உயிர்ப்பலியும் பெரியாரும்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

ஞாநி


ஆடு கோழி உயிர் பலித்தடையை எதிர்ப்பதில் எந்த முட்டாள்தனமும் கிடையாது என்று உறுதியாக நம்பி வரும் வகை வகையான ‘முற்போக்காளர்களும் ‘ பார்ப்பனீய்த்தை எதிர்ப்பதில் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் சில ‘பகுத்தறிவாளர் ‘களும்; ‘மகிழ்ச்சி ‘யடைய இதோ ஒரு செய்தி:

உடனே நான் என் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டேன் என்று கருதி விட வேண்டாம்.

(என்னை ஜெயலலிதாவ்ின் ஆதரவாளன் என்றும் பார்ப்பான் என்றும் உங்களில் சிலர் அவதூறுகள் செய்தாலும் என் கருத்தில் மாற்றம் இல்லை. நான் யார் என்பது என் முப்பதாண்டு காலப் பொது வாழ்க்கையிலும் தனி வாழ்க்கையிலும் நிரூபிக்கப்பட்ட விஷயம்.

நீ யாரடா பெரியாரைப் பற்றிப் பேச என்று ஒருவர் கடிதம் எழுதினார். பெரியார் பார்ப்பனர்களின் சடங்குகளை மட்டுமே எதிர்த்தாராம். பெரியாரின் வாழ்க்கையும் வரலாறும் தெரியாதவர்களுக்கெல்லாம் இப்படி கடிதம் மட்டும் எழுதத் தெரிகிறது. தமிழ் நாட்டில் இருப்பது போல புதுவை யூனியன் பகுதியிலும் உயிர்பலித் தடைச் சட்டம் வேண்டும் என்று கோரி 1964ல் தன் 85ம் வயதில் பெரியார் காரைக்கால் காளி கோவிலெதிரே திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். சட்டம் கொண்டு வருவதாக புதுவை அரசு உறுதியளித்த பிறகே போராட்டம் நிறுத்தப்பட்டது.)

உங்களுக்கு ஒரு புதிய ஆதரவாளர் கிடைத்திருக்கிறார் என்று முடியுமானால் மகிழ்ச்சியடையுங்கள். அவர் வேறு யாருமல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் ராம் நாத் கோயங்கா முதல் சரவணா ஸ்டோர் செல்வரத்தின நாடார் வரை வணிகர்களுக்கும் ராமர் பிள்ளை போன்ற சுதேசி விஞ்ஞானிகளுக்கும் ஆலோசகராகத் திகழும் ஆர்.எஸ்.எஸ் அறிவாளி குருமூர்த்திதான்.

அவர் உங்கள் கட்சியை ஆதரிக்கிறார். அது மட்டுமல்ல, அவருடைய குருநாதரான ராம.கோபாலன் இந்த விஷ்யத்தில் தன் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவரை வேண்டிக் கொண்டிருக்கிறார்.

உங்களையெல்லாம் மிஞ்சிவிட்டார் குருஜி. நீங்களாவது இந்த பிரச்சினையை என் போன்றவர்களைத் திட்டிக்கொண்டாவது விவாதிக்கத் தயாராக இருக்கிறீர்கள். குருஜி ஒரே போடாகப் போட்டு விட்டார் – மிருகத்தை பலியிடும் உரிமை சரியா தவறா என்று விவாதிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்று. (அவருடைய விவரமான கட்டுரை துக்ளக் 22-10-2003 இதழில்)

உயிர் பலியை ஆதரிப்பதன் மூலம் பார்ப்பனீயத்தை எதிர்ப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்காக குருஜி தெளிவுபடுத்தியிருகிறார். “ துறவிகளிலேயே உயர்ந்த துறவியாக இருந்த காஞ்சி மாமுனிவர் உயிர் பலியிடுவது தவறு என்று கூறியது கிடையாது “

எனவே உயிர்பலியும் பார்ப்பனீயம்தான் !

குருஜி மேலும் விளக்குகிறார் – “கடவுளை இப்படித்தான் வழிபட வேண்டும் என்பதோ, இவர்தான் கடவுள் மற்றவை சைத்தான்கள் என்று கூறுவதோ, பாரத நாட்டின் பாரம்பரியம் கிடையாது. இது கிறிஸ்துவ இஸ்லாமிய மத பாரம்பரியம். இந்த எண்ணம் நம் நாட்டில் நவீனம் என்கிற முறையில் ஹிந்து மதத்துக்குள்ளும் புக ஆரம்பித்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தான விஷயம் “

ஆக, தோழர்களே, புரிகிறதா குருஜியின் சூட்சுமமான பார்வையின் நோக்கம் ?

உயிர்பலி வழ்ிபாட்டு முறையைப் பின்பற்றும் தலித்துகளையும் இதர ஒடுக்கப்பட்ட சாதியினரையும் ஹிந்து மதத்துக்குள்ளேயே திரட்டி வைத்துக் கொண்டு இஸ்லாமுக்கும் கிறித்துவத்துக்கும் இதர மதங்களுக்கும் எதிரான படையாக உருவாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களில் ஒன்று. இதைத்தான் குஜராத்தில் வெற்றிகரமாக மோடி செய்து முடித்தார். தமிழ் நாட்டில் குருஜி அதே முறையைத் தன் குருநாதருக்கும் உபதேசிக்கிறார்.

அப்படியானால் கிராமப் பூசாரிகளை ஆகமப்படுத்துவது ? அதுவும் இன்னொரு பக்கம் நடக்கும். ஒன்றுக்கொன்று எதிரானது போல தோன்றும் இரண்டு அணுகு முறைகளையும் ஒரே நோக்கத்துக்குப் பயன்படுத்துவது ஆர்.எஸ்.எஸ் பட்டை தீட்டி வைத்திருக்கும் உத்தி.

குருஜியின் கட்டுரையிலேயே அவர் சொல்லுகிறார் – அவருடைய பூர்விக கிராமத்தில் அவருடைய பிராமணக் குடும்பமும் இதர சைவக் குடும்பங்களும் மாலையில் எல்லைக் காளிக்கு பொங்கல் படைத்துவிட்டு வருவார்கள். அசைவக் குடும்பங்கள் இரவு அதே கோவிலுக்குப் போய் மிருக பலி தந்து கும்பிடுவார்கள். இந்த சமாதான சக வாழ்வு தொடர வேண்டும். ஆகமப் பூசாரியும் அசைவப் பூசாரியும் ஒரே கோயிலில் இருப்பார்கள். சமஸ்கிருத மந்திரம் சொல்லியும் ஆட்டை வெட்டலாம் ! எந்த விதமான சமரசத்துக்கும் ஆர்.எஸ்.எஸ். தயார். காரணம் என்ன ?

மிருகபலியை எதிர்த்து சில ஜாதிகளை ஹிந்து மதத்திலிருந்து துரத்திவிட்டால் என்னாவது ? இஸ்லாமுக்கும் கிறித்துவத்துக்கும் எதிராக காலாட் படையாக இருக்க வேண்டியது அவர்கள்தானே. ஆகமமும் இருக்கட்டும். ஆடு வெட்டலும் இருக்கட்டும். ஆகமப்படி இது விரோதமானது அல்ல என்று காட்டத்தான் காஞ்சி மாமுனிவரின் சர்ட்டிபிகேட்.

உயிர்பலித் தடையை எதிர்க்கும் பல “முற்போக்குப் பகுத்தறிவாளர்கள்” தமிழக அரசு கட்டப் பஞ்சாயத்துக்கும் சாதிப்பஞ்சாயத்துக்கும் கொண்டு வரவிருக்கும் தடையை வரவேற்கிறார்கள்.

குருஜி அவர்கள் கவனத்துக்காக இதைப் பற்றியும் அறிவுரை வழங்கியிருக்கிறார். (துக்ளக் 29-10-2003) இந்தத் தடையையும் எதிர்க்க வேண்டுமாம்.

சுகந்தி வழக்கு போன்றவற்றில் பஞ்சாயத்து தவறு செய்யும்போது அதை மட்டும் நீதிமன்றம் மூலம் தடுத்துக் கொண்டால் போதுமாம். “கிராமப் பஞ்சாயத்து தீர்ப்புகளில் சில முரட்டுத்தனமாகக் கூட் இருக்கலாம். ஆனால் அது மிருகத்தனமாக இருந்தாலொழிய அதைத் தடுக்கக்கூடாது” என்கிறார் குருஜி.

குருஜியும் ப்ரைவேட் பஞ்சாயத்து செய்கிறவர்தான். பஜாஜ் குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்சினை, பிர்லாவுக்கும் எல் அண்ட் டிக்கும் இருந்த பிரச்சினை இது மாதிரி பல மேல் மட்ட வியாபார உலகில் அவர் பஞ்சாயத்துக்காரர்.

நீதிமன்றங்களில் நம்பிக்கையில்லாத நக்சல்பாரித் தோழர்கள் குருஜியின் கருத்தைக் கேட்டால் இந்த ஆள் முன்னாள் நக்சல்பாரியா, வருங்கால நக்சல்பாரியா என்று குழம்பிவிடக் கூடும். “ நம் நாட்டில் நீதி மன்றங்கள் மூலமாக மட்டும்தான் நீதி கிடைக்கும் என்று யார் நினைத்தாலும் அது தவறு. நிச்சயமாக அது முழு உண்மை அல்ல.னீதிமன்றம் என்ராலே தாமதம் என்றாகிவிட்டது. நீதி மன்றம் சொல்லும் தீர்ப்பு மாத்திரம் சரியான தீர்ப்பு என்றும் கூறிவிட முடியாது. நீதி மன்றங்களிலும் லஞ்சம் லாவண்யம் பரவியிருப்பதை உயர் நீதி மன்றமே மறுக்க முடியாது.”

கிராமத்துக் கட்டப் பஞ்சாயத்துகள் தொடர வேண்டும். ‘கீழ் ‘ ஜாதிகளின் உயிர் பலி வழிபாடு தொடர வேண்டும். இதுதான் குருஜியின் கருத்து.

இதற்கு அர்த்தம் என்ன ?

ஜாதி அமைப்பு முறை தொடர வேண்டும் என்பதுதான்.

ஏனென்றால் கிராம்ப் பஞ்சாயத்து என்று கெளரவமாக வர்ணிக்கப்படுபவை தேர்தல் நடத்தி உருவாக்கப்பட்ட பஞ்சாயத்துகள் அல்ல. அவை ஜாதிப் பஞ்சாயத்துகள்தான். ஜாதிக் கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டவைதான். கலப்புத் திருமணம் செய்யும் இளைஞர்களை இவை கொடூரமாக ஒடுக்குவது தெரிந்ததுதான்.இவை நீடிக்கும் வரை ஜாதியமும் நீடிக்கத்தான் செய்யும். நேருவும் அம்பேத்கரும் கிராமப் பஞ்சாயத்து முறையை உருவாக்கத் தயக்கம் காட்டியதற்குக் காரணமே ஜாதியத்தின் பிடியில் கிராமங்கள் இருப்பதுதான்.

உயிர்பலி வழிபாட்டு முறைகளும் ஜாதிய அடிப்படையிலானவையே. ஒரே கோயிலில் வன்னியரும் தலித்தும் ஆடு வெட்டினாலும், முதலில் வெட்டும் உரிமை தலித்துக்குக் கிடையாது. வெட்டியபிறகு தலைப் பகுதியை வன்னியப் பெரிசுக்கு தலித் தர வேண்டும். தலித் பெரிசுக்கு வன்னியர் எதுவும் தரத் தேவையில்லை. ஊருக்கு ஊர், வட்டாரத்துக்கு வட்டாரம், இந்த ஜாதிகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் மேல், கீழ் அடுக்குமுறைகளில் மாற்றம் கிடையாது.

உயிர் பலியைத் தடுத்தால், ஒடுக்கப்பட்ட ஜாதிகள் ஹிந்து மதத்தை விட்டு வெளியேறிவிடுமோ என்பதுதான் குருஜிக்களின் பயம். ஜாதியப் பஞ்சாயத்துகளை எதிர்த்தால் தங்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பது இன்னொரு பயம்.

எனவே எல்லா ஜாதிகளும் அவரவர் ‘தர்ம ‘ங்களை அனுஷ்டித்துக் கொண்டு தொடர்ந்து , ஹிந்து மதத்துக்குள்ளேயே இருந்தால் போதும். அப்போதுதான் இதர மதங்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட பலம் இருக்கும். இதுதான் ஆர்.எஸ்.எஸ் கணக்கு.

ஜாதீயம் என்பது வேறல்ல அதுதான் பார்ப்பனீயம். எனவே ஜாதீயத்தை நீடிக்கச் செய்யும் உதவிகளெல்லாம் பார்ப்பனீயத்துக்கே வலு சேர்க்கும்.

– தீம்தரிகிட அக்டோபர் 2003 இதழிலிருந்து

dheemtharikida@ hotmail.com

dheemtharikida2002@yahoo.co.in

Series Navigation