அம்மம்மா கிழவி
கவிதா நோர்வே

சமயலறையில்தான்
உன்னை நான் அதிகம்
ஸ்பரிசித்தது
அரை அங்கியும்
ஒரு லுங்கியுமாய்
ஆரவமின்றி திரியும் உன்னை
அப்பொழுதெல்லாம்
உணரவில்லை நான்
உன் அதிக பட்சப்பயணம்
வேலிதாண்டி பனைவடலிவரைதான்
மிஞ்சி மிஞ்சி
அரசமரத்தடி அம்மன் கோயிலுக்கு…
வீட்ட வரும்
எல்லா பெடியன்களுக்கும்
அம்மாவாக எல்லாராலும்
முடிவதில்லை…
ஏழு பிள்ளை பெத்தும்
எட்டாவதா சிங்களகுட்டியொன்ட
எடுத்து வளத்தியாமே…
பெண்களிட்ட ரகசியமா
என்ற ஆண்மொழியைப்
பொய்பிக்க
நீ ஒருத்தி போதும்
முத்த மகன் இடதுசாரி
இளையவன் ரெலோவிலையும்
மருமகன் புலொட்டென்றும்
பக்கவீட்டு பெடியல் புலிப்யிலையுமாக
அத்தனை ரகசியங்களும்
சொல்வது உனக்குதானாமே
உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது
இவங்களை ஒருசேர
இருத்தி வைத்து
பொங்கிப்போட
நாலு வயதுவரை
நீ தலைகோதிக் கதைசொல்ல
நான் தூங்கியது
உன் பாயில் தானாம்
அதுக்குப்பிறகு
எங்கே போனாய்
கிழவி
கொய்யா மரநிழலில்
கல்லடுப்பு மூட்டி
நீயும் நானும் குந்தியிருந்து
வடை சுட்ட பாட்டி
நீயெல்லாம்
இப்ப கதையிலதான்
இப்ப
பொங்கி போட
நீயுமில்ல
குந்தி இருந்து தின்ன
அங்க யாருமில்ல!
–