாகக் குதிப்பார்கள், ஆனால் நிஜ வாழ்வில் ஒன்றரை அடி ஸ்டூலிலிருந்து குதிக்கக் கூட உதவியாளைத் தேடுவார்கள்.

இவர்களுக்கு மகளாக நடித்த பெண் இவர்களுக்கே காதலியாகவும் தாயாகவும் கூட நடிப்பார்! ஆனால், கதாநாயகனுக்குமட்டும் வயதாவதே இல்லை! அந்த ஸ்டைலும் பலமும் அப்படியே இருக்கும்! உண்மையைச் சொல்லப்போனால், பலதிரைப்பட ‘வில்லன்கள் ‘ உண்மையில் நல்லவர்களாகவும், சில ‘நாயகர்கள் ‘ உண்மையில் ‘வில்லன் ‘களாகவுமே இருந்திருக்கிறார்கள்!

‘எங்களிடம்மட்டும்சமூகப்பொறுப்பு அதுஇதுஎன்று ஏன்எதிர்பார்க்கிறீர்கள் ? மற்ற தொழில்களைப் போலவே நடிப்பது எங்கள்தொழில் ‘என்று இவர்களாக ஒருவிளக்கம் வேறு அவ்வப்போது தருகிறார்கள்! அவர்கள் வாதத்தின் படியே, திரைப்படமும் ஒரு தொழில்தான் என்று வைத்துக்கொண்டால் கூட அந்தத் தொழிலின் ‘உற்பத்திப் பொருள் ‘ தரும் விளைவால் எத்தனைஇளம்உள்ளங்கள் விஷமாகி வருகின்றன என்பதையாவது இவர்கள்ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் ? ‘உற்பத்திப்பொருளைப் பயன்படுத்துபவன் பாதிப்புக்குஉள்ளாகும்போது ‘ உற்பத்தி செய்தவரைக் கேட்க உரிமை உண்டல்லோ ?

ஆனால், இவர்கள்மேல்மட்டும் பிழையில்லை. கான்வெண்ட் பள்ளி ஆண்டுவிழாக் கூத்துகளில், ‘ ‘அடுத்து… இதோ சூப்பர் ஸ்டார் மேடைக்கு வருகிறார் ‘ ‘ என்று தன் மகனை அறிமுகப்படுத்துவதைப் பெருமையாகக் கருதிமகிழும் பெற்றோர்கள்தாமே பெரும்பான்மையாக இருக்கிறோம் ? தமிழ்பேசி வந்த ‘காந்தி ‘, ‘பாரதி ‘ மற்றும் ‘காமராசர் ‘போன்ற உண்மை வரலாற்றுப் ப(ா)டங்களை நம் குழந்தை களுக்கு பெற்றோர்களாகிய நாம் அறிமுகப்படுத்தினோமா என்பதை யோசிக்கவேண்டும்.

இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்தப் பண்பாட்டுச்சீரழிவை எப்படியாவது தடுக்க வேண்டுமென்று அரசுகளும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தணிக்கையாளர்கள், ‘பாயில் புகாதே ‘ என்றால், இவர்கள் ‘தடுக்கில்புகுந்துவருவதை ‘ தடுக்கத்தெரியாமல் தடுமாறுகிறார்கள்! தொலைக்காட்சி யினரோ அந்தத்தொந்தரவும் இல்லாமல், ‘கலைச்சேவை ‘யைத்தொடர்கிறார்கள்! எதையும் பகுத்தறிந்து உள்வாங்கக் கற்றுத்தரும் -சமகாலத்தை விளங்கிக் கொள்ளும்- பாடத்திட்டங்களும் இல்லை!

ஒருபக்கம் திரைப்படம் என்றால், இன்னொருபக்கம் விரும்பியோ விரும்பாமலோ குடும்பத்தோடு எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியும் இதில் சர்வ அலட்சியத்துடனே செயல்படு வதும் பெரும் வேதனைக்குரியது. ‘காமெடி டைம் ‘, டைமுக்குக் காமெடி ‘, ‘காமெடி தர்பார் ‘ என்பன போலும் ஏராளமான ‘கலப்பட ‘ நிகழ்ச்சித் தலைப்புகள், மற்றும் தொடர்கள் தரும் பண்பாட்டுச் சிதைவுகளை ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இதுபோலும் கட்டுரைகள் இன்னும் பல எழக்கூடும்!

‘கில்லி ‘, ‘ஏய் ‘, ‘சுள்ளான் ‘, போன்ற சிறுபிள்ளைத் தனமான தலைப்புகளில் வரும் படங்கள் -தமிழ்ச்சமூகத்தை ‘மெதுவாய்க் கொல்லும் விஷங்கள் ‘ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் பாதிப்பு உடனடியாகத் தெரியாது, சமூகச்சீரழிவில் -அவசியமான விஷயங்களை அலட்சியப் படுத்து வதில், அல்பமான விஷயங்களுக்கு ஆலாய்ப் பறப்பதில்- கொண்டுபோய் விடும்.

தலைப்பை வித்தியாசமாக வைத்து, எப்படியாவது பார்த்துவிடத் தூண்டும் இவர்களின் நோக்கத் தைப் புரிந்துகொண்டு, நல்ல படம் / நிகழ்ச்சி என்றால் மட்டுமே பார்ப்பது, அல்லது தவிர்த்துவிடுவது என்று புரிந்துகொண்டால் மட்டுமே தமிழ்ச்சமூகம் உருப்படுவது சாத்தியமாகும் என்பதே சத்தியமாகும்.

muthunilavan@yahoo.com

====

Nandri,vaNakkam.

Naa.Muthu Nilavan,

Pudukkottai-Tamil Naadu.

Series Navigation

author

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்

Similar Posts