என்னம்மா அவசரம் ?

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

கோமதி நடராஜன்.


ரத்த சம்பந்தம் ஏதுமில்லை
பல ஆண்டுகள் என்று
பழக்கமும் இல்லை
ஆனாலும் ,உன் மரணம் என்
மனதை ரணமாக்குகிறதே!
மொத்தத்தில்-
எண்ணி மூன்றே வருடங்கள்தான்,
உன்னை, எனக்குத் தெரியும்
எண்ணி மூன்று மாதங்கள் கூட
சந்தித்திருக்க மாட்டோம்
மூன்று மணி நேரம் கூட
உரையாடியிருக்க மாட்டோம்.
நாம் பேசிய வார்த்தைகளை
அடக்க அஞ்சல் அட்டை
ஒன்று போதும்
ஆனாலும் உன் பிரிவு என்னை
ஆழமாகத் தாக்குகிறதே!
உன்னைப் பெற்றோரின்
மனம், சுக்கு நூறாகியிருக்காதா ?
இறைவன்தான் தர வேண்டும்,
அவர்களுக்கு,
இரும்பு இதையத்தை.
எத்தனை கனவுகள்,
எத்தனை லட்சியங்கள்,
வைத்திருந்தாய்-
அத்தனையும் முடிக்காமல்
ஏனம்மா இந்த அவசரம் ?
அறியாத வயசு ஆறிலுமில்லாமல்
அனுபவித்த வயசு அறுபதிலுமில்லாமல்
இருபத்திமூன்றில் முடிந்து விட்டாயே!
உலக வாழ்க்கை மீது,
உனக்கு அத்தனை வெறுப்பா ?
ஐயோ!பாவம் என்று சொல்லி
அடுத்தவேலையைக் கவனிக்க
நீ ஒன்றும்-
யாரோ இல்லை எனக்கு,
என் மகளின், ஒரே தோழி-
அதுவும்,
உயிர்த்தோழியென்றால்,
எனக்கு,நீ
இன்னொரு மகள் அல்லவா ?
தோழிக்கு
எல்லாவற்றையும் கற்றுத் தந்தாய்.
சாவென்றால் என்னவென்று,
கேட்டாளா உன்னிடம் ?
சாவின் கொடூரத்தைக்
காட்டத்தான் மடிந்தாயா ?
வெள்ளை மனமே!
நல்ல இதயமே!
இன்னொரு பிறவி,நீ எடுத்தால்,
உன்னைக்கண்டு கொள்வாள்,
உன் தோழி.
உன் ஆத்மா சாந்தியடைய,
இதயமில்லா இறைவனை,
வேண்டிக் கொள்வதைத் தவிர,
வேறென்ன செய்ய முடியும்
எங்களால் ?
————————[என் மகளின் அன்புத் தோழி சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி கேட்டு எழுதிய
இவ்வரிகளை,அந்த நல்ல ஆத்மாவுக்கு,அஞ்சலியாக்குகிறேன்] சோகத்துடன் கோமதி நடராஜன்.

komal@ambalam.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்