KhudaKayLive (in the name of god) திரைவிமர்சனம்

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

கே.பாலமுருகன்


இஸ்லாமிய கோட்பாடுகளின் தொன்ம கற்பித்தலின் வழி உருவாகும் மதம் சார்ந்த சமூக மனிதர்களும் அவர்களின்பால் புனித போர் (ஜீஹாட்) எப்படி மதமாக்கப்பட்டு சாமான்ய மனிதர்களின் சுதந்திரத்தையும் அவன் வாழ்வையும் சுரண்டுகிறது என்கிற ஒரு விஷயத்தை ஆழமான விவாதங்களுடன் முன் வைக்கும் திரைப்படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. மேலும் சில விச்யங்கள் உண்டு, ஆனால் அதையெல்லாம் நான் இங்கு மிக வெளிப்படையாக எழுத முடியுமா என்பதிலும் சந்தேகம் உண்டு.
துணிச்சலான எழுத்து என்று எழுதிவிடலாம், ஆனால் எதைப் பற்றி எழுதுகிறோம் என்கிற விழிப்புணர்வு இந்தக் காலகட்டத்தில் மிக அவசியமாகுகிறது. அல்-காய்டா இயக்கத்தின் 9 .11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் வாழும் (Liberal Muslims) கலாச்சார வாழ்வை முதன்மைப்படுத்தும் முஸ்லீம்களும் “தீவராதிகளே” என்று கருதப்படும் அரசியல் சூழலை முன் வைக்கிறது படம். அதே சமயத்தில் பாக்கிஸ்தானில் வாழ்ந்த மேற்கத்திய இசை கலைஞரான ஒரு முஸ்லீம் இளஞன் எப்படி மீண்டும் தனது மதக் கோட்பாடுகளில் சிக்கி, சுயத்தை இழந்து, உண்மையான முஸ்லீம் ஆக வேண்டும் என்கிற வெறியில் மனிதநேயத்தை இழக்க பிரச்சாரபடுத்தப்படுகிறான் என்பதையும் படம் வேறொரு தளத்தில் வைத்து விவரிக்கின்றது.
மேலும் மூன்றாவது தளத்தில் அமெரிக்காவில் பிறந்து, பிரிட்டிஸ் குடியுரிமையில் வாழும் ஒரு இளம் முஸ்லீம் பெண்ணின் கதையும் ஊடுருவுகிறது. அவள் அந்த நாட்டிலேயே ஒரு அமெரிக்க இளைஞனைக் காதலிக்கிறாள். ஆனால் அவள் ஒரு மூஸ்லீம், இன்னொரு முஸ்லீமைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கருதி, அவளை ஏமாற்றி பாக்கிஸ்தானுக்குக் கொண்டு வந்து, புறநகரில் கொத்தடிமை போன்ற பெண்களால் ஆன ஒரு நிலப்பகுதியில் வைத்து திருமணம் செய்விக்கப்படுகிறாள். என் மகளை ஒரு முஸ்லீம் ஆக்கிவிட்டேன், வழித்தவறி போகவிருந்த என் மகளை மீட்டுவிட்டேன் என்று சொல்லிவிட்டு அந்த அப்பா அவளை அங்கேயே விட்டுவிட்டு திரும்பிவிடுகிறார். அங்கிருந்து தப்பிக்க நினைக்கும் அவளை தலிபான் போராளிகள் மீட்டுக் கொண்டு வந்து போடுகிறாள். அவளை னக்கேயே அடிமைப்படுத்த ஒரே வழிதான் இருப்பதாக அவளின் கணவனுக்குப் போதிக்கிறார்கள். “உன் மனைவியத் தாயாக்கிவிடு, அவளுக்குக் குழந்தையைக் கொடு, அவள் இந்த இடத்தைவிட்டுப் போக மாட்டாள் என்று அவனுக்குக் கற்பிக்கப்பட, அவளை வலுகட்டாயமாக புணர்ந்து ஒரு குழந்தைக்குத் தாயாக்குகிறான்.
எந்தவித மிகைப்படுத்தும் காட்சியமைப்புகளும் இன்றி மிகத் துல்லிதமாக மதம் வேறு கலாச்சாரம் வேறு என்று வாதிடுகிறது படம். கடவுளை உள்ளுக்குள் தேட வேண்டும், வெளி தோற்றத்தில் ஒரு முஸ்லீமாக இருந்துவிட்டு, இன்னொரு உயிரைக் கொல்லும் ஒருவன் எப்படி புனிதன் என்று கருதப்பட முடியும் என்கிற வாதமும் முன் வைக்கப்படுகிறது.
இசை கேட்பது ஓவியம் வரைவது இஸ்லாமாயத்திற்குப் புறம்பானது என்ற தவறான கற்பிதங்களையும் சுட்டிக் காட்டி, அந்தக் கட்டமைப்புகளை உடைத்தெறிகிறது படம். அதே சமயத்தில் அமெரிக்காவின் Fundamentalist தனத்தையும் இஸ்லாமியர்களை தீவ்ரவாதிகள் என்றும் அவர்கள் அறுவறுக்கத்தக்கவர்கள் என்றும் எண்ணும் கருத்தாக்கத்தை விமர்சனம் செய்யும் வகையில் படத்தில் கையாளப்பட்டுள்ளன.
ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation