ஆதலால் நோன்பு நோற்போம்

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


ஆதலால் நோன்பு நோற்போம்

மனிதனைக் கழுவும்
புனித நீருடன் இதோ
புறப்பட்டு விட்டது ரமலான்
ஆதலால் நோன்பு நோற்போம்
* * *
ஆதமுக்குள் ஊதிய
ஆக்ஸிஜன்தான் – இன்று
அனைவருக்குள்ளும் துடிக்கிறது
அந்தக் கருவை அறியும்
அருமைச் சாவிதான் நோன்பு
ஆதலால் நோன்பு நோற்போம்
* * *
அருமை நபியின்
பெருமை பேசி
விரிந்த கடலென
விரியும் பரம்பரையில்
ஆயிரத்துஐநூறாம் ஆண்டில் நாம்
ஆதலால் நோன்பு நோற்போம்
* * *
‘தவமும் தபசுமே
விழிகளாய் வாழ்ந்தால்
சொர்க்கபுரி உங்களின்
சொந்தபுரி’ என்றார் நபி பெருமான்
தவம்தான் தொழுகை
தபசுதான் நோன்பு
ஆதலால் நோன்பு நோற்போம்
* * *
வெள்ளமாம் செல்வத்தை
தரிசுக்கு இறைத்து
தருமம் செய்யச் சொல்லும்
அந்தக் கருணை அருமை
ஆதலால் நோன்பு நோற்போம்
* * *
உண்ணும் தொழிலில்
ஆண்டு முழுதும்
ஆடுகளாய் வாழும் நாம்
ஒரே ஒரு மாதம்
குட்டி ஒட்டகமாய்
வாழ்ந்தா லென்ன?
இனி
இரவில் மட்டும்தான்
இரைப்பைக்கு வேலை
நபி மொழியும்
நான்மறையுமே
பகல் உணவு
ஆதலால் நோன்பு நோற்போம்

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation