உன்னைச் சுற்றி உலகம்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

சத்தி சக்திதாசன்


உன்னைச் சுற்றி ஓர் உலகம்
உருளுவதே இயக்கம்
உருண்டையே வடிவம்
உண்மைக்கு அதனுள் விலை என்ன ?

கனவிலோர் உலகம்
கண்ணயர்வில் விழிக்கும் உலகம்
கண்விழிப்பில் உறங்கும் வையம்
கனவுகள் நிழலின் நிகழ்வுகள்

ஏழ்மை உலகம்
ஏக்கம் அங்கேதான் பிறப்பு
எதிர்பார்ப்புக்கள் அங்கு இறப்பு
ஏமாற்றங்கள் உறைவிடம்
எந்நாளும் மறையா வறுமை

கோதையர் உலகம்
கொண்டாட்டம் காதலில்
கொண்டுவா சீதனம் என்றதும் திண்டாட்டம்
கொடுங்காவல் சிறையில் பூட்டும் தாலி
கொந்தளிக்கும் உணர்வுகள்
கொடுப்பதெல்லாம் கண்ணீரே !

சிறியவர் உலகம்
சிரிப்பினில் தவழும்
சிந்தனைகள் தெளிந்தவை
சினமறியா நெஞ்சங்கள்
சீராடும் அன்பினில்

பெற்றோரின் அகிலம்
பெறாத மகிழ்வுகள்
புரியாத தியாகங்கள்
பித்தான புத்திகள்
பிள்ளைகள் மனமோ பாறைகள்

இளைஞரின் மேதினி
இனிக்கும் கல்லூரி நாட்கள்
இசைக்கும் இதயங்கள்
இடிக்கும் தத்துவங்கள்
இல்லாத எதிர்காலம்
இறக்காத லட்சியங்கள்
இவ்வுலக நாளைகள்

கவிஞனின் உலகம்
கணநேர உணர்ச்சிகள்
காகிதத்தில் காவியங்கள்
கடைசிவரை வாழ்வுப் போராட்டம்
கனவுகளின் உயிராக்கம்

உன்னைச் சுற்றிய உலகம்
உருண்டுகொண்டே
உள்ளே நீ உன் பாதையும் வட்டமே
விட்டதை மீண்டும்
தொட்டது அடுத்தொரு சுற்றில்
உண்மையான நிலையிது அறிவீரோ !

0000

விழித்தெழும் உணர்வுகள்

சத்தி சக்திதாசன்

விளையாடும் காலங்கள் வினையான கோலங்கள் விளங்காமலே
வியக்க வைத்த ஞானங்கள் விழித்தெழும் உணர்வுகள்

விசையோடு விரைந்திடும் வாலிபத்தின் வயதுகள் மறைந்தோடி
விலையாகா அனுபவங்கள் விழிதெழும் உணர்வுகள்

வீணான காலங்கள் விளையாட்டில் ஓடிய பருவத்தின் வனப்புக்கள்
விந்தையான மனிதர்களின் விழித்தெழும் உணர்வுகள்

விபரமற்ற செய்கைகள் துயில மறுத்த சீற்றங்கள் பாகமாக படிந்ததந்த
வீசி அடித்த வாசங்கள் அவை விழித்தெழும் உணர்வுகள்

விழிகள் தோறும் நிரம்பிய யுவதிகளின் தோற்றங்கள் வாழ்வு இதுதான் என
விவேகமற்ற சிந்தைகள் இன்று விழித்தெழும் உணர்வுகள்

விடியும் வேளைகள் வலம் வந்த நேரங்கள் விசிறி அடித்து நினக்க மறந்த
வீணையொன்று தந்தியற்ற கோலம் போல விழித்தெழும் உணர்வுகள்

0000
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்