இந்த வாரம் இப்படி (விவாதம் இல்லாமல் சட்டங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு, ஈராக் போர், பாகிஸ்தான் உறவு)

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

சின்னக் கருப்பன்


ஒரு விவாதம் கூட இல்லாமல் இத்தனைச் சட்டங்கள் நிறைவேறலாமா ?

என்ன சட்டம் எந்த கருத்துக்களின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது என்ற புரிதல் கூட இல்லாமல் பல சட்டங்கள் இன்று நிறைவேற்றப்படுகின்றன். கூட்டுறவு நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கும் சட்டம், அதில் உள்ள பிரச்னைகள், அதன் இன்றைய தேவை பற்றி மக்களோ பத்திரிக்கைகளோ மக்கள் பிரதிநிதிகளோ யாருமே பேசாமல் விவாதிக்காமல் அரங்கேறியிருக்கிறது. இது ஜனநாயகம் அல்ல. இதற்காக நாம் சுதந்திரம் பெறவில்லை.

மக்கள் மன்றத்தின் முன் நிற்கும் ஒவ்வொரு சட்டமும் அதன் விளக்கங்களோடு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அதனை யார் செய்யமுடியும் ? பத்திரிக்கைகள் மட்டுமே செய்யமுடியும். பத்திரிக்கைகள், பல தரப்பட்ட மக்களுக்கு இடையேயும், மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயும் ஒரு பாலமாக இருக்க வேண்டும். வெறுமனே சினிமாவை மட்டுமே நம்பி கருப்பு வண்ணமும் இன்ன இதர வண்ணங்கள் போட்ட வெள்ளைக்காகிதங்களை விற்பனை செய்வதல்ல.

முக்கியமாக செய்திப் பத்திரிக்கைகள் மக்களிடம் ஒவ்வொரு சட்டத்துக்கும் எந்த அளவு மக்களின் ஆதரவு இருக்கிறது அல்லது எதிர்ப்பு இருக்கிறது என்பதை ஆராய்ந்து மக்களிடமும் அரசாங்கத்திடமும் சொல்ல வேண்டும். தேர்தலில் யார் ஜெயிக்கக்கூடும் என்பதற்கு மட்டுமல்ல கருத்துக் கணிப்புகள். கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் தவறாக இருந்தாலும், கருத்துக் கணிப்புகள் மூலம், மக்கள் மன்றத்தின் முன் நிற்கும் சட்டங்களைப் பற்றிய விவரம் மக்களிடம் செல்லுமே. அதுவே முக்கியமல்லவா ?

***

பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு தேவையா ?

ஆண்கள் அதிகார பீடங்களில் நிறைந்து வழியும் இந்தியாவில் (இன்னும் இதர உலக நாடுகளில்) பெண்களுக்கு 33 சதவீத பாராளுமன்ற இடங்களில் இட ஒதுக்கீடு நோக்கிய சட்டம் பல தடவை முயற்சிகளுக்குப் பின்னால், இன்னொரு முயற்சியாக நின்று போயிருக்கிறது.

பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் விளைவுகளையும் அது எவ்வாறு கிராமப்புறங்களை மாற்றியிருக்கிறது என்பதைப் பற்றியும் எந்தவிதமான அறிக்கையும், ஆராய்ச்சியும் கிடைக்கவில்லை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு நல்லது என்பது ‘முற்போக்கு ‘ நிலைப்பாடு என்று நம்மை நாமே கட்டாயப்படுத்திக்கொண்டு ஆராய தேவை இல்லை என்பதே என் கருத்து. பல கிராம பஞ்சாயத்துகளில் ஆண்களது பினாமிகளாகவே பெண்கள் தங்கள் இடங்களை வகிக்கிறார்கள். பெண்களுக்கு என்று பொருளாதார சுதந்திரம் இல்லாத நிலையில் பெண்களது இடங்களை நிரப்புவது என்பது குடும்பங்களுக்குள் தகராறு உருவாக்கும் எனக் கருதவும் இடம் இருக்கிறது.

இன்றைக்கு பெண்களது இட ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் நிறைவேறாததற்கு அது காரணமல்ல. அதே போல இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்பவர்கள் கூறும் காரணமும் சரியல்ல. 33 சதவீத ஒதுக்கீட்டின் காரணமாக பல ஆண்டுகளாக சவுகரியமாக ஜெயித்துவரும் தொகுதியை மூன்று முறைக்கு ஒருமுறை பெண்ணுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற நிலையே இன்றைய எம்பிக்கள் எதிர்க்கக் காரணம். இதுவே, இரண்டு முறைக்கு மேல், ஒருவர் ஒரே தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யக்கூடாது என்று போட்டுப் பார்க்கட்டும், இதே ஆட்கள் அதனையும் எதிர்ப்பார்கள்.

இது மக்கள் நலன் சார்ந்த ஒரு குரல் அல்ல. தன்னுடைய நலனைப் பேணிக்கொள்ளவே இந்த குரல். இதற்கு எந்த கட்சியும் விதி விலக்கல்ல. இவ்வளவு அக்கறை இருக்கும் காங்கிரசும், பா ஜ க வும் இன்ன பிற கட்சிகளும் இதையே தமக்கு இடப்பட்ட சவாலாக மேற்கொண்டு தம்முடைய எதிர்கால வேட்பாளர்களில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்குவார்களா ? நிச்சயம் மாட்டார்கள். பா ஜ கவும், காங்கிரசும் நிகழ்த்திய நாடகத்திற்கு சமதா, சமாஜ்வாதி கட்சியின் கூக்குரல் ஒரு நல்ல காரணமய்க் கிடைத்து விட்டது. மூலையில் போட்டுவிட்டு நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்து விட்டார்கள்.

தமிழ் நாட்டில் ஜெயலலிதா செய்யலாம். ஆனால், முக்கியமாக ஜெயலலிதா செய்யாமல் இருக்கக் காரணம், ஆண்களை அவமானப்படுத்தி அடையக்கூடிய சந்தோஷத்தை பெண்களை அவமானப்படுத்தி அடைய இயலாது என்பதாக இருக்கலாம்.

***

ஈராக் போரில் அமெரிக்கா வெற்றி

எதிர்பார்த்ததுதான் என்றாலும், எனக்கென்னவோ நப்பாசை என்று வைத்துக்கொள்ளுங்களேன். பிரச்னை முடிந்து விட்டது என்று நான் கருதவில்லை. ஒவ்வொரு தடவை ஆங்கில அமெரிக்கப் படைகள் அங்கு வெற்றி பெறும்போதெல்லாம், அது ஈராக் மக்களின் விடுதலை என்றுதான் இவர்களால் பிரகடனப்படுத்தப்படுகிறது. இதுதான் துருக்கிய சாம்ராஜ்யம் உடைக்கபட்டபோதும் நடந்தது. அதுதான் குவாய்த்தில் அமெரிக்கா வெற்றி பெற்றபோதும் நடந்தது. அதுதான் இப்போதும் நடக்கிறது.

படுமோசமாக தோல்வியடைந்த தேசங்கள் தங்கள் புண்களை ஆற்றும் விதம் கொடூரமானது. முதலாம் உலகப்போரில் அவமானமான தோல்வியை சந்தித்த ஜெர்மனி பின்னால் ஒரு ஹிட்லருக்கு ஆதரவு தந்தது ஞாபகம் இருக்க வேண்டும். எண்ணெய் காசுக்காக ஓடும்போது அது பலருக்கு ஞாபகம் இருக்காது.

***

பாகிஸ்தானுடன் சமாதான உறவா ?

ஏற்கெனவே இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டும் போன்ற சமாச்சாரங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

ஏன் எதனை யாருக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதையும் இவர்கள் சொல்ல வேண்டும்.

காஷ்மீரையா ? காஷ்மீரில் இருக்கும் முஸ்லீம்களையா ? காஷ்மீரில் இருக்கும் இந்துக்களையா ? காஷ்மீரில் இருக்கும் பெளத்தர்களையா ? காஷ்மீர் நிலங்களையா ? ஏற்கெனவே பாகிச்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர இந்தியர்களையா ? யாரை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று இவ்வாறு விட்டுக்கொடுப்பதைக் கேட்பவர்கள் சொல்லவேண்டும். விட்டுக்கொடுப்பது என்பதன் அடையாளம் இந்தியர்கள் தங்களது பாதுகாப்புக்கு இன்னும் கொஞ்சம் பிரச்னை பண்ணிக்கொள்வதுதான் என்றே பொருள்.

பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுப்பது என்பது அதிரடி ஆக்கிரமிப்பு அட்டூழியத்துக்கு பரிசு கொடுப்பதுதான்

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்