எப்போதோ ஒரு கான்வாஸ் கூடாரத்தில் தொடங்கியது…….

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

வெங்கட் சாமிநாதன்


எப்போது என்று நிச்சயமாகத் தெரியவில்லை. மூன்று வய்திருக்குமா, இல்லை நான்கு இருக்குமா? போன நூற்றாண்டின் பின் பாதி முப்பதுக்கள் அது. பாட்டியின் இடுப்பில் வாசம். பாட்டிக்கு அதிக தூரம் போக வேண்டியிருக்க வில்லை. வீட்டுக்கு எதிர்த்தாற்போலேயே சினிமா கொட்டகை. கொட்டகை அல்ல. கான்வாஸ் கூடாரம். வீட்டை விட்டு வெளியே வந்தால் நிலக் கோட்டை-வத்தலக்குண்டு-பெரியகுளம் ரோடு. ரோட்டைக் குறுக்கே கடந்தால் எதிரே ஒரு பெரிய வண்டிப் பேட்டை.. அதிகம் போனால் வீட்டிலிருந்து எதிர்த்தாற்போல் இருக்கும் சினிமா கூடாரத்துக்குப் போக ஐம்பது அடி தூரம் தான் நடக்க வேண்டியிருக்கும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை படம் மாறும். அனேகமாக எல்லாப் படங்களையும் பாட்டி பார்த்து விடுவாள். அவளுக்கு அது தான் பகவான் தரிசனத்துக்கும் மோக்ஷத்துக்கும் குறுக்கு வழி. வேறு வழி நிலக்கோட்டையில் கிடையாது. மாரியம்மன் கோயில் ஒன்று உண்டு ஊருக்கு மறு கோடியில். நாங்கள் ஒரு கோடியில். பாட்டி கோயிலுக்குப் போய் நான் பார்த்ததில்லை. பாட்டிக்கும், மாமாவுக்கும் இருந்த பக்திக்கு, ஏன் பாட்டி கோவிலுக்கு போனதில்லை என்பது எனக்குத் தெரியாது. அது பற்றி நான் யோசித்த தில்லை.இப்போது அது பற்றி எழுதும்போது தான் இந்த மாதிரி கேள்விகள் எழுகின்றன.

பாட்டி ஒன்றும் இன்றைய ரக தமிழ் சினிமா பைத்தியமில்லை. அக்காலத்தில் படங்கள் எல்லாம் புராணக்கதைகளையே கொண்டிருக்கும். ஆக், அந்த மாதிரியான புராணக் கதைகளைச் சொல்லும், தமிழ்ப்படங்களைப் பார்ப்ப்து பாட்டிக்கு கதா காலக்ஷேபத்துக்கு போவதற்கு சமம். ஒரு புராணக் கதைப் படத்தை பாட்டி விட மாட்டாள். எதிர்த்தாற்போல கொட்டகை. ஐந்து நிமிஷத்தில் தயாராகிவிடலாம். அதே போல வீட்டுக்குத் திரும்புவது சில நிமிஷங்களுக்கு மேல் ஆகாது. ஒன்றும் பெரிய சிரம சாத்தியமான காரியம் இல்லை. அத்தோடு டிக்கெட்டும் அதிகம் இல்லை. முக்காலணா என்று ஞாபகம். மணல் பரப்பிய தரை. ஒரு துணியைப் போட்டு உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான். என்னை இடுப்பில் தூக்கிச் செல்வதால் எனக்கும் டிக்கெட் கிடையாது. ஒரோரு சம்யம் அந்த மானேஜர் பார்த்துவிட்டால், சில சம்யம் அவர் கேட் அருகில் நின்று கொண்டிருப்பார். ஆள் நல்ல கருப்பு. ஆனால் மிக அழகான முகம். இளம் வய்து. வெள்ளைச் சட்டை. வெள்ளை வேட்டி. மல் துணியோ என்னவோ, மல்லிகைப் பூப் போல அல்லது தும்பைப் பூவா? என்பார்கள். அப்படி ஒரு வெள்ளை கையில் கழுத்தில் தங்க செயின். பின் ஒரு நீண்ட டார்ச் லைட் எப்போதும் கையில் இருக்கும். பகலில் அவர் எங்கும் போனால் கூட. எனக்குத் தெரிந்து அவர் தான் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கொட்ட்கை போடுவார். மூன்று மாதங்கள் இருக்கும். பின்னர் வேறு ஊருக்கு கொட்டைகையைப் பிரித்துக் கொண்டு போவார். நிலக்கோட்டையில் டேரா போட்டால், நாங்கள் பின்னர் மாறிய தெருவின் கோடியில் இருந்த தாசி வீட்டில் தான் அவர் வாசம். ஆரம்பத்தில் நாங்கள் இருந்த வீட்டின் எதிர்த்தாற் போலேயே அவரது சினிமா கொட்ட்கை இருந்ததால், எங்கள் வீட்டில் இருக்கும் எல்லோரையும் அவருக்குத் தெரியும் .”ஏம்மா இப்படிக் கஷ்டப்பட்டு தூக்கிட்டு வர்ரீங்க. பையனக் கீழே இறக்குங்க. நடந்து வருவான். நான் அவனுக்கு டிக்கெட் கேக்க மாட்டேன்” என்று கனிவாகச் சொல்வார். “என்னாலே முடியத்தாண்டாப்பா இல்லே. ஆனா கேக்க மாட்டேங்கறானேப்பா. என்னை என்ன செய்யச் சொல்றே” என்பாள். அதிலிருந்து அந்த மானேஜர் கேட்டருகில் இருந்தால் என்னைத் தூக்க மாட்டாள். வேறு யாரும இருந்தால், என்னை இடுப்பில் தூக்கிக் கொண்டுதான் போவாள். செலவு அதிகம் இல்லை. அத்தோடு பாட்டிக்கு இதை விட்டால் வேறு என்ன இருக்கிறது அவளைச் சந்தோஷப் படுத்த?. ஆகையால் மாமா ஒரு தடவை கூட பாட்டி சினிமா பார்க்கத் தடை சொன்னதில்லை. மாமாவுக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். அவர் ஒரு தடவை கூட சினிமா பார்த்ததாக எனக்கு நினைவில்லை.

ஓரோர் சமயம் வந்திருப்பது புராணப் படம் தானா என்று மாமாவைக் கேட்டு தன் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வாள். ஒரு தடவை திருவள்ளுவர் என்று ஒரு படம் வந்தது. பாட்டிக்கு சரியாகப் புரியவில்லை. மாமாவைக் கேட்டாள். மாமா அது புராணப் படம் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் அடுத்த நாள் படம் பாக்கப் போன அடுத்த வீட்டுக்கார மாமியோ யாரோ பாட்டியிடம் கதை சொல்லி யிருக்கிறாள். மாமா பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் பாட்டி மாமாவிடம், “ஏண்டா சுப்புணி, அந்தப் படத்திலே நாரதர் எல்லாம் வராராம். சிவன் வராராம். நீ புராணப்படம் இல்லேன்னு சொன்னியே?” என்று கேட்டிருக்கிறாள். “என்னமோ எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேம்மா, உனக்குப் போகணும்னு இருந்தா போய்ட்டு வாயேன்.” என்று மாமா சொல்லி விட்டார்.

புராணமும் தெய்வங்கள் வரம் கொடுப்பதும் அந்தக் காலத்து மசாலா. இன்று எந்தக் கதையிலும் பத்துப் பேர் ஒவ்வொருவராக ஹீரோவைத் தாக்குவதும பிறகு ஆகாயத்தில் எப்படியோ சுருண்டு விழுவதும் பின் மறுபடியும் எழுந்து சென்று ஹீரோவிடம் அடி வாங்க எழுந்து ஓடி வருவதும், திடீரென்று ரோட்டு நடுவில் நாற்பது பே “ஓ போடு” என்று ஆடுவதும், பாரதியானாலும் அவரை ஒடுகிற வண்டியில் இங்குமங்கும் நடந்துகொண்டே பாடுவதும் (ஆடலும் பாடலும் நம் தமிழ் வாழ்க்கையில் ஒன்றறக் கலந்திருக்காமே, என்ன செய்ய? இந்த மண்ணுக்கேத்தபடி தானே படம் எடுக்கணும்!) பாரதி என்ன ரயில் வண்டிப் பிச்சைக்காரனா? அந்த மாதிரி அன்று திருவள்ளுவரைக் கூட நாரதர் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டு அவரை இந்த பூமியை ரக்ஷிக்க அவதாரம் எடுக்கச் சொன்னால் தான் மக்கள் ரசித்தார்கள் அந்தக் காலத்தில்.

ஒரு சமயம் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. சிவராத்திரி தினம். கொட்டைகைக்கு வரும் ரசிகர்களை ராத்திரி பூராவும் விழித்திருக்க வைத்திருக்க சினிமா மானேஜர் முடிவு செய்தார். படம் பக்த ஜெயதேவர். வருகிறவர் போகிறவர்கள் எல்லாம் “வந்தேனே..” “போறேனே…” என்று பாடிக்கொண்டே இருந்தார்கள். ஒருத்தர் கூட நேராக ஒரு வார்த்தை பேசியதாகத் தெரியவில்லை. ஒரே பாட்டு மயமாக இருக்கிறதே என்று இடையில் நான் ஒரு கட்டத்தில் எண்ண ஆரம்பித்தேன். நாற்பத்தி சொச்சம் பாட்டுக்கள் எண்ணினேன். மொத்தம் எத்தனை இருந்ததோ. இது போதாதென்று இடையிடையில் திரை விழுந்ததும் டான்ஸ் பன்ண ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவள் ஒரு தம்போலின் மாதிரி வட்டமான சுற்றி மணிகள் கட்டிய ஒரு தோல் வாத்தியத்தை கைகளால் தட்டிக்கொண்டு ஆடினாள். நீள பாவாடை, குட்டைச் சட்டை. லம்பாடி மாதிரி. சிவராத்திரி அன்று விழித்திருந்து எல்லோரும் புண்ணியம் கட்டிக்கொள்ள அந்த தங்கச் ச்ங்கிலி டார்சி லைட் மானேஜர் வசதி செய்து தந்திருந்தார். அந்தக் காலத்தில் ஒரே ஒரு ப்ரொஜெகடர் தான் இருக்கும்,. ஒரு ரோல் முடிந்தவுடன், இன்னொரு ரோலை ப்ரொஜெக்டரில் ஏற்ற நேரம் பிடிக்கும். அப்போது கொட்டைகை விளக்குகள் எரியும். சாதாரணமாக் ஏழெட்டு இடைவெளிகள் இப்படி வந்து போகும். அந்த இடைவெளிகளில் அந்த தம்போலின் பெண் பாடினாள். ஆடினாள். அந்தக் காலத்து ஐடம் கேர்ல்.

கண்ணகி படம் வந்தது ஒருமுறை. பி.யு. சின்னப்பாவும் ப்சுபுலேடி கண்ணாமபாவும் நடித்தது. இளங்கோவன் வசன்ம். இதெல்லாம் நான் பின்னர் தெரிந்து கொண்ட்து. அப்போது எனக்கு நினைவிலிருப்பது ‘மானமெல்லாம் போன பின்பே வாழ்வதும் ஒர் வாழ்வா?” என்று மதுரையை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு பாடும் பாட்டு. பாண்டியன் சபையில் கண்ணகி கண்களை உருட்டி விழித்துக் கத்தி அலறி வாதாடுவதும். அரிச்சந்திரா என்ற படத்தில் பசுபுலேடி கண்ணாம்பா லோகிதாசனை மயானத்தில் கிடத்தி, ‘ஓண்ணாம் மாதம், இரண்டாம் மாதம் என்று பத்து மாதங்களும் தான் பட்ட கஷ்டங்களை ஒவ்வொரு மாதமாகச் சொல்லி பாடிக்கொண்டேஅழுவாள். கொட்டைகையில் பெண்கள் பகுதியில் ஒரே அழுகை. கண்ணீர் தாராளமாகச் சிந்தி அழ்த் தொடங்கிவிடுவார்கள். மூக்கைச் சிந்துவார்கள். புடவைத் தலைப்பால் அடிக்கடி கண்களை துடைத்துக் கொள்வார்கள். என் பாட்டி பார்த்துவிட்டு வந்து அந்த துக்கம் தாங்காது, வீட்டுக்குப் பாத்திரம் தேய்க்க வரும் கிழ்வியிடம் அந்த்க் கதை முழுதும் சொல்லி, “கிழ்வி, நீயும் போய் பாத்துட்டு வா. நான் காசு தரேன்.” என்று காசுகொடுத்து கிழ்வியுடனும் அந்த சோகத்தைப் பகிர்ந்து கொண்டாள். அது மட்டுமல்ல. மறு நாள் மாலை, கிழ்வி பாத்திரம் தேய்க்க வந்த்போது, அவள் படம் பார்த்தாளா?, அவளுக்கும் அழுகை வந்ததா?, எந்தெந்த இடத்தில் எல்லாம் அழுகை வந்தது? என்று கேட்டுக்கொண்டாள். எந்த இடமாவது விட்டுப் போனால், அந்த இடத்தை ஞாபகப் படுத்தி, அந்த இடத்தில் அழுகை வரவில்லையா, இல்லை சொல்ல மறந்துவிட்டாளா, என்றும் நிச்ச்யப் படுத்தீக் கொள்வாள்

மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாறும் எல்லாத் தமிழ்ப் படங்களையும் பாட்டி அழைத்துச் செல்ல நானும் பார்த்தேன். எவ்வளவு படஙகள்! இப்போதெல்லாம் அந்த மாதிரியான வாய்ப்புக்கள் சாத்தியமே இல்லை.

மத்தியானம் சாப்பாடெல்லாம் முடிந்த பிறகு, பாட்டி இடைகழியில் படுத்துக்கொளவாள். ஒன்றிரண்டு மணி நேரம் தூங்குவாள். இது எப்போதும் நடப்பதில்லை. சில நாட்கள் தெருவில் இருக்கும் அக்கம்பக்கத்து பெண்கள், மாமிகள், பாட்டிகள் கொஞ்ச நாழி, “பக்கத்திலே தான் இருக்கோம். ஆனால் அடிக்கடி பாத்துக்க முடியறதில்லே” என்று ஒரு ஆதங்கத்துடன் பேச வருவார்கள். அவர்க்ள் பேச்சில் கட்டாயம் பார்த்த படங்களைப் பற்றியும் இருக்கும். “என்னடி கதை அது, தத்து பித்துன்னு” என்ற அபிப்ராயங்கள் உதிரும். எனக்கு பாட்டி சொன்னது ஏதோ கல்வேட்டு மாதிரி நினைவில் பதிந்துள்ள பாராட்டு ஒன்று. ஏதோ மகாபாரதக் கதை சொல்லும் படம். பெயர் ஞாபகமில்லை. செருகளத்தூர் சாமா, அக்காலத்தில் பிரபலமான காரக்டர் ஆக்டர். அந்தக் காலத்திர்லிருந்தே சில்லரை ரோல்களில் வருபவர்கள் காரக்டர் ஆக்டர் என்ப்படுவர். ஏன் இவர்களுக்கு மாத்திரம் இந்த முத்திரை. அந்த நாளிலிருந்து இன்று வரை, இந்த ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும் காரக்டரே கிடையாதோ என்று எனக்குத் தோன்றும். கேட்கும் தைரியம், இருந்ததில்லை. மற்றவர்கள் யாரும் இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கேட்டதும் இல்லை. இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது. தெள்ளத் தெளிவாகத் தெரியும் விஷயத்தில் கேள்வி எழுமா என்ன? போகட்டும்.
செருகளத்தூர் சாமா நல்ல குரல் வாயக்கப் பெற்றவர். நன்றாகப் பாடுவார். அவர் ஒரு பட்த்தில் கண்ணனாக நடித்திருந்தார். ” கிருஷ்ண பகவான் குந்தியை “அத்தே”, அத்தே,”ன்னு கூப்பிடற அழ்கு ஒண்ணே போறும். இன்னிக்கு நாள் முழுக்க கேட்டுண்டே இருக்கலாம் போல இருக்கும்.” என்பாள். பாட்டி எனக்கு அப்போது பாட்டி ஒரு தேர்ந்த ரசிகையாகத் தெரிந்தாள். நானும் செருகளத்தூர் சாமாவின் ரசிகன் தான்.

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து, அதாவது 1935-லிருந்து, நான் நிலக் கோட்டையை விட்டுப் போன 1946 வரை சுமார் 11 வருடங்கள் தொடர்ந்து அந்த கான்வாஸ் கூடாரத்து சினிமாவின் ரசிகனாக இருந்திருக்கிறேன். இரண்டு இடங்களில் வீடு மாறிய போதிலும், அந்தக் கூடாரம் ஒரு பொடி நடையில் சினிமாக் கொட்டகைக்கு பாட்டியுடன் போவதற்கும் , சினிமா பார்க்காத மற்ற நாட்களில் அந்த கூடாரத்திலிருந்து கம்பி கிராதி போட்ட திண்ணையில் உட்கார்ந்து கொண்டு சினிமா முழுவதையும் கேட்டுத் திரும்ப அனுபவிப்பதற்கும் தடை இருந்ததில்லை. எத்தனை தரம் அத்தனை சினிமா பாட்டுக்களையும் கேட்டிருப்பேன். சினிமா கொட்டகையின் நேர் எதிர் வீட்டில் இருந்த போது பார்த்த சினிமா எனக்கு ஞாபக்மிருக்கிறது. அது தியாக ராஜ் பாகவதர் நடித்த அசோக் குமார். குழ்ந்தையைத் தூளியில் போட்டு ஆட்டிக் கொண்டே “கண்மணி நீயே கண்ணுறங்காயோ” என்ற பாட்டும் அந்தக் காட்சியும் இன்னமும் பசுமையாக் மனத்தில் உறைந்திருக்கிறது. தினம் சினிமாக் கொட்டகைக்கு வரும் திரளான ஜனங்களையும், பின் ஆட்டம் முடிந்ததும் கலைவதையும் அலுக்காது சலிக்காது திண்ணைக் கிராதி கம்பிகளுக்க்ப் பின் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்ததும் பதிவாகியிருக்கிறது.

ஒரு புதிய படம் அடுத்த நாள் வரப்போகிறது என்றால் ஒரு நாள் முன்னும், புதிய படம் காட்டப் படும் நாளும், ஒரு மாட்டு வண்டியில் பாண்டு வாத்தியத்தோடு நிலக்கோட்டையின் கடைத் தெருவிலும், பின் பக்கத்து பட்டி தொட்டிகளிலும் சென்று நோட்டீஸ் வினியோகிப்பார்கள். அந்த வண்டியைத் தொடர்ந்து சிறுவர்கள் ஓடுவார்கள். எத்தனை நோட்டீஸ் தான் அவர்களுக்கு வேண்டும்? அதுவும் ஒரு விளையாட்டு. ச்னிக்கிழமையன்று நிலக் கோட்டையில் சந்தை கூடும். அன்று மற்ற நாட்களை விட அதிகம் கூட்டம் கூடும். சந்தைக்கு மீனையும், கறிகாய்களையும் எடுத்து வந்த பக்கத்து கிராமத்துக்காரர்களெல்லாம் கொட்டைகைக்கு எதிரே வண்டியை நிறுத்தி மாட்டை அவிழ்த்துக் கட்டி, சினிமா பார்ப்பார்கள். சினிமா பார்த்து முடிந்ததும் அவர்கள் திரும்ப கிராமத்துக்கு வண்டியோட்டிச் செல்லும்போது சினிமா பார்த்த குஷியில் அவர்கள் கேட்ட சினிமா பாட்டைச் சத்தமாகப் பாடிக் கொண்டு தான் வண்டி ஓட்டிச் செல்வார்கள். அது தியாக ராஜ பாகவத்ரோ பி.யு.சின்னப்பாவோ பாடிய பாட்டாக இருக்கும். அது ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடீ, மாதரசே மயிலே” யோ அல்லது “யாருக்கு வேண்டுவதிங்கே, மானமில்லார்க்கன்றோ….” வாக இருக்கும். இந்தப் பாட்டுக்கள், இங்கு சிலர் கூறியது போல, நிச்சயம் “இந்த மண்ணுக்கேற்ற பாட்டுக்களாக்” அன்றைய தினம் இருந்தது. அது 1930-க்களின் பின் பாதி அல்லது 40-க்களின் முன் பாதி. இன்று, 2000-10க்களில், நம் த்மிழினத் தலைவர், கலைஞர், முத்தமிழ் காவலர் அவர்களால் ’சுப்ரீம் ஸ்டார்’ என்று புதிதாக நல்ல தமிழில் ஒரு பட்டத்தை உருவாக்கி (’சூப்ப்ர் ஸ்டார்’ விருதை வேறொருவர் ரொம்ப வருஷமாக கையில் இறுகப் பற்றிக்கொண்டு இருந்து விட்டதால்) பாராட்டப் பெற்ற ஷரத் குமாரும், ”மானாட மயிலாட புகழ்” நமீதாவும் அரை நிக்கரில் பள்ளிச் சிறுவர்களாக பாடிக்கொண்டே ஆடிய, “வருவீயயா, மாட்டீய்யா” வோ அல்லது, வேறொரு திரைக் காவியத்தில் வந்த “ஓடிப்போய கல்லாணம் கட்டிக்கலாமா, இல்லே கல்லாணம் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா” என்பன போன்ற அருமையான கருத்துக்கள் பொதிந்த பாட்டுக்கள் இன்றை தமிழ் மண்ணுகேற்ற பாட்டுக்களாக உருவெடுத்துள்ளன. அன்று சந்தைக்கு கறிகாய விற்க வந்த வண்டிக்காரர்களின் ரசனையும் வேறாகத் தான் இருந்தது. மாறியது த்மிழ் மண்ணா இல்லை வேறு ஏதாவதா தெரியவில்லை.

இந்த மண்ணின் குணமும் திறமும், நம் தமிழ் சினிமாக்காரர்களின் கோமாளித் தந்த்துக்கும் அதீத பணத்தாசைக்கும் ஏற்ப மாறுகிறதா இல்லை இந்த கோமாளித் தனம் எல்லாம் தமிழ் மண்ணின் குணத்தை தீவிரமாக ஆராய்ந்த பின் தான் நம் த்மிழ் சினிமாக்காரர்கள் படம் எடுக்கிறார்களா என்பது அடுத்த செம்மொழி மாநாட்டின் பட்டிமன்றத்துக்கேற்ற பொருளாக இருக்கக் கூடும்.

நிலக்கோட்டையில் இருந்த 1946- வரை நான் சினிமா பார்த்த சுமார் 12/13 ஆண்டுகள் நான் அறிந்தது அந்த கான்வாஸ் கூடார சினிமா தான். பெரிய பெரிய சினிமா தியேட்டர்களை நான் அறிந்தவ்னில்லை. அது நிகழ் விருந்தது மதுரை சென்ற பிறகு தான். ஆனால் இன்னமும் மல்டிப்ளெக்ஸ் எதையும் நான் பார்த்தவனில்லை. நிலக்கோட்டையை விட்ட் பிறகு நான் சினிமா டூரிங் கொட்டகை எதிலும் சினிமா பார்த்திருக்கிறேனா? ஒரு படம் பார்த்ததாக நினைவு. 1968-ல் என்று நினைக்கிறேன். கும்பகோணம் காவேரிக்கு எதிர்க்கரையில் உள்ள மேலக்காவேரியில் ஒரு கீத்துக் கொட்ட்கையில் ஒரு படம் பார்த்திருக்கிறேன். அது இன்றைய இயக்குனர் சிகரமான கே. பாலசந்தரின் ‘நாணல்” என்று நினைக்கிறேன். அதற்குப் பின் எனக்கு சினிமா டூரிங் கொட்டகை அனுபவம் கிடைத்ததில்லை அந்த இயக்குனர் சிகரம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சி கர மாற்றத்தை கொணர்ந்திருந்தார். அவர் சினிமாவில் வருகிறவர்கள் எல்லாம் ஒன்றுக்கு இரண்டு தடவை மனதில் பதியும் படி பேசுவர்ர்கள். இரண்டு மொழிகளிலும் பேசுவார்கள். முதலில் ஆங்கிலத்தில், “What is it that I am trying to tell you? என்று சொல்லிவிட்டு உடனே அதைத் தொட்ரந்து தமிழில் “நான் இப்போ சொல்ல வர்ரது தான் என்ன?” என்பார்கள்.

இதிலும் நம் தமிழ் மண்ணின் மணம் வீசுவதாகச் சிலர் வாதிடக் கூடும்.
என்றாலும், நான் என் சிறுபிராயத்தில் பதினோரு பன்னிரண்டு வருஷங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த கூடார சினிமாவில் கேட்ட பி.யு.சின்னப்பா, தியாகராஜ் பாகவதர்,செறுகளத்தூர் சாமா பாட்டுக்கள் இன்னும் கேட்க இனிமையாகத் தான் இருக்கின்றன. பின்னர் சங்கீதம் என்பதும், இன்னும் மற்ற நல்ல விச்ய்ங்களும், தமிழ் சினிமாவிலிருந்து முற்றாக மறைந்து விட்டன. .

Series Navigation