இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 30, 2002) விவசாய வருமானத்துக்கு வருமான வரி, உலக நீதிமன்றம்

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

சின்னக்கருப்பன்


விவசாய வருமானத்துக்கு வருமான வரி

கேல்கர் ஆலோசனைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால்தான் அவர்கள் வருமான வரி கட்டவேண்டும் என்ற விஷயத்தோடு, விவசாய வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்ற விஷயமும் வெளிவந்துள்ளது.

விவசாய வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பதை அரசில் இருக்கும் அஜித் சிங் போன்றவர்களே எதிர்க்கிறார்கள். பாஜக இதனை வெளிப்படையாக எதிர்க்கிறது.

இது இன்னொரு மறைமுக ஐ.எம்.எஃப் ஆலோசனையோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் விவசாயிகளில் யாருமே வருமான வரி கட்டத்தேவையில்லை. ஆனால், 1 லட்சத்துக்கு மேல் வருமானம் இருக்கும்போது வரி கட்ட வேண்டும் என்று சொல்வது பணக்கார விவசாயிகளை மட்டுமே பாதிக்கும் என்று சொல்லலாம். ஆனால், இது வருமான வரி வசூலிக்கிறேன் என்று வரும் அரசாங்க ஊழியர்களின் அட்டகாசம் அதிகமாக ஆகி, சாதாரண விவசாயியையும் பயமுறுத்த இது உபயோகப்படும் என்றே கருதுகிறேன்.

இன்னும் விவசாயம் நவீனப்பட்டு, பலர் விவசாயத்திலிருந்து வெளியேறி பல தொழில்நுட்பவியளார்களாக ஆனபின்னர், சொல்லப்போனால், நிலங்கள் சிறுபண்ணைகளிலிருந்து பெரும் பண்ணைகளாக ஆனபின்னர் இந்த சட்டம் வந்தால் சரியானதாக இருக்கும். இன்றைய நிலையில் இது அரசாங்க அலுவலர்கள் இன்னும் விவசாயிகளை துன்புறுத்த உபகரணமாகத்தான் இருக்கும்.

***

அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் போர்வீரர்களை அகில உலக நீதிமன்றத்துக்கு அனுப்பப்போவதில்லை என்று ஒப்பந்தம் செய்திருக்கின்றன.

இது பார்ப்பதற்கு தவறானதாகத்தான் தோன்றும். ஆனால், இது ஒரு முக்கியமான காரணத்திற்காகவே அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. பல நாடுகளில் அமெரிக்காவின் படை நிறுத்தப்பட்டிருக்கிறது. உலகத்தின் வேறெந்த நாட்டையும்விட அமெரிக்காவின் படைகளே உலகெங்கும் பல நாடுகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் கொரியாவில் அமெரிக்கப்போர்வீரர்கள் அத்துமீறி மூன்று சிறுமிகளை கொன்றுவிட்டிருக்கிறார்கள். தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்கப்போர்வீரர்கள் பாரபட்சமான ஒப்பந்தத்தால் மேலாண்மை செய்யப்படுவதால், அவர்கள் கொரியாவின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. உலக நீதிமன்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டால், அமெரிக்காவின் போர்வீரர்களை மற்ற நாட்டினர் உலக நீதிமன்றத்துக்கு இழுத்துவந்து அமெரிக்கா செய்யும் அத்துமீறல்களையும், பொதுமக்களைக் கொல்வதையும் போர்க்குற்றங்களாக பரிசீலித்து தண்டனை வழங்கலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது. அதனால், அமெரிக்காவின் அரசியல்வாதிகள் முக்கியமாக குடியரசுக்கட்சியினர் இது அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஊறு என்று வாதிடுகிறார்கள்.

ஆனால், இந்தியா ஏன் அதுபோன்றதொரு ஒப்பந்தத்தை கையெழுத்திடக் கூடாது என்று கேட்கலாம். முதலாவது மிகக்குறிப்பிட்ட காலங்களிலேயே இந்தியப்படை இந்திய எல்லையைக் கடந்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் படைகள் உலகெங்கும் ஐ.நாவுக்கு உதவ சென்றிருக்கின்றன. இந்தப் படைகள் அமெரிக்க படைகளும் ஐரோப்பிய படைகளும் செய்யமுடியாத காரியங்களையும் வெற்றிகரமாக முடித்து பல இடங்களில், ஸோமாலியா, சையரா லியோன் உட்பட, பல நாடுகளில் அமைதியை நிலைநாட்டி இருக்கின்றன. ஆனால், இன்றைய சூழ்நிலையில் மூன்றாம் உலக நாடுகள், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளால் பாரபட்சமாகவே நடத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக செயரா லியோனில் வைரங்களை கொள்ளையிட அங்கு உள்நாட்டுப்போரை உருவாக்கியது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே. ஆனால், அமைதி நிலைநாட்ட உயிரைப் பணயம் வைப்பதோ மூன்றாம் உலக நாடுகளின் போர் வீரர்கள்.

என்னதான் மனித உரிமை பற்றிய ஆயிரம் வார்த்தைகளைப் பேசினாலும் போர் வீரர்கள் போர்வீரர்களே. எல்லையற்ற மன அழுத்தத்தில் இருக்கும் போர்வீரர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும், அச்சத்தாலும், ஊர், மொழி தெரியாத ஊரில் யார் எவரென்ற உணர்வின்றி பொதுமக்களை கொன்றுவிடுவதோ நடக்க முடியாததல்ல. இப்படிப்பட்ட பொதுமக்களின் கொலைகளுக்கு, அந்த நாடுகளை, அந்த பிரதேசங்களை வன்முறைப் பிரதேசங்களாக, சட்டம் ஒழுங்கு அற்ற பிரதேசங்களாக ஆக்கிய அந்த மக்கள் தலைவர்களும், அந்த தலைவர்களின் பின்னே சென்ற வன்முறையாளர்களுமே முழுப்பொறுப்பு. ஆனால், இன்று இந்த ஒப்பந்தத்தின் மூலம், உதவி செய்யபோய், அவமானப்படும் நிலையை இந்த மூன்றாம் உலக நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அடைகின்றன. ஏற்கெனவே பெல்ஜியத்தில், ர்வாண்டா நாட்டின் கன்யாஸ்திரிகள்,அங்கு இனப்படுகொலையில் பங்கு பெற்றதற்காக தண்டனை அடைந்தார்கள். எப்படி அந்த நாட்டு மக்களை பெல்ஜியம் தண்டிக்க உரிமை உண்டு என்பது முக்கியக்கேள்வி. இத்தனைக்கும் பெரும்பாலான ஆப்பிரிக்க இனக்கலவரங்களுக்கும் போர்களுக்கும் பெல்ஜியம் போன்ற நாடுகளின் முந்தைய காலனியாதிக்கமே காரணம் என்பது வெளிப்படை. இன்று அந்த நாட்டு மக்களைக் கட்டுப்படுத்த ஐரோப்பியர்கள் கொண்டு வரும் புது காலனியாதிக்க உபகரணம் இந்த உலகம் தழுவிய நீதிமன்றம் என்பது வெளிப்படை. இப்படிப்பட்ட நீதிகள் எப்போதுமே பாரபட்சமானவைதான் என்பது, இன்னும் பங்களாதேஷில் வெறியாட்டம் ஆடிய பாகிஸ்தானிய போர்வீரர்களும், தளபதிகளும் தண்டிக்கப்படவே இல்லை என்பதில் இருந்து தெளிவாக உணரலாம்.

இந்த ஒப்பந்தத்தில் ஆசியாவின் ஒரே முழு ஜனநாயக நாடான இந்தியா கலந்து கொள்ளாமல் இருப்பதுதான் சரியான விஷயம்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 1, 2002) (எய்ட்ஸ் தினம், ஈராக் விவகாரம், அபு அப்ரஹாம்)

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

சின்னக்கருப்பன்


எய்ட்ஸ் தினம்

இந்தவாரத்து ஞாயிற்றுக்கிழமை எய்ட்ஸ் தினமாக அறிவிக்கப்பட்டு உலகளாவிய முறையில் அதனை பிரபலப்படுத்தி, எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டில் எய்ட்ஸ் சமூகசேவையாளர்களை போலீஸார் அவமானப்படுத்துவது நிற்பதில்லை. இலவச நிரோத் வினியோகம் செய்யமுனைந்தவர்கள் போலீஸாரால் அடிக்கப்பட்டிருக்கிறார்கள். கேவலமாக நடத்தப்படுவது வழக்கமான விஷயமாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த மட்டில், எய்ட்ஸ் தினம் ஒரு கேட்ஸ் தினமாகி விட்டது. கேட்ஸ் 100 மில்லியன் டாலரை கொடுத்தது பற்றி ஒரு மத்திய அமைச்சர் கோபித்துக்கொண்டார். எய்ட்ஸ் ஒரு பணக்கார நோயாக மாற்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வந்திருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் என்றால், அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் என்று பொருள். மருத்துவ நிறுவனங்கள் நாங்கள் ஏராளமான பொருள் செலவு செய்து இந்த நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கிறோம், அதனை மூன்றாம் உலக நாடுகள் அபகரித்து குறைந்த விலையில் உற்பத்தி செய்து எங்கள் லாபத்தில் அடிக்கின்றன என்று காட் வரை சென்று முறையிட்டார்கள். ஏராளமான பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர், இந்தியா இன்னும் அது போல உற்பத்தி செய்ய கால அவகாசத்தை நீட்டியிருக்கிறது. ஆனால், அந்த கால அவகாசம் முடியும் வரைக்கும் நோய்க்கான மருந்துகளை வெளியிடப்போவதில்லை என்பது போல லேசுபாசாகப் பேச்சு கிளம்பியிருக்கிறது. இதற்கு வழி, இந்தியாவின் மருத்துவ நிறுவனங்கள் தானாக முன்வந்து மருத்துவ ஆராய்ச்சிக்கு செலவு செய்து திறமையான இந்திய மருத்துவ நிபுணர்களை இந்தியாவிலேயே உபயோகப்படுத்தி அதே வேலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தண்ணி காட்டுவதுதான். ஆனால், இந்தியாவில் உற்பத்தியாகும் தொழில்நுட்ப நிபுணர்களும், மருத்துவ கோல்ட் மெடல்களும் அண்ணாசாலையில் வரிசையில் நிற்பதைப் பார்க்கும் போது, அதற்கு இன்னும் வெகுகாலம் ஆகும் என்றுதான் தோன்றுகிறது.

***

ஈராக் விவகாரம்

ஈராக் விவகாரம் ஒரே ஒரு விஷயத்தை நிரூபித்திருக்கிறது. அது உலகம் ஒரு யூனிபோலார் அமைப்பாக உருவாகி வந்துகொண்டிருக்கிறது என்பது. ஆனால், இந்த விஷயம் பற்றி புடின் கூட கவலைப்படவில்லை என்னும்போது இந்தியா கவலைப்பட்டு ஒன்றும் நடக்கப்போவதில்லை. அது மட்டுமல்ல, இந்தியா ஈராக்குடனான தன்னுடைய ஸ்டாரஜிக் பார்ட்னர்ஷிப்பையும் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை. இன்றைய ஈராக் அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் வியாபார ஒப்பந்தங்கள், ஈராக் ஆட்சி மாற்றியவுடனும் தொடரும் என்று உத்திரவாதம் ஃப்ரான்ஸ், சீனா, ரஷ்யா நாடுகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. காரணம் என்ன ? அவர்கள் ஐ.நாவின் பாதுகாப்பு அமைப்பில் அங்கத்தினர்கள். அவர்கள் வேடோ போட்டால், தீர்மானம் காலி. ஐ.நா அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் அமெரிக்கா போய் ஈராக்கை அடிக்கும் என்று அமெரிக்க தலைவர்கள் பேசியது, அப்படி ஒரு உத்திரவாதம் கொடுக்காமலேயே அமெரிக்காவுக்குச் சாதகமாக ஈராக் போருக்குப் பின்னர் விஷயங்களை வளைத்துக்கொள்ள முடியுமா என்ற முயற்சிதான்.

இந்தியாவுக்கு அப்படிப்பட்ட ஒரு உத்திரவாதம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏன் ? இந்தியா பாதுகாப்பு அமைப்பில் இல்லை. இந்தியா இன்றைய ஈராக் அரசாங்கத்துடன் போட்ட அத்தனை ஒப்பந்தங்களும் காலி என்றுதான் பொருள். அதனால்தான், இன்றைய இந்திய அரசாங்கம், ஈராக் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை ஈராக்கிய மக்களுக்குத்தான், அவர்களுக்கான தலைமையை மற்றவர்கள் (அதாவது, அமெரிக்கா) தீர்மானிக்க முடியாது என்று சொல்கிறது. இது வேறு ஒன்றும் இல்லை. தடியெடுத்தவன் தண்டல்காரன் விஷயம்தான். ஆனால், நாம் ஓரத்தில் நின்று புலம்புவதால் ஒரு பைசா பிரயோசனம் கிடையாது. இவ்வாறு அமெரிக்கா பண்ணும் அடாவடித்தனமும், அடாவடியாக குறைந்த விலையில் பெட்ரோலை அபகரிப்பதும் நாம் புலம்புவதாலும், அமைதி நாடு என்று பேசிக்கொண்டிருப்பதாலும் மாறவே மாறாது.

என்பிலதனை வெயில் காயும்.

***

கார்ட்டூனிஸ்ட் அபு அப்ரஹாம் மறைவு

ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், பதில் கார்டூனிஸ்ட் என்பதாகத்தான் இருக்கும்.

நம் நாட்டில் கார்டூனிஸ்டுகளுக்குப் பஞ்சமே இல்லை. அதிலும் சிறந்த கார்டூனிஸ்டுகள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, நட்பு ரீதியில் பெருந்தலைவர்களோடும் உறவு கொண்டிருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் சங்கர் வழி வந்த பல கார்டூனிஸ்டுகளில் முக்கியமானவரான அபு அப்ரஹாம் தன் 78 வயதில் மறைந்திருப்பதைப் படிக்கும் போது, ஒரு நிறை வாழ்வு வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையைப் படிப்பது போன்ற உணர்வு வருகிறது.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 25, 2000)

This entry is part [part not set] of 5 in the series 20001225_Issue

மஞ்சுளா நவநீதன்


சோ ஜெயலலிதாவைச் சந்திக்கிறார்.

போன வாரத்திய செய்திகளில் ஒரு முக்கிய செய்தி – ஜெயலலிதாவை , சோ சந்தித்தது. சும்மாத் தான் , ஒன்றும் முக்கியத்துவம் இதற்கு இல்லை என்று ஜெயலலிதா அறிவித்தாலும், இது நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று தான்.

சோ பொதுவாக இது மாதிரி புரோக்கர் வேலைகளை எம் ஜி ஆர் திமுக-விலிருந்து பிரிந்த காலத்திலிருந்தே செய்து வருகிறார். ஆனால் துக்ளக்கின் பக்கங்களில் சாமர்த்தியமாக இவை பற்றிப் பேசுவதே இல்லை. எம் ஜி ஆருடன் நெருக்கமாய் இருந்த போதும் கூட அவரை விமர்சிக்கிற மாதிரி நகைச்சுவைக் கட்டுரைகளும், கேலிச் சித்திரங்களும் வெளியிடுவார். ஜெயலலிதா கொ ப செ-வாக இருந்த நாட்களில் அவரைக் கிண்டல் செய்து கேலிப்படம் போட்டாலும் அவருக்கும் பா ஜ க-விற்கும் இடையில் தூதுவராய் இருந்ததில் அவருக்கு ஏதும் முரண்பாடு தெரியவில்லை. பா ஜ க-வை ஆதரிப்பதை வெளிப்படையாய்ச் சொல்லிய அவர், அது தவறுகள் செய்த போது கழட்டிக் கொண்டு விடவில்லை. ஏனென்றால் அது தோழமைக்கட்சி.

சுப்பிரமணிய சாமியோ அல்லது இன்னும் எந்த அரசியல் புரோக்கர்களும் தான் ஒரு புரோக்கர் என்பதையும், அந்த புரோக்கர் வேலையால் நடக்கும் விஷயங்களுக்குமான பொறுப்பையோ ஒப்புக்கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் சோ அப்படி பொறுப்பெடுப்பதில்லை.

அவரைப் பொறுத்த வரையில், இவர் எந்தப் பொறுப்பும் ஏற்க வேண்டாத ஒரு வேலை, இந்த புரோக்கர் வேலை. (இந்த வகையில் பார்த்தால் சுப்பிரமணியசாமி மேல்)

கருணாநிதி மீது இருந்த வெறுப்பு மட்டும் சோவுக்கு மாறியதே இல்லை. அந்த வெறுப்பையும் மீறி அவரை கருணாநிதிக்கு ஆதரவாய் மாறியதற்குக் காரணம் – மீண்டும் பா ஜ க.

***********

மதிய உணவுத் திட்டம் : தமிழ் நாட்டிலிருந்து உலகத்துக்கு ?

பி பி சியில் டிம் செபாஸ்டியன் என்பவர் அமெரிக்க அரசியல் வாதி ஜார்ஜ் மக்கவர்ன் என்பவரைப் பேட்டி கண்ட போது, அவர் மதிய உணவுத் திட்டம் பற்றிப் பேசியிருக்கிறார். ஆனால் அவர் தமிழ் நாட்டின் மதிய உணவு பற்றியல்ல, அமெரிக்காவின் மதிய உணவுத் திட்டம் பற்றிப் பேசியிருக்கிறார். ஆமாம், பணக்கார நாடான அமெரிக்காவிலும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டம் செயல் பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட வருமான வரம்பிற்கு உட்பட்டவர்களின் குழந்தைகள் இதன் மூலம் பயன் பெறலாம். இந்தத் திட்டத்தை விரித்துரைத்த மக்கவர்ன் , இப்படிப் பட்ட திட்டங்கள் மூலம் படிப்பறிவைப் பரப்புவது பயன் அளிக்கும் என்றார். அவருக்கு தமிழ் நாட்டின் மதிய உணவுத் திட்டம் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ் நாட்டில் கடந்த ஐம்பதாண்டுகளில் நடந்த விஷயங்களில் ஒரு உருப்படியான விஷயம் மதிய உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப் படுத்திய காமராஜ் அவர்களையும், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்திய பக்த வத்சலம், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரை இந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடாததற்காகப் பாராட்டியே ஆக வேண்டும். இந்தத் திட்டத்தை விரிவு படுத்தி உணவுக் கூடங்கள் அமைத்து சிலருக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்தார் எம் ஜி ராமச் சந்திரன்.

இந்தத் திட்டத்தை விமர்சித்தவர்களும் உண்டு. சோ போன்ற சிலர் இது மக்களைப் பிச்சைக் காரர்களாய் ஆக்கி விடும் என்று பிரசாரம் செய்தார்கள். காய் கறி விலை ஏறியதற்கு இந்தத் திட்டம் தான் காரணம் என்று பிரசாரம் செய்தவர்களும் உண்டு. தனிப் பட்டவர்கள் செய்த சில தவறுக்காக இதைக் கண்டனம் செய்தவர்களும் உண்டு. ஆனால் இன்றூ சோ-வே இது வறுமைப் பட்ட நம் நாட்டிற்குத் தேவையான திட்டம் தான் என்று ஒப்புக் கொள்கிறார்.

இந்தியாவில் நடக்கிற இது மாதிரி சில நல்ல விஷயங்கள் உலக் கவனிப்பைப் பெறாமலே போகின்றன. பங்களா தேஷில் ‘சிறு கடன் வங்கி ‘யை ஏற்படுத்தியவர்கள் இந்தத் திட்டத்திற்காக உலக அரங்கில் பெரும் பாராட்டைப் பெற்றார்கள். ஆனால் இது போன்ற ஒரு திட்டம் , ஓசைப் படாமல் இந்திய வங்கிகளால் , இந்திரா காந்தியின் இருபதம்சத் திட்டத்தின் ஓரங்கமாய் அறிமுகப் படுத்தப் பட்டு நடந்து வருகிறது. 4 சதவீத வட்டிக்கு மிகக் குறைந்த முதலீடு தேவைப் படுகிற தொழில்கள் ஊக்குவிக்கப் படுகின்றன. (Differential Rate of Interest ) வித்தியாசமான வட்டி விகிதக் கடன்களாய் இவை அறியப் படுகின்றன.

மதிய உணவுத் திட்டமும் மற்ற இந்திய மானிலங்களிலும் , வளரும் நாடுகளிலும் அறிமுகப் படுத்தப் பட்டால், கல்வியறிவு பரவலாக வாய்ப்பு உண்டு.

*************

பிராமணீயமா வன்னியரியமா ? : இன்றும் ஆலயப் பிரவேசப் போராட்டங்கள்

பகுத்தறிவுப் பகலவன்கள் தோன்றி ஒளி வீசிய , சுயமரியாதைச் சிங்கங்கள் கர்ஜித்த தமிழ் நாட்டிலே, 21ம் நூற்றாண்டின் நுழை வாயிலிலே ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்திருக்கிறது. இது வழக்கம் போல பார்ப்பனீய சதியாய்த் தான் இருக்கும் என்று ஊகத்துடன் பார்த்தால் இது பார்ப்பனீய , மனுதர்ம அநீதி இல்லையாம். இந்த கிராமத்தில் உள்ள வன்னியர்கள் தலித்களைக் கோயிலில் நுழைய விடுவது இல்லையாம். பார்ப்பனீயத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த சிங்கங்களெல்லாம், ஏன் வாலைச் சுருட்டிக் கொண்டு விட்டன என்று தெரியவில்லை. வன்னியரியத்தை எதிர்க்க யாருக்கும் தைரியம் இல்லையோ என்னவோ ? 20 சதவீத ஓட்டாயிற்றே.

போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள். பா ம க- என்ன செய்கிறது என்றும் தெரியவில்லை. உண்மையில் இந்த ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் கிராமம் என்கிற ஒரு வார்த்தை அகராதியில் இருக்கிற நாட்கள் வரையில் இருக்கத் தான் செய்யும். பெரியார் படத்தை முன்பு வைத்து அரசியல் கட்சி நடத்தும் ராமதாஸ் போன்ற இனத் தலைவர்கள் தம் இன மக்களை மிக உறுதியாய் வழிப்படுத்தாத வரையில் இது தொடரவே செய்யும்.

******

இட ஒதுக்கீடு : தமிழ் நாட்டு அரசின் துரோகம்

இட ஒதுக்கீடு என்பது யாருக்கும் யாரும் தருகிற சலுகை அல்ல. ஒரு கூட்டுச் சமுதாயத்தில், பலவீனமாக்கப் பட்ட சமூகத்தினருக்கு நியாயமாய்ப் போய்ச் சேர வேண்டிய உரிமையாகும்.

இன்றைய நிலவரப் படி இட ஒதுக்கீட்டில் நிரப்பப் படாமல் இருக்கும் இடங்கள் கிட்டத்தட்ட 27,500 என்று தமிழ் நாட்டரசின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. குரூப் ஏ (சற்றே உயர் பதவிகள் இவை) பிரிவில் 825 பேருக்குத் தரப் படவேண்டிய வேலை வாய்ப்பு. 475 பேருக்குத் தரப்படாமல் கிடக்கிறது. குரூப் பி-யில் 7721 இடங்கள் ஷெட்யூல் வகுப்பினருக்குச் சேர வேண்டிய வேலை வாய்ப்பு காலியாய்க் கிடக்கிறது. மலைவாசிகள் மற்றும் ஆதிவாசிகளுக்கான இடங்கள் 953 நிரப்பப் படவில்லை.

கிட்டத்தட்ட 35000 குடும்பங்களுக்கு அளிக்கப் பட வேண்டிய நியாயமான வாய்ப்பு தள்ளிப் போகிறது. இன்னும் எத்தனை நாட்கள் தள்ளிப் போகுமோ தெரியவில்லை.

********

சாகித்ய அகதமியும் தமிழ் எழுத்தாளர்களும்

சாகித்ய அகதமியின் செயல் முறையை எதிர்த்துச் சில எழுத்தாளர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளார்கள். முக்கியமாக சமுத்திரம், விக்கிரமன் ( ‘அமுத சுரபி ‘ ஆசிரியர்), செந்தில் நாதன் ( மார்க்ஸிஸ்ட் கட்சியின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்) இன்னும் சிலர் இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் தீவிரமாய் இருக்கிறார்கள். பிரசினை என்னவென்றால் சா. கந்தசாமி தொகுத்தளிக்கும் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் சமுத்திரம் கதை இடம் பெறவில்லை என்பதாகும். இவர்களின் முக்கியமான புகார், சாகித்ய அகதமியின் தொகுப்புப் பணி ஒரு நபரின் வழிகாட்டலில் மட்டுமே செய்யப்பட்டால், அது அந்த குறிப்பிட்ட நபரின் விருப்பு வெறுப்புகள் சார்ந்த ஒரு செயல்பாடாய் ஆகி விடும் என்பது தான் என்று நினைக்கிறேன். ஒரு குழு நியமிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

சாகித்ய அகதமியின் செயல் பாடுகள் முதலிலிருந்தே சிறு பத்திரிகை வட்டத்தினரால் விமர்சிக்கப் பட்டு வந்திருக்கிறது. அகதமியின் உறுப்பினர்களே பரிசுகளைப் பங்கு போட்டுக் கொள்ளும் அவலமும், ராஜாஜி, குழந்தை சாமி என்று படைப்பிலக்கியத்திற்கான பரிசுகளை வழங்கி அகதமியையும், பரிசு பெற்றவர்களையும் அகெளரவப் படுத்தும் செயலுக்கு முதன் முதலில் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தது சிறு பத்திரிகை இயக்கத்தினர் தான். விக்கிரமன், சமுத்திரம் போன்றோர் அந்தக் காலகட்டத்தில் இப்படிப் பட்ட எதிர்ப்புகளுடன் தம்மைச் சேர்த்துக் கொண்டவர்கள் அல்ல.

சா கந்தசாமியும் சிறு பத்திரிகை இயக்கத்துடன் மிகத் தொடர்பு உடையவர். எந்தக் குற்றச் சாட்டுகளை நாம் பிறர் மீது வீசுகிறோமோ அந்தக் குற்றச் சாட்டு தன் மீது வீசப் படாமல் இருக்க வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வு எல்லோருக்கும் மிக அவசியம். அதில்லாமல் தொகுப்பு என்பது தரம் ஒன்றைக் குறியாகக் கொண்டதா அல்லது பல போக்குகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாணியில் அமைய வேண்டுமா என்பதிலும் தெளிவு வேண்டும். ஒரு படைப்பு ஏன் தொகுப்பில் இடம் பெறுகிறது , ஏன் இடம் பெறவில்லை என்ற காரணங்களைக் கூறவும் வேண்டும். அப்படி ஏதும் கந்தசாமி கூறியுள்ளாரா என்று தெரியவில்லை.

குழு நியமிக்கப் பட்டால் மட்டுமே இந்தப் பிரசினை தீருமா என்று தெரியவில்லை. புஷ்பா தங்கத்துரை தொடங்கி குரும்பூர் குப்பு சாமி வரை எல்லாருமே தம் கதை தொகுக்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். அதைக் காட்டிலும் , எப்படிப் பட்ட வழிகாட்டலில் தொகுப்பு அமைய வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டால் இப்படிப் பட்ட குழப்பங்கள் இருக்காது.

Series Navigation

இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 10, 2000)

This entry is part [part not set] of 9 in the series 20001210_Issue

சின்னக்கருப்பன்


மீண்டும் பாபர் மசூதிப் பிரச்னை

வாய்பாயி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் ஆறாம்தேதி நடக்கும் திருவிழா இது.

இந்த வருடம், வாஜ்பாயியை வாயைத்திறக்கவைத்து அந்த கூட்டணியை முறியடிக்க வேண்டுமென்றே செய்யப்பட்ட விஷயம் போல, அத்வானியையும், முரளிமனோகர் ஜோஷியையும், உமாபாரதியையும் அரசுப்பதவிகளிலிருந்து விலக்க வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள், காங்கிரசும், கம்யூனிசக்கட்சிகளும், சமாஜ்வாதி கட்சியினரும்.

வெறுவாய்க்கு அவல் கொடுத்தது போல வாய்பாயியும் ‘அங்கு கோவில் கட்டுவது என்பது பெரும்பான்மை இந்தியமக்களின் விருப்பம். அது இன்னும் நிறைவேறவில்லை ‘ என்று பேசி மாட்டிக்கொண்டுவிட்டார். ‘அதெப்படி அங்கு கோவில் கட்டுவது இந்திய மக்களின் விருப்பம் என்று சொல்லலாம் என்று பிலு பிலு என்று பிடித்துக்கொண்டு, வாய்பாயியையும் ராஜினாமா செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். வாய்பாயி பொதுமன்றத்தில் இதற்கு விளக்கம் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சியினர் எதிர் பார்த்தது போலவே, திமுகவும், தெலுகுதேசக்கட்சியும், திரினாமூல் கட்சியும் பாஜகவைச் சாடியிருக்கின்றன.

இது நிலவரம்

இனி என் கருத்துக்கள்.

முதலாவது, நரசிம்மராவின் மீது பழி போட்டு பாஜக தப்பிக்க முடியாது. மசூதி உடைப்பைச் செய்தது பாஜக. என்னை தடுக்கவில்லை என்று நரசிம்மராவைக் குற்றம் சாட்டமுடியாது. நரசிம்மராவ், பாஜகவால் ஏமாற்றப்பட்டார். மத்திய அரசு போலீஸ் வருவதை தடுக்க கோவில் சுற்றியும் கட்சி ஆட்களையும், உத்தரபிரதேச போலீஸையும் நிறுத்தி வைத்தது கல்யாண்சிங்கின் பாஜக அரசு. சிபிஐ தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது இதை.

இரண்டாவது, கல்யாண்சிங்குக்கு போன் செய்து அவரை மசூதி இடிப்பு நடந்து முடியும் வரை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது திருவாளர் எல்.கே.அத்வானி. இதையும் சிபிஐ குறித்துள்ளது.

மசூதிக்கு அருகில் நின்றுகொண்டு, இன்னொரு முறை தள்ளு. மசூதியை இடித்துத் தள்ளு என்று கோஷம் போட்டது உமாபாரதி. இன்று அவர் தான் அங்கு மசூதி இடிப்பதை தடுத்து நிறுத்தச் சென்றதாகச் சொல்வது பம்மாத்து.

அரசு இந்த வழக்கை நீதிமன்றத்துக்குச் செல்லாமல் தடுத்துக்கொண்டிருக்கும் ஒரே காரணம், சிபிஐ நிறுவனம் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வருவதால் மட்டுமே.

பாபரி மசூதி மீட்பு கமிட்டி, அந்த மசூதி இருந்த இடத்தில் மசூதிதான் கட்டப்படவேண்டும் என்றும் அந்த நிலம் வக்ஃப் போர்டுக்கு திரும்ப கொடுக்கப்பட வேண்டும் என்றும் போராடி வருகிறது. அந்த இடிப்புக்குச் சற்று முன்னர், அந்த மசூதி இருந்த நிலம், வக்ஃப் போர்டிலிருந்து உத்தர பிரதேச அரசுக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து வக்ஃப் போர்டும், பாபரி மசூதி மீட்பு கமிட்டியும் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கின்றன.

பிரதமர் நீதிமன்றம் என்ன அறிவித்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாக மீண்டும் மீண்டும் சொல்லி வந்திருக்கிறார். ஆனால் அந்த வழக்கு நிலுவைக்கு வரக்காணோம்.

இதன் நடுவில், நர்மதா பச்சோவ் அந்தோலன், தான் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கப்போவதில்லை என்று அறிவித்தவுடன் அதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ‘மக்கள் விரும்புகிறார்கள். எனவே நீதி மன்றம் இதில் தலையிடமுடியாது ‘ என்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துவிட்டது.

இதில் என்னதான் முடிவு இருக்க முடியும் ? அங்கே கோவில் ஒருக்காலும் இருந்ததில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பில் சொன்னால் என்ன நடக்கும் ? சரி, நீதி மன்றமே சொல்லிவிட்டது, அங்கே கோவில் இருக்க முடியாது என்று இந்துக்கள் ஒப்புக்கொள்ளப்போகிறார்களா ? சரி, அங்கே முன்னர் கோவில் இருந்த ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே அங்கு கோவிலை கட்டவேண்டும் என்று நீதிமன்றம் சொன்னால், முஸ்லீம்கள் அதை ஒப்புக்கொள்ளப்போகிறார்களா ? நீதி மன்றம் என்னதான் தீர்ப்புச் சொன்னாலும் அதை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

நீதிமன்றம் இதைத் தீர்மானிக்க முடியாது. இருசாராரும் இணைந்து ஒரு முடிவு எடுத்தால் மட்டுமே அது நடக்கும். கிருஷ்ணர் பிறந்த இடம் என்றும், ராமர் பிறந்த இடம் என்றும், சிவனது முக்கியமான கோவில் என்று கருதப்படும் இடம் என்றும் இருக்கும் மதுரா, அயோத்தி, காசி கோவில்களை இந்துக்களிடமே திருப்பித்தந்துவிட்டால் வேறெந்த இடத்துக்கும் தான் போராடப்போவதில்லை என்று விஷ்வ ஹிந்து பரிஷத் இறங்கி வந்து பல வருடங்களுக்கு முன்னர் ஒரு ஒப்பந்தத்தை முன் வைத்தது. அதற்கு ஒரு சில முஸ்லீம் தலைவர்கள் ஒப்புக்கொண்டாலும் பல முஸ்லீம் தலைவர்கள் ஒரு இடம் கூட நாங்கள் திருப்பித் தர மாட்டோம் என்று பிடிவாதமாகச் சொல்லியதால் எல்லா இடங்களும் இழுபறியில் இருக்கிறது.

இதனால் முஸ்லீம்களைக் கிண்ட, சமீபத்தில் குதுப் மினாருக்கு முன்னால், இது விஷ்ணுஸ்தம்பம் என்று அதை அழைத்து, வேள்வி நடத்திப் பார்த்தது விஹெச்பி. கூட்டத்தைக் காணோம்.

இரு பிரச்னைக்குள் மாட்டுவதற்கு முன்னரே அந்த பிரச்னை தனக்கு பாதகமாகச் சென்றுவிட்டால் என்ன செய்வது என்று ஒரு மரியாதையான வெளிக்கதவை திறந்து வைத்திருக்க வேண்டும். அதுதான் நல்ல அரசியல். இதைத்தான் Exit strategy என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

இந்த பாபரி மசூதிப் பிரச்னையில் என்னதான் இவர்களுக்கு அந்த வெளியே போகும் வழி ? காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம் போடுகிறது. இந்த பிரச்னைக்கே மூலகாரணம் அந்தக் கட்சியின் தலைவராக இருந்த ராஜீவ்காந்திதான். அயோத்தியில், 1842இலிருந்தே பிரச்னையாக இருந்த இந்த விஷயத்தை இந்துக்களுக்குச் சாதகமாக அந்த ஊர் நீதிபதியை உத்தரவு எழுதச்சொல்லி, அதை கோவில் என்று அறிவித்து, அந்த கதவுகளை இந்துக்களுக்குத் திறந்துவிட்டார். அவர் அந்த பாபர் மசூதிக் கதவுகளை திறந்துவிடுவதற்கு முன்னர் அது ஒரு தேசீயப் பிரச்னையாக இல்லை. அது பாஜகவுக்கோ, அல்லது ஆர் எஸ் எஸ்சுக்கோ அது ஒரு விஷயமாகவே இல்லை. ஆனால் அது திறந்துவிடப்பட்டதும், அது முஸ்லீம்களிடமே திரும்பித்தரவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டதும், தன்னை அப்போது இந்துக்கட்சியாக அடையாளம் கண்டுகொண்டிருந்த பாஜக இதையும் எடுத்துப் போராட வேண்டியதாய்ப் போனது. இன்று புலிவால் பிடித்த மனிதன் கதையாய், அதன் மேல் சவாரியும் செய்யமுடியாமல், வாலை விட்டால் சாப்பிட்டுவிடும் என்ற பயத்தோடு தொடர்ந்து இதன் பின்னால் ஓடிக்கொண்டு இருக்கிறது பாஜக.

இன்றைக்கு திமுகவோ, திரினாமூலோ அல்லது தெலுகுதேசமோ இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாமல் பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொள்ளவில்லை. அதுபோல அவர்கள் அவர்களது ஆதரவாளர்களிடம் நடிக்கலாம். திமுகவுக்கு முஸ்லீம் ஓட்டு வேண்டும். ஆனால் பாஜகவின் கூட்டும் வேண்டும். எனவே, இந்த பிரச்னையால் இந்த அரசு கவிழப்போவதில்லை.

இதற்கு நடுவில் ஜோதிபாசு வாஜ்பாயியை காட்டுமிராண்டி என்றும், மத்திய அரசை காட்டுமிராண்டி அரசு என்றும் அழைத்திருக்கிறார். நான் ஆச்சரியப்படவில்லை. காங்கிரசின் யோக்யதையும் அந்த கட்சியின் தலைவியின் யோக்யதையும் உலகு அறிந்தது. அதிமுகவின் யோக்யதையும் உலகு அறிந்தது. இவர்கள் இன்று பேசும் செக்குலரிஸம் ஒரு பம்மாத்து. பாஜகவின் செக்குலரிஸம் உலகு அறிந்தது. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற கதைதான் இவர்கள் கதை.

பாஜக இன்றைக்கு ஒரு தேசீயக் கட்சி. அதற்கு ஆதரவாளர்கள் அந்தமான் நிக்கோபரிலிருந்து காஷ்மீர் வரை இருக்கிறார்கள். கிழக்கே நாகாலாந்திலிருந்து மேற்கே குஜராத் வரை இருக்கிறார்கள். இதே போல இருக்கும் ஒரே அகில இந்தியக்கட்சி காங்கிரஸ் மட்டுமே. (கம்யூனிஸ்டுகள் ஒரு அகில இந்தியக் கட்சி அல்ல)

இந்த இரண்டு கட்சிகளுக்கும் தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது. ஆனால் பொறுப்புணர்வை இவர்கள் வெளிப் படுத்துவார்களா ?

…..

நவாஜ் ஷெரீப் சவூதி அரேபியாவுக்கு நாடுகடத்தல்.

உலகமகாக்கூத்து இது. ராணுவ ஆட்சி, நவாஜ் ஷெரீப்பை நாடு கடத்தியிருக்கிறது. அவரும் ஒப்புக்கொண்டு தன் சொத்துக்களை அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு, இன்னும் குறைந்தது பத்து வருடங்கள் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று எழுதிக்கொடுத்துவிட்டு சவூதி அரேபியாவில் போய் வனவாசம் இருப்பதாக முடிவு செய்து செல்ல முன்வந்து விட்டார்.

பெனாசீர் புட்டோவின் கணவரும் கடுங்காவல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்(இவரை சிறையில் வைத்து பெனாசீரை நாடுகடத்தியவர் நவாஜ் ஷெரீப்! இப்போது அவரே நாடுகடத்தல்!) ஜியாவுல் ஹக் அசாதாரணமாகக் கொலையுண்ட பின்னரே பெனசீர் ஆட்சிக்கு வந்தார். ஜியா ராணுவப்புரட்சியில் ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் காரியம் எத்தனையோ அரசுகள் சொல்லியும் எதிர்த்தும் கூடக் கேட்காமல், புட்டோவைத் தூக்கில் தொங்கவிட்டதுதான்.

மொகலாய பாரம்பரியத்தில் ஒவ்வொரு அரசரும் தனக்கு எந்த வகையிலும் போட்டி இருக்கக்கூடாது என்பதற்காக தன் தந்தையையும் தன் சகோதரர்களையும் கொன்றுவிட்டே ஆட்சிக்கு வருவார்கள். அல்லது ஆட்சிக்கு வந்தபின்பு போட்டியாய் யாரும் வரக்கூடும் என்று தெரிந்தால் அவ்னைக் கொன்று விடுவார்கள். புட்டோவின் கதி தனக்கும் ஏற்படும் என்று தெரிந்து தான் நவாஜ் ஷெரீஃப் இந்த நாடுகடத்தலுக்கு ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.

இது மாதிரி நம் ஜெயலலிதா, லாலுவையும் செய்து விட்டால் பிரசினைகள் தீர்ந்து விடும் என்று கருதுகிற அதி புத்திசாலிகளும் இந்தியாவில் உண்டு. ஜன நாயகம் ஒரு சுலபமான தீர்விற்கு வழி வகுப்பதல்ல. நீதியின் அடிப்படையிலான, ஜன நாயக அரசு இயந்திரத்தின் செயல் பாடு இது போந்ஹ் தடாலடியாய்த் தடி எடுத்தவன் தண்டல் காரன் என்று இயங்க முடியாது.

பாகிஸ்தானிலும் ஜன நாயகம் வேண்டும் என்று சன்னமான குரல்கள் அவ்வப்போது எழுகின்றன.ஆனால் அந்தக் குரல்கள் எந்த மதிப்பும், மரியாதையும் பெறுவதில்லை. தன்னுடைய ‘தனிக் கலாசாரத்தையும், தனி தேசீயப் பண்புகளையும் ‘ நன்றாகவே காப்பாற்றிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இஸ்லாமின் அரசாட்சிக் கோட்பாடுகளில் ஜன நாயகத்திற்கு இடமில்லை என்பதன் இன்னொரு நிரூபணமாய் இந்தக் கொடும் செயல் நடந்தேறியுள்ளது.

மொகஞ்சதாரோவிலிருந்து நேரடியாக முகமது கோரிக்கு தாவுவதாக பாகிஸ்தானிய வரலாற்று புத்தகங்கள் காட்டுகின்றன. அப்படி, மொகலாய பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்காக பாகிஸ்தான் வாங்கிச் சென்றவர்கள் ‘உன்னதமான ‘ மொகலாயப் பாரம்பரியத்தைச் சரியான முறையிலேயே காப்பாற்றுகிறார்கள் என்று அவர்கள் நன்றாகவே பெருமைப் படலாம்.

****

தொடரும் தற்கொலைகள்

விஜி என்ற நடிகையின் தற்கொலை மீண்டும் தற்கொலை பற்றி யோசிக்கத் தூண்டுகிறது. சாவித்திரியின் -கிட்டத்தட்ட- தற்கொலை தொடங்கி, என்னை மிகவும் பாதித்த ஷோபா, சிலுக்கு ஸ்மிதா, இப்போது விஜியின் தற்கொலை வரை இது மிக சோகமான பதிவாய் உள்ளது. இந்தியாவில் தற்கொலை விகிதாசாரம் மிக அதிகமாக உள்ள மானிலம் 100 சதவீதப் படிப்பறிவு பெற்ற கேரளம். அதனால் படிப்பறிவிற்கும், தற்கொலைக்கும் சம்பந்தமில்லை. பெண்கள் தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

பொதுமக்கள் பார்வையில் எப்போதும் இருக்கிற நடிகைகள் பாதுகாப்பு உணர்வற்றவர்களாக இருப்பது மிகச் சோகமான விஷயம். தொடர்ந்து மன நிலை ஆலோசகர்களிடம் சென்று தம் மனப் பிரசினைகளை விவாதிப்பதன் மூலம் சிலர் இது மாதிரி depression மன உளைச்சல்களிலிருந்து விடுதலை பெற வாய்ப்புண்டு. ஆனால் இன்னமும், நாம் மன நிலை ஆலோசகர்களிடம் சென்றால் பைத்தியம் என்று முத்திரை விழுந்து விடுமோ என்று பயப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நடிகர் சங்கம் போன்ற அமைப்புகள் , விஜய காந்த் பார்த்திபன் போன்ற நல்ல நோக்கங்கள் கொண்ட தலைவர்கள் முன் வந்து மன நிலை ஆலோசனை பெறுவது தவறான விஷயம் அல்ல , depression போன்ற மன உளைச்சல்கள் குணப் படுத்தக் கூடியவை என்பதைப் பிரசாரம் செய்ய வேண்டும். அடுத்த முறை ரத்த தான முகாம், போலியோ முகாம் இவற்றுடன் சேர்த்து ‘மன நிலை ஆலோசனை ‘ மருத்துவ முகாம்களும் நடத்தப் பட்டால் நல்லது.

Series Navigation