படலைக்குள் இருந்த மாதா கோவிலில் பிரார்த்தனை தொடங்கிய நேரம் அவன் வேலைக்குப் புறப்பட ஆயத்தமானான். இரவுக் காவல் வேலை. ஏழு மணிக்கு வங்கியின் வெளிக்கதவுத் திறப்பு கை மாறியதும் காலை ஏழு வரை கடமை. சுற்றி வருவதும் லைட் அடித்துப் பார்ப்பதும் வெற்றிலை போடுவதும் நித்திரையைத் தடுக்க ஏதோ நினைவுகளில் மிதப்பதும் அந்தக் கடமைக்குள் அடக்கம்…..தெருவிலிருந்தே மாதா சொரூபத்தை வணங்கி தலையில் குட்டிக் கொண்டு நடந்தான்.
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் – அஸ்ஹது அன்லாஹிலாஹ இல்லல்லாஹ் – அஸ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்
அடுத்த தெருப் பள்ளியிலிருந்து மாலைத் தொழுகை ‘பாங்கு ‘ காதில் கலக்க கடவுள் நினைவு வரும். இன்னும் கொஞ்சம் போனால் சந்தி ஓரத்து அரசமரமும் அதனை ஒட்டி புதிதாகத் தோன்றிய சிறிய பன்சாலையும் வரும்.
அனைத்தும் இருந்தபோது அத்தனையும் துறந்து விட்டுப் போன புத்த பகவானின் தோற்றம் கண்ணுக்குள் வந்து மெய்யெல்லாம் அவனுக்குச் சிலிர்த்துப் போகும். வழியில் வங்கி வருவதற்கு முன்னுள்ள திருப்பத்தில் சிவன் கோயில்….அவன் கோயிலை நெருங்கும் போது இரவுபயூசைக்கு மணி அடித்தது.
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி – மருவிய கருணை மலையே போற்றி – தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
பூசை முடிந்து திருநீறு சந்தணம் வாங்கும் வரை ஆடாமல் அசையாமல் அங்கே நின்றான். மூலஸ்தானத்தில் தீபம் அசையும் போது கை கூப்பி கண்மூடிப் பாடினான். சிவனே என்று திருநீறை அழுத்திப் பூச நெஞ்சு நிறைந்து போய் கண்களால் வழிந்தன.
பகல் டியூட்டி சில்வாவிடம் வீபூதி சந்தணம் கொடுப்பான். ‘ஸ்துதி ஐயா ‘ என்று நன்றி சொல்லியபடி பக்குவமாய் வாங்கிக்கொண்டு நகர்வான் சில்வா. அந்த நேரம் தொடங்கி வங்கியின் காவல் பொறுப்பு அவனிடம். நாளதுவரை எல்லாம் நலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. லட்சக் கணக்கில் புரளும் வங்கியை வெறும் பழங்காலத்து துவக்கை வைத்துக் கொண்டு எப்படிக் காவல் காப்பது! நினைத்தால் அவனுக்குச் சிரிப்பு வரும். எல்லாம் அந்தப் பெருமான் காவல். எந்தப் பெருமான் ?
எட்டாந்தரத்திற்கு மேல் படிக்காத வெறும் கட்டுப் பெட்டி. ஆனால் அவனிடம் தெளிவு இருந்தது. பலரும் பல கோணங்களில் கற்பிக்கும் அந்த இறைவன் ஒருவனே என்ற ஞுானம் அவனிடம் வந்தது பெரிய ஆச்சிரியந்தான். கடவுள் எப்படியிருப்பார் என்று அறிய அவன் பேராசைப்பட்டான். பரந்து விரிந்து கிடக்கும் ஆகாசத்தில் மிகப் பெரியதொரு சிம்மாசனம் போட்டுக் கொண்டு அண்ட சராசரம் முழுதையும் பரிபாலிக்கும் மிகப் பெரிய மனிதத் தோற்றமுள்ளவர். அவருக்கு ஆயிரம் கைகள். ஆயிரம் கண்கள். எல்லாம் தெரியும். எல்லாம் புரியும். இதற்கு மேல் கற்பனை செய்து பார்க்க அவனுக்கு புத்தி போதவில்லை.
அவரைத் தரிசிக்க வேண்டுமானால் பிழைகள் செய்யாமல் வாழ வேண்டும் என்று அவனது உள்ளுணர்வு சொல்லும். அதற்காகவே துப்புரவாக அவன் நடந்தான். உயரப் பறக்கும் பட்டத்தில் கட்டிய குஞ்சமாய் சின்னதொரு ஆசை இருக்கத்தான் செய்தது! மனசில் படிகிற மாதிரி பவிசான பெண் கிடைத்தால் கால்கட்டில் அகப்பட்டுக் கொள்கிற சபலம்! யாரிடமும் விளக்கிச் சொல்ல வெட்கம் விடாது. காசும் கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கிறான். வயதும் போய்க் கொண்டிருக்கிறது.
திறப்பைக் கொடுத்துவிட்டு சில்வா போய் வெகு நேரமாகி விட்டது. திடாரென மழை பெய்யத் தொடங்கியதுந்தான் மாலை முழுக்க வானம் மப்பாயிருந்தது ஞுாபகத்தில் வந்தது. சைக்கிள் செட்டுக்குள் ஒதுங்கிக் கொண்டான்.
ஆரது ?
மூலையில் ஏதோ அசைய லைட் அடித்துப் பார்த்தான். பிச்சைக்காரன்! சிவன் கோவில் வாசலில் சில வேளைகளில் கண்டிருக்கிறான். மாதா கோவிலில் பாண் கொடுக்கும் போதும் நிற்பான். பல நாட்கள் காணாமலும் போய்விடுவான்.
அவன் கிட்ட வந்து உற்றுப் பார்த்துவிட்டுக் கேட்டான்.
‘வேற இடம் கிடைக்கேல்லையா ? ‘
பிச்சைக்காரன் நிமிர்ந்து சிரித்தான். வயது முப்பதிருக்கலாம். கறல் பிடித்த டின்களோ அழுக்கு மூட்டையோ பக்கத்திலில்லை.
‘சாப்பிட்டியா ‘
கொண்டு வந்த இடியப்பப் பார்சலில் ஒரு பாகம் பிரித்து பருப்புக் கறியை முழுதாக வைத்து நீட்டினான். அவன் அள்ளி அள்ளி விழுங்குவதைப் பார்க்க நெஞ்செல்லாம் நிரம்பிக் கொண்டு வந்தது.
‘இந்தா இதையும் சாப்பிடு. ‘
‘உனக்கு ? ‘
‘பசியில்லை ‘.
அவனுக்கு இன்னும் சிறிது நேரத்தில் பசிக்கத் தொடங்கும். பரவாயில்லை இன்றைக்கு ஒரு இரவுப் பொழுதைக்;குத்தானே. அவன் கதிரையில் இருந்து கண்களை மூடினான். ‘யார் பெற்ற பிள்ளையோ..கடவுளே ‘
பசியாறியவன் இவன் பக்கம் திரும்பினான்.
‘கடவுளைக் பாக்க வேனுமா உனக்கு ? ‘
‘ஆர்ஸஸ..என்னையா கேட்டாய்ஸஸ..நீ பிச்சைக்காரனா பைத்தியக்காரனா ? ‘ஸஸ..மழை நீர் தகரப் பீலிகளில் வழிந்து கொண்டிருந்தது.
‘காண வேனுமா இல்லையா ? ‘
‘கடவுளையாவது இவனாவது பைத்தியம் பைத்தியம் ‘
காந்தப் பார்வை இழுத்தது, அந்த வதன வசீகரம் விடுவதாயில்லை. வசப்பட்டான். ஒப்புக்கு ஓம் என்று தலையாட்டினான்.
‘அப்ப விட்டிர்றியா ? ‘
‘எதை ? ‘
‘பொம்பிளை ஆசையை ‘
அவனுக்கு தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்து பதைபதைத்தது. யாருக்கும் தெரியாமல் மனதில் போட்டு பூட்டிப் பாதுகாத்த மிக மிக பிரத்தியேக ஆசை. இவனுக்கு எப்படி!
‘காசெல்லாம் சேத்தாச்சு ‘
‘அதையும் விட்டுறு ‘
‘எப்படி விடுறது ? ‘
‘அப்ப போடா ‘
‘இல்லை விட்டிர்றன் ‘
ஏதோ ஒரு மின்சார ஈர்ப்பு. இதுவரை கண்டிராத வசியக் கண்கள்.
‘வழிக்கு வந்தியா. சரி சப்பாணி கொட்டு. கண்ணை மூடு. பார். ‘
‘மூடாற்று எப்பிடிப் பாக்கிறது ? ‘
நெற்றியில் விரல் வந்து அழுத்திற்று. விரல் பட்டதும் மேனி நடுங்கிச் சில்லிட்டது. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தான் என்று அவனுக்குத் தெரியவில்லை. துடையில் தட்டிய போது விழிப்பு வந்தது.
‘அப்படியே இருந்தா எப்படிஸஸ..ம் காதை மூடு. கேள் ‘
சைகை காட்ட எஜமான் காலடியில் வாலைச் சுருட்டிக் கொண்ட நாய்க்குட்டியாய் அவன் பணிந்தான். சரியாக ஒன்பது மணிக்கு வங்கியை ஒரு சுற்று வருவது அவன் வழக்கம். அந்த எண்ணமே உறைக்கவில்லை.
‘ஆச்சா ‘ஸஸதுடையில் அடுத்த தட்டு விழுந்தது.
‘இப்ப மனசை மூடு. கவனி ‘
‘மனதை மூடுவதா ? ‘
பைத்தியம் பாவனை காட்டிற்று.
பாவனையில் இருக்க முயன்றான் அவன். குரங்கு கிளைகளில் தாவிற்று. கூறைச்சேலை கட்டிய மணப்பெண் பக்குவமாய் நடந்து வந்து பாயின் ஓரத்தில் நின்றாள். அவன் இருக்கச் சொல்ல அவள் நாணத்துடன் பால் கிண்ணத்தை நீட்டினாள். இரு என்று கையைப் பிடித்து இழுக்க அவள் அருகிருந்து கால் பிடித்து விட்டாள்!
அவள் பாயை விட்டு எழுந்து செல்ல நெடு நேரமாயிற்று. அவன் விழுந்து விழுந்து சைக்கிள் பழகும் சின்னப் பையனின் முயற்சியில் இருந்தான்.
‘ம் அப்படியே உபவாசத்தில் இரு ‘
வானத்தில் இடி இடித்து மின்னல் மின்னி கடல் பக்கமாய் சரிந்து ஓய்ந்தது. மழை இன்னும் விடவில்லை. இரவு நீண்டு கொண்டே போயிற்று. பாத்திரத்தட்டம் விழுந்தாற் போல் பக்கத்திலிருந்து அதிகாலைச் சேவலொன்றின் கூவல் கம்பீரமாய் ஒலித்து மெது மெதுவாய் ஓயஸஸ..தோளில் தட்டு விழுந்தது.
‘எப்பிடியிருக்கு ? ‘
அவன் மின்சாரம் கவ்விப் பிடித்தது போல் அசைவில்லாமல் இருந்தான். பொங்கி வழியும் பொங்கல் பானையாய் கண்ணீரைக் கொட்டினான்.
‘எனக்கு நித்திரை வருது ‘…பிச்சைக்காரன் தலைக்கு முட்டுக் கொடுத்து நிலத்தில் சரியத் தயாராக, அவன் அவசரமாகக் கேட்டான்.
‘அப்ப கடவுள் ? ‘
‘அதான் அனுபவிக்கிறியே ‘
காலை டியூட்டிக்காக வந்த சில்வா புதினமாய் கதிரையில் இருந்தபடியே கண் மூடியிருந்த அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டுத் தட்டினான். திடுக்கிட்டு விழித்தவன் சுற்றிலும் தேடினான்.