உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

ஜெயமோகன்



உலகமெங்கும் இன்று நவீனத் தமிழிலக்கிய வாசகர்கள் பரவியிருக்கிறார்கள். இலக்கியப்படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் உண்மையான ஆர்வமும் மதிப்பும் கொண்டவ்ர்கள். அவர்களை நோக்கி இந்த வரிகளை எழுதுகிறேன்.

சென்ற சில மாதங்களாக காண நேர்ந்த சில நிகழ்வுகள் இதை எழுதுவதற்கான தூண்டுதல். சில நாட்களுக்கு முன்பு ஓரு விருதுக்கான தேர்வுக்குழுவில் நிகழ்ந்ததை அறிந்தேன். விருதுக்குழுவில் ஒருவர் நாஞ்சில்நாடன் பெயரைச் சொல்லி அவருக்கு அவ்விருது கொடுக்கலாம் என்று சொன்னார். உடனே அக்குழுவே பொங்கி எழுந்தது. கொடுக்கவே கூடாது என்றது. குழுவின் தலைவர் ஒரு முன்னாள் பேராசிரியர், கவிஞர் என பரிசுகள் பெற்றவர். நாஞ்சில்நாடனுக்கு நன்கு தெரிந்தவரும்கூட. எக்காரணத்தாலும் நாஞ்சில்நாடனுக்கோ அவரைப்போன்றவருக்கோ பரிசளிக்கக்கூடாது என்று அவர் ஆவேசமாக வாதிட்டாராம். விருது இருபதாண்டுகளுக்கு முன்னர் அபத்தமான ஏதோ கவிதைகளை எழுதிய ஒருவருக்கு அறிவிக்கப்பட்டது. சாகித்ய அக்காதமி விருதுக்கு ஒருமுறை ஆ.மாதவன் பெயர் வந்தபோது அதை போராடித் தோற்கடித்தவரும் இப்பேராசிரியர்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதற்கு முன் இன்னொரு விருதுக்கு தேவதேவனின் பெயர் சொல்லப்பட்டது. குழுவிலிருந்த ஒரு பேராசிரியர் ‘தேவதேவன் எந்தக்காலத்தில் இவ்வளவு ரூபாயை சேர்த்து பார்த்திருக்கப் போகிறார்…இதெல்லாம் அவருக்கு அதிகம்’ என்றாராம். தேய்ந்த செருப்பும் துவைத்துக் கசங்கிய ஜிப்பாவும் போட்ட ஓய்வுபெற்ற ஆரம்ப பள்ளி ஆசிரியராக மட்டுமே அவரால் தேவதேவனைப் பார்க்க முடிந்தது. நம் காலகட்டத்தின் மாபெரும் கவிஞர் அவர் என்ற உணர்வை அடையவேண்டுமென்றால் பேராசிரியருக்கு இலக்கிய அறிமுகம் இருக்கவேண்டும்.

ஐம்பதுகளில் நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ வெளிவந்தது. தமிழிலக்கியத்தில் இயல்புவாத அழகியலின் தொடக்கமாக அமைந்த ஆக்கம். அது. அதன்பின் பள்ளிகொண்டபுரம், உறவுகள் என்ற இருநாவல்கள் மூலம் அவர் அப்போக்கை நிலைநாட்டினார். அன்றுமுதல் இன்றுவரை நீலபத்மநாபனின் பெயர் சாகித்ய அக்காதமி விருதுக்கு குறைந்தது முப்பதுமுறையாவது பரிந்துரைக்கபப்ட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அது ஆவேசத்துடன் நிராகரிக்கப்படும். ஒரு படைப்பாளியாக சராசரி வாசகனால்கூட பொருட்படுத்தத் தகாதவர்களுக்கெல்லாம் அப்பரிசு சென்றபிறகும் அவ்விலக்கிய முன்னோடி புறக்கணிக்கப்பட்டார். இவ்வருடமும் ஒரு பெண் எழுத்தாளருக்குத்தான் விருது என்று சொல்லப்பட்டது. எப்படியோ தன் எழுதபத்தி மூன்றாம் வயதில் நீலபத்மநாபன் விருதுபெற்றிருக்கிறார். விருது என்பதைவிட இன்று அவருக்கு அது ஓர் அவமானம்.

இயல்புவாத படைப்பாளிகளில் மன இருளை சித்தரித்த முன்னோடி பெரும்படைப்பாளியான ஆ.மாதவன் இன்றுவரை ஒரு சிறு அங்கீகாரத்தைக்கூட பெற்றதில்லை. எழுபத்தி இரண்டுவயதான மாதவன் அதற்காக குறைப்படுவதில்லை என்றாலும் புறக்கணிப்பே ஒரு கலைஞனின் நரகம். பிந்திய வயதில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற அசோகமித்திரன் வேறு எவ்வகையிலும் கௌரவிக்கபப்ட்டவரல்ல. அவரது சமகாலத்தவரும் தமிழ் அங்கதக் கவிதையின் முன்னோடிகளுமான சி.மணியும், ஞானக்கூத்தனும் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாடகத்தமிழுக்கு உயிர்கொடுத்த ந.முத்துசாமியும் சூழலியல் சார்ந்த ஒரு புதிய சொல்லாடலையே இங்கு உருவாக்கிய சு.தியோடர் பாஸ்கரனும் அழுத்தமான பண்பாட்டு ஆய்வுகளைச் செய்த பேரா.ராஜ்கௌதமனும், முனைவர்.அ.கா.பெருமாளும், ஆ.சிவசுப்ரமணியனும் எவ்வகையிலும் கௌரவிக்கபப்ட்டதேயில்லை

அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் இன்று தங்கள் முதுமையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். வண்ணநிலவன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன்,பூமணி, ராஜேந்திரசோழன்,தேவதேவன் போன்றவர்களுக்கு அறுபது தாண்டிவிட்டது. நவீனத்தமிழிலக்கியம் என்றாலே இவர்கள்தான் என ஓரளவு ரசனையும் வாசிப்பும் கொண்டவன்கூட அறிவான். இவர்களுக்கு வெளியே யார் இங்கே ஒரு நல்லவாசகன் பொருட்படுத்தக்குடியவர்களாக இருக்கிறார்கள்? எந்த இலக்கிய வரலாறும் இதையே மீண்டும் மீண்டும் சொல்லும். ஆனால் இன்றுவரை சிறு அங்கீகாரங்கள் கூட இவர்களைத் தேடிவரவில்லை.

இங்கு எல்லா அமைப்புகளிலும் கொடுக்கல்வாங்கல் அன்றி வேறு ஏதுமறியாத சிறுமதியாளர்கள் ஏறி அமர்ந்திருக்கிறார்கள். தங்கள் நலன்களை மட்டுமே கவனம் கொள்கிறார்கள். இவர்கள் கண்ணில் இலக்கியமுன்னோடிகள் பணமும் அதிகாரமும் இல்லாத அற்பமானுடர்களாக மட்டுமே தென்படுகிறார்கள். ஒவ்வொரு பரிசு மூலமும் தகுதியற்றவர்களை கௌரவித்து முன்னோடிப்படைப்பாளிகளைச் சிறுமைப்படுத்துகிறார்கள் இவர்கள்.

இந்த மனக்குறையில் இருந்து உருவான இரு விருதுகள் ‘விளக்கு’ ‘இயல்’ ஆகியவை. விளக்கு இன்னமும் தன் இலக்கில் இருந்து விலகவில்லை. ஆனால் இயல் முற்றிலும் திரிந்து பல்கலைக்கழக கொடுக்கல் வாங்கல் ஆட்டங்களுக்கு களமாகிவிட்டது. இவ்வருடம் அவ்விருதுக்குழுவில் இருந்தவர்களில் இருவரை நான் பழகிஅறிவேன். பிறரைப்போலன்றி இவர்கள் அவ்வப்போது இலக்கியமும் படிக்கக் கூடியவர்கள். இத்தகைய கீழ்த்தர ஆட்டம் ஒன்றை ஆடும்போது இத்தனை இலக்கிய முன்னோடிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை இவர்களின் மனசாட்சி சொல்லாதா? பொதுமேடையில் எத்தனை வித்தாரமான சொற்களை சமைத்து வைத்தாலும் தனிமையில் அந்தரங்கமாகவேனும் சற்றுக் கூசமாட்டார்களா? என்னை சமீபத்தில் மிக மனம் கொதிக்கச்செய்தது இக்கேள்விதான்.

ஆனால் இவர்களின் உலகமே இந்த ஆட்டங்களினால் ஆனது என்னும்போது அது பழகிவிடுகிறது.லாபமில்லாத ஒன்றைச் செய்ய மனம் கூடுவதில்லை.கடந்தகாலங்களில் இவர்களின் செயல்பாடு ஒவ்வொருமுறையும் இப்படியே இருந்துள்ளது. ஒருபோதும் இவர்கள் தன்னலம் மறந்து ஒர் இலக்கிய ஆக்கத்தையோ படைப்பாளியையோ முன்வைத்தது இல்லை. இவர்களிடமிருந்து நம் இலக்கிய முன்னோடிகளுக்கு அங்கீகாரங்களை எதிர்பார்ப்பதில் பயனே இல்லை.

விருதுகளினால் இலக்கியவாதி உருவாவதில்லை. வாழ்வதுமில்லை. ஆனால் இலக்கிய முன்னோடிகளை மதிப்பதும் கௌரவிப்பதும் ஒரு சூழலின் இலக்கிய அடிப்படைகளை வலுப்படுத்தும்.சில ஆதார மதிப்பிடுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும். ஆகவே அது அவர்களுக்காக அல்ல, நமக்காகத்தான். ஆனால் தன் சாதனைகள் புறக்கணிக்கப்படுகையில் தன் தியாகம் அவமதிக்கபப்டுகையில் படைப்பாளியின் அகம் கண்ணீர்வடிக்கத்தான் செய்யும். அவர்களின் கண்ணீர் ஒருபோதும் ஒருபண்பாட்டுக்கு நல்லதல்ல.

மலேசியாவில், சிங்கப்பூரில், கனடாவில், அமெரிக்காவில், தமிழகத்தில் என உலகமெங்கும் உள்ள தமிழிலக்கிய வாசகர்களில் சிலருடைய மனசாட்சியையேனும் இச்சொற்கள் சென்று தொடும் என நான் நம்புகிறேன். அவர்களில் சிலராவது இதற்கு ஏதாவது செய்யவேண்டும். மீண்டும் புது அமைப்புகளை உருவாக்குவதன்றி இதற்கு வேறு வழியும் இல்லை.

இப்போது இதில் தவறுவோமெனில் அந்தக் குற்றவுணர்வு பலகாலம் நம்மைத் துரத்தும் என்று மட்டும் சொல்ல விழைகிறேன். தமிழ் மனத்தின் தயக்கமும் ஐயமும் எனக்குத்தெரியும். இங்கு ஒவ்வொரு நேர்மையான உணர்வையும் சிறுமைப்படுத்த எழுந்துவரும் குரல்களையும் நான் அறிவேன். அதையெல்லாம் மீறி எவரோ சிலர் காதில் இச்சொற்கள் விழாதா என்று இவ்விரவில், இக்கணம், மனம் தவிக்கிறது


Series Navigation