உரத்த சிந்தனைகள்- 2

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

ராமசந்திரன் உஷா


ஜெயமோகனின் ‘ஏழாவது உலகம் ‘- பா.ராகவனின் ‘அலகிலா விளையாட்டு ‘

எனக்குத் தெரிந்த ஒருவர், பிறரைத் தரக்குறைவாகப் பேசுவது, கொஞ்சமும் உண்மையில்லாமல் பழிபோடுவது என்று சகலமோசமான குணங்களும் கொண்டவர். வயது ஆகஆக அவரின் இந்தக் குணங்கள் மாறாமல் அதிகரிக்கத்தான் செய்தன. அவரின் இந்த நடத்தை அவரின் பிள்ளைகளைப்பாதித்த பொழுதும் அவர் பேச்சில், நடவடிக்கையில் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் நிம்மதியாய் வாழ்ந்து, உயிரை விட்டார்.

‘ஏழாவது உலகம் ‘ ஜெயமோகன் அவர்களின் சமீபத்திய படைப்பு. குறையுள்ள பிறவிகளை வாங்கி, விற்பது, உருவாக்குவது, அவர்களைக்

கொண்டுப் பிச்சை எடுத்துச் சுகபோக வாழ்க்கை வாழ்வது என்று எந்த மனசாட்சி உறுத்தலும் இல்லாமல் பண்டாரமும் அவர் மனைவியும்

வாழ்கிறார்கள். செய்தபாவம், செல்லமாய் வளர்த்த பெண் ஒரு கேடுகெட்டவனுடன் ஓடிப்போய் விபசாரியாய் மாறுகிறாள். இன்னொரு

மகள் திருமணத்திலும் பிரச்சனைகள், ஏமாற்றங்கள்! அப்போதும் பண்டாரத்துக்கும், அவர் மனைவிக்கும் நாம் யாருக்கும் மனமறிந்து

எந்தக் கெடுதியும் செய்யவில்லை, அதனால் நமக்கு நல்லதே நடக்கும் என்ற நினைப்பு.

கையில் எடுத்தால் வைக்க முடியவில்லை. நெஞ்சை நெகிழவைக்கும், பதறவைக்கும், சிரிக்கவைக்கும் சம்பவங்கள் நிறைய உண்டு.

படித்து முடித்ததும் தோன்றிய எண்ணம்- இனி பழனிக்குப்போக மனம் வராது. எந்தப் பிச்சைக்காரருக்கும் காசு போடவும் கூடாது.

ஆனால், இதில் ஜெயமோகனின் மற்ற நாவல்களில் இருக்கும் இலக்கியச் செறிவு இல்லை என்று நண்பர் ஒருவர் கூறினார்.

வாசகனைத் திணற அடிக்கும் எழுத்துதான் இலக்கியமா ? நேர்கோட்டில் பயணிக்கும் கதைகள் இலக்கியமாகாதா ? ஜெயமோகனின் நடை இனி இதேப்போலச் சரளமாய் இருக்குமா ? கதையும் இனி இப்படிச் சாதாரண வாசகர்களுக்கும் புரியும்படி இருக்குமா ?

பா.ராகவனின் ‘அலகிலாவிளையாட்டு ‘ கதை, இதற்கு நேர் எதிர். தனக்கு வேதம் சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு வாழ்க்கையில்

அடுக்கடுக்காய் வரும் துன்பங்களைக் கண்ட மாணவன் தன் வாழ்நாள் முழுதும் அதையே நினைத்து வேதனைப்படுகிறான். வாத்தியார் மகளை மணந்து அவருக்குக் கொஞ்சமாவது நிம்மதி கொடுக்கலாம் என்று பார்த்தால், அவள்- பூரணி, தனக்குக் கல்யாணத்தில் விருப்பமில்லை என்று மறுத்துவிடுகிறாள். கல்யாணம் செய்துகொள்ளாமல், வாழ்நாள் முழுதும் நிம்மதியிழந்து, எதையோ ஓயாமல் தேடிக்கொண்டேயிருக்கிறான். அவன் கேள்வி வேதம் சொல்லிக்கொடுக்கும் நல்லவருக்கு ஏன் இந்தச் சோகங்கள் என்று ? சிந்துபாத்

கதையில் வரும் கிழவனைப்போல், வாத்தியாரின் கஷ்டங்களைத்தன் மனதில் சுமந்து , விடை தெரியாமல் அவதிப்படுகிறான்.

கடைசியில் இதற்கு விடையைக் கைலாயமலை அடிவாரத்தில், பூரணியே சொல்லுகிறாள்.

இமயமலைச்சாரலில் உள்ள ஆன்மீகத்தலங்கள், முதுமையின் அச்சம், பல்வேறு மனப்போராட்டங்கள், குழப்பங்கள் என்று கதை

வேகமாய்ப் பயணிக்கிறது. ஆன்மீக வினாக்களும், பதில்களும், தத்துவ விசாரணைகளும் படிப்பவர்களைப் பயமுறுத்தாமல் கதைப்போக்கை

ஒட்டியே உள்ளது.

இரண்டு நாவலுமே வாசகரைக் கட்டிப்போடும் நடை, கதைக்களம் என்று படிப்பவருக்கு நல்ல விருந்து. அலகிலாவிளையாட்டு மின்புத்தக வடிவில் வெளியாகியுள்ளது.

பிள்ளைப் பேறு

என்னதான் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாலும், நாட்டில் குழந்தையில்லாத் தம்பதியினர்

எப்படியாவது ஒரு குழந்தையேனும் பெற்றுவிட வேண்டும் என்று ஆயிர, லட்சக்கணக்கில் செலவழித்து மருத்துவம் செய்துகொண்டு

இருக்கிறார்கள். இம்மருந்துகளினால் ஏகப்பட்ட பின்விளைவுகள் வேறு. அக்காலத்தில் கைவைத்தியம், பாட்டி வைத்தியம் பார்த்துவிட்டு

ஆலமரத்தைச் சுற்றிவிட்டு, கோவில் குளம் என்று போய் வருவார்கள். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் உறவினர்களின் குழந்தை ஒன்றை, பெறும்பாலும் ஆண் குழந்தையை, கொள்ளிபோட, சுவீகாரம் எடுத்து வளர்ப்பார்கள். நல்ல வசதியுள்ளவர்கள்

என்றால் ஏழை குடும்பத்தில் இருந்து சட்டப்படி சுவீகாரம் எடுத்து, சொந்த பெற்றோர்களுக்கு அந்த குழந்தை மீது எந்த

உரிமையும் இல்லாமல் செய்வார்கள். இல்லை என்றால் பிள்ளையுடன் அந்த ஏழைகுடும்பமே வந்துவிடும் என்ற பயம். இது நகரத்தார் இனத்தில் மிக அதிகம்.

ஆனால் இன்றோ பெறுவதே ஒன்றே அல்லது இரண்டு. இதில் எதை தூக்கிக் கொடுப்பது ? அதனால் பிள்ளை பிறக்க வழியில்லை என்று உறுதியாய்த் தெரிந்தால் அனாதைக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது இந்தியாவில் அதிகமாகி வருகிறது. இப்படி ஏழு தம்பதியினர் செய்ததை கண்டுள்ளேன். ஆனால், அத்தனையும் பெண் குழந்தைகள், நடிகர் பார்த்திபனைத் தவிர. ஆண் குழந்தைகள் அடங்காமல் போய்விடும் என்கிறார்கள். சாதி, இனம் பார்க்காமல் இப்படி அனாதை குழந்தையை எடுத்து வளர்க்கும் தம்பதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பார்த்தபடம்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்- இந்த படாவதிப் படத்தை பலரும் அலசிவிட்டதால் சொல்ல ஒன்றுமில்லை. நகைச்சுவை படம் என்றுச்

சொல்லிக் கொண்டு ஒரு காட்சியில் கூட சிரிப்பு வராதப் படம் இதுதான். ஆழ்வார்பேட்டை ஆண்டவர் வரும்பொழுது, கூட நண்பர்களாய் வரும் நாலுபேர்கள் கமலஹாசனை ஆண்டவனைக் கண்டதுபோல, மிக மரியாதையாய் நோக்குகிறார்கள். அவருடன் வரும்

சீன்களில் சிநேகாகூட கொஞ்சம் நர்வஸ்ஸாய் இருப்பது மிக நன்றாகத் தெரிகிறது. பாவம் பிரபு! அ.தி.மு.க கட்சியைப்போல, கமலஹாசனின் படத்தில் நம்பர் டூ. த்ரீ எல்லாம் இல்லை என்று அவருக்கு தெரியாது போல!

கண்ணில் விழுந்த செய்திகள்

துபாய் விமான நிலயம் 4.1 பில்லியன் யூ.எஸ் டாலர் மதிப்பில் விரிவாக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணியில் ஈடுப்பட்டிருந்தப்

பொழுது ஏற்பட்ட விபத்தில் இதுவரை எட்டு தொழிலாளர்கள் இறந்துள்ளதாகப் பத்திரிக்கை செய்திகள் சொல்லுகின்றன.

இத்தகைய லேபர் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் இந்திய, பாக்கிஸ்தானியர்கள்தான்.

இப்போது பாலிவுட்டில் டிவோர்ஸ் பருவம் போலும்! சமீபத்தில் துபாயில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஹிந்திநடிகர் கோவிந்தா, நடிகை ராணிமுகர்ஜியுடன் கைகோத்துக் கொண்டு வந்திருந்தார். ராணிமுகர்ஜியுடன் இருக்கும் தொடர்ப்பை உறுதியும் படுத்தியுள்ளார். அமீர்கான், சைப் அலிகான் (பட்டவுடி, ஷர்மிளா டாகுர் பையன்) வரிசையில் இப்போழுது கோவிந்தா!

தமிழ் சினிமாவில் அந்தக்கால அம்மாக்களான பண்டரிபாய், எம்.வி.ராஜம்மாவானாலும் பிறகு குஷ்பூ, அம்பிகா வகையறாவானால் முன்னுச்சியில் வெள்ளை பெயிண்ட் அடித்து, கண்ணாடி அணிவித்து ஹீரோவின் அம்மாவாகப் பாசத்தை பிழிந்து, கணவனுக்கு அடங்கி ஒடுங்கி நடிப்பார்கள். ஆனால் நதியா ஸ்டைலாய் இளமையான அம்மாவாக, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் அழகாய்

காட்சி அளிக்கிறார். இந்த இளமை அம்மா பார்மூலா ஹிந்தி படத்தில் இருந்து வந்துள்ளது. ரஜினியின் சந்தரமுகியில் மீனாவை

இப்படி ரஜினிக்கு அழகான அம்மாவாக்கலாமே! மகளாய், மனைவி மற்றும் காதலியாய் நடித்த மீனா, தனக்கு தாயாகவும் நடிக்க

வேண்டும் என்ற ஆசையை அவர் முன்பே சொல்லியிருக்கிறார்.

புரியாத விஷயம்

என்னைப்போலப் படிக்கும் ஆர்வமுள்ள, அதிலும் புலம் பெயர்ந்தவர்கள் பலரும் சொல்லும் ஒரு விஷயம் என்னவென்றால், இணையம் வந்தபிறகுதான் தமிழில் இவ்வளவு எழுத்தாளர்கள், இலக்கியப்பத்திரிக்கைகள், சிற்றிதழ்கள் உண்டு என்பதையே அறிந்தோம். எங்களுக்கு தெரிந்தது எழுத்தாளர்கள் என்றால் வெகுஜன பத்திரிக்கையில் எழுதுபவர்கள்தான். பிறகு நல்ல எழுத்து என்று ஜெயகாந்தன், பிரபஞ்சன் என்று சிலரின் அறிமுகம் கிடைத்ததும் நூலகத்தில் தேடிப் படித்ததுண்டு. ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும் ஆ.வி யில் எழுதிய பிறகுதான் இவர்களைப் பற்றி தெரியும்.

சமீபத்தில் உயிர்மை ஆண்டு விழாவில் இவர்கள் இருவரும் எழுத்தாளர்களிடையே நடக்கும் சர்ச்சைகள், குழு மனப்பான்மை

இவற்றைப்பற்றி எல்லாம் பேசினார்கள். எந்த ஒரு தொழிலாளியும் இன்னொரு தொழிலாளியின் தொழில் திறனை ஒப்புக் கொள்ளுவதில்லை. எந்த பிளம்பரை வெச்சி இந்த ரிப்பேர் பாத்தீங்க, அந்த ஆளுக்கு தொழிலே தெரியாது என்பார் குழாய்

ரிப்பேர் செய்ய வந்தவர். இதேப் போல மருத்துவரும், அதே துறையில் உள்ள இன்னொருவருக்கு எதுவுமே தெரியாது என்று நற்சான்றிதழ் வழங்குவார். ஆனால் இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு ஒன்றே ஒன்றுதான் – எதிராளிக்குத் தொழில் தெரியாது என்பதுதான். ஆனால் எழுத்தாளர்களோ எழுதுபவனின் சொந்த வாழ்க்கையைக் குறிப்பார்த்து அடிக்கத் தொடங்குகின்றனர்.

இதில் பாவம்! பெற்ற தாய், உடன் பிறந்த சகோதரிகள், மன நலம் எதையும் விடுவதில்லை. இந்த அளவு தனிமனித தாக்குதல்

சினிமா உலகில் கூடக் கிடையாது. அரசியலில் மூன்றாம்தர, நான்காம்தர பேச்சாளார்கள் மேடையில் முழங்கினாலும் அதைப்

படித்தவர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள். சில தலைவர்கள் தரக்குறைவாக பேசினாலும் அவை வன்மையாய் கண்டிக்கப்படுகின்றன.

ஆனால் எழுத்தாளர்களுக்கு சமூக பொறுப்பு அதிகம். சரஸ்வதி கடாட்சம் என்று எழுத்தாளர்களை ஆசானுக்கு இணையாய்

கொண்டாடுகிறோம்.

இலக்கிய பத்திரிக்கை என்றால் இப்படித்தான் பிற எழுத்தாளர்களைத் தாக்க எழுதப்பட வேண்டும் என்பது இலக்கணமா ? பிற தொழிலாளர்கள் வாய்ப்பேச்சில் மற்றவனை இகழ்கிறான். ஆனால் எழுத்தாளர்கள் சகஎழுத்தாளன் மேல் கொண்ட குரோதத்தை எழுத்தில் பதிவு செய்து அதை நாலாப்புறமும் பரப்புகிறார்கள். எழுத்தாளருக்கு உள்ள சமூகபொறுப்பு எங்கே போனது ? படைப்பை விமர்சிப்பது படிக்கும் எல்லாருக்கும் உள்ள உரிமை, ஆனால் இப்படி கீழ்தரமாய் எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதை இலக்கிய மற்றும் சிறுபத்திரிக்கைகள் ஊக்குவிக்கின்றனவா ? இல்லை என்றால் இப்படி எழுதுபவர்களை ஒதுக்கி வைக்கவேண்டும், அவர்களின் எந்த ஒரு, நல்ல படைப்பையும் கூட வெளியிடக்கூடாது. அல்லது இப்படி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளுவது விளம்பரத்துக்காகவா ? யாமறியோம் பராபரமே!

ஒரு சந்தேகம்

நேரு, இந்திராகாந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு எந்தளவு உதவி புரிந்தார் ? அவர் உயிருடன் இருந்தப்போதே, மகளை கட்சியில், அரசாங்கத்தில் இந்திராகாந்திக்கு பதவி ஏதாவது தரப்பட்டதா ? மனைவியை இழந்த பிரதமர்அவர்களின் இல்லத்தை கவனித்துக் கொள்ள, கணவனைப் பிரிந்து வாழ்ந்த மகள் தந்தைக்கு உதவியாயிருந்தார். சாஸ்திரியின் மரணத்துக்கு பிறகு, பல்வேறு தலைவர்கள் கொண்ட காங்கிரசில் அவர்களுக்கு மாற்றாய், கற்றுக் குட்டி என்று நினைத்து இந்திராகாந்திஅம்மையாரை காமராஜ் பிரதமர் ஆக்கினார். பிறகு இந்திராகாந்தி தானே தன்னை யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு உயர்ந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் பொழுதே, ஜெயலலிதாவை கட்சி பணியில் முன் நிறுத்துவது ( கொ.ப.செ) மேடையில் சிறப்பு மரியாதை, கட்சியில் முன்னிருத்தல் அவரால் நடந்ததில்லையா ? கூட்டங்களில் பேச, உரை தயாரிக்க எம்.ஜி. ஆர், ஜெயலலிதஅவர்களுக்கு பிரத்தியோக ஆசிரியர் அமர்த்திச் சொல்லித்தரவில்லையா ? ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் சுயம்புவாய் வெளிப்பட்டேன் என்கிறார் முதலமைச்சர் பி.பி.சி பேட்டியில்.

சுலப சமையல்

உருளைக்கிழங்கை நீள வாக்கில் மேலே ஆழமாய்க் கீறவும். கோடு போடுவதுபோல, ஆனால் இரண்டாய்ப் பிளக்கக்கூடாது. பிளந்த

இடத்தில் ஒரு பிரிஞ்சி இலையைச் சொறுகவும். இலை முடிந்தவரை உள்ளே போக வேண்டும். அரை ஸ்பூன் எண்ணெய், தேவையான உப்பைத் தெளிக்கவும். பிறகு மைக்குரோவேவ் அவனில் 200 டிகிரி வெப்பத்தில் 20 நிமிடம் பேக் செய்யவும். பிறகு ஸ்பூனால்

குத்திப் பார்த்து வெந்திருக்கிறதா என்றுப் பார்க்கவும். இல்லை என்றால் இன்னும் சில நிமிடம் வேக வைக்கவும். பிரிஞ்சி இலை

வாசனையுடன் சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.

ஒரு விளக்கம்

சென்ற வாரம், இந்தியாவை தாழ்த்தி சொன்னேன் என்று நண்பர் ஒருவர் குறைப்பட்டுக்கொண்டார். இந்த விஷயத்தில் இந்தியா, செளதி அரேபியா மட்டுமல்ல, உலகில் எல்லா பகுதியிலும் பெண்களை செல்வாக்கானவர்கள் கடைச்சரக்காய்தான் உபயோகிக்கிறார்கள்.

பெண்கள் இப்படி வழிதவறிப் போக பெற்றோர், உடன் பிறந்தோர், சொந்த கணவனே அவளை மூளைச்சலவை செய்கிறார்கள். சிவகங்கை

ஜெயலட்சுமி என்று குறிப்பிட்டிருந்தேன் தவறு அது சிவகாசி ஜெயலட்சுமி)

தோழியர் வலைப்பதிவு

3 – 10 – 2004

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா