Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

கே ஆர் மணி


வாழ்த்துகள். நிறைய வாழ்த்துக்களோடும், லட்டுக்களோடும் நீங்கள் ரொம்ப பிசியாகயிருப்பீர்களென்பது
என்பது என் எண்ணம். ஓட்டு எண்ணிக்கை முடிவு வரும்வரை வயிற்றில் நெருப்பு கட்டிக்கொண்டுதானிருந்தேன்.
நீங்கள் ஜெயிக்கலாம், மயிரிழையில் தோற்கலாம்/ஜெயிக்கலாம், அப்படியே ஜெயித்தாலும் அது சின்ன நூலிழை வெற்றிதான், உங்களின் பெரிய இமேஜ் தோற்கடிக்கப்பட்டுவிட்டது இப்படியெல்லாம் கதை சொல்லிக்கொண்டிருந்தன ஆங்கில செய்தி சேனல்கள். எண்டிடிவி கிட்டத்தட்ட உங்களுக்கு மெளன அஞ்சலி செலுத்த தயாராயிருந்தது. ஆனால் முடிவுகள் நல்லவேளையாக நான்
எதிர்பார்த்தமாதிரித்தான் இருந்தன. மூன்றாவது முறையாக நீங்கள் முடிசூட்டிக்கொள்கிறீர்கள்.

ஒரு சில நிமிடங்களில் சேனல்களில் கல்லறை காட்சிகள் மாற்றப்பட்டு, நீங்கள் வீரசிவாஜியாய், பகைவரை வென்ற போர் வீரராய் மாற்றப்பட்டீர்கள். எவ்வளவு சீக்கிரமான காட்சிமாற்றம். அதுவும் தாடிவைத்த அறிவுஜூவீகளுக்கு சொல்லியாதரவேண்டும் ?

வெக்கமில்லாமல்லாமல் காட்சிமாறுபவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் செய்தி சேனல்களும்தான். எதையும் பேசி நியாயப்படுத்திவிடமுடியும் என்பது தெரிந்து வருத்தப்படத்தான் முடிந்தது.

உங்களை ஏன் பிடித்துப்போயிற்று :

1. மென்மையான, நேர்மையான வலதுசாரித்தத்துவங்களின் மீது இந்தியர்களுக்கு வெகுவாகவே பிடித்தமுண்டு. காந்திக்குப்பிறகு, காங்கிரஸ் அதை இழந்து ரொம்பநாளாயிற்று. கம்யூனிசத்திற்கும் அதற்கும் ரொம்பதூரம்.

2. நேர்மையான அரசியல், இழக்காத பராம்பரியம், துவளாத முன்னேற்றம், மறையாத பன்முகத்தன்மை, குலையாத சரியான மதசார்பின்மை, தேசாபிமானம், மாநிலபிரதிநிதித்துவம், குடும்பம் கலக்காத அரசியல், தொழில் அதிபர்கள் கால் நக்காத அரசியல் தலைமை, சாதி பேதங்களின் மீதான ஓட்டுவங்கி அரசியல் நடத்தாமை, சிறுபான்மை மதத்தவரின் மீதான பொய் அக்கறையின்மை, அகிம்சையிலும், நாட்டின் இறையான்மையிலும் நம்பிக்கை, தீவிரவாத எதிர்ப்பு, எல்லைபாதுகாப்பு, தேச ஒற்றுமை, அதை காப்பதில்
இமைப்பொழுதும் சோராதிருத்தல் – இப்படிசொல்லிக்கொண்டே போகலாம். மற்ற கட்சிகளை ஒப்பிட அத்தனையையும் வலதுசாரி இயக்கங்கள் ஓரளவாவது கடைபிடிக்க முயல்கின்றன.

3. உங்களின் பிரமாதமான கடந்த ஐந்தாண்டு ஆட்சி முக்கிய காரணமென்று உங்களின் அரசியல் எதிரிகள் கூட ஒத்துக்கொள்கிறார்கள். Excellent Governance delivered results என்கிறார்கள். ஒரு நாளில் ஐந்து மணி நேர தூக்கத்தை தவிர மற்ற மணித்துளிகளை அலுவல்களில் செலவிட்டீர்களென்று கேள்விப்பட்டேன். உங்கள் அரசு அதிகாரிகளின் கனவுகளில் கூட குஜராத்தின் GDP எண்தானிருக்கும் என்று சொல்லிக்கொள்கிறார்கள். உங்களுக்கு அமெரிக்கா விசா மறுத்தபோது நீங்கள் வெளிநாட்டுவாழும் இந்தியர்களுக்கு விடுத்த அறைகூவல், ஒவ்வொரு இந்தியனின் நரம்பை தீண்டியிருக்கும்.

4. தீவிரவாதத்தை உங்களைத்தவிர வேறுயாரும் செய்யக்கூடாது என்பதிலிருந்த உறுதியால் இஸ்லாமிய தீவிரவாதம் தலையெடுக்கவிடாமல் செய்த புண்ணியத்தை கட்டிக்கொண்டதோடு, பரலோகத்திலிருக்கும் பரமபிதாவும் கொஞ்சம் அடக்கியே வாசித்தாக செய்திகள்.

5. ‘எனக்கு குடும்பமில்லை. நீங்கள்தான் குடும்பம்.’ என்று உங்களின் தேர்தல் நேரத்து வாய்மொழி வெறும் பொய்யல்ல. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்து, வெறும் டீக்கடைக்காரராக வளர்ந்து, அரசியலில் நுழைந்து பண பலம் மிக்க பட்டேல் வகுப்பினரின் உட்கட்சி கலகத்தையும் மீறி நீங்கள் வந்திருப்பது பற்றி, வர்க்கங்கள் உடைத்து சாதிபேதம் தாண்டி நீங்கள் வந்திருப்பது இந்திய ஜனநாயத்தில் எல்லாருக்கும் தகுதியும் பொறுமையும் உழைப்புமிருந்தால் இடமுண்டு என்று காட்டியிருக்கிறது. ராச குடும்பத்தில் பிறந்தால் மட்டுமே ஆளத்தகுதியென்கிற மாயைகள் உடைபட்டுப்போகின்றன. உங்களுக்கு குடும்பம், தோழர்களில்லாததால் அடுத்த தலைமுறைக்கு பதவியும், சொத்தும் சேர்த்துவைத்துபோகவேண்டுமென்கிற அவசியமின்றி, அவசரமின்றி போகிறது.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் அரியணையில் அமர்கிறீர்கள். உங்கள் காலடியில் சிவப்பாய் ஏதாவது பிசுபிசுபித்தால் தெரியும், நீங்கள் கவலைப்படமாட்டீர்கள். முதுகுக்குபின்னே சில எலும்புத்துண்டுகள் துருத்தினால் தூக்கி எறிந்துவிட்டு வேலையை தொடர்வீர்கள்.

எத்தனை நூற்றாண்டுகளாய் எனது இந்து சாம்ராஜ்ஜயத்தின் இரத்தம், எத்தனை சின்ன பெரிய விஜய சாம்ராஜ்யங்கள், எத்தனை ராஜபுத்திரர்கள், எத்தனை கோயில்கள், எத்தனை இந்துத்துவ தத்துவங்கள் – மண்ணோடு மட்கிப்போயிருக்கின்றன உனக்குத் தெரியுமாடா,

1984’ல் அன்னை இந்திரா இறந்தபோது கிட்டத்தட்ட 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டதும், அதற்கு இன்னும் காங்கிரசு மன்னிப்பை தவிர வேறு எதுவும் செய்யாததும்,

ஆறு மில்லியன் உயிர்கள் சர்வசாதரணமாய் புதைக்கப்பட்ட ருசியா, சீன தரைகளின் இரத்தமும் அதை புனிதப்படுத்திய கம்யூனிசத் தலைவர்களும் அதன் வழிதொடருகிற நந்திகிராம் தாத்தாக்களும் – என்னை கொலையின் மொத்தவியாபாரி என்று இழிப்பதில் என்ன நியாயமிருக்கமுடியும் .

இந்தக்கலவரத்தில் இந்துக்களைவிட மூஸ்லிம்கள் கொல்லப்பட்டிருப்பதுதான் உண்மையே தவிர, மேற்சொன்ன நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஒரு சாரார் மட்டுமே மொத்தமாய் கொலைசெய்யப்பட்டிருப்பது பற்றி யாரும் யோசிக்ககூட மறுக்கிறார்கள்

இந்துதேசம் வேறெங்கும் போய் தனது மதம் பரப்பும் பொருட்டோ, மத மாற்றும் பொருட்டோ கட்டிடங்களை உடைப்பதில்லை, மனிதவெடுகுண்டுகளை உபயோகப்பதில்லை – எனது தேசமும்,மதமும் காக்க செய்யப்படும் எதிர்வினை வன்முறைகள் பலம்காட்ட நடத்தப்படும் அணுகுண்டு சோதனைகள் போன்றவைதானே

அவைமட்டுமா, எத்தனை நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் என் மதத்தை , என் மதத்தின் பலவீனம் கண்டு மாற்ற முயற்சிக்கின்றன் அதுவும் நேர்மைத்திறமின்றி – குழந்தைக்கு ஆசையும், பயமும் காட்டி என்கிற உங்கள் கோபக்கேள்விகளின்/எதிர்கேள்விகளில் நியாயமிருந்தாலும், நியாயமிருப்பதுபோல தோன்றினாலும் உங்களின் குரலின் சத்தியமிருந்தாலும் , காதுள்ளவர்கள் மதசார்பற்ற நடுவர்கள் கட்டாயம் இன்றில்லாவிடினும் நாளையாவது கேட்பார்கள் என்று நாங்கள் சொன்னபோது கேட்காமல், நீங்கள் ரெளத்திரம் பழகினீர். மூன்று நாட்களுக்கு உங்கள் காதுகளை செவிடாக்கி கொண்டீர்கள். வெட்டப்படாவிட்டாலும் எங்கள் ஆண் குறிகளில் வீரமுண்டு என்று மூன்றாந்தர முரட்டு இந்துத்தலைவர் உங்களின் வீராவேச உரை கண்டு முழங்கினார்.

என்ன அசிங்கமான பேச்சு என்று காதைப்பொத்திக்கொண்டாலும் பதிலடி கொடுக்கும்போது நாமெல்லாம் விலங்காகிவிடுகிறோம்.
பாண்டவர்கள் கெளரவரானார்கள், பாபர்களின் வழித்தோன்றல்களால் மாற்றப்பட்ட நமது இந்திய பழங்குடிகள் இப்போதய இஸ்லாமியர்கள் பந்தாடப்பட்டார்கள். தேவைப்பட்டால் எங்களுக்கும் அடிக்கத்தெரியும். நாங்கள் அடித்தால் என்னவாகும் யோசித்து பாருங்கள், அடங்கிப்போங்கள் என்கிற செய்தி சொல்வதற்காக ஆரம்பித்த வன்முறை கொஞ்சம் அதிகமாகிவிட்டதாகவே பட்டது. அது கொஞ்சம் அதிகம்தான்.

I am sorry, modi –

எனக்கும் உங்கள் கோபமுண்டு. ஆனாலும் இறந்தகாலத்தை அதிகமாய் UNDO செய்யமுடியாது. திருத்தி எழுதமுடியாதவை சிலவை. திரும்ப எழுதமுடியாதவை சிலவை. சில பரிகாரங்கள் செய்யப்படத்தான் வேண்டும். எங்கள் படங்களில் வருவதுபோல, கடைசி காட்சியில் கதாநாயகன் சட்டத்தை கையில் எடுத்ததற்காக தானே தண்டனைகளையும், பரிகாரங்களையும் வாங்கிக்கொள்வான்.

1. கலவரக்கெளரவர்களை நீதிமன்றம் முன்நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுங்கள். நீதித்தாய் நம் அகண்டபாரத அன்னையின் இதயம். பழிவாங்கிய பாவத்தின் சம்பளம் அது காலத்தின் தேவையாகயிருந்தாலும் மரணமாகவோ, எதுவாகவோயிருக்கலாம். இது உடனடியாய் செய்யப்படவேண்டும்.

2. ஜெயித்தது கட்சியல்ல, மோடிதான் என்கிறது அரசியல் விமர்சன வட்டம். கொள்கைகளைவிட, கட்சியைவிட எந்த தனிநபரும் பெரிதாகிவிடக்கூடாது என்பதில் உங்கள் தலைமையிடமும் அதன் இயக்கு சக்திகளும் தெளிவாகவேயிருக்கும். அது தேவையும் கூட. நீங்களும் அப்படித்தானிருப்பீர்கள் என்று நம்புகிறேன். தனிநபர் ஆளுமைகள் அரசியலில் எத்தனை கொள்கைக்கேடுகளையும், எதிர்கால நச்சுக்களையும் உருவாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் சில மாநில அரசியல் கட்சிகள். உங்கள் தென்னகத்தோழியுடன் உரையாடும்போது நீங்கள் இதைப்பற்றித்தெளிவாகவே தெரிந்து கொள்ளலாம். சினிமாக்காரர்களின் அரசியல் பிரவேசமும், குடும்ப அரசியலும் கொள்கையா ? காக்கா.. உச்சூ. காக்கா.. உச்சூ..

3. அதீதமான உங்கள் அடிப்படை இந்துத்துவ முகம் கொஞ்சம் நீர்க்கப்படவேண்டும். 40வயதிற்குப்பின் டயட் கண்ட்ரோல் போல. இந்திய கலாச்சராத்தை மதிக்கிற எந்த மதத்தவர்களும் எனக்கு சம்மதமே என்கிறதை நீங்கள் செய்துகாட்டவேண்டும். எங்கள் மாநிலத்து சாரி, நமது அப்துல் கலாம் போன்ற நல்ல இந்தியரை, நல்ல முகம்மதியரையோ, நல்ல கிறிஸ்துவரையோ உங்கள் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுத்து மாநிலத்து முக்கியபதவியில் அமர்த்துங்கள். இந்துக்களின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை நிறுவ நல்ல வாய்ப்பாய் அமையும்.

வாழ்த்துகள், நிறைய திட்டுக்களுக்கும், குட்டுக்களுக்கும். குஜராத்தை வலதுசாரியின் சோதனைக்கூடமென்கிறார்கள், அப்படியே இருக்கட்டும், ஆனால் விமர்சனங்களுக்கு, நல்ல எதிர்வினைகளுக்கு, மாற்றான் தோட்டத்து மணமான மல்லிகைகளுக்கு, அடுத்த இளைய தலைமுறைக்கு இடமளியுங்கள். இந்திய தேசிய நீரோட்டத்தில் இந்துத்துவம் வழிநடத்தும் தீன் இலாஹிக்கு இன்னமும் வாய்ப்புண்டு என நம்புகிறேன்.

இப்படிக்கு நல்ல மாற்றங்களை எதிர்பார்த்து – வலதுசாரியில் கொஞ்சம் நம்பிக்கை கொண்ட, இடதுசாரி.

பொங்கலுக்கு தமிழகம் வருவதாக கேள்வி. அடுத்தவாரம் வருகிறேன் உங்களுக்கான குஜராத்தி கடிதத்துடன்.


mani@techopt.com

Series Navigation