கரியமில இரகசியம்
Published July 2, 2009 • By
ஒளியவன்
ஒளியவன்
அளவாய்ப் பால் கொடுத்தாய்
அருந்தினோம்
அதுவும் போதவில்லையென
உன் முலைக்காம்புகளைத்
தின்று செரித்தோம்
உன் உடலினைத்
துளையிட்டு துளையிட்டு
இன்பம் கொண்டோம்
உன் ரோம
மரங்களை வெட்டிச் சாய்த்து
மொட்டையடித்தோம்
கட்டிகளைக் காட்டி
வளர்ச்சிகளென்றோம்
உன் கண்களெங்கிலும்
கரியமிலம் வீசினோம்
குருடானாய்…
உன் காதுகளெங்கிலும்
பிளாஸ்டிக்கை அடைத்தோம்
செவிடானாய்…
கரியமிலவாயுவை நுகரச்செய்தோம்
பைத்தியக்காரியானாய்
கோலம் கலைந்தாய்
காலநிலைகளை மறந்தாய்…
நாங்கள் வாழத்தகுதியற்றவர்கள்
எங்களனைவரையும்
கொன்றழித்து
உன் உள்ளம் குளிரக் குளிர
மீண்டுமொரு மனிதனை
உருவாக்கு,
அவனுக்காவது கரியமில
இரகசியம் தெரியாமலிருக்கட்டும்!
–