என் கவிதைக்குக் காயமடி!

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

வேதா


அந்த அறை முழுவதும் மெல்லிய சோகம் அப்பிக் கிடந்தது. ஏஸி குளிரில் என் சட்டையையும் தாண்டி பாக்கெட்டில் இருந்த அவளின் கொலுசு சில்லிட்டது. ஒன்றுமே அறியாத ஒற்றைக் கொலுசாய், ஊமையாய் என் மன ஓட்டங்கள்….சில மணி நேரத்திற்கு முன்னர் இப்படி எல்லாம் நடப்பதற்கு முகாந்திரமே இல்லாமல் எப்படி சந்தோஷமாய் இருந்தேன் ? சிதறிப்போய் சிதைந்து கிடந்த கொலுசைப் பார்த்து மனம் வெம்பியது. தெறித்து விழுந்த இதன் மணியைப்போல், உன் உருவில் உயிராக இருக்கும் என் ஒட்டுமொத்த சந்தோஷமும் தெறித்துப் போய் விடுமோ ? நினைக்க நினைக்க, நெஞ்சு பதறியது. இதோ இன்னும், சில அடிகள் தள்ளி, மூடிய கண்ணாடித் திரையின் வழியே தெரியும் மங்கலான உன் இருப்பு….இருப்பாயா ? இல்லை , பறப்பாயா ? விடை தெரியாத விடுகதையாய் என் மனசுக்குள் ஓராயிரம் சலனங்கள்….நேரம் போகப்போக நினைவுகளின் சங்கமிப்பால் நெஞ்சு சமனிலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

வெளியே போக்குவரத்து சன்னமாகிக்கொண்டே வந்தது. அவர்கள் இந்நேரம் வீட்டிலிருந்து கிளம்பி இருப்பார்கள். அநேகமாக பேருந்தில் தான் வரவேண்டும். எப்படியும் சென்னை வந்திறங்க காலை 7 மணியாவது ஆகிவிடும்! நர்ஸ் ஒருத்தி கதவு திறந்து எதிர்ப்பட்டாள். ‘கவிதா…கவிதா பேஷண்ட் ஆளுங்க யாரு இங்க ? ‘ நான் எழுந்து உள்ளே சென்றேன். டாக்டர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். ‘உங்க பேர் ? ‘ ‘அமுதன்….தமிழமுதன்! ‘ ‘வாங்க, …உட்காருங்க ‘…… ‘அமுதன், நான் டான் கிட்ட பேசிட்டேன். லண்டன் டாக்டர்க்கு போன் பண்ணி கன்பர்ம் பண்ணியாச்சு, எப்படியும் இன்னிக்கி நைட் 10.30க்கு வீடியோ மூலமா நாங்க வெற்றிகரமா ஆபரேஷன் நடத்திருவோம். ஒண்ணும் கவலை வேண்டாம். நரம்பும் சேர்ந்து சிதைஞ்சிட்டதால , உடனே செய்யறதுதான் அவங்களுக்கும் நல்லது. இதோ இந்த ஃபார்ம்ல கையெழுத்துப் போட்டுடுங்க… ‘ அவள் சொன்ன இடத்திலெல்லாம் நான் கையெழுத்துப் போட்டேன். மீண்டும் அதை சரிபார்த்தாள்.

‘இதுல நீங்க என்ன உறவுன்னு போடலை… ‘ என்னிடமே நீட்டினாள். நான் நிமிர்ந்தேன். காதல் என்பது உறவா ? உணர்வா ? தெரியவில்லை….வார்த்தைகள் வர மறுத்தன. ‘…..ஒண்ணு செய்யுங்களேன்…பக்கத்துல எதும் தூரத்து உறவு இருந்தாக்கூட போதும் , கூட்டிட்டு வாங்க, நானே வண்டி ஏற்பாடு பண்றேன்….ஏன்னா, பேஷண்ட் ரொம்ப வீக்கா இருக்காங்க…அப்புறமா எதும் ஆகிடுச்சுன்னா…..ஆக்ஸிடெண்ட் கேஸ் பாருங்க, அதான்! ‘ எனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னேன். ‘பர்ஸ்ல தான் டைரி வெச்சிருப்பாங்க! ஆனா இப்போ….வீட்டுக்குத் தகவல் சொல்லிட்டேன். அவங்க கோவைல இருந்து கிளம்பி நாளைக்கு காலைலதான் வந்து சேருவாங்க…..நான் ஆபரேஷன் செய்யும்போது இங்கயே இருக்கேன். முக்கியமா அது கண்ணு முழிச்சா பக்கத்துல ஆள் வேணும், நான் வெளில எங்கயும் போகலை ‘ என் பதிலில் நியாயம் இருப்பதாகப் பட்டது எனக்கு. ‘சரி, இந்த உறுதிமொழில கையெழுத்துப் போட்டுடுங்க!……ஒண்ணும் பயப்படாதீங்க, எப்படியும் ஆபரேஷன்ல காலைக் காப்பாற்ற முயற்சி செய்யறோம். அதுக்கும்மேல எல்லாம் அவன் செயல்! ‘ நான் மெலிதாகப் புன்னகைத்தேன். ‘அவங்க தூக்கத்துல இருக்காங்க, முழிச்சா கூப்பிடறோம்..நீங்க வெளில வெயிட் பண்ணுங்க! ‘ நான் நன்றி சொல்லிவிட்டு வெளியில் சென்று அமர்ந்தேன். ஏஸி குளிரில் என் சட்டையையும் தாண்டி பாக்கெட்டில் இருந்த அவளின் கொலுசு சில்லிட்டது.

ஒருதடவை அதை வெளியில் எடுத்துப் பார்த்தேன். ஹும்…ஒற்றைக்கொலுசு!! அந்த இன்னொன்று எங்கே விழுந்திருக்கும் ? எங்கேயோ தொலைந்துபோனதில் அந்த கொலுசுக்கு சந்தோஷமாகத் தான் இருக்க வேண்டும்! தொலையாமல் இருந்த ஒரே காரணத்தால், இது தன் சலங்கை சத்தமெல்லாம் தொலைத்து இன்று தனியாகிப் போய்விட்டதே…..விரல்களால் உணருகையில் பாம்பைப்போல் இருந்தது கொலுசு. ‘எனக்கு இந்த டிசைன் ரொம்ப பிடிக்கும்பா! நல்லாருக்கா ? ? ‘ அவள் விழிகள் விரிய சொன்னபோதே கவனித்தேன், அதில் ஒன்று அளவு அதிகமாய் இருந்தது. அதுதான் எங்கேயோ கழன்று விழுந்திருக்கும்….ஆனால், அது ரோட்டைக் கடக்கும்போதுதான் அவளில் கண்ணில் பட்டுத் தொலைக்கவேண்டுமா ? ஒரு நொடியில் என்னவெல்லாமோ நடந்துவிட்டதே! டாக்டர் சொன்னதை வைத்துப் பார்த்தால், ஒருவேளை…..அய்யோ! அவள் கொலுசே போட முடியாது போய்விடுமோ ? என் மொத்த நரம்பும் விறைத்தது. உடம்பு ஒருதடவை தூக்கிவாரிப்போட்டது. தொலைந்துபோன கொலுசு எந்தக் காலில் போட்டிருந்தது ? கொலுசில் இடது, வலது எல்லாம் இருக்கிறதா என்ன ? என் கொலுசு ஆராய்ச்சியை நர்ஸ் கலைத்தாள்.

அவள் இருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. சட்டென்று என் கர்வமெல்லாம் கலைந்துபோன மாதிரி உணர்ந்தேன் நான்! ‘என் செல்லம்,….இந்நேரம் எப்படி வலிக்குமோ ? கண்மூடித் திறப்பதற்குள் (! ?) அத்தனையும் நடந்துவிட்டதே! இத்தனை வலியையும் நீ தாங்கிவிடுவாயா என்ன ? ‘….துவண்ட தளிராய் கண்ணாடி வழியே தெரியும் அவள் முகம்,…..ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாய்! ‘எங்கு இருக்கிறோம் ‘ என்பதே தெரியாமல் இருக்கிறாய்…..விழித்ததும் யாரைத் தேடுவாய் ? உன் பெற்றோரையா ? கவிதை எழுத வேண்டும் போல் இருந்தது எனக்கு…..சட்டையில் இருந்த துண்டுக்காகிதத்தை எடுத்துக் கிறுக்க ஆரம்பித்தேன். என்னவெல்லாமோ எழுதியும், கடைசியில் இரண்டே வரிகளில் திருக்குறளாகிப் போனது கவிதை!

அவள் அப்படியல்ல…நிறைய எழுதுவாள், நீண்டதாக எழுதுவாள்….கேட்டால், ‘விரல் இருக்கு,…தமிழும் இருக்கு…எழுதறேன் ‘ என்று சிரிப்பாள். அவள் பேச்சின் அர்த்தம் எனக்குப் புரிந்த போதும் அதை மற்றவர் முன்னிலையில் காட்டிக்கொள்ள மாட்டேன். அவளும் அதைப் புரிந்து அமைதியாகி விடுவாள். அவள் விரல்கள் கூட , அவள் கவிதை போலவே நீளமாய் இருக்கும். ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு கவிதையே எழுதிவிடலாம், அப்படி இருக்கும்! அவள் பேச்சும் அழகு, எழுத்தும் அழகு…. ‘மனசும் கூட அழகு! ‘ என்னையும் அறியாமல் வாய்விட்டுச் சொன்னேன். கொலுசை என் நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக்கொண்டேன். ‘உனக்கு எதுவும் ஆகிவிடாது, நீ என்னுடையவள்! ‘ மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். ஒவ்வொரு மணியாக மானசீகமாக முத்தமிட்டேன். அது சத்தம் போடாமல் செல்லமாக சிணுங்கியது.

‘உள்ளே போங்க! ‘ நர்ஸ் கதவு திறந்தாள். என் கனவெல்லாம் கலைத்து நிஜத்துக்குத் தயாரானேன். அதுவரை மென்மையாய் இருந்த என் மனம், ஆதங்கத்தை அடக்க முடியாமல் திணறியது. கதவோரம் இருந்த கூடையில் அவள் காலுக்குச் சுற்றியிருந்ததெல்லாம் கழற்றிப் போட்டிருந்தார்கள்….அய்யோ…..வெளிளையே தெரியாதபடி அத்தனையும் ரத்தம்…அங்கங்கே திட்டுத் திட்டாய்! எனக்குள் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டது. இந்த வலியை மொத்தமும் எனக்கே யாராவது பெற்றுத் தந்துவிடமாட்டார்களா என்று தோன்றியது. ‘நான் அழுது உன்னையும் அழ வைக்கக் கூடாது ‘ அவசரமாக என் கண்களைத் துடைத்துக்கொண்டேன்.

‘அதோ….மெல்லிய இமை மலர்த்தி என் மனசுக்குப் பிடித்தவள் மல்லாந்து கிடக்கிறாள் ‘ மெல்ல அவள் அருகில் சென்றேன். என்னைப் பார்த்ததில் அவள் விழிகளில் ஒரு சின்ன பரவசம் தெரிந்தது. தலைப்பக்கமாக ஸ்டூலைப் போட்டு உட்கார்ந்து கொண்டேன். நெற்றியில் கொஞ்சமாக தையல் போட்டிருந்தார்கள். கன்னங்களில் அவள் உணரும் வலியின் தீவிரம் தெறித்தது. ‘எவ்வளவு பெரிய முட்டாள்தனத்தை செய்திருக்கிறது இந்தப் பெண் ? ‘ நாக்கைக் கடித்தபடி என் அழுகையை அடக்கினேன். அவள் என் கை பிடித்து போர்வையை விலக்கிப் பார்க்கச் சொன்னாள். ‘இல்ல….இருக்கட்டும், வேண்டாம் ‘ என்று தான் சொல்ல நினைத்தேன், அதற்குள் அவள் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து என் கைகள் அனிச்சையாய் போர்வையை விலக்க….ஒரு குட்டிக் கூற்றம் பார்ப்பது போல்….உள்ளே எலும்பு வரை தெரிய….என்னால் அதற்கு மேலும், உணர்ச்சிகளைக் காப்பாற்ற முடியவில்லை. அழுதேன்…அவள் முகத்தோடு முகம் புதைத்து அழுதேன். வெகு நேரம் வரை ……அவள் என்னை சமாதானப்படுத்தினாள். ‘ நரம்பு கட் ஆகிடுச்சாம்…எனக்கு இப்போ வலியே அவ்வளவா தெரியலைப்பா! ‘ சொல்லி முடிக்கும்போதே அவளும் அழுதாள். இப்போது என் முறை…அவளை திசை திருப்புவதற்காக என் சட்டைப் பையில் இருந்த கவிதையை எடுத்தேன். அதைப்பார்த்து அவள் அழுகை கொஞ்சமாக நின்று போனது….முகம் முழுக்க அப்படி ஒரு மலர்ச்சி….அவள் சொல்லாமலே , நானே அதை வாசித்தேன். மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லி மனசு நிறைய ரசித்தாள். ‘உங்க கவிதை தான் எனக்கு சுவாசமே….என்னிக்கும் இப்படி எழுதறதை நிறுத்திட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க! ‘ என்று கையை நீட்டினாள். ‘ஏய்! என்ன இதெல்லாம் ? ‘ நான் குனிந்து அவளின் உள்ளங்கையை முத்தமிட்டேன்.

‘சரி, நேரம் ஆச்சு, நான் கிளம்பட்டுமா ? ‘ நான் கேட்டதும் , சிரித்துக்கொண்டே என்னுடன் கை குலுக்கினாள். ‘ஒருவேளை, அடுத்த பிறவி ஆகிடுச்சுன்னா, அப்போ என்னை எப்படிப்பா அடையாளம் கண்டுபிடிப்பீங்க ? ‘ எனக்கு கோபம் கோபமாக வந்தது. ‘ஏண்டா! என்ன பேசறதுன்னே இல்லையா ? ‘ அவள் என் கோபத்தை ரசித்தாள். நான் எழுந்து கொண்டேன். ‘ஒரு நிமிஷம்ப்பா…. ‘ ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தாள். அரைகுறையாக ஏதோ கிறுக்கி…….ஓ! கவிதை….இதென்ன நாலே வரியில் ? என் முகம் பார்த்துப் புன்னகை செய்தாள். ‘படிங்களேன்…. ‘ எனக்குள் புதுசாக ஒரு ரத்தம் பாய்ந்தது.

நிறுத்தி நிதானமாக அவள் வரிகளை வாசித்தேன்:

‘ உப்புச் சிதறலாய் உருக்குலைந்து போயிருப்பேன்; என்

உயிர் உரசிப்போன மரணம் சொன்னது,

உன் ‘அனுமதி ‘ வேண்டும் என்று! ‘

ஆஹா…எத்தனை ஆழமான வார்த்தைக் கோர்ப்பு….என் மூளை தொடங்கி உயிர் முடிச்சு வரை அவளின் கவிதை இனித்தது. அந்தப் பரவசத்தை இம்மியும் கலைக்காமல், நிறைந்து வழிந்த மனதில் இருந்து கொஞ்சம் போல எடுத்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன், ……மென்மையின் மென்மையாய்!! அவளின் இரு விழிகளும் இசைந்து மூடி அந்த சொர்க்கத்தை ஏற்றுக்கொள்ள, ஏஸி குளிரில் என் சட்டையையும் தாண்டி பாக்கெட்டில் இருந்த அவளின் கொலுசு சில்லிட்டது.

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா