ஊமச்சி

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

கோகுலன்


—-1—-

அதிகாலையிலேயே போன் செய்திருந்தாள் அம்மா. எதிர்த்த அறை நண்பன்தான் கதவைத்தட்டி சொல்லிவிட்டுப்போனான். வழக்கமாக சனிக்கிழமை இரவில் தான் அம்மா அழைப்பது வழக்கம். இன்று என்ன காலையிலேயே போன் என நினைத்துக்கொண்டே மாடிப்படிகள் இறங்கினேன். மெதுவாய் விடிந்து கொண்டிருந்த காலை வாசலுக்கு வெளியே மங்கலாகத்தெரிந்தது. விடுதித்தொலைபேசிக்கு சற்று தள்ளியே வாட்ச்மேனும் இரு மாணவர்களும் செய்தித்தாளில் மூழ்கிப்போயிருந்தார்கள்.

எனக்காக சுவரில் சாய்ந்தபடியே காத்துக்கொண்டிருந்தது ரிசீவர். எடுத்துக் காதில் வைத்து ஹலோ என்றேன்.

‘சூர்யா, நல்லா இருக்கியாடா?’ அம்மா கேட்டாள்.

நான் நல்லா இருக்கேம்மா. நீ எப்படிம்மா இருக்க? என்ன, இந்த நேரத்துல போன் பண்ணியிருக்க? வழக்கமா ராத்திரில தானம்மா போன் பண்ணுவ?
ஏதாவது பிரச்சினையாம்மா? கொஞ்சம் பதட்டத்துடனே நான்.

‘வேற ஒன்னும் இல்லடா, நம்ம மேலவீட்டு சுப்பையா தாத்தா நேத்து ராத்திரி தவறிட்டாரு. அதுதான் உங்கிட்ட சொல்லலாமேன்னு கூப்பிட்டேன்.’

‘என்னம்மா சொல்றே? போனவாரம் நான் வீட்டுக்கு வந்தப்ப கூட நல்லாத்தான இருந்தாரு? என்னாச்சு?’

‘நேத்து காலையில கூட கடைத்தெருவுக்கு போயிட்டு வந்தவர்தான். சாயங்காலமா நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லியிருக்காரு. அப்புறமா ஆஸ்பிட்டல் போன கொஞ்ச நேரத்துலயே…அதுதாண்டா, நீ வரணும்னு விருப்பபட்டா உடனே கிளம்பி வா. இல்லேன்னா அடுத்தவாரம் வழக்கம் போல வந்தா போதும்ன்னு சொல்லலாம்னுதான் கூப்பிட்டேன்.’

‘சரிம்மா நான் வந்துடறேன். எப்படியும் பதினோரு மணிக்கெல்லாம் வந்துடுவேன். ஆமா, ஊமச்சி ரொம்ப அழுதுவுதாம்மா? ‘

‘ஆமா, அதோட தலையெழுத்து எப்படியோ அப்படித்தான் நடக்கும். நாம என்ன செய்ய முடியும்? அது சரி, நீ வரும்போது மறக்காம உன்னோட அழுக்குத்துணி எல்லாம் எடுத்துட்டு வா. நான் துவைச்சு வைக்கிறேன்.’

பேசி முடித்து ரிசீவரை வைத்தபின்பு மனது கனத்தது. அப்பொழுதும்கூட என்னால் முழுமையாக நம்பமுடியவில்லை. எல்லாமே அதிகாலையில் கனவா என்று கூட தோன்றியது.

வெளியில் மாடிப்படிகள் தாண்டி என் அறையை அடைந்தபின்னும் கூட ஊமச்சிதான் மனதில் அழுதுகொண்டே இருந்தாள்.

—-2—-

அவரசமாய் கிளம்பி பேருந்து நிலையத்தை அடைந்தபோது சூரியன் சுட ஆரம்பித்திருந்தான்.. அந்த காலையில் அதிக கூட்டம் இல்லாமலும் ஆரவாரம் இல்லாமலும் இருந்தது பேருந்து நிலையம். பேருந்து நிலையத்தை ஒட்டிய டீக்கடையில் ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு எனக்கான பேருந்தைத் தேடினேன். அது நிலையத்தின் அடுத்த வாயிலோரம் அதிகமாய் உருமிக்கொண்டும் கொஞ்சமாய் புகைகக்கிக்கொண்டும் நின்றது.

பேருந்தின் பெரும்பாலான ஜன்னலோர இருக்கைகள் காலியாகவே இருந்தன. அதில் வசதியான ஒன்றில் அமர்ந்தேன். சற்றுநேரத்தில் பேருந்து நகரத்தொடங்க என் நினைவுகளில் மீண்டும் ஊமச்சி வந்த அமர்ந்துகொண்டாள்.

ஊமச்சி, எங்கள் பக்கத்து வீட்டுப்பெரியவரின் மகள். சுருள் முடி, கம்மியான உயரம், கொஞ்சம் முரடான உடல். வயது சரியாகத்தெரியாது. ஆனால் சுமார் முப்பதைத்தொட்டிருக்கலாம். எங்கள் கிராமத்தில் அவளது பெயரைத் தெரிந்தவர்கள் அதிகப்படியாக பத்து பேர் கூட இருக்கமுடியாது. அனைவருக்கும் அவள் ஊமச்சிதான். நானே அவள் பெயரை சில வருடங்களுக்கு முன்புதான் அம்மாவிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.

அவளது அப்பா, அந்தக்காலத்தில் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். மேலும் அவளின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். அனைவரும் எங்கள் கிராமத்திலேயே வசதியான வாழ்க்கையில் இருக்கிறவர்கள். அவர்கள் யாரும் அவளைப்பற்றி அவ்வளவாக அக்கறைப்படுவதில்லை. இருந்தும் இவள்தான் அவர்கள் அனைவரது வீட்டிலும் துணி துவைப்பாள். தலையிலும் இடுப்பிலும் என நீர் சுமப்பாள். கொல்லைப்புறத்தில் பாத்திரம் தேய்ப்பது என எல்லா வேலைகளும் செய்வாள்.

அவள் மீது அதிகமாய் அன்பு வைத்திருப்பதும் மிகவும் அக்கறைப்படுவதும் பெரியவர் மட்டும்தான். சிறுவயதிலேயே அவளது அம்மா இறந்துவிட்டதாலும் அவளால் வாய் பேச முடியாமல் போனதாலும் அவர்தான் அவளை அன்பாய் கவனித்துக்கொள்வார். வெளியூர் சென்று வரும் ஒவ்வொரு முறையும் வாங்கிவரும் மிட்டாய், சேவை அவளுக்குத்தான் கொடுப்பார். அவர் ஊமச்சியை பார்த்துக்கொள்வதுபோல் தன் பேரக்குழந்தைகளைகூட பார்ப்பதில்லை என குறை கூறுவார்கள் அவரது மற்ற பிள்ளைகள்.

ஊமச்சிக்கு கொஞ்சமாய் காது கேட்கும் என அம்மா சொல்லியிருக்கிறாள். ஆனால் அவளது பேச்சு வெறும் இரைச்சலாக இருக்கும். கரகரப்பான குரலில் ஆ, ஊ என்று கத்துவதுதான் அவளுக்கு தெரிந்த பேச்சு. ஊரில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் பேசிக்கொண்டிருப்பாள். பெரும்பாலும் அவளது இரைச்சல் எரிச்சலூட்டுவதாக இருக்கும். அவள் ஆரம்பித்த பேச்சையும் விரைவில் முடிக்கமாட்டள். அதனாலேயே அவளைக்கண்டாலே ஓடுபவர்களும் உண்டு. மேலும் அவளை ஏளனம் செய்து சிரிப்பதற்காகவே அவளை சீண்டுபவர்களும் உண்டு.

பயணச்சீட்டு வாங்கச்சொல்லி என் கவனத்தைக் கலைத்தார் நடத்துனர். ஊர்ப்பெயர் சொல்லி சீட்டு வாங்கினேன். கொடுத்த நூறு ரூபாயில் மீதப்பணத்தை இறங்கும் போது வாங்கிக்கொள்ளச் சொன்னார் நடத்துன்ர்.

பெரும்பாலான நடத்துனர்களின் மாமூலான இந்த செயலில் எத்தனையோ தடவை தோற்றுப்போயிருக்கிறது என் மறதி. இன்றாவது இறங்கும் போது மறக்காமல் இருக்க வேண்டுமெனெ மனதில் நினைத்துக்கொண்டேன்.

ஜன்னலின் வழியே என்மேல் அப்பிக்கொண்டிருந்தது குளிர்காற்று. ஜன்னலை இழுத்து சாத்திவிட்டு சீட்டில் வசதியாக சரிந்து அமர்ந்தேன்.

—-3—-

அன்று முதன்முதலாக அந்த வீட்டில் நடந்த சண்டை எனக்கு இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது.

அவரது மகன்களில் மூத்தவன் தான் சண்டையை ஆரம்பித்தான். அதற்கு முந்தைய சில தினங்களில் தான் நிலங்களை எல்லாம் சரியாக பிரித்து பத்திரம் எழுதினார்கள். நிலத்தை தன் பிள்ளைகள் அனைவருக்கும் சரியாக பிரித்துக்கொடுத்ததாக கேள்வி. வீட்டை மட்டும் ஏன் பிரிக்கவில்லை என்றுதான் அந்த சண்டை.

அவர்கள் பேசிக்கொள்வது அனைத்தும் எங்கள் வீட்டில் நன்றாகக் கேட்டது. அப்படி சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள். இல்லை, சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். வீட்டை எப்பொழுதும் யாருக்கும் பிரித்துக்கொடுக்கப்போவதில்லை. அது சின்னவளுக்கு மட்டும் தான் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அந்த பெரியவர். சின்னவள் அங்கே ஊமச்சிதான் என்பதில் எனக்கும் அம்மாவுக்கும் கொஞ்சமாய் சந்தோசம். அது அவளது எதிர்காலத்தில் அவளுக்கு உதவியாய் இருக்கும் என நம்பினோம்.

அந்த சண்டைக்கு நடுவிலும் ஊமச்சியின் சத்தம் எனக்கு நன்றாகவே கேட்டது. அவரது மகன் ஊமச்சியை தங்கை என்றும பாராமல் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே தெருவில் இறங்கி நடந்தான். அதன்பிறகு அவர்கள் அந்த வீட்டு பிரச்சனையை எப்படி முடித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

ஊமச்சி அதிகமாய் கத்துவாள். அதுதான் அவளுக்குத்தெரிந்த பேச்சு. குழந்தைகள் தெருவில் கோலிக்குண்டு விளையாடினால் வேலைகளை எல்லாம் போட்டுவிட்டு ஓடி வருவாள். மேலும் குழந்தைகள் பம்பரம் சுற்றுவதை வேடிக்கை பார்ப்பதென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம். விளையாட்டின்பொழுது யாரும் கோலிக்குண்டோ பம்பரமோ சரியாக அடித்தாலும் சிரிப்பாள். தவறவிடும்போதும் சிரிப்பாள். அவளை பொறுத்தவரையில் பாராட்டும் கேலியும் ஒன்றுதான்.

நான் கல்லூரியின் முதலாண்டில்தான் அம்மாவையும் அந்த ஊரையும் முதன்முதலாய் பிரிந்த பொழுதுதான் ஊமச்சி பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். நான் விடுதிக்கு கிளம்பிய அந்த நாளில் என்னை வழியனுப்ப ஊமைச்சியும் இருந்தாள். அவள் சைகைகள் மூலமாகவும் , அவள் பாஷையில் கத்திக்கொண்டும் அவள் சொல்லிய அறிவுரைகள் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. நல்லா சாப்பிடு, போன் பண்ணு, என்று சாதாரணமாக கூறினாலும் அப்போதைய அவளின் ஒவ்வொரு பேச்சின் முக பாவங்களையும், உணர்ச்சிகளையும் கூர்ந்து கவனித்தேன். அதை என்னால் மறக்கவே முடியாது. அப்பொழுது அவள் கண்களும் கொஞ்சம் கலங்கியிருந்தன. அப்பொழுதான் புரிந்துகொண்டேன். அவள் எப்பொழுதுமே ஒப்புக்குப்பேசுவதில்லை. நடிப்பதும் இல்லை. மேலும் இது எல்லாம் அவளுக்குத் தெரியவும் தெரியாது.

நான் விடுதியிலிருந்து அம்மாவுடன் போனில் பேசும் சில நேரங்களில் அவளும் பேசுவாள். அம்மாவிடம் ரிசீவரை வாங்கி பேசும்பொழுது அவள் நலம் விசாரிப்பதாக நான் யூகித்துக்கொண்டு நான் நன்றாக இருக்கிறேன் என்பேன். அவளும் சிரித்துக்கொண்டு அம்மாவிடம் ரிசீவரைத் தருவாள்.

இப்பொழுது ஊமச்சியை நினைத்துக்கொண்டேன். இந்நேரம் அவள் அழுதுகொண்டிருப்பாள். அனைவரும் அவளை சமாதானம் செய்ய முயற்சிக்கக்கூடும். இல்லை, அவளுக்கு சமாதனம் சொல்லக்கூட அம்மாவை விட்டால் யாரும் இல்லாதிருக்கவும் கூடும்.

—-4—-

நான் இறங்க வேண்டிய நிறுத்ததில் பேருந்து நின்றது. என் தோள்பையை எடுத்துக்கொண்டு இறங்கினேன். மதியம் நெருங்கிகொண்டிருந்த அந்த வேளையில் வெயில் மிக அதிகமாகவே இருந்தது. காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாத வயிறு அடிக்கடி சப்தமிட்டுக்கொண்டிருந்தது. இருந்தும் சாப்பிட மனமில்லை. கடையில் குடிநீர் மட்டும் ஒரு பாட்டில் வாங்கிகொண்டு எனது கிராமத்திற்குச் செல்ல ஆட்டோ ஏறி அமர்ந்தேன்.

ஒரு இருபது நிமிட பயணம். ஆட்டோ இரு குக்கிராமங்களைத்தாண்டி மண்சாலையில் பயணித்தது. சாலையின் இருபுறத்து வயல்களையும் காரிசாத்தான் மலையையும் எனக்கு ரசிக்க மனமில்லை.

தெரு முனையில் ஆட்டோ நின்றது. சீட்டிலிருந்தபடியே தயக்கத்துடன் திரும்பினார் ஆட்டோக்காரர்.

‘ஏதோ துக்கம் போல இருக்குங்க. இதுக்கு மேல போக முடியாது. நீங்க தயவுசெய்து நடந்து போயிடுங்க ஸார்’,

‘சரி, எவ்வளவுங்க?’

‘அறுபது’

துக்க வீட்டுக்கு வந்த நான் பேரம் பேச மாடேன் என தெரிந்து வைத்திருந்தான் போலும் ஆட்டோக்காரன்.

பர்ஸ் பிரித்து பணம் கொடுத்து விட்டு இறங்கி நடந்தேன்.

அந்த துக்க வீட்டைத்தவிர தெரு முழுவதும் அமைதியாக இருந்தது. இழவு வீட்டில் மட்டும் அழுகைச்சத்தமும் பரபரப்பும் அதிகமாக இருந்தது. அந்த வீட்டின் மரணத்தின் அழுகையை அந்த தெருவின் அமைதி சப்தமிடாமல் ரசிப்பதுபோல் இருந்தது.

வீட்டுக்குள் நுழைந்து தோள்பையை வைத்துவிட்டு லுங்கி கட்டிக்கொண்டேன். பின் வாசலில் சென்று கால்முகம் அலம்பிவிட்டு வந்தேன்.

பக்கத்துவீட்டின் அழுகைச்சத்தம் நன்றாககேட்டது. யாரோ ஒரு கிழவியின் அழுகை கொஞ்சம் தூக்கலாக இருந்தது. அதில் ஊமச்சியில் அழுகையை கேட்க நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை.

அவரின் மகன் வெளியே சப்பரம் செய்யும் வேலையில் சிலரை வேலைவாங்கிக்கொண்டிருந்தார் . துக்க வீட்டின் உள்ளே சென்று வர முடிவு செய்தேன். தெருவின் மற்ற பெண்களுடன் திண்ணையோரம் நின்றிருந்த அம்மா என்னை பார்த்து மெதுவாகவும் முகத்தில் உணர்ச்சி ஏதும் காட்டிக்கொள்ளாமலும் ‘சாப்பிட்டியா?’ என்று கேட்டாள்.

அம்மாவிடம் இல்லையென்று தலையாட்டிவிட்டு, மேலும் பேச காத்திராமல் அந்தவீட்டில் படியேறினேன். கூடத்தில் வடக்கு பார்த்து சாத்தி வைக்கப்பட்டிருந்தார் பெரியவர். உச்சந்தலை நாடியோடு சேர்த்து வெள்ளைத்துணியால் கட்டப்பட்டிருந்தது. நெற்றியில் நிறைய திருநீறும், சந்தனத்துடன் ஒட்டிவைக்கப்பட்ட ஒரு நாணயமும் இருந்தது. அவரது பிள்ளைகளும் சொந்தக்காரர்களும் கூடத்தில் அழுதுகொண்டும் கொஞ்சம் நடித்துக்கொண்டும் இருந்தார்கள். வீடு முழுவதும் ஊதுவத்தி புகையும் பன்னீர் வாசமும் என் அடிவயிற்றில் ஏதோ செய்தது.

பெரியவரின் பக்கத்தில் ஊமச்சியை காணாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கூடத்தில் எங்கு தேடியும் ஊமச்சியை காணமுடியவில்லை.

கூடத்தின் பின் அறையிலும் பின் வாசல் திண்ணையின் கூட்டத்திலும்கூட அவள் இல்லை. மீண்டும் வீட்டுக்குள் திரும்பி அடுக்களையில் எட்டிப்பார்த்தபொழுதுதான் அங்கு உட்கார்ந்திருந்தாள்.

அள்ளிமுடிக்காமல் விரிந்து கிடந்தது அவள் தலை. அழுது வீங்கியிருந்தன கண்கள். அழுத கண்ணீரில் அவளின் எதிர்காலத்தின் கேள்விக்குறிதான் தெரிந்தது. இதுவரை எந்த துக்க வீட்டிலும் அழாத என் கண்களும் ஊமச்சிக்காக கலங்கின. துக்கம் தொண்டையில் அடைப்பதை அப்பொழுதான் முதலாவதாக உணர்ந்தேன். அவளிடம் பேசுவதற்கு எதுவுமில்லாத நான் அமைதியாய் சென்று பின்வாசல் திண்ணையில் அமர்ந்தேன். அங்கிருந்து பார்க்க சன்னல் வழியே ஊமச்சி தெரிந்தாள்.

எப்பொழுதும் ஆரவாரமாகவும் இரைச்சலிட்டு பேசிக்கொண்டிருக்கும் ஊமச்சி, எப்பொழுதும் சிரித்தபடியே இருக்கும் ஊமச்சி, எனக்கு விபரம் தெரிந்த இத்தனை வருடங்களில் இன்றுதான் முதன்முதலாக ஊமையாக இருந்தாள்.


gokulankannan@gmail.com

Series Navigation

கோகுலன்

கோகுலன்