அரசியல் இருக்கைகள்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

சேவியர்


0

அந்த
வேலியோரக் கள்ளியின் மேல்
அமர்ந்திருந்தது
அந்த ஓணான்.

காற்று வந்து
ஏதோ அதன் காதில் சொல்ல
மெல்லத் தலையாட்டியது.

மகரந்தக் கால்களோடு
நிறச் சவாரி செய்த
வண்ணத்துப் பூச்சியும்
ஓணான் காதில்
மெல்ல ஏதோ சொல்ல
தலையாட்டியது ஓணான்.

தலைதெறிக்க ஓடி வந்த
தெருநாய் ஒன்றும்,
பதுங்கிப் பதுங்கி வந்த
பூனை ஒன்றும்,
தகவல் சொல்லி
தலையாட்டல் பெற்றன.

சில அணில்கள்,
சில பறவைகள்,
ஒரு குரங்கு
இன்னும் சில
பெயர் தெரியாத பிராணிகளுக்கும்
தவறாமல் தலையாட்டியது
ஓணான்.

பகல் முடிய,
தன்னைச் சுற்றி உட்கார்ந்த இருளில்
காணாமல் போன
ஓணான்,
தூங்கத் துவங்கியது.

தனக்குத் தெரிந்த ஒரே பணியான
தலையாட்டலைத்
தொடர்ந்து கொண்டே.

0

சேவியர்
Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்