அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

தங்கவேல் மாணிக்கதேவர்


அரசியல்வாதிகளுக்கு பொது மக்களின் மூலம் பெரும் ஆபத்து காத்து இருக்கின்றது. மீடியாக்களால் சூழப்பட்ட உலகம் இது. பத்து நிமிடத்தில் எந்த ஒரு செய்தியையும் உலகின் எந்த ஒரு மூலைக்கும் கொண்டு செல்ல முடியும். அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமங்கள், அட்டூழியங்களை தினமும் கேட்டு உள்ளுக்குள் வன்மத்தை வளர்த்து வருகிறார்கள் மக்கள். அரசு அதிகாரிகளின் அலட்சியபோக்கும் லஞ்சமும் பொது மக்களுக்கு உள்ளூர நீருபூத்த நெருப்பு போல கோபத்தை வளர்த்து வருகின்றது.

படிக்காதவர்கள் குறைந்து கொண்டு வருகின்றார்கள். அந்த காலம் அல்ல இது, சிவப்பு கலரையும், தொப்பி, கண்ணாடி, குல்லாக்களையும் காட்டி ஓட்டு வாங்குவதற்கு. ஆபாசமாக பேசியும் திட்டவும் முடியாது. அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில் பொதுமக்களால் கல்லால் அடித்து விரட்டப்படும் நாட்கள் தொலைவில் இல்லை. ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால் காரணம் இருக்கின்றது.

இன்றைய இந்தியாவில் கூட்டமாக கொலை செய்யும் முறை தலைதூக்கி இருக்கின்றது. சட்டத்தினை தன் கையில் எடுத்து அரசியல்வாதிகளால் ஆரம்பித்து வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் இன்று அவர்களுக்கு எதிராக திரும்ப இருக்கின்றது. ஆபத்தை உணர்ந்து திருந்தவில்லை எனில் நடுச்சாலையில் ஒரு நாயைப்போல அடிபட்டு இறக்கும் சூழ்னிலை விரைவில் வரத்தான் போகின்றது.

எம் எல் ஏக்கள் தங்களது தொகுதிக்கு தன்னால் முடிந்த வரை நல்லது செய்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படப்போகின்றது. இல்லையெனில் அரசியல் அனாதையாக ஆக்கப்படப்போகின்றார்கள். பொது மக்கள் செயல்படாத அரசியல்வாதிகளை பெண்டுகளட்டப்போகின்றார்கள்.

அரசியல்வாதிகளால் தட்டி கொடுத்து வளர்க்கப்பட்ட வன்முறைக்கலாச்சாரத்தை இப்போது பொதுமக்கள் தமது கையில் எடுத்துக்கொண்டு விட்டனர். செயலிழந்த அரசியல்வாதிக்கு தர்ம அடி காத்து இருக்கின்றது. மக்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள் என்றால் படுகேவலமான முறையில் மரணமும் காத்து இருக்கின்றது.

பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஜெயித்த பின்பு ஓடி ஒளியமுடியாது. வேறு தொகுதிக்கும் மாற முடியாது. அங்குள்ளவர்களால் தர்ம அடி கிடைப்பது நிச்சயம்.

உத்திரப்பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் பொதுமக்கள் பொங்கி எழுந்து சட்டத்தை தன்கையில் எடுத்து வெறி ஆட்டம் போட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் ?

நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால் தீர்ப்பினை அவர்களே கொடுக்க துவங்கி விட்டனர். ஒரு சாமானியன் வழக்கு என்று நீதிமன்றம் ஏறினால் அவன் அனைத்தையும் இழந்து தான் நீதியினை பெறமுடியும்.

கீழ் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு , மேற்கோர்ட்டில் ஒரு தீர்ப்பு என்று நீதி தள்ளாடுகின்றது. தாமதமாகும் நீதி கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன ? இரண்டும் ஒன்றுதான். அதனன்றி சட்டத்தை சட்டையாக அணிந்து இருக்கும் காவல் துறையினரின் அராஜக போக்கு காவல் துறையின் மீது கண் மூடித்தனமான கோபத்தை சாமானியனுக்கு ஏற்படுத்தி விடுகின்றது.

பணக்காரன் ஒருவன் காவல் நிலையம் சென்றால் அவனுக்கு கிடைக்கும் மரியாதை, ஏழைக்கு கிடைப்பதில்லை. எந்த ஒரு காவல் நிலையத்திலாவது மரியாதையாக பேசுகின்றார்களா என்றால் இல்லை என்பதே உண்மை.

மேற்கு வங்கத்தில், பிர்புமில் பொதுமக்கள் ரேசன்கடையினை அடித்து தகர்த்துள்ளனர். நான்கு ரேசன் டீலர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். பதினோறு மாதமாக ரேசன்கிடைக்கவில்லை, பட்டினி கிடக்கிறோம் என்று காரணம் சொல்லுகின்றார்கள் கலவரத்தில் ஈடுபட்டோர். ரேசன்கடையில் மக்களுக்கு வழங்க வரும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை கள்ள மார்க்கெட்டுக்கு செல்கின்றன. தடுக்க வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்க்கின்றது. எம் எல் ஏவுக்கு பங்குபணம் செல்லுகின்றது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழைய மொழி. பொறுத்தார் பட்டையக் களட்டுவர் என்பது புது மொழி ஆகப்போகின்றது.

காவல்துறையினர் அரசியல்வாதிகளுக்கு குடை பிடிப்பதையும், கார் கதவினை திறந்து விடுவதையும் தான் கடமை என செய்கின்றார்கள். தவறு செய்தவர்கள் யாராயினும் பிடித்து இழுத்து வந்து தண்டனை பெற்று தருவதில் காவல்துறைக்கு நேரம் போதவில்லை.

கடமை என்னவென்பதை மறந்து விட்டு எதை எதையோ செய்கின்றார்கள். ஒருவனை அடிக்கவும், மிரட்டவும் அதிகாரம் பெற்றவர்கள் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போல எவரை பார்த்தாலும் அப்படியே செய்கின்றார்கள்.

வக்கீல்களின் இதயம் கெட்டுவிட்டது. இன்றைய அரசியல்வாதிகளில் பெரும் பாலோர் வக்கீல்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. நீதி நேர்மை என்றே புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும். ஆனால் உண்மை என்ன ? வக்கீல்கள்தான் இன்றைய இந்தியா இப்படி கெட்டுபோக காரணமாய் இருக்கின்றார்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. தவறே செய்யாத வக்கீல்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒரு துளி விஷம் எப்படி அனைத்தையும் விஷமாக்குகின்றதோ அப்படித்தான் இந்த விஷயமும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்பவர்களுக்கு ஆஜராகி வாதாடுகின்றார்கள் பெரும் புகழ் பெற்ற வக்கீல்கள். இவர்களுக்கு பணம்தான் குறி. நீதி என்பதெல்லாம் வெறும் பேச்சுக்குதான். குடிபோதையில் காரை ஓட்டி ஏழு பேர் இறக்க காரணமாய் இருப்பவனுக்கு ஒரு புகழ் பெற்ற வக்கீல் ஆஜராகின்றார். கேட்டால் தொழில் தர்மம் என்பார். எது தொழில் தர்மம் ? இதுவா ? காசு கொடுத்தால் போதும், கொடுப்பவனுக்கு ஆதரவாக ஆஜராவார்கள் இவர்கள். அதுவுமன்றி சட்டத்தை வளைக்கவும் இவர்களின் புகழை பயன்படுத்துவார்கள். ஏனெனில் தோற்றுவிட்டால் தொழில் நடக்காதே.

கேரளாவில் திருட்டுக்குற்றம் சாட்டி ஒரு கும்பல் இரண்டு பெண்களை துவம்சம் செய்தது. காவல்துறையினர் தான் காப்பாற்றினார்கள்.

பீகாரில் திருட்டுக்குற்றம் சாட்டி சாலையில் வைத்து ஒரு மனிதன் மிகவுக் கொடூரமாக தாக்கப்பட்டான். பீகாரில் காவல்துறையினரின் அலட்சியப்போக்கால், திருடர்கள் என்று சந்தேகப்பட்டு பொது மக்கள் பத்து பேரை அடித்தே கொன்று இருக்கின்றார்கள்.

தமிழகத்தில் ரயில்கள் தாமதமாக வருவதாக சொல்லி ரயில் மறியல் போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள் பொது மக்கள். இவர்களுக்கு எந்த ஒரு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனவா ? இல்லை போராட்டம் செய்தனவா ? இல்லை. பொங்கி எழுந்த பொது மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றே கருத வேண்டி இருக்கின்றது.

பொது மக்களுக்கு நீதியின் மேலும் நீதிமன்றத்தின் மேலும் உள்ள நம்பிக்கை வெகுவாக குறந்து வருகின்றது. சட்ட பாதுகாவலர்கள் அவர்களின் கடமையினை செய்ய மறந்து விட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதால் தடி எடுத்தவனெல்லாம் தாண்டவராயன் ஆகிவிட்டான். தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து விட்டது. அரசியல்வாதிகளுக்கு பல்லக்கு தூக்குவதுதான் காவல்துறையின் வேலையாக இருக்கின்றது. அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகளாக மாறுகின்றனர். பதவி ஆசையும், அதிகாரம் அவர்களை ஆட்டி வைக்கின்றது. பொது மக்களால் அவர்களின் ஆட்டம் அடக்கப்பட போகின்றது என்பது உண்மையாகி வருகின்றது..

திருந்தவேண்டும் இல்லையெனில் திருத்துவார்கள்…


thangavelmanickam@gmail.com

Series Navigation

author

தங்கவேல் மாணிக்கதேவர்

தங்கவேல் மாணிக்கதேவர்

Similar Posts