‘ சுருதி பேதம் ‘ – சென்னையில் அரங்கேற்றம்

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

அறிவிப்பு


சுருதி பேதம் – சில தகவல்கள் ஜூலை முதல் வாரம் சென்னையில் அரங்கேறப்போகும் ‘சுருதி பேதம் ‘ நாடகம் பல விதங்களின் வித்தியாசமான ஒன்று. கர்நாடக இசைப் பின்னணியில் பாடல்களோடு அமைந்திருக்கும் கதை– நாடகாசிரியர் தாய்லாந்தில் வசிப்பவர்– இயக்குனர், இதர நடிகர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், ஒலி ஒளி அரங்க அமைப்பு செய்பவர்கள், பாடியவர்கள் அத்தனை பேரும் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள். முழுக்க முழுக்க NRI இந்தியர்கள் பங்குபெறும் ஒரு நாடகம் கடல்தாண்டி தாயகம் வருவது முதன்முறையாக இருக்கலாம். இந்தச் சாதனையை செய்யப்போவது அமெரிக்காவை சேர்ந்த கிரியா நாடகக் குழு. பிப்ரவரி 26 ம் தேதி கலிபோர்னியாவில் வெற்றிகரமாய் நடத்திய ‘சுருதி பேதம் ‘ என்கிற நாடகம் தான் சென்னையில் அரங்கேறப்போகிறது. ஒரு பிரபல சங்கீத வித்வானுக்கும் அவரின் அங்கீகாரமில்லாத மனைவிக்கு பிறந்த மகளுக்கும் இடையே நடக்கும் போராட்டதை பிரதிபலிக்கும் நாடகத்தில் இடைச்செருகல்களாய் கர்நாடகப் பாடல்கள் பாடப்படும் காட்சியமைப்புகள் வித்தியாசமாய் இருக்கும். இந்த பாடல்கள், ஆஷா ரமேஷ், பரமேஷ் கோபி என்கிற இரண்டு பிரபல அமெரிக்க வாழ் தமிழர்களால் பாடப்பட்டு, அமெரிக்காவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டவை. ஐம்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து துவங்கும் நாடகக்கதையில் உடையலங்காரம், அந்த காலகட்டத்துக்கு ஏற்றார்போல் மாறும் இசைக் கருவிகள், வீட்டு உபகரணங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி சாதனங்கள், சுவர் ஓவியங்கள் என்று அரங்க அமைப்புகளில் கவனம் செலுத்தி நாடகக்காட்சியை உருவாக்கும் பாணி ஒரு வகையில் அமெரிக்க நாடகங்களின் தொழில் நுட்பத்தை தமிழ் நாடகங்களில் கொண்டுவரும் முயற்சி என்று சொல்லலாம். வித்வான் தன் மகளுக்கு வாங்கிவரும் பட்டுப்பாவாடையின் துணிப்பை, ஐம்பதுகளில் நல்லி சில்க்ஸில் உபயோகப்படுத்திய பைகள். அதே காலத்தில் வந்த பத்திரிகைக் குறிப்புகளை மேற்கோள் காட்டும் காட்சிகளில் உபயோகப்படுத்த ஆனந்தவிகடன் கல்கி பத்திரிகைகளின் 1950 அம் ஆண்டு பத்திரிகை முகப்பட்டைகளை அந்தந்த பத்திரிகை அலுவகங்களைத் தொடர்பு கொண்டு வரவழைத்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. மேடையின் முன் உறுத்தலாய் நிற்கும் மைக்குகள் இல்லாமல் நாடகப் பாத்திரங்கள் மேடையின் எந்தப் பகுதியிலிருந்தும் பேசும் வசனங்கள் காதில் விழும் வகையில் ஒளிந்து வைக்கப்பட்ட மைக்குகளும், காட்சியின் தன்மைக்கு ஏற்றவாறு சடுதியில் இடம்மாறும், நிறம்மாறும் ஒளியமைப்பும் கூட. கிரியா குழுவினர் இந்த நாடகங்களை ஏராளமான பொருட்செலவை தாங்களே ஏற்று நடத்துகிறார்கள். அரங்க அமைப்புகளும், ஒலி ஒளி அமைப்புகளூ ம் இது போன்ற உத்திகளை தமிழ்நாடகச் சூழலில் பொருத்த மிகந்த பொருட்செலவு ஆகிறது. இதுபோக கலைஞர்களின் விமான பயணச்சீட்டும் தங்கும் வசதியும் அவரவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தச் செலவை ஈடுகட்ட கிரியா விளம்பரதாரர்களை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. சென்னையில் ஒன்பதாம் தேதி ஆரம்பித்து பதினைந்தாம் தேதி வரை சென்னையில் நாடகங்கள் நிகழ்த்தப்போகிறார்கள். நிகழ்ச்சி நிரல் அவர்களின் www.kreacreations.com இணையத்தளத்தில் கிடைக்கும். கிரியா கிரியேஷன்ஸ் உருவாகக்காரணமாய் இருந்த கிரியாவின் இயக்குனாரான தீபா ராமானுஜம் நாடகங்களோடும் சின்னத்திரையோடும் நீண்டகால தொடர்பு உள்ளவர். நாடகங்களின் மீதுள்ள தன்னார்வமும், சென்னை மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடத்த அனுபவமும், அமெரிக்காவின் ஓலோனி கல்லூரியின் நாடகம் மற்றும் நடிப்புத் துறையில் பயிற்சியும் பெற்றவர். சுருதி பேதம் நாடகத்தை எழுதியவர்– ஆனந்த் ராகவ். விகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி இதழ்களில் தொடர்ந்து எழுதிவரும் தாய்லாந்து வாழ் தமிழ் எழுத்தாளரான ஆனந்த் ராகவின் மூன்றாவது நாடகம் ‘சுருதி பேதம் ‘. அவரின் இரண்டாவது நாடகமான ‘தனிமை ‘ இன் வெற்றிதான் கிரியாவை அமெரிக்க மண்ணைத் தாண்டி மற்ற இடங்களில் நாடகம் நடத்தும் திசைக்கு இட்டுச்சென்றது. இந்தியாவில் அரங்கேற்றமானதும் அமெரிக்காவின் மற்ற பகுதிகளிலும் மற்ற நாடுகளிலும் மேடை ஏற்ற ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

—-

Series Navigation