அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

ஜெயமோகன்


முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடுகிறேன்.இக்கட்டுரை ஈவேரா குறித்த எனது முழுமையான மதிப்பீடு அல்ல.அவரது மொத்த எழுத்துக்களையும் ஆனைமுத்து தொகுப்பில் கூர்ந்து படித்ததுண்டு .அவர் மீது விமரிசனங்களை அவ்வடிப்படையில் முழுமையாக ஆதாரங்களுடன் முன்வைக்க என்னால் முடியும் .அது இச்சந்தர்ப்பத்தில் எளிதாக செய்யப்படவேண்டிய ஒன்றல்ல.இக்கட்டுரை கோ .ராஜாராம் அவர்களின் கட்டுரைக்கு ஒரு மறுப்பு மட்டுமே.அந்த அளவிலேயே ஈவேரா பற்றி சொல்லவிருக்கிறேன்.

பொதுவாக ஈவேரா குறித்து பேசுபவர்களுக்கு ஒரு போக்கு உண்டு.அவர்கள் மற்ற சிந்தனையாளர்களை அச்சிந்தனையாளர்களின் சொந்த வாழ்க்கை , பொதுச் செயல்பாடுகள் ,அவற்றின் விளைவுகள் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டு மதிப்பிடுவார்கள் .ஆனால் ஈவேரா வை மதிப்பிட முன்வருபவர்கள் அவரது பேச்சுகளை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் ,மற்ற விஷயங்களை கணக்கில் கொண்டால் அது அவதூறு என்றும் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் .பெரியாரியர்களுக்கும் இது பொருந்தும் .அவர்கள் மற்ற அனைவரையும் தனி வாழ்க்கை சார்ந்தே விமர்சித்து வந்துள்ளனர் .ஆனால் அவர்கள் தனி வாழ்க்கை எப்போதுமே விசித்திரமான முறையில் மர்மமாக இருக்கும் .தமிழகத்து பெரியாரியர்களில் தங்கள் சொந்த சாதியின் எல்லையை கடந்தவர்கள் மிக மிக குறைவு என்ற எளிய உணமை கூட இதனால் விவாதத்துக்கு வருவது இல்லை

.

என்னை பொறுத்த வரை ஒருவர் என்ன சொன்னார் என்பது ஒரு போதும் முதன்மையான அளவுகோல் அல்ல .சொல்வது யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் . ஈ வே ரா தன் நீண்ட வாழ்வில் பலவேறு இடங்களில் பேசிய பேச்சுகளில் பலவகைப்பட்ட கருத்துக்கள் ,உணர்ச்சி வெளிப்பாடுகள் உள்ளன.பொதுவாக அவரது இயல்பு மிகையாக உச்சகட்ட வேகம் வெளிப்பட கருத்து சொல்வது .ஆகவே இன்று அவரை தங்கள் விருப்பப் படி சித்தரிப்பது மிக எளிது .எஸ் வி ராஜதுரை ,அ.மார்க்ஸ் ,கி வீரமணி ஆகியோர் முன்வைக்கும் மூன்று கோணங்களும் அவரது பேச்சுகளில் இருந்து உருவாக்கப்பட்டவை . ஈவேரா வை ஒரு இந்து ரிஷி என சித்தரிக்கும் பலநூறு மேற்கோள்களை திரட்டி ஒருவர் வைத்திருந்ததை பார்த்திருக்கிறேன். ஆகவே எஸ் வி ஆர் ,அ மார்க்ஸ் ஆகியோரின் முயற்சிகளை ஒருவகை அறிவுத்தொழில் நுட்பங்களாக மட்டுமே நான் பார்க்கிறேன். எனக்கு அவரது வாழ்க்கையும் அவரது செயலின் விளைவுகளும் முக்கியமே .பேச்சுகளை மட்டும் வைத்து மதிப்ப்ட வேண்டுமென்றால் தமிழ் சரித்திரத்திலேயே பெரிய கலகக்காரர் சாரு நிவேதிதா தான் , ஈவேரா உறை போடக்கூட காணாது.

ஈவேரா வின் வாழ்க்கையை வைத்து அவரை ஒரு கலகக்காரர் என்றோ ,சமூக அமைப்பை முழுமையாக மறுதலித்தவர் என்றோ சொல்வது வேடிக்கையானது. சொத்து சேர்ப்பது ,அச்சொத்தை வாரிசுகளிடம் விட்டுச் செல்ல முனைவது , அதற்காக வயதில் பாதிகூட இல்லாத பெண்ணை மணம் செய்வது ,சொந்த சாதியின் எல்லைகளை மீறாமலிருப்பது ,ஏன் சொந்த மதத்தின் அடையாளத்தைக்கூட துறக்க மறுப்பது என ஈவேராவின் மனம் ஒரு மரபார்ந்த முறையிலேயே செயல்பட்டுள்ளது . அவரது எழுத்துக்களில் ஒட்டு மொத்தமாக ஒரு ஒழுக்கவாதியின் பார்வையையே காணமுடிகிறது -மதத்துக்கு பதிலாக ஒழுக்கத்தை முன்வைத்தவர் என்று ஈவேராவை கூறிவிட முடியும். அந்த ஒழுக்கங்கள் பல மரபால் ,மதத்தால் உருவாக்கப் பட்டவை . அவர் அவற்றின் மூல ஊற்று குறித்தெல்லாம் சிந்தித்ததே இல்லை .எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மரபான அறம்,ஒழுக்கம் சார்ந்த அறிவுரைகளையே தன்னை நாடி வந்தவர்களின் சொந்த வாழ்க்கை குறித்து சொல்லியுள்ளார் .பல நூல்களை இது குறித்து சொல்லலாமென்றாலும் முக்கியமாக சொல்லவேண்டிய நூல் கோவை அய்யாமுத்து வின் சுயசரிதை.ஈவேராவின் நண்பராகவும் ,குடியரசு வெளியீட்டாளராகவும் இருந்த சர்வோதய தலைவர் அவர்.அவர் காட்டும் ஈவேரா மரபான மனப்போக்கும் ,லெளகீக விவேகமும் ,சக மனிதர்களிடம் அபாரமான கனிவும் கொண்ட, அதே சமயம் மிகக் கறாரான , ஒரு மேலான மனிதர் மட்டுமே .

இன்று ஈவேரா தமிழகத்தில் விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட பிம்பமாக கட்டமைக்கப் பட்டு வருகிறார்.படிப்படியாக அவர் குறித்த நினைவுகளும் அப்படியே தொகுக்கப்பட்டு பதிவாகும். வரலாறும் அப்படியே சமைக்கப்படும் .ஆயினும் சிலராவது இம்மாதிரி படிமச் சமையல்களை மீறி விஷயங்கள காணமுற்படவேண்டிய அவசியமுள்ளது. ஆனால் இங்கு அறிவு ஜீவிகள் கூட இவ்வாறு உருவாக்கப்படும் கெடுபிடிகளை அஞ்சியே செயல்படுகிறார்கள் . உதாரணமாக ஒரு நிகழ்ச்சி. நான் எவருடைய பட்டப்பெயரையும் குறிப்பிடுவதில்லை . ஆகவே மகாத்மா என்றோ பெரியார் என்றோ எழுதுவதில்லை .சிலகாலம் முன்பு கன்னட சிந்தனையாளர் டி ஆர் நாகராஜ் அவர்களை காலச்சுவடுக்காக பேட்டி கண்டேன் .நாகராஜ் ஈவேராவின் இயக்கத்தில் தொடர்பு கொண்டிருந்து பிறகு தலித் சிந்தனையாளராக ஆனவர் .ஈவேரா மீது மதிப்பை வெளியிட்டு கூடவே அவர் ஒரு சிந்தனையாளர் அல்ல ,பாமரத்தனமான சீர்திருத்தவாதியே என்றும் கருத்து சொல்லியிருந்தார் .தன் பேட்டியில் அவர் ஈவேரா [EVR] என்று மட்டுமே சொல்லியிருந்தார் .ஆனால் காலச்சுவடு பெரியார் என்று போடாவிட்டால் இதழுக்கே பிரச்சினை வரும் என்று பயப்பட்டது.அது உண்மையும்கூட . அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி கடைசியில் ஒரு சமரசமாக பெரியார் என்றுதான் போட வேண்டி வந்தது . இன்று இம்மாதிரி கெடுபிடிகளைமீறி அவரை அவரது பங்களிப்பின் ஒட்டுமொத்தத்தை வைத்துதான் மதிப்பிட வேண்டும்.

ஈவேரா முற்றிலும் மரபான மனம் கொண்டவர் என்று நான் சொல்லவரவில்லை . முற்றிலும் மரபை எதிர்த்தவர் என்று சொல்ல முடியாது என்றுதான் சொல்கிறேன். யதார்த்த மனம் கொண்ட எவருமே அப்படி எல்லாவற்றையும் தலைகீழாக்க வேண்டுமென்று சொல்லவும் மாட்டார்கள் .ஈவேரா வாய்ப்பந்தல்காரர் அல்ல ,செயல்வாதி. ஒவ்வொன்றும் அதன் உள்ளார்ந்த பல காரணங்களுடன் ,ஒரு தொடர்ச்சி நிலையில் தான் இங்கு காணப்படுகிறது. ஒவ்வோரு விஷயமும் ஏராளமான பிறவிஷயங்களுடன் கலந்தும் உள்ளது. முழுப்புரட்சி பேசும் மார்க்ஸியர் கூட அதை ஏற்றுத்தான் பேச முடியும். அந்த சிக்கலை ஓரளவேனும் புரிந்தவன்தான் சீர்திருத்தவாதியாக ஏதேனும் செய்ய முடியும். ஈவேரா அமைப்புக்கு வெளியே போய் தீர்வு காண முயன்றவர் ,மற்ற அத்தனைபேரும் அமைப்புக்குள்ளேயே தீர்க்க முயன்றாவர்கள் என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக சொல்ல என்ன ஆதாரம் ?[மேற்கோள் என்றால் காஞ்சி சங்கராச்சாரியாரில் இருந்தே அதேபோல எடுத்து காட்டுகிறேன் ] இம்மாதிரி பொது சொற்றொடர்களை தவிர்த்துவிட்டு பேச முயல்வது நல்லது.

என்னை பொறுத்த வரை ஈவேரா ஒரு சமூக சீர்திருத்தவாதி மட்டுமே .எல்லா சீர்திருத்த வாதிகளிடமும் மேலான ஒரு சமூகம் குறித்த கனவு இருக்கும் . அது எப்போதுமே நடைமுறையிலிருக்கும் அமைப்புக்கு வெளியேதான் இருக்கும். அதை நடைமுறைக்கு கொண்டுவருவதற்குரிய ஒரு குறைந்த பட்சத் செயல்திட்டமும் இருக்கும்.அத்துடன் அவர்கள் அடிப்படையில் சார்ந்து இருக்கும் ஒரு சமூகப்பின்னணி [அல்லது ஆதரவுத்தளம்] இருப்பதையும் காணலாம். ஒரு சமூகவியல் ஆய்வளன் அச்சீர்திருத்த வாதியை முற்றிலும் தவிர்த்துவிட்டு அவரது எழுச்சியையும் சாதனைகளையும் முழுக்க ஒரு சமூக வற்கப் போராட்டமாக மட்டும் காணமுடியும்– ஈ எம் எஸ் எப்போதுமே அப்படித்தான் பார்க்கிறார் .நாராயண குரு ஈழவப் பின்னணி உடையவர் .பூலே மகர்களின் பின்னணி உடையவர் இப்படி அனைத்து சீர்திருத்த வாதிகளைப் பற்றியும் சொல்லலாம் .அதே சமயம் அவர்கள் இப்பின்னணியின் உருவாக்கம் மட்டுமே என்று சொல்லும் அணுகுமுறைகளை என்னால் ஏற்க முடியவில்லை .இப்பின்னணிக்கு அப்பாலும் அவர்கள் இருக்கிறார்கள் .உண்மையில் அவர்களுடைய தனி ஆளுமைக்கும் இப்பின்னணிக்கும் இடையேயான ஒரு மோதல்-சமரச புள்ளியாகவே அவர்களின் செயல்பாட்டுத்தளம் அமைகிறது .

நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட ஈழவ மக்கள் ஆட்சியிலும் ,சமூக அதிகாரத்திலும் பங்குபெறும்பொருட்டு கொண்ட சமூக எழுச்சி நாராயண குருவின் பின்னணியில் உள்ளது.அதை அவர் உருவாக்கினார்,அது அவரையும் உருவாக்கியது.இரண்டையும் பிரிக்க முடியாது .அந்த எழுச்சியின் தேவைகளும் விதிகளும் அவரை தீர்மானித்தன.கூடவே அவரது தத்துவத் தேடல் ,தனிப்பட்ட ஆளுமைஅம்சங்களும் அவரை தீர்மானித்தன.அவரது வாழ்க்கை முழுக்க இவ்விரு சக்திகளுக்கும் இடையேயான மோதலும் சமரசமும் மாறி மாறி நடக்கும் வலி மிக்க நாடகத்தை நாம் காணலாம் .அவரது வாழ்க்கை குறித்து கறாரான வரலாற்றுப் பதிவுகள் பல எழுதப்பட்டிருப்பதனால் நமக்கு இன்று இது தெரிகிறது. ஈழவர்களுக்கு மற்ற தீண்டப்படாதாருடன் உள்ள துவேஷத்தை நீக்க நாராயண குரு தன் வாழ்வின் கடைசிக் கணம் வரை போராடினார் .அதில் ஏராளமான மனக்கசப்புகளையும் விரோதங்களையும்கூட அவர் அடைந்தார் .ஈழவர்களின் அதிகாரப் போட்டிகளை அவர் தொடர்ந்து காண நேர்ந்தது .அவரது பிரியப்பட்ட மூன்று முக்கிய மாணவர்களும்[நடராஜ குரு , ‘புலையன் ‘ அய்யப்பன்,குமாரன் ஆசான் ] அவரது இயக்கத்திலிருந்து வெளியேற நேர்ந்தது.இறுதி கட்டத்தில் அவரும் வெளியேறினார். இதெல்லாம் தான் நிதரிசனங்கள்.எல்லா சீர்திருத்த வாதிகளின் வாழ்க்கையிலும் இந்த போராட்டமும் அவலமும் இருக்கும்.உண்மையில் இது இலட்சிய வாதத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையேயான போராட்டம்.

ஈவேரா குறித்து தமிழில் வரலாற்று பதிவுகள் இல்லை,துதிகளே உள்ளன. ஆயினும் அவர் ஏறத்தாழ சமகாலத்தவர் ,நானே அவரை பார்த்து பேச்சை கேட்டிருக்கிறேன்.ஆகவே பல விஷயங்களை நாம் இப்போதும் அறிய முடிகிறது.ஈவேரா வின் ஆதரவுத்தளம் அவரது அரசியலில் தெளிவாகவே இருக்கிறது.பிராமணரல்லாத உயர்சாதியினர் ஆட்சி ,சமூக அதிகாரத்துக்காக நடத்திய சமூகப் போராட்டத்தின் பின்னணியே ஈவேரா வின் இயக்கம்.இது குறித்து விரிவாக ஆய்வு செய்து பேசலாம்,அதற்கு இங்கு அவகாசமில்லை.அந்த எல்லையை தாண்டி போகும் அம்சங்களும் அவரிடமிருந்தன.அவை அந்த அரசியலில் சமரசத்துக்கும் உள்ளாயின.அதிகாரம் கிட்ட நெருங்கியபோது அவரும் நாராயணகுரு போலவே புறக்கணிக்கப்பட்டார் .[என் பார்வையில் உலகமெங்கும் காணப்படும் ஒரு பொது விதி இது .இலட்சியவாதிகள் இயக்கங்களையும் தத்துவச் சட்டகங்களையும் உருவாக்குகிறார்கள்.அது அதிகாரமாக மாற்றப்படும் போது அவர்கள் வெளியே தள்ளப்பட்டு காரியவாதிகள் அதை கைப்பற்றுகிறார்கள் ]

தலித்துக்கள் மீதான ஈவேராவின் அணுகுமுறை இன்று தமிழ் நாட்டில் மிகக் கடுமையாக விமரிசிக்கப் படுகிறது. வரும்காலத்தில் அது மேலும் வலுப்படவே செய்யும். நடைமுறையில் ஈவேரா தலித்துக்களுக்காக ஏதும் செய்யவில்லை.அவரது ஆதரவுத்தளங்களில் இருந்த கடுமையான சாதிக் கொடுமைகளை தடுப்பதற்காக குரல் கொடுக்கவோ திட்டவட்டமான போராட்டங்களில் ஈடுபடவோ இல்லை . பல தலித் போராட்டங்களில் அவர் எடுத்த மேம்போக்கன நிலைப்பாடை இன்று தலித் சிந்தனையாளார்கள் பலர் கடுமையாக விமரிசித்தும் வருகிறார்கள் . தலித்துக்கள் அறிவும் விவேகமும் சற்று குறைவானவர்கள் ,அவர்களையும் நாம் சற்று அணைத்து போகவேண்டும் என்பதே அவரது பார்வையாக இருந்துள்ளது. அதை அவர் தவிர்த்திருக்க முடியாது , அது ஓரளவு அவரது அந்தரங்க நம்பிக்கை, ஓரளவு அரசியல் சமரச நிலைப்பாடு .அவருக்கு ஆதரவுத்தளமாக இருந்த உயர் /நடுத்தர சாதிகளின் போக்குக்கு வெளியே அவரால் அதிகம் நகர்ந்திருக்கவும் முடியாது.இன்று தலித் இயக்கங்கள் உருவாகி தலித் விடுதலைக்கான ‘உண்மையான ‘ போராட்டங்கள் நடக்கும்போது ஈவேரா வின் ஆதரவுத்தளமே அவர்களின் முதல் எதிரியாக இருப்பதையும் எவரும் காணலாம்.

இதேபோல ஈவேரா தொழிலாளர் இயக்கங்களுடன் கொண்டிருந்த உறவு குறித்தும் ஆழமான விமரிசனங்கள் எதிர்காலத்தில் வரும் என்று தான் நான் நம்புகிறேன்.இன்றைய இடதுசாரி கட்சிகள் திராவிட இயக்கம் உருவாக்கியுள்ள உணர்ச்சி வேகங்களை எதிர்கொள்வதை விட சேர்ந்து போவதே மேல் என்று முடிவு செய்து வெகுநாள் ஆகிவிட்டது . தொழிலாளர் இயக்கங்களில் ஈவேராவின் உறவு அவரது ஆதரவுத்தளமான நடுத்தர வியாபாரிகள் ,நிலவுடமையாளர்கள் ஆகியோரின் மனநிலையால் கட்டுப்படுத்தப்பட்டது .

ஈவேராவின் மீதான என் முக்கிய விமரிசனங்கள் இவற்றின் அடிப்படையிலானவை அல்ல . எந்த சீர்திருத்த வாதியும் அவனது சமூகச் சூழலினாலும் வரலாற்று சந்தர்ப்பத்தினாலும்தான் தீர்மானிக்கப்படுகிறான்.ஈவேரா உருவாக்கிய அறிவார்ந்த விவாதத் தளம் மிக மேலோட்டமானது , அவசர முடிவுகளின் அடிப்படையில் அதிமூர்க்கமான செயல்பாடுகளில் இறங்கும் போக்கு கொண்டது , அறிவியக்கத்தின் அடிப்படை விதிகளை பாமரத்தனமாக நிராகரிக்கும் இயல்புகொண்டது என்பதே என் விமரிசனம்.அதனால்தான் அவரது இயக்கம் ஒரு அறிவியக்கமாக ஆகாமல் போயிற்று. தமிழின் பொதுவான அறிவுச் செயல்பாடுகளுக்கு ஆழமான பின்னடைவை அது உருவாக்கியது .பலவிதமான விமரிசனங்களை தொடர்ந்து முன்வைத்த ஒருவர் மீது இம்மாதிரி ஒரு விமரிசனத்தை முன்வைப்பது ஒன்றும் பெரிய பழிபாவமல்ல என்றுதான் நான் எண்ணுகிறேன்.

இவ்வகையில் ஈவேராவின் முதல் பிரச்சினை அவர் எதைப்பற்றியெல்லாம் பேசினாரோ அதைப்பற்றி அவருடைய ஞானம் மிகக் மிகக் குறைவு என்பதே. அவர் சமத்துவம்,பொதுவுடைமை குறித்து பேசுகிறார் .அதைப்பற்றிய அவரது அறிவு பாமரத்தனமானது.அவர் ஜாதி குறித்து கடுமையான விமரிசனங்களை முன்வைக்கிறார் அதைப்பற்றி ஒரு குறைந்த பட்ச ஆய்வை அவர் மேற்கொண்டதற்கான தடயங்களை அவரிடம் காண முடியாது.அவர் மதம் குறித்தும் கடவுள் குறித்து பேசுகிறார் ,ஆனால் அவை குறித்த அவரது புரிதல் மிக சாதாரணமானது . அவருக்கு சமானமான தளத்தில் இயங்கிய பூலே ,அம்பேத்கார் ஆகியோரின் விரிவான அசல் ஆய்வுகளை இங்கு சுட்டிக் காட்டலாம் .அதை விட முக்கியமாக அவருக்கு முன்னரே தமிழில் இயங்கிய அயோத்திதாச பண்டிதரின் ஆய்வுகளை .

ஏன் இந்த ஆய்வுகள் தேவை என்ற கேள்வி எழுப்பப் படுகிறது .அடிப்படை ஆய்வுகளின் பலம் கொண்ட செயல்திட்டங்களே நிதரிசனத்துக்கும் ,வரலாற்றுத் தேவைகளுக்கும் நெருக்கமாக வர முடியும். சாதி என்பது பிராமணச் சதி என்ற ஒற்றை வரியில் புரிந்துகொண்ட ஈவேரா உண்மையில் சாதியின் எடையின் அடித்தட்டில் நசுங்கிக் கிடந்த தலித்துக்களை ஏமாற்றுகிறார்.சாதியை கற்பித்தவன் பார்ப்பான்.ஆகவே தேவர்களும் நாயுடுக்களும் பார்ப்பானை ஒழிப்பார்கள்,தலித்துக்களை தீண்டாமலும் இருப்பார்கள் என்ற விபரீத நிலைமை தமிழ் நாட்டில் உருவாக இதுவே காரணம்..இரண்டாயிரம் வருடங்களாக இங்கு வேரூன்றியவை மதங்கள்.அவற்றுக்கு மிக விரிவான தத்துவ கட்டமைப்பு உள்ளது. அவற்றின் படிமங்களே நம் ஆழ்மனத்தை உருவாக்கியுள்ளன .ஆயிரம் வருட கலையிலக்கியப் போக்குகள் அவற்றிலிருந்து முளைத்தவை. போகிற போக்கில் கடவுள்களை திட்டினால் மதத்துக்கு ஏதும் ஆகிவிடுவது இல்லை . அதுவும் ஈவெரா மதம் உருவாகிய குறியீட்டு அமைப்புகளைக்கூட அப்படியே நேரடி அர்த்தம் எடுத்துக் கொண்டு விளாசியவர் .அவர் வாழ்ந்த காலத்திலேயே மதச் சொற்பொழிவளர்கள் அவற்றுக்கு திட்டவட்டமான பதிலை அளித்துவிட்டார்கள்.ஈவேரா கேட்ட கேள்விகள் மிக மேலோட்டமானவை .மட்டுமல்ல அவற்றுக்கு திட்டவட்டமான பதிலும் மரபில் ஏற்னவே இருந்தது.கடவுளை empirical ஆக நிரூபிக்க முடியுமா என்றார் அவர்.அப்படியானால் epirical ஆக நிரூபிக்க முடியாத எல்லாமே பொய்யா,தேவையற்றவையா என்று திருப்பி கேட்கப்பட்ட போது பதில் சொல்ல முடியவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் ஒரு தி க கூட்டம் நடந்தது .அதில் ஈவேராவின் ஒரு மேற்கோளை சொல்லிப் பேசினார் ஒருவர். ‘ ‘சரஸ்வதி நாவில் இருக்கிறாள் என்றால் அவள் மலம் கழிப்பது எங்கே ? ‘ ‘ .நான் போன ஆட்டோ ஓட்டுநரிடம் அவரது கருத்தை கேட்டேன். ‘ ‘இவர்கள் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அண்ணாவுக்கு அங்கே என்ன கக்கூஸா கட்டி வைத்திருக்கிறார்கள் ? ‘ ‘என்றார் அவர். ‘ ‘சரஸ்வதின்னா ஒரு சக்தி சார் .வீணை நாதத்திலேயும் பாட்டோட அழகிலேயும் அது இருக்குது .நம் நாக்கிலும்புத்தியிலும் அது வரணும்னு ஆசப்படறோம்.கும்பிடற வசதிக்காக அத அம்மான்னு சொல்லிக்கிறோம்.வேற மாதிரியும் சொல்லலாம்… அவரு பாவம் வயசானவரு .படிச்சவர் கூட கெடயாது .ஏதோசொல்லிட்டார் .இவரு எம்மே படிச்சவர்தானே ,இவருக்கு எங்கேபோச்சு சார் புத்தி ? ‘ ‘ இதுதான் தமிழ்நாட்டில் இன்று ஈவேராவின் இடம் .

அதாவது அறிவார்ந்த ஆய்வின் பலம் இல்லாமல் பொதுப்புத்தியால் [பிராமண காங்கிரஸ்தலைவர்கள் மீதுள்ள தனிப்பட்ட கோபங்களாலும் ] ஈவேரா உருவாக்கிய எளிய வாதகதிகள் உடனடியாக உடைத்து எறியப் பட்டன . இந்தியா முழுக்க சனாதனப் போக்குக்கு எதிராக தத்துவப் பரிமாணமுள்ள ,வரலாற்றுப் பிரக்ஞை உள்ள ஆழமான விமரிசனங்கள் உருவாயின. அவற்றை இன்றுவரை சனாதன மதம் எதிர் கொள்ளமுடியவுமில்லை . நாராயண குரு முதல் அம்பேத்கர் வரை பல உதாரணங்கள் சொல்லலாம் .தமிழில் ஈவேரா உருவாக்கிய சருகு வேலி உடைபட்டதும் சனாதன மதம் விஸ்வரூபம் கொண்டு வளர்ந்துள்ளது . பதினாறு வருடம் முன்பு பிகெ பாலகிருஷ்ணன் [கேரள வரலாற்றாசிரியர் ] சொன்னார். ‘ ‘இனி தமிழ் நாட்டில் பிராமணர்களுக்கு நல்லகாலம்.யாகமும் ஹோமமும் தூள்கிளப்பப் போகின்றன. ‘ ‘ ஏன் என்று கேட்டேன். ‘ ‘எளிமையான ஒரு பிராமண எதிர்ப்பு மட்டுமே அங்கே உருவாக்கப்படுள்ளது .பிராமணதத்துவம் எதிர்கொள்ளப் படவேயில்லை . அங்கே வெள்ளைக்காரன் காலத்தில் பிராமணன் கைப்பற்றிய ஆட்சி அதிகாரத்தை இனி மற்ற சாதியினர் கைப்பற்றியதுமே சமரசம் ஆரம்பித்துவிடும். அவர்களுக்காக பிராமணன் யாகம் செய்ய ஆரம்பித்துவிடுவான். ‘ ‘மேற்கொண்டு இதற்கு ஆதாரம் தேவை என்றால் ஸி .ஜெ.ஃபுல்லர் எழுதிய தேவியின் திருப்பணியாளார்கள் என்ற நூலை பார்க்கலாம்.

மதமும் , பாரம்பரியமும் , அன்றாட நம்பிக்கைகளும் பின்னி பிணைந்துள்ள நம் சூழலில் மிகுந்த ஆய்வுக்குப் பிறகு நிதானத்துடன் தான் ஒரு சீர்திருத்தக் கோணத்தை முன்வைக்க முடியும்.முளைப்பாரி இல்லாத மாரியம்மன் விழா இல்லை .முளைப்பாரி பல்லாயிரம் வருட விவசாய வாழ்க்கையின் தொடர்ச்சியான விவசாயச் சடங்கு.மாரியம்மன் கோவில்களை இடித்துவிட்டு அங்கே கிராமக் கக்கூஸ் கட்டலாம் என்று சொல்வது எளிய விஷயம் . அதன் விளைவாக மாரியம்மன் பராசக்தியாக மாறுவதும் பல்லாயிரக்கணக்கான முளைப்பாரித்தட்டுகளை மேல்மருவத்தூருக்கு கொண்டுபோவதும்தான் நடந்தது தமிழ்நாட்டில். மேலும் முன்வைத்த ஒரு சீர்திருத்தக் கருத்தை மெல்ல மெல்ல வளர்த்தெடுப்பது அதைவிட முக்கியமான விஷயம் .அப்போக்கில் அது பல மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பது ஓர் உண்மை .அது மக்கள் அக்கருத்தை உள்வாங்கிக் கொண்டதன் விளைவு.ஈவேரா வை தமிழகம் எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டது ? இங்குள்ள தந்தை[முதுமை ] வழிப்பாட்டு மனநிலை அவரை மதிக்கச் செய்தது.தமிழ் இளைஞர்களில் ஒரு சிறு சாரார் இளமையின் ஒரு கட்டத்தில் அவர்மீது எளிய ஈர்ப்பினை அடைந்து சில வருடங்களியே நேர் எதிராக திரும்பியும் விடுகிறார்கள் .ஈவேராவின் கருத்துக்கள் முளைக்காத கூழாங்கல் விதைகள்போல.

‘ ‘ தன் தரப்புக்கு வலுசேர்க்கும் விஷயங்களைக்கூட ஈவேரா கற்றுக் கொள்ளவில்லை ‘ ‘என்கிறார் டி ஆர் நாகராஜ்[காலச்சுவடு பேட்டி] . இந்திய மரபிலேயே அழுத்தமான நாத்திக போக்குகள்,அவைதீக போக்குகள் பல உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு தமிழ் மரபின் ஆக்கபூர்வமான கூறுகளுடன் பிணைக்க முயலும் அயோத்தி தாச பண்டிதர் மிக முக்கியமான முன்னுதாரணமாக இங்கு ஏற்கனவே இருந்தார் . தத்துவ மேதையாக ஈவேராவைகாட்ட பெரும் பணமும் உழைப்பும் செலவிடப்படும் இன்றும் கூட பலவகையிலும் நவீனத்தமிழின் முதல் தத்துவசிந்தனையாளாரான அயோத்திதாச பண்டிதர் ஏன் அப்படி முன்வைக்கப்படுவது இல்லை ? தமிழ் அறிஞர்களை தேடித் தேடி படித்த எனக்கு அவரது படைப்புகள் தலித் இயக்கங்கள் தலையெடுத்த பிறகே வாசிக்க கிடைத்தன என்ற நிதரிசனத்தை ஒரு போதும் நான் மறக்க சித்தமாக இல்லை . தமிழ் பெளத்தம் குறித்த எனது பத்தாண்டு தேடலின் அடிப்படை விடைகளை பண்டிதர் அரை நூற்றாண்டுக்கு முன்னரே எழுதிவிட்டிருந்தார் என்பதும் அவை மறைக்கப்பட்டன என்பதும் எனக்கு தமிழ் அறிவுத்துறையில் செயல்படும் சாதிமனநிலையின் ஆதாரமாகவே தெரிகிறது . விஷ்ணுபுரம் எழுதுவதற்கு முன்பு அயோத்திதாச பண்டிதர் கிடைத்திருந்தால் பல தளங்களை விரிவு செய்திருப்பேன் .

ஈவேராவின் நடைமுறை வெற்றி அவர் தன் இயக்கத்தை ஜஸ்டிஸ் கட்சியுடன்[பிராமணரல்லாதார் இயக்கத்துடன்] இணைத்து கொண்டதில்தான் உள்ளது.சமூக/அரசியல் ரீதியாக தவிர்க்க முடியாத ஒரு தரப்பு அது . இந்தியா முழுக்க அந்த தரப்பு வலுப்பெற்று அதிகாரத்தை பிடித்தது இப்போது இந்திய அரசியல் பிற்பட்ட [குடியானவ/மேய்ச்சல் ] சாதிகளுக்கு ஆதரவாக உள்ளது.நாளை அது தலித்துக்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான ஒரு சமநிலையாக இருக்கும். அந்த அரசியல் அலையின் திவலையாக /ஒரு முத்திரையடையாளமாக மட்டுமே ஈவேரா இன்று முக்கியத்துவம் பெறுகிறார் .அதே சமயம் ஈவேரா தமிழ் தேசியம் ,தமிழ் கலாச்சார அடையாளத்தேடல் முதலியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர் என்பது ஒரு உண்மை .இன்று திராவிட இயக்க அரசியல் தமிழ் இன அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. கொள்கை ரீதியாக ஈவேரா தோற்று ,புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு இதுவே சான்றாகும். இப்போது தன் தெலுங்கு அடையாளத்தை மறக்காத அவரே தமிழ் இன அரசியலின் தொடக்கப்புள்ளி என்று கூசாமல் வரலாறு திரிக்கப்படுகிறது. அதேசமயம் தமிழ் இன அரசியல் அதன் தீவிரத் தளத்தை அடையும்போது ஈவேராவே தெலுங்கு ஆதிக்கவாதி என குற்றம் சாட்டப்படும் நிலையும் இங்கு உள்ளது [பார்க்க. குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம்]

ஈவேராவை முன்னிறுத்த இன்று நடக்கும் எல்லா முயற்சிகளுக்கும் பின்னால் அரசியல் நோக்கமே உள்ளது என்பது என் புரிதல். உயர்சாதியிலிருந்தும் [எஸ்விராஜதுரை,வ கீதா,ஆஇரா வேங்கடாசலபதி,ராஜன் குறை ] பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்தும்[அ.மார்க்ஸ் ,எம் எஸ் எஸ் பாண்டியன் ]செய்யப்படும் இம்முயற்சிகள் உருவாகிவரும் தலித் எழுச்சிகண்டு அஞ்சி செய்யப்படுபவை. பிராமணர்களை பொது எதிரியாகக் காட்டி தங்கள் மீதான தலித்துக்களின் அதிருப்தியை சமாளிக்கும் நோக்கம் கொண்டவை.தலித்துக்களை தங்கள் தலைமையின் கீழ் சேர்க்கும் பொருட்டு ஈவேராவை பொதுவான தத்துவ வழிகாட்டியாக சித்தரிக்க முயல்பவை.கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் ஈவேரா அவசர அவசரமாக ‘மறுகண்டுபிடிப்பு ‘ செய்யப்பட்டிருப்பது தற்செயலல்ல. ஈவேராவை தத்துவ அறிஞராக சொல்லும் போது ஏன் பெரும்பாலானவர்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் நாம் செத்துப்போன அனைவரையுமே அமரர் ஆகக் காண்பவர்கள் என்பதனால் தான்.ஈவேரா சிலைக்கு பிறந்தநாளுக்கு மாலைபோட்டு சுண்டல் வினியோகித்து வழிபடுகிறார்கள் தமிழர்கள்.

888888888

தமிழ் சூழலில் ஈவேரா உருவாக்கிய அறிவார்ந்த வெளிறலை பற்றி ஏராளமாக சொல்லலாம் .தர்க்க பூர்வ விவாதத்தில் கோபம் எழுவது இயல்புதான் . தர்க்கமே இல்லாமல் எளிீய ஒற்றைவரியை தன் தரப்பாக முன்வைப்பது ,அதற்கு எதிராகச் சொல்லப்படும் தர்க்கங்களைக்கூட எளிய ஒற்றைவரியாக மாற்றிக் கொள்வது எனும் போக்கு ஈவேராவில் இருந்து தமிழ் சூழலில் பரவிய ஒன்று.இங்கே ஆதாரங்களை காட்ட முயலவில்லை .கோ ராஜராம் அவர்களின் கட்டுரையையே எடுத்துக் கொள்ளலாம்.முதலில் நான் ஈவேரா குறித்து சொன்ன எல்லா வாதங்களையும் அவதூறு என்று முத்திரை குத்தி விடுகிறார் .நான் சொன்னது என் கருத்து ,மனப்பதிவு . ஈவேரா குறித்து பொய்யான எந்த தகவலையும் நான் சொல்லவில்லை .அவர்மீதான மதிப்பை பதிவு செய்ய தவறவும் இல்லை .

இரண்டாவது விஷயம் , எல்லா அறிவார்ந்த விஷயங்களையும் பாமரத்தனமாக குறுக்கி எளிய ஒற்றைவரிகளாக மாற்றிகொள்வது . பேசும் விஷயம் குறித்து அடிப்படை ஆய்வுகூட செய்யாமலிருப்பது. இப்போக்கு தமிழில் எதையுமே வசையாக மட்டுமே முன்வைக்க முடியும் என்றா நிலையை ஏற்படுத்தி விட்டது . அத்வைதம் ஒரு சாதிய சித்தாந்தம் ,அதை கற்பித்த சங்கரர் சாதியை நம்பினார் என்பதனால் –என்கிறார் ராஜாராம் .ஆகவே அது புதைந்து போகவிடுவதே மேல். பிளேட்டோ முதல் ஹெகல் வரையிலான மேற்கத்திய சிந்தனையாளார்கள் அடிமைமுறையில் நம்பிக்கை கொண்டவர்கள் ,அத்தனைபேரையுமே குழி தோண்டி புதைத்து விட்டார்களா ? இந்திய மறுமலர்ச்சிக்கால சீர்திருத்தவாதிகளில பலர் அத்வைதிகள் . விவேகானந்தர் போன்ற சூத்திரர்கள் ,நாராயண குரு , அய்யா வைகுண்டர் போன்ற தீண்டப்படாத சாதியினர் ….. தலித்துக்களில் மீட்பின் முதல் செய்தியை கொண்டுசென்ற சுவாமி ஆத்மானந்தா , தலித் துறவியான சுவாமி சகஜானந்தா போல [150 பேரை நான் பட்டியலிட முடியும்] இவர்களெல்லாம் அத்வைதிகளே . இது எப்படி ? அத்வைதத்தின் தத்துவ அடிப்படைகள் குறித்து ராஜாராம் கற்றிருக்கிறாரா ?இந்திய சிந்தனைகளில் அதன் பாதிப்பு குறித்து அவருக்கு தெரியுமா ?

சங்கரர் குறித்து பலவகையான ஐயங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன .பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதிய சங்கரரும் கேரள ஜாதியமைப்பின் இலக்கணகர்த்தா என்று அடையாளம்காட்டப்படும் சங்கரரும் ,இந்திய சங்கர மடங்களை நிறுவிய சங்கரரும் ஒருவரல்ல என்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.பல ஐதிகங்கள் அவர் பெயரின் வலிமையை பயன்படுத்தி கொள்ளும் பொருட்டு உருவாக்கப் பட்டவை. பலநூல்கள் அவர் பெயரில் பிறகு எழுதி சேர்க்கப்பட்டவை . நித்ய சைதன்ய யதி போன்றவர்கள் செளந்தர்ய லஹரிக்கும் பிறநூல்களுக்கும் இடையே மொழி அமைப்பில் பெரிய கால வேறுப்பாடு உள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டில் கூட சங்கரர் பேரில் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட ஒரு விஷயத்தில் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வது மிக சிக்கலான விஷயம். ஆனால் இதோ எளிதாக ஒற்றைவரியை உருவாக்கியாகி விட்டது. இனி சங்கரரை படிக்கவேண்டிய அவசியமே இல்லை . புதைத்து கையை தட்டிக் கொள்ளவேண்டியதுதான் மீதி.ஆனால் அம்பேத்கார் அத்வைதத்தை படித்தார் .ஈஎம் எஸ் படித்தார்.அயோத்திதாசர் படித்தார் .இதுதான் ஈவேரா உருவாக்கிய மனோபாவத்தின் சரியான உதாரணம்.

மாற்றுத்தரப்பை எளிமைப்படுத்துவது போன்று அறிவார்ந்த விவாதத்துக்கு தீங்கு செய்வது பிறிதில்லை. விவாதத்தை நடத்தவே முடியாதுபோகும்.முடிவில்லாமல் ‘ ‘ ஐயா ,நான் சொல்ல வந்தது அதல்ல ‘ ‘ என்று மாற்றுத்தரப்புபினர் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.தமிழில் சாரு நிவேதிதா ,பொ வேல்சாமி போன்று இதில் விற்பன்னர் பலர் உண்டு .அவர்களைப்போல கோ. ராஜாராம் அதை ஒரு கருவியாக பயன்படுத்தவில்லை ,இயல்பாக செய்கிறார் என்று எண்ணுகிறேன். சங்கரர் இன்றி நவீன மறுமலர்ச்சி சிந்தனைகள் இல்லை ,ஹெகல் இன்றி மார்க்ஸ் இல்லை என்பதுபோல என்று கூறும்போது உத்தேசிக்கப் படுவது என்ன ? மார்க்ஸ் ஹெகலின் நேரடி தொடர்ச்சி அல்ல .எதிர்தொடர்ச்சி . ஒவ்வொரு தரப்பிலும் அதன் எதிர்தரப்பின் தருக்கமுறை ,அடிப்படை அமைப்பு ஆகியவை ஒளிந்திருக்கும். கருத்து விவாதம் உச்சமடையும் தோறும் இரு எதிர்தரப்பிலும் உள்ள கணிசமான தளங்கள் ஒன்றாகி , முக்கியமான மைய வேறுபாடு மட்டும் பல மடங்கு கூர்மை அடைந்து விட்டிருக்கும். கருத்துக்கள் பரவும் முரணியக்க ப் [Dialectical ] போக்கை சார்ந்த புரிதல் இது.

சங்கரரில் இந்தியப் பெளதிக வாத மரபின் மிகச் சாரமான பகுதி உள்ளடங்கியுள்ளது. அத்வைதத்தின் எதிர்முனை பிற்கால பெளத்த சிந்தனை . பெளத்த சிந்தனை நியாய மரபின் அடிப்படையிலானது. அவ்விவாதத்தினூடாக அத்வைதம் நியாய மரபின் தருக்கக் கட்டுமானத்தை அப்படியே தானும் சுவீகரித்து கொண்டிருக்கிறது.அதேபோல தூய தருக்கத்தை முன்னிறுத்தும் பெளதிகவாத சிந்தனையான நியாயத்தில் முதல்கட்ட வேதாந்த மரபின் அடிப்படைகள் சில உள்ளடங்கியுள்ளன.சிந்தனையை அதன் விவாத வடிவில் மட்டுமே பயில ,மீட்க ,தக்கவைக்க முடியும். மார்க்ஸையும் -ஹெகலையும் ,கிராம்ஷியையும் -குரோச்சேவையும் சேர்த்தே பயில முடியும் .மிக எளிமையாக சொல்லப்போனால் பக்தி ,சடங்கு ஆகியவற்றுக்கு எதிராக தூய அறிவை முன்வைக்கிறது அத்வைதம் . அதனாலேயே அது இந்திய மறுமலர்ச்சிக் கால சீர்திருத்த வாதிகளுக்கு முக்கியமான கருவியாகியது. அத்வைதத்தின் வழியாக நியாய மரபே அப்பங்களிப்பை நடத்தியது என்றும் சொல்லலாம் .

அத்வைதத்தின் எதிர் முனையாகவே இங்கு மார்க்ஸியம் செயல்பட முடியும் என்றே ஈ .எம் . எஸ் சொல்கிறார் . அதை வசதியாக புறக்கணித்து விடலாம்.ஆனால் நம் சமூகத்தின் அடிப்படை சிந்தனையில் [மொழியில் ] அது வலுவாக உட்கார்ந்திருக்கும் வரை அதை விவாதித்து வென்றடக்கியே ஆகவேண்டும் .நமது பழமொழிகளில் கணிசமானவை அத்வைதச் சார்பு கொண்டவை. நமது பக்திப்பாடல்கள் அத்வைத உள்ளடக்கம் உடையவை. ஒரு சிந்தனை காலப்போக்கில் மொழியில் கலந்து விடுகிறது.பிறகு அதன் பாதிப்பு பெரிதும் நனவிலி சார்ந்தது . ராஜாராம் இந்த கருத்துக்களை எந்தளவுக்கு எளிமைப்படுத்துகிறார் என்று பார்க்க வியப்பே எழுகிறது .

அத்துடன் அவர் கேரள சமூகத்தின் சிக்கல்கள் குறித்து மிகதவறான விஷயங்களைச் சொல்கிறார் . அசல் உற்பத்தி இல்லாத சிறு மாநிலம் கேரளம் . முக்கிய வருமானமான சுங்க வரி மத்திய அரசுக்கு போகும்..மாநில அரசின் மிகப்பெரிய வருமானம் விற்பனை வரி .அதை இந்தியச்சட்டங்களை வைத்துக் கொண்டு அத்தனை எளிதாக வசூலித்துவிட முடியாது .இந்தியாவிலேயே அதிக விற்பனைவரி பாக்கி வைத்திருக்கும் மாநிலம் கேரளமே . அதன் நிதிப்பற்றாக்குறைக்கு புதிய பொருளாதாரக் கொள்கையால் மலை விவசாயப் பொருட்கள் விலை வீழ்ச்சி அடைந்ததும் முக்கியக் காரணம் .ஆனால் அம்மாநிலத்தின் கல்வி,தனிநபர் நலம்,சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதார வல்லுநர்கள் கீழை உலகின் முன்னுதாரணமாக சுட்டிக்காட்டியது சமீபத்தில் தான். kerla model developement என ஐ நா சபை முன்வைத்தது எதை என ராஜாராம் விசாரித்துபார்க்கவேண்டும்.மாறாக அதே கேரளத்தில் ரேஷன் கார்டு வழங்க நிரந்த முகவரி இல்லாமல் பல லட்சம் தமிழர்கள் தெருவில் வாழ்பவர்களாக உள்ளனர் என்பது அம்மாநில முதல்வர் சட்டசபையில் சொன்ன தகவல். இந்தியா முழுக்க தமிழ் மக்கள் தெருவாசிகளாக ஒவ்வொரு நகரத்திலும் வாழ்கின்றனர். பெங்களூரிலும் ,எர்ணாகுளத்திலும் ,டெல்லியிலும் குடிசைவாசிகள் என்றாலே தமிழர்கள் என்று ஆகிவிட்ட நிலையில் ராஜாராமின் வீம்பு எதைப் பாதுகாக்க என்று புரியவில்லை .

கோ. ராஜாராமின் பதிலில் உள்ள இந்த அம்சங்களை உருவாக்கியவர் என்ற அளவில்தான் நான் ஈவேரா மீது என் விமரிசனத்தை முன்வைக்கிறேன். அம்பேத்கார் போன்றவர்கள் உருவாக்கியது ஒரு விவாதக்களத்தை. அடிப்படை தருக்கக் கட்டுமானவும் சுயமான ஆய்வுகளும் கொண்டது அது. முரண்படவும் விரிவுபடுத்திகொள்ளவும் அதில் இடமுண்டு.ஈவேரா உருவாக்கியது மூர்க்கமான ஒரு வசைபாடல் பாணியை மட்டுமே. என்னதான் சிறப்பான நோக்கங்கள் இருப்பினும் அது நேர் எதிரான விளைவுகளையே தான் உருவாக்கும். ஈவேராவின் பங்களிப்பு அற்பமானதல்ல என்றே நான் கருதுகிறேன். இறந்த காலத்தின் கைதிகளாக வாழும் பெரும் மக்கள்திரள் உடைய பகுதி தமிழகம்.நவீன விஞ்ஞானத்தொழில்நுட்ப , நுகர்வோர் காலகட்டத்துக்கு [முதலாளித்துவ காலகட்டத்துக்கு என கலைச்சொல்லாக கூறலாம் ] நகர்வதற்கான கருத்தியல் ஆயுதங்கள் சிலவற்றை அவர்களுக்கு உருவாக்கித்தந்த சக்தி மிக்க சமூக சீர்திருத்தவாதி அவர் . அவரை நவீனத்துவத்தின் பிரச்சாரகர் என்று சொல்லலாம் . அவரது நோக்கங்களோ ,அவரது தனிப்பட்ட மனிதாபிமான நோக்கோ ஐயத்துக்கு உரியவை அல்ல. அவர் ஒரு முக்கியமான வ்ரலாற்று நாயகர் என்றே நான் கருதுகிறேன். ஈவேரா மூலம் ஒரு குறிப்பீட அளவுக்கு மாற்றம் கண்டிப்பாக உருவாகியுமுள்ளது. ஆனால் எதுமூட நம்பிக்கை எது மரபான குறியீட்டு செயல்பாடு என்றெல்லாம் தெரியாத ஒட்டுமொத்த மட்டையடி பகுத்தறிவையும் கலாச்சாரம் சார்ந்த ஒருவகை மூடநம்பிக்கையாகவே மாற்றிவிட்டது.

பெரியாரியர்களின் மனம் எப்படி செயல்படும் என்பதை இக்கட்டுரையில் நான் எழுதியதை வைத்தே சொல்லிவிடலாம். என்னை ஒரு பிராமணிய வெறியனாக முத்திரை குத்திய பிறகே அவர்களால் மேற்கொண்டு பேச முடியும் .

விவாதங்களை மறுக்கும் இந்த மூர்க்கம் ஈவேரா உருவாக்கியதுதான். அது குறித்து எனக்கு கவலையுமில்லை. என் தரப்பை சொல்லிவிடுகிறேன் . அடிப்படையில் எனக்கு அவைதீக மரபுகள் மீது ,குறிப்பாக பெளத்தம் மீது மட்டுமே ஓரளவாவது சார்புநிலை உள்ளது. தமிழில் கடந்த 15 வருடங்களில் என்னளவுக்கு வைதிக மரபை ஆக்கபூர்வமாக விமரிசித்த,அவைதீக மரபை தீவிரமாக முன்வைத்த இன்னொரு படைப்பாளி இல்லை . தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே சனாதன ,புரோகித மரபிற்கு மாற்றான அசலான சிந்தனைப் போக்குகள் உருவாக்கப்பட /மறுகண்டுபிடிப்பு செய்யப்பட வேண்டுமென நான் எண்ணுகிறேன். அத்தகைய அவைதீக மரபு வெகு காலம் இந்தியாவில் வலுவாக இருந்துள்ளது.இந்தியாவின் தத்துவ வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக அமைந்தது அது உருவாகிய விவாத சாத்தியம்தான்.[நான் வேத விரோதி என்று என்னை சொல்லிக் கொள்வேன் .ஆகவே இங்கு வேதமரபும் இருந்தாகவேண்டும் — டி ஆர் நாகராஜ்] நான் பெரியாரை ஏற்றால் சங்க இலக்கியத்தை ,பதஞ்சலியோக சூத்திரத்தை , திருக்குறளை ,நியாய சூத்திரங்களை எல்லாம் முழுமையாக நிராகரிக்கவேண்டியிருக்கும்.வேதங்களை கீதையை கம்பராமாயணத்தை பாரதியை அரவிந்தரை கொளுத்த வேண்டியிருக்கும் .பிறகு எனக்கு மிஞ்சுவது ஐரோப்பிய அறிவொளிக்காலத்தின் தூறல்களான சில அரைத்தத்துவவாதிகள் மட்டுமே .மூளை சூம்பிப்போன ஆசாமிகள் அதை மட்டும் ஏற்றுக் கொண்டு வாழ்வதில் எனக்கு பிரச்சினை இல்லை . அது எனக்கு ஒவ்வாது ,என் சவாலே வேறு என்றுதான் சொல்கிறேன் .அது தமிழ் கலாச்சாரத்தில் செல்லாக்காசு என நிரூபணமாகிவிட்டது என்றுதான் சொல்கிறேன்.

தமிழகத்தை பொறுத்த வரை இங்குள்ள மதம் , மொழி அனைத்திலும் சனாதன மரபின் பாதிப்பு அதிகம்.தமிழகத்தின் மூல மரபுகள் பல ஒடுக்கப்பட்டுள்ளன .அவற்றை மீண்டெடுப்பதும் நிலைநாட்டுவதும் ஒரு பெரும் கலாச்சாரப் பணி. அது ஒருபோதும் எதிர்மறையான செயல்பாடுகள் மூலம் உருவாகாது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் ,அயோத்திதாச பண்டிதரும் [ நாராயணகுருவும் , நடராஜ குருவும் ] ஆற்றிய ஆக்கபூர்வமான பணிகளே எனக்கு உத்வேகமூட்டுபவர்களாக உள்ளன . கலை இலக்கியங்களை புறக்கணிக்கும் ,கொச்சையாக மதிப்பிட்டு இழிவுபடுத்தும் மனநிலை அப்பணிக்கு நேர் எதிரான ஒன்று . ஏனெனில் கலை இலக்கிய மரபுகளில் இருந்தே நம் சாராம்சமான கலாச்சார அம்சங்கள் ,குறிப்பாக தமிழ் கலாச்சாரக் கூறுகள் கண்டடையப்பட முடியும். ஒரு உதாரணம் சொல்லலாம். இப்போது என் முன் கணிப்பொறி அருகே நான் படித்துக் கொண்டிருக்கும் இரு முக்கிய ஆய்வாளர்களின் ஆய்வுகள் உள்ளன .தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் இசை ஆய்வு [வட்டப்பாலை குறித்தது ] குமரிமைந்தன் பண்டைத்தமிழ் கால/நில அமைப்பு குறித்து எழுதிய ஆய்வு . இரண்டுமே சோதிடத்தை ,குறிப்பாக ராசி சக்கரத்தை முக்கியமான கருவியாக பயன்படுத்துபவை.பழந்தமிழரின் அறிதல் முறையை ஆய்வுசெய்ய மிக முக்கியமான ஒரு தளம் சோதிடம் . அது குறித்து இன்னும் நமக்கு முழுக்கத் தெரியாத நிலையில் உடனடி முன்முடிவுகளுக்கு வருவதை பொறுப்பான ஆய்வாளர் தவிர்க்கிறார்கள் .குமரிமைந்தன் ஈவேரா மீது பிடிப்ப்புள்ளவர் என்றபோதிலும் . ஈவேரா உருவாக்கும் மனோபாவம் இந்த மரபான அறிவுகளை முழுக்க துடைப்பத்தால் அள்ளி குப்பையில் போடத்தானே நமக்கு கற்பிக்கிறது ?

இன்று நாம் சிந்தனைக்கும் கலாச்சாரத்துக்கும் எதிரான ஈவேராவின் மூர்க்கமான எதிர்மறைப்போக்குகளை தவிர்த்துவிட்டு படைப்பூக்கத்துடன் முன்னகரவேண்டிய அவசியம் தான் உள்ளது .

====

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்