அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
ஆறுதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை 1
“அருவி”
உலகத்து மாந்தர்களின்
உள்ளத்து அன்பெல்லாம்
ஒன்றாகத் திரண்டு வந்து
அருவியெனப் பொழிந்ததுவோ!
அன்புக்கு அளவில்லை;
அருவிக்கோ அணையில்லை!
கட்டுப்பாடின்றித் துள்ளும்
காட்டாற்று வெள்ளம்போல்
அட்டகாசமாய்ச் சிரித்து
ஆர்ப்பாட்டமாய் விழுந்து
ஆசையுடன் புவி தழுவும்
அற்புதமும் இதுதானோ!
வைரக் கற்கள் தம்மை
வஞ்சனை யின்றிவாரி
வழியெங்கும் இறைத்ததுபோல்
துளித்துளியாய் துள்ளுகின்ற
நீர்த்துளியின் உயிரினுள்ளே
காதலுடன் கதிர்நிறைத்து
கண்மலரக் கதிரவன்தன்
ஒளிசிதறச் செய்தானோ!
பரவசமாய்ச் சரசமிடும்
பாதங்கள் பண்ணிசைக்க
நவரசங்கள் காட்டுகின்ற
நர்த்தனப் பெண்களைப் போல்
பல வண்ண ஆடைகட்டி
மனங் கவர ஒளிவீசி
ஆலோலப் பாட்டிசைத்து
ஆனந்த நடனமிட்டு
கற்பனைக்கும் எட்டாமல்
கருத்தினைக் கவர்ந்து கொள்ளும்
இயற்கைத் தேவதையின்
இன்னெழிலும் இதுதானோ!
– கவிநயா என்றழைக்கப்படும் மீனா
ரிச்மண்ட், அமெரிக்கா
(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)
*
ஆறுதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை 2
“மூப்பு”
இளமை என்னும் பருவம் ஏனோ
எப்போதும் நிலைப்பதில்லை
இளமையாய் இருக்கும்போது – அதை
நாமும் ஏனோ நினைப்பதில்லை
மூப்பு வந்து முதுகை அழுத்த
மூச்சிறைத்து மார்பும் வலிக்க
முட்டாள் மனது ஏக்கத்தோடு
வானைப் பார்த்துக் கலங்குகிறது.
மங்கி மறையும் மாலை ஒளியில்
நெஞ்சும் நடந்த காட்சியெல்லாம்
திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து
காலைவேளைக்குக் காத்து நிற்கிறது
இருள் சூழ இன்னும் எத்தனை கணங்களோ!
இமைகள் மூட இன்னும் எத்தனை நாட்களோ!
பசுமை நிறைந்த காலமும் போய் – இன்று
மொட்டைமரமாய் நான் நிற்கின்றேன்.
எண்ணங்களுக்கோ குறைவேயில்லை – அவை
எல்லா திசைகளிலும் தாவுகின்றன.
நேற்று, இன்று, நாளை என்று – மனம்
எல்லாக் காலத்தையும் நாடுகின்றது.
எங்கெங்கோ சென்றுவிட்டு
கிடைத்ததையே மீண்டும் தேடுகின்றது.
மலர்கள் பூத்துக் குலுங்கிய நாளும்
வண்டாய்ப் பறந்த நேரமும் எங்கே?
அன்புக்காக ஏங்கும் நெஞ்சில்
முட்களே வந்து குத்துகின்றன
சென்ற நாட்களோ திரும்புவதில்லை
உடைந்த இதயம் சேர்வதுமில்லை
உடலும் உலர்ந்து ஓய்ந்து விட்டது – இன்று
உயிரும் பசையின்றிக் காய்ந்து விட்டது
மீண்டும் பசுமை எட்டாக் கனவோ
என்றே உள்ளம் வாடும்போது
‘உண்டு வாழ்க்கை’ என்று யாரோ
காதில் சொல்வது கேட்கிறது – அது
மொட்டாய் முளைத்து வெளியே வந்து
மெல்லச் சிரித்தென்னைப் பார்க்கிறது!
இன்று போனால் போகட்டும், நெஞ்சே!
நாளை என்பது வரத்தான் செய்யும்
இந்த உடல் இன்று மக்கி விழுந்தால்
நாளை இன்னொரு உடலுடன் பிறப்பேன்.
மறுபடி உலகில் தவழ்ந்து ஒருநாள் – நான்
இளமையை மீண்டும் தீண்டி மகிழ்வேன்.
– ஆர்.எஸ். மணி
கேம்ப்ரிட்ஜ், கனடா
(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)
*
இரண்டாம் பரிசுக்குரிய காட்சிக்கவிதை
“பூங்கா”
(திறந்தவெளி)
தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ
நண்பருடன் கூடிக்களிக்கும்
வெயிலறியா விளையாட்டுப்பருவமோ
இன்றென்ன செய்தார்கள்
செல்லக் கண்மணிகளென்று
குறைபடுவது போல் தெரிந்தாலும்
புகழ்ந்திருக்கும் நடுவயதுப்பருவமோ
நேற்றென இன்றென நாளையென
பேசிப்பேசி ஓயும்
நடைதளர்ந்த முதிர்ப்பருவமோ
நாற்சுவரின் சிறையிலிருந்து வெளியேறி
திறந்தவெளியில்
பொழுதெல்லாம் இனிதாக்கிச்
சுதந்திரமும் சந்தோஷமுமாய்.
– முத்துலட்சுமி
புது தில்லி
*
முதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை
“உயிர் வலிக்க வலிக்க…”
என் வேர்கள்
உயிர்
வலிக்க வலிக்க
பிடுங்கப் பட்டன…
என்
கால்களுக்கு
சிறகு முளைத்த
வீதிக்கரைகள்…
கனவுகளும் உயிரும்
குழைத்துக் குழைத்துச்
செய்த
என் வீட்டுத் தாழ்வாரம்…
நான்
தமிழும் கவிதையும்
கற்ற
பாடசாலை…
வேலியோர வேப்பமரத்து
சிட்டுக் குருவியின்
பாடல்…
வான் பார்க்கும்
சடலங்கள் நடுவில்
எதையோ
தேடுகிறேன்…
இழந்து போன
வாழ்வையா?
மிச்சமிருக்கும்
நம்பிக்கை எச்சத்தையா?
வெறிச்சோடிய
வீதிகளில்
என் மனசு
அழுகிறதே!!!
கொடியவர்களே!
தென்றலுக்கு
ஏன்
தீ வைக்கிறீர்கள்?
இதோ……
…………………
……………….
கொய்யா மரத்தில்
குடியிருக்கும்
என் தம்பியின்
அசைவற்ற உடல்…
எனக்குள்
அதிர்கிறது!!!
காற்றுக் கூட
உன்னை
சுட்டு விரல் நீட்டி
தொட்டதில்லை…
உன்
பனித்துளி முகத்தில்
இன்னும் காயாத
ஈரம்…
என்
உயிர் நனைக்கிறதடா!!!
வரண்ட சஹாராக்களுக்கு
பூவில் ஈரம்
புரியாது!!!
என்
தாய் பூமியே
சென்று வருகிறேன்…
விடை கொடு…
என்றைக்குமாய்
முன்னொரு வயதில்
கிளிஞ்சலும்…
பின்னொரு வயதில்
காதலும்…
பொறுக்கிய
கடற்கரை!!!
உயிரில்
ஓரிடம்
ஊசியாய் வலிக்கிறது!!!
உன்
ஞாபகத்தூறலோடு
நடக்கிறேன்…
நான்
இன்னும்
நீண்ட தூரம்
நடக்க வேண்டியிருக்கிறது!!!
– சமீலா யூசுப் அலி (என்ற) ஹயா
மாவனல்லை, இலங்கை
(முதல் பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)
*
அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 8 ஆண்டனி & கிளியோபாத்ரா
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம்
- சிவாஜியும் சினிமா படும்பாடும்!!
- மகத்தான பணியில் மக்கள் தொலைக் காட்சி
- கால நதிக்கரையில்……(நாவல்)-13
- An open letter to Pujyasri puuvaraswanaar !
- ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா
- கே.வி.ராமசாமி-சில நினைவுகள்
- தெய்வம் ஹாங்காங் வந்தது
- இந்துத்துவத்தின் சாதீய எதிர்ப்பு பாரம்பரியம்
- “கந்தர்வன் நினைவு – கருத்தரங்கம் – கலைஇரவு-2007”
- மக்கள் தொலைக்காட்சி
- பாரதி -125 பன்னாட்டுக் கருத்தரங்கம்
- சூட்டு யுகப் பிரளயம் ! உருகி மறையும் கிலிமாஞ்சாரோ பனிச்சிகரங்கள் -3
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 7
- தமிழ் இலக்கிய வட்டம், பிரான்சு
- அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த காட்சிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் நிலா (என்ற) “நிலாச்சாரல்” நிர்மலா கருத்துரை
- முல்லைப்பாட்டும் சுற்றுச்சூழலும்
- தேசிய நூலக வாரியம் மற்றும் வாசகர் வட்டம்
- சில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்)
- புதிய தென்றல் என்ற மாத இதழ்
- தமிழகக் கோட்டைகள் : விட்டல் ராவ்
- காதல் நாற்பது – 28 உன் காதல் கடிதங்கள் !
- பாலக்காடு 2006
- மெளனங்கள் தரும் பரிசு
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – காட்சிக்கவிதைப் பிரிவு – நடுவர்: நிலா (என்ற) நிலாச்சாரல் நிர்மலா
- தீபச்செல்வன் கவிதைகள்
- ஈரம்.
- மனப்பறவை
- சிற்பி!
- 5வது தூண் ! !
- நல்லூர் இராஜதானி நகர அமைப்பு! அத்தியாயம் பதினொன்று
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பதினேழு: ஹரிபாபுவின் நடைபாதை வியாபாரம்!
- லாஜ்வந்தி
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 17